வியாழன், 30 ஏப்ரல், 2009

பூனைகள் இல்லாத வீடு – சந்திரா



சில கதைகளை வாசித்தவுடன் அதை மறந்துவிடுவேன். சில கதைகள் என்னுடன் உரையாடிவிட்டு விடைபெற்றுச் சென்றுவிடும். வெகு சில கதைகளே அபூர்வமாய் என்னுடன் தங்கிவிடும். அப்போதைக்கு நீங்கினாலும் சில நாள் கழித்து மீண்டெழுந்து நலம் விசாரிக்கும். மீள்வாசிப்பு செய்து மன அடுக்குகளில் பத்திரப்படுத்திக் கொள்வேன். செல்மா, செல்வி, குந்தவை, அருள்மொழிவர்மன், அரவிந்தன், என்று நிறைய பேர் மனதெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள். இப்போது தோன்றிய பெயர்கள் இவ்வளவே இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். இத்தொகுப்பில் சிலர் அத்தகைய சாத்தியங்களை எனக்குக் காண்பிக்கிறார்கள்.

‘புளியம் பூ’, ‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’, ‘பூனைகள் இல்லாத வீடு’, ‘கிழவி நாச்சி’, ‘நிகிலா’ ‘ஏழு கன்னிமார்’ கள்வன், ‘அத்துவானக்காட்டு எருமைகளும் அஸிஸ்டெண்ட் டைரக்டரும், பூச்சி, தோழ்ர்கள் கடத்தல்காரர்களான கதை, ராஜா ராணி ஜோக்கர்’ என இத்தொகுப்பில் மொத்தம் பதினொன்று சிறுகதைகள். ஒன்றை விட ஒன்று சிறப்பானதாய், முழுமையானதாய், ஒன்றை விஞ்சிய மற்றொன்றாய் தொடர் வாசிப்பில் என்னை ஆழ்த்தியது. சந்திராவின் எழுத்தின் மீது பிரமிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. பதின்ம வயது சித்திரங்களை அழகாய் சில கதைகளில் ஆழப் பதித்திருக்கிறார். பெயர் தெரியாத கிராமப் பரப்புகளில் நடந்து திரிந்த அனுபவத்தை இக்கதைகள் அள்ளித் தருகின்றன. வெள்ளந்தியாக, சின்னஞ்சிறுமியாக, கிராமத்துக் குயிலாக, இக்கதையின் நாயக நாயகிகள் நம்மை வெகுவாய் கவர்கிறார்கள். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு இது.

இக்கதைகளில் என்னை வெகுவாக பாதித்த கதை ‘நிகிலா’ துணிக்கடையில் வேலை செய்யும் ஏழைப் பெண் நிகிலா காதலில் வீழ்கிறாள். செல்வம் ஆரம்பத்தில் நல்லவனாய் இவளுக்கானவனாய் இருக்கிறான். காதலும் தாம்பத்யத்தின் ஆரம்ப கால மோகங்களும் அவர்கள் ஏழ்மையை வெல்கிறது. ஆனால் நிதர்சனம் தன் கோரங் கரங்களால் அவர்களை கீறிப்பார்க்கிறது. வாழ்வின் சூழல்களையும் அன்றாட பிரச்சனைகள் வயிற்றுப் பாடுகளுக்கான கேள்விகள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல நிகிலாவிடம் பத்திரமாய் இருக்கச் சொல்லிவிட்டு பணம் தேடும் பொருட்டு சென்னைக்கு போய் சம்பாதித்து வருவதாய் சொல்லிவிட்டுச் செல்கிறான் செல்வம். அவன் அவளிடமிருந்து வறுமையிலிருந்து அவளின் பசிகளுக்கான கேள்விகளுக்கும் பதில் சொல்ல ஏலாமல் தப்பியோடிய கள்வனா அல்லது நிஜமாகவே பொருள் தேடச் சென்ற பொறுப்பான கணவனா என்பது கதையில் இல்லை. பெண் படும் பாட்டை வார்த்தை வார்த்தையாய் நிகிலாவின் அவல வாழ்க்கை நமக்குச் காட்சிப்படுத்தப்படுகிறது.

