
ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.
நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.
'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்கச் செய்து நம்மைப் பித்தாக்கிவிடுவார். அஜயன் பாலா இவை எல்லாவற்றின் கலவையாக இக்கதையின் வாயிலாக நம் கண்முன் நிற்கிறார்.
அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.
'மருதம்' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசிரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்களகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.
'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது.
21 கருத்துரைகள்:
நல்ல அறிமுக நூலுக்கு நன்றி உமா.
நடுநிலையான விமர்சனம்.
புத்தக விமர்சனமும் சரளமாக எப்படி எழுதுறது தெரியலை உமா. கற்றுகணும்.. முதல்ல பொறுமையாகா படிக்கணும் இல்லையா..??
நன்றி..
ஹே (நேற்றுதான் நினைத்தேன், பு.காட்சியில் வாங்கிய புத்தகங்களை படித்து விட்டீர்களா என்று உங்களை கேட்க வேண்டுமென்று)
அது என்னவோ உங்க புத்தக விமர்சனத்தை படிச்சவுடனேயே அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தோணும். இல்லையா குறைந்தபட்சம் அந்த எழுத்தாளரின் பிற கதைகள் ஏதாவது கண்ணுக்கு தென்படுகிறதா என்று இணையத்தில் தேட தூண்டும்.
அந்தளவுக்கு உங்க விமர்சனம்.
அந்த கடைசி வரிகள் //'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' //
மறுக்கவே முடியவில்லை.
நிறைகளை சொல்லி இறுதியில் குறைகளை சுட்டும் உங்களின் விமர்சன நடை அருமை.
வண்ணத்துப்பூச்சியார், உங்க அன்புக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. என்னுடைய வலைத்தளத்தை விகடன்.காம் குட் ப்ளாக்கில் லிஸ்ட் செய்திருப்பதைப் பற்றி நீங்க தான் முதல்ல சொன்னீங்க, அதோட நான் எழுதும் பதிவுகளைத் தவறாம வாசிச்சு உங்க கருத்தை சொல்றீங்க. என்னுடைய ப்ளாக் மட்டுமல்லாது நல்ல விதயங்களை தேடிப் பிடித்து ஊக்கப்படுத்தறீங்க, உங்க நல்ல மனசுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
ஹை அமித்து அம்மா, எப்படி இருக்கீங்க...ரொம்ப நாளான மாதிரி இருக்கு உங்களோட கதைச்சு....நான் தான் திடீர்னு வேலைச் சூழல்ல மாட்டிக்கிட்டேன். இப்பதான் நேரம் கிடைச்சுது பதிவு எழுத, பு.காட்சியில் வாங்கிய புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்பு’ வாசித்து முடிக்கப் போகிறேன். அதனிடையில் அஜயன் பாலாவின் சிறுகதைத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து அதைப் பற்றி எழுதி விட்டேன் (இல்லாவிட்டால் கனவுகளில் அக்கதைகள் என்னைத் துரத்தக் கூடும் ))
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி அமித்து அம்மா....:)))
விமர்சனத்தை படிக்கும் போதே புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது
நல்ல தரமான விமர்சனம்!!!
நன்றி ஜீவன்..கட்டாயம் படிங்க, படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க சரியா?
ரசித்து.. அனுபவித்து எழுதப்பட்ட அருமையான விமர்சனம். வாழ்த்துகள்.. உமா.
நல்லதொரு அறிமுகம்.. :)
பகிர்ந்தமைக்கு நன்றி உமா..
அமித்து அம்மா சொன்னதையே மறுக்கா சொல்லிக்கிறேன்.
//மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும்.//
எனக்கு இந்த சிக்கல் உண்டு.
//ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது.//
இந்த வார்த்தைகள் கொஞ்சம் தைரியத்தைக் கொடுக்குது. வாய்ப்புக் கிடைக்கும்போது நிச்சயம் படிப்பேன்.
