திங்கள், 25 மே, 2009

தி ரோட் ஹோம்



‘தி ரோட் ஹோம்’ கவிதையாய் ஒரு காதல் கதை. சாதாரண சம்பவங்களால் பின்னப்பட்ட கதையானாலும் உணர்வுகளை ஊடுருவி கிளர்ந்தெழச் செய்யும அதி அற்புதமான காட்சியனுபவத்தை இத்திரைப்படம் தருகின்றது. அருவியை ஒட்டிய நீர்த்தேக்கத்தில் மென் சாரலடிக்கும் மழை நாளில் படகில் பயணம் செய்தால் எப்படி நம் உள்ளம் களிப்பில் ஆழும் – அப்படி ஒரு பரவசத்தை இத்திரைப்படம் தருகின்றது.

தந்தை இறந்துவிட்ட செய்தியறிந்து இளைஞன் லூவோ யூசெங் பல ஆண்டுகள் கழித்து சன்ஹட்டன் எனும் தன் கிராமத்திற்கு வந்து கொண்டிருக்கிறான். லூவின் பார்வையிலும் மொழியிலும் இக்கதை மென்கவிதையாய் முன்னகர்ந்து செல்கிறது.

வீட்டுக்கு வந்ததும் முதியவளான தன் தாயை மனவருத்ததுடன் சந்திக்கிறான். அவள் தன் கணவனின் இறுதி வழியனுப்புதலை பாரம்பரிய சீன முறைப்படி செய்ய வேண்டும் என்கிறாள். இது சரியாக வருமா என்று லூவிற்கு சந்தேகமாக இருக்கிறது. கடினமான பனிக்காலத்தில் சுற்றமும் நட்பும் புடைசூழ பல மைல்கள் அப்பாலிருக்கும் இடுகாட்டிற்கு தூக்கிச் செல்லவது இக்காலத்தில் நடைமுறை சாத்தியமாகுமா, நாம் யோசிக்க வேண்டும் என்கிறான். ஆனால் தாய் பிடிவாத்த்துடன் தன் கணவனுக்கு இறுதியாக போர்த்தவிருக்கும் துணியை தானே நெய்கிறாள். லூ அந்த குக்கிராமத்திற்கே தெரிந்திருந்த ஊரறிந்த தன்னுடைய பெற்றோரின் இனிமையான காதல் கதையை நினைவித் திரையில் மிதக்க விடுகிறான்....

பதினெட்டு வயது பேரழகியான ஜாவோ டி தன் ஊருக்கு வந்திருக்கும் இளம் டீச்சர் லூ சாங்யூவை கண்டதும் காதல் வசப்படுகிறாள். லூ சாங்யூவிற்கு இருபதி வயதிருக்கும் நேர்த்தியாக உடையணிந்த அழகனாக அவள் கண்ணுக்கு புலப்படுகிறான். முதலில் அவன் இவளை கவனிக்கவே இல்லை. அந்த ஊர் பள்ளியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அக்குழுவிற்கு ஊர்ப்பெண்கள் சமைத்து பணியிடத்திற்கு அனுப்புவதாய் ஏற்பாடாகிறது. அவனை எவ்வகையிலாவது திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டும் என்ற பேராவாவில் இருந்த ஜா பார்த்து பார்த்து சமைத்து அதை அழகாக அடுக்கி அவன் தன்னுடைய உணவை தேர்ந்தெடுக்கிறானா என ஆவலுடன் காத்திருக்கிறாள். தற்செயலாக அவள் சமைத்தது அன்று அவனுக்கு கிடைக்கவே வெகுவாக ரசித்துச் சாப்பிடுகிறான் சாங்யூ. அதை நிறைவாய் காண்கிறது ஜாவின் கண்கள். காதலின் ஆரம்பப் புள்ளி இது.