செல்வத்தைப் பற்றிய எவ்வித தகவலுமின்றி நிகிலா மெலிந்து உருகுகிறாள். நாள்கள் மாதங்களாகிறது. வயிற்றுக் குழந்தை வேறு அவளுள் மிதித்து துவைத்து உலகைக் காணும் ஆசைகளை தாயிடம் சொல்கிறது. என்ன செய்வது என்பது தெரியாமல் நிகிலா சென்னைக்கு வந்து திசை தெரியாமல் செல்வத்தைத் தேட ஆரம்பிக்கிறாள். தேடல் இந்த ஒரு பதம் தான் எல்லார் வாழ்க்கையையும் ஊசலாட்டத்திற்குள் கொண்டு நிறுத்துகிறது.. அடிப்படைகள் கிடைத்துவிட்ட நம் போன்றோரின் தேடல்களின் திசைகள் வேறு மாதிரி, ஆனால் நிகிலா தேடுவது இழந்துவிட்ட தன்னுடைய வாழ்வாதாரத்தை, காதல் பொக்கிஷத்தை, உயிர்க் கணவனை, தன் பிள்ளையின் தகப்பனை.

நிகிலாவிடம் பணம் இல்லை. தங்குமிடமில்லை. ஏழைக்கு வீதிதானே வீடாகிறது? பள்ளியொன்றின் ஓரத்தில் தங்கி செல்வத்தை தேடத் தொடங்குகிறாள். அவளின் பரிதாப நிலை பார்த்து உதவி செய்கிறாள் எதிர் ப்ளாட் பாயம்மா. வீட்டு வேலைக்கமர்த்தி வயிறார உணவளிக்கிறாள். அவளுடன் மற்றொரு நாடோடிக் குடும்பமும் பள்ளியில் தங்கியிருக்கிறது. அக்குடும்பத்தின் மருமகள் இவளின் நிலையைப் பார்த்து இரக்கப்படுகிறாள். அவ்வப்போது கொஞ்சம் உணவு தருவதை அவள் மாமி கண்டிக்கிறாள். நாமே அன்றாடக் காய்ச்சிகள் ஒரு கை அதிகமானால் எனும் அவள் வாதம் நமக்கு ஈகைக்கு எதிராய் தோன்றினாலும் அவரவர் பசி அவரவர் நியாயங்களைக் கட்டமைக்கிறது. நிகிலாவால் அவனை கண்டு பிடிக்கவே இயலவில்லை. அத்துவானக் காட்டில் அகப்பட்ட மானாய் அதுவும் கர்ப்பத்தின் சங்கடங்களோடு சரியான உணவில்லாமல் உறைவிடமில்லாமல் வேதனையின் துயரின் உச்சத்தில் நின்று தவிக்கும் பேதைப் பெண்ணாய் கஷ்டப்படுகிறாள். அவள் யாரிடமோ ஏமாந்து வயிற்றில் பிள்ளையை வாங்கியிருக்கிறாள் என பொரணி பேசுகிறார்கள். இந்த நிலையிலும் அவள் ஆசுவாசப்படுவது கர்ப்பமாக இருப்பதால் ஆண்களின் அத்துமீறல்கள் இல்லாமல் சற்று நிம்மதியாக இருக்கமுடிகிறது. பள்ளியில் அவளுருப்பதால் இரவில் இலைமறைவாக அங்கு நடக்கும் குற்றங்களுக்கு சாட்சியாக நிற்கிறாள். குற்றத்தின் தலைவனொருவன் அவளைப் பற்றிய புகார்களை வீதி வீதியாய் பரப்பி அவள் அங்கு நிலைத்திருப்பதை தன் வன்கரங்களால் தடுக்கிறான். கொடிய விதியாலும் அவனின் சதியாலும் மீண்டும் வீதிக்கு வந்த நிகிலாவிற்கு சொல்லொண்ணா வலி மனதிலும் வயிற்றிலும் ஏற்படுகின்றது. அது பிரசவ வலியென்பதைக் கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அக்கதை இப்படி முடிகிறது “பள்ளிக்கூட மூலையில் கிடந்த லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு, வலி நிரைந்த வயிற்றீல் கைகளை வைத்தபடி, கண்களெல்லாம் செல்வம் உருவம் நிறைய எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு போய்க் கொண்டிருந்தாள் நிகிலா. விழுந்து கிடந்த கொன்றை மரத்தை பள்ளிக்கூட மைதானத்திலிருந்து யாரோ அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.”