நூலகத்தில் 'ராஜன் மகளை' பல முறை புரட்டிப் பார்த்துட்டு, வச்சுடுவேன். உங்களோட புத்தகப் பார்வை படித்த பிறகு, இதை மிஸ் பண்ணிட்டோமோன்னு இருக்கு. ஆனா இரா. முருகனின் ''அரசூர் வம்சம்' படிக்க சுலபமா இருந்தது.
அடுத்து உங்களோட 'உண்மை கலந்த நாட்குறிப்பு' வாசிப்பனுபவத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கேன்.
சித்ரா மனோ
ஓவியா! (பெயர்க்காரணம் ரகசியம்!) தங்கள் வலைப்பூவின் அழகுணர்ச்சியால் கவரப்பட்டு படிப்பதை தாமதப்படுத்தியதற்கு மன்னிக்கவும்!
ஒரு சின்ன விடயமிங்கே.. நாம் இன்னும் வழமையான எழுத்துமுறைகளில் இருந்து மாறுபட்டு ஒரு இயல்பான அதேசமயம் பரிசோதனைகளில் ஈடுபடும் வகையில் இணையத்தை பயன்படுத்தவேண்டும். இனிமேல் இதயங்களை இணைப்பதற்கும், போராட்டங்களை கூர்மைப்படுத்தவும் சிந்தனைகளை உலுக்குவதற்கும் இணையம் ஈடில்லா ஊடகம் என்பதற்கு Facebookல் இருந்து அறிமுகமாகி இங்கே சாட்சியாகவும் நீட்சியாகவும் நான்...
அன்புடன்
ஓசை செல்லா
நல்ல நடை வாழ்த்துக்கள்.
அஜயன் பாலாவின் சிறுகதை ஒன்றிரண்டுதான் வாசித்திருக்கிறேன். கவிதை மொழியில் உள்ள ஒரு கதை இன்னும் நினைவுக்குள்ளே இருக்கிறது. தொகுப்பாக வாசித்ததில்லை. இங்கே வாசிக்கும் வாய்ப்பும் இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகளும் அருமை
வாழ்த்துக்கள் உமா !
அருமையான விமர்சனம் உமா.மிக அருமையாக வார்த்தைகளை எடுத்தாண்டிருக்கிறீர்கள்.தனித்துவமானவசீகரிக்கத் தக்க பாணியில் அது அமைந்திருக்கிறது.தமிழ் உங்கள் கைகளைப் பிடித்தபடி புது நடை பயில்கிறது.பாராட்டுக்கள்.
எவ்வளவு கருத்தூன்றியும் ரசனையோடும் அப்புத்தகத்தினைப் படித்திருக்கிறீர்கள் என்பதை சொற்கள் பிடித்து வைத்திருக்கும் கருத்துகள் சிறப்பாக விளக்குகின்றன.
இறுதியாகப் பார்வையைப் பற்றிய ஒரு வசனம் போட்டிருக்கிறீர்கள்.அந்தப் பார்வையின் ஆழம் என்னோடு பல மணி நேரம் வசித்துக் கொண்டிருந்தது.அந்த எழுத்தாளனின் கைகளில் தமிழ் நிரந்தரமாக வாழ வந்து விட்டது போல் இருக்கிறது.
அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி அகநாழிகை, பாலா உங்களுக்கும் ;)
சித்ரா மனோ உங்களோட பின்னூட்டத்தை படிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க, அமித்து அம்மா நான் மூணு பேரும் ரசனைகள், முக்கியமா புத்தகங்கள் விதயத்தில் ரொம்ப ஒத்துப் போறோம் ;)
ராஜன் மகள் வாசிக்க ஆரம்பிக்கறதுதான் கஷ்டம், ஆரம்பிச்சிட்டீங்கன்னா அது உங்களை உள்ளே இழுத்துட்டு போயிடும். அரசூர் வம்சம் வாசிச்சிருக்கேன, கொஞ்சம் (கொஞ்சமா??!!!) எராடிக்கா இருக்கும், ஆனா படிக்கலாம்.
