திங்கள், 23 மார்ச், 2009

பறக்க ஆசைப்படும் மனமும் சாத்தியப்படுத்தாத சுமைகளும்







எனக்குள் ஒரு கனவு இருக்கிறது, அதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறேன், அது ஒரு நாள் என் கைவசப்படும் சர்வ நிச்சயமாய்’ இப்படி ஒரு பெண் தன் மனதிற்குள் பதின்ம வயதில் உருவேற்றிக் கொண்டாள். ஆனால் அதற்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் களைந்தெறியவே அவளின் முழு நேரமும் பொழுதும் சரியாக இருந்தது.

திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், சமையல் அதுவும் சேர்த்து அலுவலக வேலைகள என அவளைச் சுற்றி எப்போதும் வேலைகளின் சுமைகள். ஓவியராகவோ கவிஞராகவோ திரை இயக்குனராகவோ அவள் உருவாக ஆசைப்படும் போது அவள் விட்டுத்தர வேண்டியது திருமண வாழ்க்கையை. பெண்கள் இதற்கு மட்டும்தான் என்று வரையறுப்பது யார்? கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்பவர்களாக இருக்கும் போது வேலைகளை யார் செய்வது தீர்க்க முடியாத சிக்கலாக வளர்ந்துவருகிறது இப்பிரச்சனை. சில வருடங்கள் முன்பு மனைவி சமைக்க மறுக்கிறாள் என்று உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார். இதற்கெல்லாம் விவாகரத்து தர ஏலாது என்று தீர்ப்பு கூறிவிட்டார்கள்.

நம் வேலைகளை நாம் பகிர்ந்து செய்து கொள்ள, நம் இல்லத்தை வெகு சிறப்பாய் வைத்திருக்க நம் ஒற்றுமையும் புரிதலும்தான் தேவை, இதில் ஆணாதிக்கம் பெண்ணியம் என்ற சொற்றொடர்கள் தேவையற்றவை. அலுவலகத்திற்கு சென்று அங்கு நீண்ட நேரம் உழைத்து, ஏதோ ஒரு வாகனத்தில் அலுத்து களைத்து வீடு வந்து சேரும் மனைவிக்கு அங்கே அதை விட மேலதிக வேலை காத்திருக்கிறது, சமையல் அறையில். காலையில் எப்படி போட்டிருக்கிறோமோ இரவில் அவை அப்படியே இருக்கும் ஒரு துரும்பும் அசைந்திருக்காது. கணவரோ இதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் பெரும்பான்மையாக இருப்பதில்லை. அவருக்கு அன்றைய க்ரிக்கெட் மாட்ச்தான் அதிமுக்கியம். போதாதற்கு குறையும் சொல்வார், நேரம் கழித்து வந்தமைக்கோ, வீட்டை சரியாக நிர்வகிக்க தெரியவில்லை என்றோ. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமையும் அச்சொற்கள். எது அவரை ரீவி அருகில் அமர்ந்து கொண்டு கட்டளையிடவும் அதை சிரமேற்றுக் கேட்டுக் கொள்ளும் நிலையில் எம்மையும் வைத்திருக்கிறது? அன்பா? பிணைப்பா? அன்பென்றால் அவர் காபியோ தேனீரோ தயாரித்து தந்திருப்பார், அல்லது பிரியமான வார்த்தைகளை அல்லவா சொல்லியிருப்பார்? அவருக்குத் தெரிந்ததெல்லாம் பெண் சமையல்காரி, வீட்டுக்காரி, சம்பளம் வாங்கும் சம்பளமில்லாத வேலைக்காரி. வெளியில் சென்று வேலை செய்வதால் அவளை இன்னும் அதிகமாக கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். சிந்திக்க முடியாத வகையில் வேலைச் சுமையில் அவள் மூழ்க வேண்டும். ஆண்கள் சுகவாசிகள். அவர்கள் கழற்றி எறியும் பனியன்களையும், பேண்டுகளையும் துவைத்துப் போடத்தான் இப்பிறவி எமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. எந்த ஆணாவது தன் மனைவியின் புடவையோ சுடிதாரோ துவைத்திருப்பாரா? அல்லது தப்பித்தவறி சமைத்திருப்பாரா? பேச்சுலராக இருந்தப்பா நல்லா சமைப்பேன், இப்ப கல்யாணம் ஆனதும் சுத்தமா மறந்து போச்சு என்பவர்கள் உண்டு, ஏன் மறக்காது மனைவி என்ற பெயரில் ஒரு சமையல் இயந்திரத்தை நீங்கள் தருவித்து விட்டீர்களே?