இக்கதை கதையாக ஏற்படுத்திய பாதிப்பை விடவும் பெண்ணாய் இருப்பதின் பிரச்சனைகளை கதை போக்கில் அலசுகிறது. காதல், கல்யாணம், குழந்தை, பிரசவம் எல்லா வலிகளும் பெண்களுக்கு, இன்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற விதயங்களுக்கு பார்வையாளனாய் மட்டும் இருக்கும் ஆண்கள் எப்படி குற்றவுணர்வு சிறிதுமின்றி மேலும் மேலும் எம் பெண்களுக்கு அழுத்தம் தருபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

அடுத்து நான் மிகவும் ரசித்த கதை தொகுப்பின் தலைப்புக் கதையான ‘பூனைகள் இல்லாத வீடு’ வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் பண நடமாட்டம் அதிகமிருக்காது . வறுமையின் நிறங்கள் அவ்வளவு எளிதாய் அவர்களுக்கு ஊடுருவ முடியாது. காலையில் கஞ்சியை குடித்திருந்தாலும் நுனி கசங்காத சட்டைகள் அணிந்திருப்பார்கள். உண்மை நிலை வெளியில் தெரியாத வண்ணமாய் இருக்கும் அவர்கள் வாழ்க்கை முறை. இன்னும் துல்லியமாக என்னால் சொல்ல முடியும் ஏனென்றால் என் தாத்தாவின் தொடர்ச்சியாக அப்பா இருவரும் மிகப் பெரிதாக வாழ்ந்து கெட்ட குடும்பம். கடைசி சொத்து வரை, கடைசி பொருள் வரை, கடைசி துணுக்கு தங்கம் வரை விற்று தின்று கெட்ட குடும்பம் என்று நெல்லையில் பட்டப் பெயர் எடுத்த குடும்பம் எங்களுடையது. இக்கதையுடன் என்னால் மிகவும் பொருந்திப் போக முடிந்தது. நாங்கள் ஊருக்குச் சென்றால் மச்சில் (மாடி) இருக்கும் ஒரு அறையில் கொட்டிக் கிடக்கும் பழமையும் புராதானமும் கலந்த பொருள்களை ஆராய்ச்சி செய்து பொழுது போக்குவோம். நான் பெரும்பாலும் அவ்வகழ்வாராய்ச்சி அறையில் கிடைக்கும் புத்தகங்களுடன் பேச ஆரம்பித்துவிடுவேன். என் தங்கை கைக்கு கிடைத்த் மரப்பாச்சி பொம்மைகள், சிறு சிறு விக்கரங்கள், வெண் சங்கு, இன்னும் நியாபகத்தில் நிற்காத பல பொருள்களை ஒவ்வொரு விடுமுறையின் போது அங்கிருந்து கடத்திக் கொண்டு வருவாள். இக்கதையிலும் வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டமான நிலையிலும் அப்பிள்ளைகள் கோவிலுடன் இணைந்த தங்கள் வீட்டை பெருமையின் சின்னமாக நினைக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்கிறார்கள். தங்கள் விளையாட்டுக்களையும் படிப்பையும் அவ்வீட்டின் அழகான வெளிகளில் நிகழ்த்துகிறார்கள். அவர்களுடன் அவர்களிடம் வந்து சேரும் சாம்பல் நிறப்பூனையொன்றும் வளர்ந்து வருகிறது. இவர்களும் பெரியவர்களாகிறார்கள் அவ்வீட்டின் கடைசி மகன் அதாவது இக்கதை சொல்லியின் அக்காவிற்கு திருமணமாகிறது. பூனை அப்போது குட்டிகளை ஈனுகிறது. அச்சமயம் மகளின் பிரசவத்திற்காக தாய் அங்கு செல்கிறாள் பூனைகளை கருத்தாய் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு. அவன் அன்பும் அக்கறையுமாய் அதனை பேணிப் பாதுகாத்தும் குட்டி ஒன்று காணாமல் போகிறது. இக்கதையில் பூனை குறீயீடாக இருந்து அவர்களின் வாழ்வின் நிகழ்ச்சிகளை நமக்கெடுத்தியம்புகிறது.
கதையும் புனைவும் தேர்ந்த கையினால் அடுக்கடுக்காய் அழகான புள்ளியில் இழைந்திழைந்து நம்மை வாசிப்பானுபவத்தின் பரவசத்திற்குக் கடத்திச் செல்கிறது. அவ்வீட்டில் மீண்டும் வசந்தங்கள் துளிர்க்கிறது. பெரிய படிப்புகள் படித்து எல்லோரும் ஒருவழியாய் வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள். இடையில் எல்லாப் பூனைகள் காணாமல் போய் கடைசியில் பெரிய பூனையும் செத்துப் போகிறது. அவ்வீடு அதன் பின் ‘பூனைகள் இல்லாத வீடாகிறது’. அங்கு அதற்கு முன்னரும் பூனைகள் இல்லை, அதன்பின்பும் பூனைகள் இல்லை. காலம் நகர்கிறது.....வாழ்க்கை வழிந்தோடுகிறது.....