உண்மை கலந்த நாட்குறிப்பு பாதி வாசிச்சிட்டேன். அதுக்குள்ள நண்பர் ஒருவர் கேட்டதால் அவரிடம் கொடுத்திருக்கேன். இடையிலே சாருவின் 'கடவுளும் நானும்' வாசிச்சேன். உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்?
நன்றி மணிமேகலா....உங்களோட வார்த்தை எனக்கு டானிக் மாதிரி இருக்கு. நிறைய எழுதணும்னு தோணுது. தோழிகள் உற்சாகப்படுத்துவதால்தான் என்னால் எழுதவும் இயங்கவும் முடிகிறது. நீங்க சொன்ன தொடர் பதிவை நாளைக்கு எழுதிடுவேன்.
உமா,
மறுமொழிக்கு நன்றி. ஒத்த ரசனையுள்ள உங்களையெல்லாம் தெரிஞ்சுகிட்டதில ரொம்ப சந்தோஷம். அமித்து அம்மா பதிவுகளை தமிழ்மணத்தில் படிச்சிருக்கேன்.
போன வார உயிரோசையில் உங்களுடைய சிறுகதை படிச்சேன். ஆரம்பித்து சில வரிகள் படிச்ச உடனே, எழுதியது நீங்கதானான்னு திரும்ப மேல போய் பாத்தேன்."நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?(வேற யாரு? என் உள்ளிருந்துதான்). 'இவங்க இப்படித்தான் எழுதனும், இதைத்தான் எழுதனும்' அப்படிங்கற எதிர்பார்ப்பில்லாம படிக்க கத்துக்கோ", அப்படின்னு ஒரே திட்டு. "சரி, சரி. இனிமே எதிர்பார்க்க மாட்டேன்னு" சொல்லிட்டு மேல படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம் இனிய அதிர்ச்சிதான். :-))
//உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்?//
எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும், அ.முத்துலிங்கம், ஜெ.மோ இருவருக்கும்தான் முதலிடம். இவங்க ரெண்டு பேருடைய எழுத்துக்களை முதல் முதலா படித்த தருணங்கள் இன்னும் நினைவில் இருக்கு.
சித்ரா மனோ
உங்களுடைய அழகான மொழி. அற்புதமான இன்னொருவரின் மொழியை அறிமுகம் செய்கிறது.வாசிக்கவேண்டும் என்று தோணுது.. படிக்கையிலட
நன்றி அகிலன். வாசித்த பின் எனக்கு எழுதுங்கள்
சித்ரா உங்களுக்கு விரிவாக எழுதுகிறேன். அமு எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர், ஜெமோவும் கூட...இதிலும் நம் ரசனைகள் ஒத்திருக்கின்றன...பேசலாம்...மக்கள் தொலைக்காட்சியில் 'மகளிர் தினத்திற்கான கவிதையை வாசிக்கச் செல்கிறேன். நேரம் கிடைத்தால்,நிகழ்ச்சியை பாருங்கள்...
கோணங்கி அவர்களின் கண்ணாடியில் மிதக்கும் ரஸவாதி னு ஒரு கதை, புரியாமல் மறுபடி மறுபடி படிக்க, ஒவ்வொரு முறையும் உருவமற்ற அரூப புரியாத்தன்மை நிரம்பிய நவீன சித்திரம் போன்ற தரிசனமே கிடைத்தது,
பாழி பிதுரா போன்ற நாவல்கள் வேறு என்னை பயமுறுத்திக் கொண்டேயிருக்கிறது
உமா,
நீங்கள் பங்கு பெற்ற மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி இணையத்தில் காணக் கிடைக்குமா? (நான் இருப்பது ஆஸ்திரேலியாவில்).
சித்ரா
உமா அன்புக்கு நன்றி எதற்கு..?
அஜயன் பாலாவின் வலை பற்றிய செய்தி இந்த வார கல்கி இதழில் வெளிவந்துள்ளது..
தங்கள் வலையையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
அட்வான்ஸ் வாழ்த்துகள்.
கருத்துரையிடுக