சிறு வயதில் பெண்களை வீட்டு வேலைகளை செய்ய பழக்குவார்கள் அதைப் போன்று நம் ஆண் குழந்தைகளுக்கும் எல்லா வேலைகளையும் பழக்கித் தர வேண்டும். சென்ற தலைமுறை வரை ஆண்பிள்ளை என்பவன் படிப்பவன் சம்பாதிப்பவன் குடும்பத்தின் ஆணிவேர், அவனை சுற்றித் தான் எல்லா இயக்கமும் என்றிருந்தது. எனவே கண்ணும் கருத்துமாய் அதற்கேற்றாற் அவனைக் கவனித்துக் கொள்வது இயல்பாயிருந்தது. பெண்களை வீட்டு வேலைக்கும் ஆணை போஷிக்க, அவனுடைய அனைத்துத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க பெண்களை பயிற்றுவித்தார்கள். ஆனால் இப்போது நிலைமை இவ்வாறு இருக்கவில்லையே. பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், வீட்டு வேலைகள் மட்டும் இன்னும் அவர்கள் தலையிலேயே. இரு குதிரையில் எப்படி ஒருவர் சவாரி செய்ய முடியும்? மேலதிக வேலையை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத போது அவள் உடைந்து சிதறிப் போகிறாள்.ஆண் அளவிற்கு சில சமயம் அவனையும் விட படிப்பையும் சம்பாத்தியத்தையும் ஈட்ட ஆரம்பித்துவிட்ட பெண்பிள்ளைகளை மட்டும் இன்னும் சமையல் அறைகளின் சட்டங்களிலே நம் சமுதாயம் பூட்டிவைக்க நினைப்பதே எவ்வகையில் நியாயம்?

பெண் எவ்வளவு படித்திருந்தாலும், பெரிய பதவிகளை வகித்திருந்தாலும் சமையல் அறையில், வீட்டின் வேலை சுமைகளாலும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறாள். அவள் எவ்வளவு தூரம் பறந்தாலும் வீடு திரும்பித்தான் ஆக வேண்டும். வீட்டின் மூலையில் ஒரு அறை இருக்கிறது, எங்கு சென்றாலும் அதுதான் அவளுக்கு சாஸ்வதமான இடம் என்று எழுதப்படாத விதியொன்று காலகாலமாய் இயங்கி வருகிறது.

நாம் சாதிக்க விழையும்போது அதற்கான அடிப்படை தேவை விழிப்புணர்வு. சமைக்கலாம், துவைக்கலாம், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம், எல்லாம் நம் வேலைகள்தான், அதைச் செய்வதில் நாம் ஒன்றும் குறைந்துவிடமாட்டோம். அவ்வேலைகள் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் இரு பொறுப்புகளை தோளில் சுமக்கும் போது பெரும் அயற்சி ஏற்படுகிறது. நாற்பது வயது பெண்களுக்கு எவ்வளவு உடல் உபாதைகள், எவ்வளவு பிரச்சனைகள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும்? இதற்கெல்லாம் காரணம் அவர்கள் குடும்பத்தை தாங்குவதாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் அத்தனை வேலைகளும்தான். மனதை லேசாக இருக்க விட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. பணத்தை துரத்தி ஓட்டம், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க பரபரப்பாக அதி வேக ஓட்டம், இந்த பந்தயத்தில் தோற்றுக் கொண்டிருப்பதுதான் தானும் தன் சுயமும் என்பதை அறியாமல் தலைதெறிக்க அப்படி ஒரு ஓட்டத்தை நாமெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

ஆணுடன் போட்டிப் போடவோ அவர்களை மட்டம் தட்டுவதோ நம் நோக்கமல்ல. வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற உரத்த குரலைதான் முன்வைக்கிறோம். பெண்கள் ஒரு போதும் ஆணாகிவிடமுடியாது, அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். பெண்கள் தன் தனித்தன்மைகளை வைத்துக் கொண்டு, தன் இயல்புகளையும் கைவிடாமல் தன் வழி நடந்தால் அவள் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அத்தனை கனவுகளையும் வசப்படுத்தலாம்.