எல்லாக் கதையைப் பற்றியும் சொல்ல ஆசை, ஆனால் இதுவே மிகப் பெரிய பதிவாகிவிட்டது. இக்கதைகளை எழுதிய சந்திரா பத்திரிகையாளராய் இருந்து, சினிமா துறைக்குச் சென்றவர். அமீரிடம் உதவி இயக்குனராய் இருந்து தற்போது தாமிராவிடம் இணை இயக்குனராய் இருக்கிறார். இவரின் சொந்த ஊர் தேனியின் கூடலூர். எம் மண்ணின் படைப்பாளிகளின் எழுத்துக்களும் திரை ஓவியங்களும் ஒரு போதும் சோடை போவதில்லை என்பதை மிகப் பெருமையுடன் இங்கு பதிவு செய்கிறேன்.

17 கருத்துரைகள்:

தினேஷ் இராஜேந்திரன் சொன்னது…

நல்ல பதிவு உமா...
நிகிலாவை போல் பல பெண்கள் நகரத்தில் அழைந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அவளை போல ஒரு பெண்ணை என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். வயிற்றில் குழந்தையோடு வீடு வீடாக உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்த அந்த பெண் , தன் பிள்ளையை பெற்றெடுத்தாள் இந்த உலகத்தில் என்ன கஷ்டப்பட போகுதோ என்றெண்ணி .. பிள்ளையை பெற்றெடுக்காமலேயே ஒரு நாள் இறந்து போனால்... நிகிலாவை படித்த்தும் பெயர் தெரியா அவள் என் முன் ஊசாலாடுகிறாள்..

வால்பையன் சொன்னது…

//எம் மண்ணின் படைப்பாளிகளின் எழுத்துக்களும் திரை ஓவியங்களும் ஒரு போதும் சோடை போவதில்லை என்பதை மிகப் பெருமையாக இங்கு பதிவு செய்கிறேன்.//

வழிமொழிகிறேன்!

பெயரில்லா சொன்னது…

ஒரு நல்ல புத்தகத்தையும், எழுத்தாளரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். இதில் 'கிழவி நாச்சி' மட்டுமே படித்திருக்கிறேன். உயிர்மையில் இந்த புத்தகத்தைப் பார்த்த நினைவு. வாங்க வேண்டும். நீங்கள் எழுதாவிட்டால், இந்த புத்தகத்தை தவற விட்டிருப்பேன்.

'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்னவாயிற்று? டிஜேயின் பதிவில் படித்துவிட்டாலும், உங்களுடைய வாசிப்பனுபவத்தைப் படிக்க ஆவல். (முடிந்தால் மட்டுமே.)

சித்ரா

mythees சொன்னது…

பதிவு அருமை .....
-:)))

blog follow link
குடுத்தா நல்லா இருக்கும் .........

mythees சொன்னது…

நல்ல பதிவு........

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

அருமையான அறிமுகம்.

எம் மண்ணின் படைப்பாளிகளின் எழுத்துக்களும் திரை ஓவியங்களும் ஒரு போதும் சோடை போவதில்லை என்பதை மிகப் பெருமையாக இங்கு பதிவு செய்கிறேன்.//

உண்மையே...

பதிவிற்கு நன்றி உமா.

வாழ்த்துகள்.

