
மாயமான்கள்
மாயவெளியில் அலைந்து திரியும்
மானொன்று கேட்டது
'சீதை வேண்டும், பிடித்துத் தா'
ஆண் மானின்மறுப்பிற்கும்
அது செவி சாய்க்கவில்லை..
எழிலே உருவமாக சீதையின் அழகு
அந்தபுள்ளி மானின் உள்ளத்தை நிறைத்தது..
தன்னையே முறைக்கும் மானின் மேல்
சீதையும் பிரியம் சிறுது வைத்துவிட்டாள்
வசீகரங்களை தனதாக்கிக் கொள்ள
முடிவெடுத்த கணத்தில் இழந்தாள் தன்னிலை ஒன்றினை...
விழிப்புற்ற மான் ஓடி ஒளிந்தது..
தேடிப் போன ராமன்
பின் திரும்பவில்லை இதுவரை...
தனிமையின் இரவு
கட்டுக்குள் சிக்காதவேட்கையொன்று
நள்ளிரவின் அடர்குளிரில்
உயிர்த்தெழுந்தது
அக்காதல் பொழுதின்பாரம் தாங்காது
கால்கள மரத்தன
ஈரத்தின் ஆரம்பங்கள்
மோகங்களால் மீள்கிறது...
கரைந்த நிழலென
தனிமைக்குள்சிக்க சுழன்று சுழன்று
ஒரு வழியாய் ஓய்ந்தது காமம்
உறங்காத உறக்கம்..
இரவின் சாட்சி
முன்னிரவில் மழைபோல்
குளிர்வித்த பொழிதல்களை ஏந்தி
எடுக்க எடுக்க ஊறும் உயிர்ச்சுழற்சியில்
தகிப்பான கணங்கள் ஸ்தம்பித்து நிற்கலாயின
தணிப்புகளின் மிச்சம் மீதி
அதிகாலையில் ஞாபகமாய்..
நிறைவின் வாசனை தொடர்கின்றன..
இதமான பார்வைகளாய்..
மென்பேச்சுக்களாய்..
சிறு கவிதைகளாய்...
பனிக்காட்சி
மென்குளிர் போர்த்திய புகைப் பனிக்காலை...
புல்வெளிகளில் வெள்ளைக் கொக்குகள்
எண்ண ஆரம்பிப்பதற்கு முன்னமே
விரைந்து நகர்ந்துவிட்ட ரயில்..
கடந்து போதல்
என் பிடிவாதங்களை உடைக்கும்
உன் கெஞ்சுதல்கள்..
உன் பொய்புன்னகையை எரிக்கும்
என் கண்களின் கனல்..
முன் முடிவுகளுடனுடனான
நகர்வுகள் யாவும்அதற்கெனும் விழைவுகள்தானே?
பாசாங்குகளை கைவிடுவதாயின் சொல்
கடந்துவிடுவேன் அதன்பின்
உன்னுடனாக தீராத வார்த்தைகளையும்!
9 கருத்துரைகள்:
அத்தனை கவிதைகளும் அட்டகாசமே
குறிப்பாய் மாயமான்,,
இழந்தாள் தன்னிலை ஒன்றினை...விழிப்புற்ற மான் ஓடி ஒளிந்தது..தேடிப் போன ராமன் பின் திரும்பவில்லை //
அருமையான உதாரணம், ஆனால்
இங்கே சீதைகளும் இல்லை, ராமன்களும் இல்லை இப்போது. வேண்டுமென்றால் அப்படி சொல்லிக்கொள்ளலாம்.
தனிமையின் இரவு
சுழன்று சுழன்றுஒரு வழியாய் ஓய்ந்தது காமம்உறங்காத உறக்கம்..
அழகாய் செதுக்கியிருக்கியிருக்கிறீர்கள்
குறிப்பாய் உறங்காத உறக்கம்...
மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கிறேன்.
நன்றி அமித்து அம்மா...உங்கள் கூர்மையான பார்வை இக்கவிதையை மேலும் அழகாக்குகிறது.
*\\ வசீகரங்களை தனதாக்கிக் கொள்ள
முடிவெடுத்த கணத்தில் இழந்தாள் தன்னிலை ஒன்றினை...
விழிப்புற்ற மான் ஓடி ஒளிந்தது..
தேடிப் போன ராமன்
பின் திரும்பவில்லை இதுவரை...\\*
வார்த்தைப் பிரயோகம் அருமை!
என்னைத் தொட்ட கவிதையில் சில வரிகள்.
இராமா, இராமா!, சீ, சீ இராவணா நீயாவது,
புஷ்ப வாகனத்தில் இல்லாவிட்டாலும் கள்ளத் தோணியிலாவது!
//உன்னுடனாக தீராத வார்த்தைகளையும்!///
அழகான வார்த்தைகள், உமாவுக்கு சின்ன வேண்டுகோள், தங்களின் பிளாக்கில் எழுத்துகளை இன்னும் கருப்பாக தரலாமே, என்னால் எளிதாக படிக்க முடியவில்லை, கண் பார்வை சற்று மங்கல் :)
அனைத்தும் அருமை உமா.
அதுவும் தனிமையின் இரவு, கடந்து போதல்.. மனதை கடக்க மறுக்கின்றன..
சூப்பர்.
நிறைய எழுதுங்கள். அடுத்த வருட புத்தக கண்காட்சியில் புத்தகமாய் வெளியிட.....
வாழ்த்துக்கள்
அனைத்து கவிதைகளும் நன்று உமாசக்தி..
//மென்குளிர் போர்த்திய புகைப் பனிக்காலை... புல்வெளிகளில் வெள்ளைக் கொக்குகள்எண்ண ஆரம்பிப்பதற்கு முன்னமே விரைந்து நகர்ந்துவிட்ட ரயில்..//
மிக ரசித்தேன்...
கவிதைகள் அருமை, தொடரட்டும்
நன்றி கோகுலன், தமிழ் சரவணன்.
கவிதைகள் அனைத்துமே அருமை..மற்ற பதிவுகளையும் படித்துவிட்டு சொல்கிறேன்..
கருத்துரையிடுக