(16.3.09 – ‘வீரகேசரி’ சஞ்சிகையில் வெளியான கட்டுரை இது)



21 கருத்துரைகள்:

arumugam சொன்னது…

ஆணுடன் போட்டிப் போடவோ அவர்களை மட்டம் தட்டுவதோ நம் நோக்கமல்ல. வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற உரத்த குரலைதான் முன்வைக்கிறோம். பெண்கள் ஒரு போதும் ஆணாகிவிடமுடியாது, அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். பெண்கள் தன் தனித்தன்மைகளை வைத்துக் கொண்டு, தன் இயல்புகளையும் கைவிடாமல் தன் வழி நடந்தால் அவள் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அத்தனை கனவுகளையும் வசப்படுத்தலாம்.

I find your conclusion is a bit misguiding..
Every female has her own dreams and aims
but as you had mentioned after marriage everything becomes secondary.
Firstly, she has to perform as a caring wife to her husband and as a dutiful daughter in law to her in laws. Next after giving birth to a kid ,she has to play the role of a loving mother and this role is the most demanding one compared to the role of the wife.. and she spends all her time trying to take care of her family.
I wonder.. where is the time left for her to pursue her own dreams and interests...
By the time she reaches forty the dreams and aims just fades away..
i think she just cannot break away from her responsibilities and the routine duties.
I think this is the case with the vast majority of our females.
There may be a few exceptions, I dont deny that..
So I think there should be a more practical solution to this..
Sharing the household duties including the kitchen work may be one of them but
even then I fear will the womenfolk let their male family members to do the cooking,washing,cleaning.etc. I have my own doubts..
Can anyone come out with some practical and possible solution for this situation..!

மணிமேகலா சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் உமா! பல வருடங்களுக்கு முன் வாசித்தேன்.இந்திய கல்லூரி மாணவி கேட்கிறாள்,'வெளிநாடுகளில் வலது குறைந்த இளைஞர்களே தமக்குரிய வேலைகளைத் தாமே செய்து கொள்கிறார்கள். ஏன் ஒரு இந்திய (இலங்கையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்)ஆணால் தனக்கான ஒரு வேளை காப்பியைக் கூட தயாரிக்க முடிவதில்லை' என்று.

அந்தக் கல்லூரி மாணவி தொடர்ந்து சொல்கிறாள்,அப்படியான ஒரு மனிதனை திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இல்லை.ஒரு நண்பனாய் அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒருவனைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.என்கிறாள்.

காலம் மாறும்; மாற வேண்டும்.

அமுதா சொன்னது…

நன்கு எழுதி உள்ளீர்கள்.

/*சிறு வயதில் பெண்களை வீட்டு வேலைகளை செய்ய பழக்குவார்கள் அதைப் போன்று நம் ஆண் குழந்தைகளுக்கும் எல்லா வேலைகளையும் பழக்கித் தர வேண்டும். */
இதுதான் உண்மையான தீர்வு. நம் வேலைகளை ஆண் பெண் என பிரிக்காது பகிர்ந்து செய்தால் பெண்ணுக்கு சுமைகள் குறையும்.

எனது இப்பதிவை படிக்க அழைக்கிறேன் "http://nandhu-yazh.blogspot.com/2009/02/blog-post_13.html"

அகநாழிகை சொன்னது…

//எது அவரை டிவி அருகில் அமர்ந்து கொண்டு கட்டளையிடவும் அதை சிரமேற்றுக் கேட்டுக் கொள்ளும் நிலையில் எம்மையும் வைத்திருக்கிறது? //

உண்மைதான்... நானும் கூட பல சமயங்களில் என் மனைவியிடம் இப்படி நடந்து கொள்கிறேன். உனது இந்தப்பதிவு மனதில் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. வருத்தமாக இருக்கிறது. இதுபோல சில வீடுகளில் பெண்களின் ஆளுமை அதிகமாக, ஆண்கள் உள்ளுக்குள் ஒடுங்கிப்போவதும் நடக்கிறது என்பதும் உண்மை. ஆனால் மனங்களில் ஏற்படும் மாற்றம் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு தர இயலும். கணவன் மனைவி உறவில் புரிந்துணர்வு என்பது அவசியம் இருக்க வேண்டும். அன்பில்லாத வாழ்க்கை எதன் மீதும் வெறுப்பை ஏற்படுத்தி விடும். வேலைக்கு சென்று களைப்புடன் வரும் மனைவிக்கு தேனிர் தயாரித்து தராவிட்டாலும், ஆதரவான ஓரிரு வார்த்தைகள் பேசினாலே போதும். சரியான புரிதல் இருந்தால் அன்பும் கண்டிப்பாக அங்கே இருக்கும்.