கார்த்திக் சொன்னது…

//என இத்தொகுப்பில் மொத்தம் பதினொன்று சிறுகதைகள்.//


// பார்வையாளனாய் மட்டும் இருக்கும் ஆண்கள் எப்படி குற்றவுணர்வு சிறிதுமின்றி மேலும் மேலும் எம் பெண்களுக்கு அழுத்தம் தருபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இக்கதை உணர்த்துகிறது.//

பதினாறு சிறுகதை இருந்த இந்த புத்தகத்துல.உங்ளுக்கு ஆண்கள மட்டம் தட்டுரமாதிரி இருக்க இந்த கததான் பிடிச்சிருக்கு இல்லையாங்க பெண்ணியவாதி.

நல்ல அருமையானா விமர்சனங்க.

பட்டாம்பூச்சி சொன்னது…

நல்ல பதிவு உமா.
அருமை .

உமாஷக்தி சொன்னது…

நீங்கள் சொன்ன உண்மை கதை இதயத்தை உலுக்குவதாய் இருக்கிறது. பகிர்விற்கு நன்றி தினேஷ்

உமாஷக்தி சொன்னது…

நன்றி அருண் (வால்பையன்னு ஏன் பேர் வச்சுக்கிட்டீங்க, இவ்ளோ சமத்தா இருந்துகிட்டு?)

வால்பையன் சொன்னது…

//நன்றி அருண் (வால்பையன்னு ஏன் பேர் வச்சுக்கிட்டீங்க, இவ்ளோ சமத்தா இருந்துகிட்டு?) //


வெளியே யார்கிட்டயும் சொல்லாதிங்க!
இங்க நான் டெர்ரர் ஆக்ட் கொடுத்துகிட்டு இருக்கேன்! அப்புறம் காமெடி பீஸாகிருவேன்!

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

தேர்ந்த விமர்சனம்

நிகிலாவின் கதை அனேக தமிழ் சினிமாக்களின் முற்பகுதியை ஞாபகப்படுத்தினாலும், இவ் வரிகள் //இக்கதை கதையாக ஏற்படுத்திய பாதிப்பை விடவும் பெண்ணாய் இருப்பதின் பிரச்சனைகளை கதை போக்கில் அலசுகிறது. // கதையினைப் படிக்கத் தூண்டுகிறது.

பூனைகள் இல்லாத வீடு - குறித்துக்கொண்டேன் - வாங்குவதற்காக.

மாலன் சொன்னது…

சந்திரா வாழ்க்கையிலிருந்து கிள்ளி எழுதும் நல்ல எழுத்தாளர். அவர் கதை ஒன்றை வெகுகாலத்திற்கு முன்பு குங்குமத்தில் வெளியிட்டிருக்கிறேன். அவர் கதைகள் புத்தகமாக வந்திருப்பதை அறிய மகிழ்ச்சி.

ஒரு வேண்டுகோள்: புத்தகங்களை அதிமுகப்படுத்தும் போது அதன் பதிப்பக முகவரியையும் கொடுத்தால் வாங்கிப் படிக்க வசதியாக இருக்கும்

மாலன்

உமாஷக்தி சொன்னது…

நன்றி வால்பையன் ;))

உமாஷக்தி சொன்னது…

நன்றி சித்ரா. உயிர்மையின் வெளியீடுதான். மாலன் அவர்கள் சுட்டிகாட்டிய பின்பு பதிவில் பதிப்பகத்தின் பெயரை சேர்த்துவிட்டேன். உடல் / மன நலம் சரியாக இல்லாதபடியால் உடன் பதில் எழுதவில்லை. இப்போது சரியாகிவிட்டேன்.
உண்மை கலந்த நாட்குறிப்பு பாதி வாசித்துக் கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் வாசிக்க கேட்டதால் தந்துவிட்டேன். அவர் முடித்ததும் நான் வாசித்துவிட்டு எழுதுகிறேன். அமுவின் புத்தகம் எனக்கு மிகவும் ப்ரியமானது் மனதிற்கு நெருக்கமானதும் கூட.

உமாஷக்தி சொன்னது…

கார்த்தி, வண்ணத்துப்பூச்சியார், பட்டாம்பூச்சி, mythees பகிர்விற்கு நன்றி.

வால் அது என்ன terror act. வேணாம் பயமா இருக்கு..சமத்தா அருணாவே இருங்க..

அமித்தும்மா நன்றி, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். நம் ரசனைகள் ஒன்றே..

உமாஷக்தி சொன்னது…

நன்றி மாலன். இத்தொகுப்பு உயிர்மை வெளியீடு. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.