- பொன். வாசுதேவன்

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், சமையல் அதுவும் சேர்த்து அலுவலக வேலைகள என அவளைச் சுற்றி எப்போதும் வேலைகளின் சுமைகள்.

:)-

சுமைய சுமையா நெனைக்காம இருக்கவே நான் விழைகிறேன்.
அப்படி நினைக்க ஆரம்பித்தேன் என்றால் சர்ச்சைகள் கட்டாயம் வந்துவிடும். அதானாலேயே நான் இப்படியிருக்கிறேன் என்று கூட சொல்லலாம்.

நம் வேலைகளை நாம் பகிர்ந்து செய்து கொள்ள, நம் இல்லத்தை வெகு சிறப்பாய் வைத்திருக்க நம் ஒற்றுமையும் புரிதலும்தான் தேவை, இதில் ஆணாதிக்கம் பெண்ணியம் என்ற சொற்றொடர்கள் தேவையற்றவை //
ஆனால் இதை நாம் தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
எதிர்பாலரும் இதை யோசிக்கவேண்டுமே.

அவள் எவ்வளவு தூரம் பறந்தாலும் வீடு திரும்பித்தான் ஆக வேண்டும். வீட்டின் மூலையில் ஒரு அறை இருக்கிறது, எங்கு சென்றாலும் அதுதான் அவளுக்கு சாஸ்வதமான இடம் என்று எழுதப்படாத விதியொன்று காலகாலமாய் இயங்கி வருகிறது.//

விதியாக எடுத்துக்கொண்டாலும், இது ஒரு அடிப்படை பாதுகாப்பு உணர்வாக கூட இருக்கலாம் என்பது எனது கருத்து.

பெண்கள் தன் தனித்தன்மைகளை வைத்துக் கொண்டு, தன் இயல்புகளையும் கைவிடாமல் தன் வழி நடந்தால் அவள் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அத்தனை கனவுகளையும் வசப்படுத்தலாம்.//

:)-
நமது அத்தனை கனவுகளும் குழந்தை என்ற ஒரு விடயம் வரும்போது விட்டுக்கொடுக்கத்தான் வேண்டியதாய் இருக்கிறது.

Deepika's Subahar சொன்னது…

கணவன் வீட்டுவேலைகளை ஷேர் பண்னிக்கொள்வது மட்டுமே இதற்குத்தீர்வு. எதை ஷேர் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை இருவரும் பேசி முடிவெடுக்கலாம். என் கணவர் சமையலில் ஸீரோ; ஆனால் பாத்திரம் கழுவுவது முழுக்க அவர் வேலை. அது போல, காலை உணவு முழுக்க அவரே. (பிரெட், சீரியல், நூடுல் போன்ற ’உடனடி தயாரிப்பு’ மட்டுமே காலையில் எடுத்துக்கொள்கிறோம்). துணி வாஷ் செய்து, உலர்த்தி, மடித்து வைப்பது வரை அவரே. இந்த வார (27-3-09) அவள் விகடனில் வந்திருக்கும் என் கட்டுரையில் இந்தப் பங்களிப்பையே சொல்லியிருக்கிறேன். கட்டுரையை www.deesubahar.blogspot.com என்ற “எங்கள்” வலைப்பூவிலும் பார்க்கலாம்; அழைக்கிறேன்.

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

நல்ல பகிர்விற்கு நன்றி உமா.

பெண்கள் ஆண்களை விட தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

பெண்மையே பெருமை. அதை மதிக்காத ஆண்கள் மனிதனே அல்ல.

ஆதவா சொன்னது…

வணக்கம்...

உங்களைப் பற்றி அகநாழிகை சொல்லியிருக்கிறார் (என்ன சொன்னார்?)

இப்போ என்ன சொல்ல வரேன்? பெண்ணியம் என்பது ஆண்களின் கைக்குள் இருக்கிறது என்றா?? அப்படியெனில் அது ஆணாதிக்கம் ஆகிவிடாதா?

நீங்கள் சொல்வது போலத்தான்.. பெண்ணியமும் ஆணாதிக்கமும் மோதிச் சிதறும் துளிகளிலிருந்துதான் வாழ்க்கை துவக்கப்படவேண்டும். பெண்கள் அடிமை எனும் நிலையிலிருந்து சற்று மீண்டு வந்தாலும் முற்றிலும் நீங்காமல் இருப்பதை என்னிலிருந்தே துவக்கப்படவேண்டும். என் மனைவி, என் மகள், என் பேத்தி.... என எனக்குக் கீழான எத்தனை பேரையும் நான் தாங்கும் விதத்தில்தான் அடங்கியிருக்கிறது எல்லாமுமே!

பெண்கள் ஆணாகவேண்டியதில்லை. அதேசமயம் ஆண்களும்... பெண்ணுக்குத் தாலி கட்டுவது கூட ஆணாதிக்கம் தான்... ஏன், அவள் பழைய நண்பனோடு போனில் பேசுவதை மட்டும் ஆண்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை? ஆணாதிக்கம் தான்.... பெண்ணாதிக்கம் நிறைந்திருக்கும் வீடுகளுக்கும் இவை போன்ற கேள்விகள் பொருந்தும்.

கனவுகள் விளிம்பை மீறாது பறக்க வேண்டும். விளிம்புகள் எப்பொழுதும் மழுப்பலாக இருப்பதில்லை!!! இதை இரு பாலும் புரிந்து கொள்ளவேண்டும்.

உமாஷக்தி சொன்னது…

Dear Arumugam, Thanks for your comments. //I wonder.. where is the time left for her to pursue her own dreams and interests...// yes you are right, she does not have time, and thats why i had written this article to make people understand that woman should be treated well and her burden should be shared so that she achieves her life time goal.

I am thirty plus and i have just started chasing my dreams after eleven years of my family struggles...age cannot be a bar for anything, thats my personal experience. If I want to do, i have to do - Mahatmaji's famous quote is 'Do or Die' it is not only for country's liberation, but to break all the fetters that our womankind are chained to for ages and ages.

உமாஷக்தி சொன்னது…

அன்பின் யசோ, மணிமேகலா - நலமா? காலம் மாறிக்கொண்டிருக்கிறது தோழி. நல்ல மாற்றங்களை நாமும் வரவேற்போம்..

உமாஷக்தி சொன்னது…

நன்றி அமுதா..நந்தாவின் ப்ளாக்கை நிச்சயம் வாசிக்கிறேன்.

உமாஷக்தி சொன்னது…

வாசு, நலமா? நீங்கள் சொல்லியது நூறு சதவீதம் சரியே. அன்பே நிலையானது. அன்பிற்காக இறங்கிவருதல் தவறேயில்லை. கணவன் மனைவி உறவில் அன்பில்லாமை அவ்வுறவை உடைத்துவிடும். புரிதலும் அன்பும் இருக்குமாயின் அவ்வாழ்க்கைத் துணை கிடைப்பவர் அதிர்ஷ்டசாலிகள். நம் நாட்டில் கிட்டத்தட்ட எல்லா ஆண்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

உமாஷக்தி சொன்னது…

நன்றி அமித்து அம்மா, வண்ணத்துப்பூச்சி...உங்களோட கதைச்சு ரொம்ப நாளாச்சு...அலுவலக வேலைகளில் சிக்கியுள்ளேன்...முடிந்ததும் கதைக்கலாம். மற்றபடி நலம் தானே?

உமாஷக்தி சொன்னது…

வணக்கம் ஆதவா. அகநாழிகை என்ன சொன்னார்? //பெண்கள் ஆணாகவேண்டியதில்லை. அதேசமயம் ஆண்களும்... பெண்ணுக்குத் தாலி கட்டுவது கூட ஆணாதிக்கம் தான்... ஏன், அவள் பழைய நண்பனோடு போனில் பேசுவதை மட்டும் ஆண்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை? ஆணாதிக்கம் தான்.... பெண்ணாதிக்கம் நிறைந்திருக்கும் வீடுகளுக்கும் இவை போன்ற கேள்விகள் பொருந்தும்.

கனவுகள் விளிம்பை மீறாது பறக்க வேண்டும். விளிம்புகள் எப்பொழுதும் மழுப்பலாக இருப்பதில்லை!!! இதை இரு பாலும் புரிந்து கொள்ளவேண்டும்.// ரொம்ப சரியா சொன்னீங்க..நன்றி ஆதவா.

உமாஷக்தி சொன்னது…

நன்றி தீபிகா. நீங்கள் கொடுத்து வைத்தவர் என் கணவர் வெளிநாட்டில் ஐந்து வருடம் தன் வேலைகளை தானே செய்து பழகிக் கொண்டபின் அவரிடம் நிறைய மாற்றங்கள். அதற்கு முன் அவர் பேனா கீழே விழுந்தால் கூட யாராவது எடுத்துத் தரவேண்டும். மனமாற்றம் என்பது புரிதலும் அன்பும் தன்னைப் போல பிறரை எண்ணுதலிலுமே இருக்கிறது. உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி. அவள் விகடன் கட்டயாம் வாசிக்கிறேன்.வாழ்த்துக்கள் !

arumugam சொன்னது…

Times are changing..,people are changing.., lets hope and pray that there will come a time where the woman folks enjoy equal rights with men.
I am sure those days are not very far..
Meanwhile people like you should keep doing your best to bring about this change in the society.

தமிழ்நதி சொன்னது…

சிறந்த, தேவையான பதிவு உமா. அநேக வீடுகளில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் புருஷன்மார் தொலைக்காட்சி பார்ப்பார்கள். அல்லது பத்திரிகை வாசிப்பார்கள். அதைப் பார்க்கப் பார்க்க அவர்களது பிறப்புரிமையே போலிருக்கும். ஆனால், பெண்கள் சமையலறையில் இருப்பார்கள். அல்லது வீட்டில் விசிறப்பட்டிருக்கும் பொருட்களை ஒழுங்குபடுத்துவதில் இருப்பார்கள். வீடு, குடும்பம் என்பதெல்லாம் எவ்வளவு பாரபட்சங்கள் நிறைந்தவை. என்னால் முடிந்ததெல்லாம் நான் வளர்க்கும் பிள்ளைகளை ஆண்-பெண் என்ற பேதங்களை கேள்வி கேட்கும் விதமாக வளர்ப்பதுதான். ஆனால் எனக்குத் தெரியும். அவர்களும் திருமணம் முடித்ததும்
'கணவர்'களாகிவிடுவார்கள். வாழ்க்கைப்பட்டு வரும் பெண்கள் 'மனைவி'களாகிவிடுவார்கள். இது மாறவேண்டும். எப்படி மாற்றுவது என்பதுதான் கேள்வி.

உமாஷக்தி சொன்னது…

Yes Arumugam...thanks a lot...

உமாஷக்தி சொன்னது…

நன்றி தமிழ்நதி..மாற்றங்கள் சீக்கிரம் வந்தால் சாதனைப் பெண்கள் பட்டியல் சற்று நீளமாகக் கூடும்.

arumugam சொன்னது…

I came across this article by Vijay Nagaswami "Woman and Superwoman " in The Hindu dated 29th March 2009 Sunday.
This article has many interesting inputs about similar subjects many of us shared in your blog.
Pl try to read this article and share your views with us..

வே.ராஜகோபால் சொன்னது…

இந்தப் பார்வையின் மறுபக்கத்தை சுட்ட விரும்புகிறேன். பொதுவாழ்வில்(தன்னலமற்று)-இந்தக் காலத்து அரசியல் வாதிகளை விட்டுவிடுங்கள்- ஈடுபட விரும்பும் யாருக்கும் குடும்பம் ஒரு பாரமாகவே இருக்கும். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை.சரித்திரமெங்கும் நிறைந்து கிடைக்கும் உதாரணங்கள். எனவே இதை (gender)ஆண் பெண் பிரிவுக்குள் மாட்டுவது சரியானதல்ல என்று நினைக்கிறேன். பொதுவாழ்வில் ஈடுபடுபவருடைய கணவரோ மனைவியோ எவ்வளவு தூரம் அவருடன் ஒத்துழைப்பார்கள்?ஏனெனில் திருமணங்கள் ஒத்த கருத்துடையவர்களிடையே அல்லது அடுத்தவர்களுக்கும் சமூகக் கடமைகள் செய்ய உரிமை உண்டு என்ற புரிதலுடன் நடப்தில்லையே.