அதன்பின் அந்த பள்ளிக் கட்டடம் வளர்கின்றது அவளின் ஒருதலைக் காதலைப் போலவே. கனிவும் கண்டிப்புமான தங்கள் மாஸ்டரை அந்த பிள்ளைகள் மட்டுமல்லாது அந்த ஊரே நேசிக்கிறது. வசந்தகாலத்தில் பூத்துக் குலுங்கும் மலர்செடிகளுக்கு ஊடே பிள்ளைகளை மார்ச் பாஸ்ட் செய்ய அழைத்துப் போவான் சாங்யூ. நெல்மணிக்கதிர்களிடையே மறைந்து நின்று இக்காட்சியை ரசிப்பாள் ஜாவோ. பள்ளிக்கு அருகே இருக்கும் கிணற்றில் நீர் சேந்தும் சாக்கில் அவனைக் பெண்மை நிறைந்து வழிந்தோடும் தன் இளம்பருவத்தை சுமந்திருக்கும் ஜோ கடைக்கண்ணால் தன் காதலன் சாங்யூவை கண்டு மகிழ்கிறாள். இவ்வாறிருக்கையில் தனியாக இருக்கும் அவனுக்கு ஒவ்வொரு வீட்டிலும் வாரம் ஒருநாள் விருந்து சாப்பாடு அளித்துக் கொண்டிருந்தனர். அன்று ஜாவின் வீட்டிற்கு விருந்துக்கு போகும் நாள்.

தன் ப்ரியமானவனுக்காக பார்த்து பார்த்து சமைக்கிறாள் ஜாவோ. அவளுடைய அம்மா இவளின் சுறுசுறுப்பையும் ஈடுபாட்டையும் விருந்தோம்பல் என்றே நினைக்கிறாள். அன்று அந்த உணவின் சுவையூடே காதல் சுவையும் கலந்திருப்பதை உணர்கிறான் சாங்யூ. அதன்பின் காதலர்கள் வார்த்தைகளாலும் காதலை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அவன் தன் ஜாவோவிற்கு எளிய பரிசாய் ஒரு ஹேர் க்ளிப் தருகிறான். அதை பொக்கிஷமாய் அவள் பாதுக்காக்கிறாள். அரசியல் காரணங்களுக்காய் சாங்யூ நகரத்திற்கு செல்லவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிறான். பிரிவின் சொற்களை மிகவும் சங்கடத்துடன் சொல்லி அவளிடம் பிரியாவிடை பெற்றுச் செல்கிறான்.

சாங்யூ சென்றபின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிகிறது ஜாவிற்கு. அவன் வரப்போகும் நொடிக்காக தன் விழிகளை பாதையோரத்தில் நிலைத்திருந்தாள். பனி பொழிந்துகிடக்கும் நீண்ட நெடிய சாலையில் அவன் தடங்களைக் காணாமல் சோர்வுறுகிறாள். ஒருநாள் தங்களின் காதல் சின்னமான ஹேர் பின்னை தொலைத்துவிடுகிறாள். அவனே தொலைந்துவிட்டதைப் போல துடிதுடித்து பித்தேறி அதைத் தேடி தேடிக் களைப்புறுகிறாள். துக்கத்திலும் ஏக்கத்திலும் அவள் பூவுடல் வாடிப்போகிறது. உடல் நலிந்து நோய்மையின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொள்கிறாள். கடுங்காய்ச்சலில் வீழ்ந்த பின்னும் அவன் தன்னைத் தேடி வரும் காட்சியை கண்ணுக்குள் நிறுத்திக் கொள்ள அப்பாதையில் சிலையாய் காத்திருக்கிறாள் ஜாவோ.

எத்தனையோ சிக்கலுக்கிடையில் அவள் தன்னை தேடிக் கொண்டிருப்பதை உள்ளுணர்வால் உணர்ந்து ஓடோடி வருகிறான் சாங்யூ. காதலர்கள் இணைகிறார்கள். மரபை கொண்டாடிக்கொண்டிருக்கும் அந்தச் சிறிய ஊரே அவர்களின் இக்காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறது. அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் முதல் காதலர்கள் அந்த ஜோடிதான். ஆனால் பிரிவு இரண்டாம்முறையாக அவர்கள் வாசலை வந்தடைகிறது. இம்முறை இரண்டாண்டுகள் அவளைவிட்டு அரசியல் காரணங்களுக்காய் நகரத்தின் நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறான். ஜாவோவின் காத்திருப்பின் தீவிரம் சற்றும் குறைந்திருக்கவில்லை. அவன் வகுப்பு எடுக்கும் பள்ளியை ஒழுங்குபடுத்துவதும் சுத்தமாக வைத்திருப்பதிலும் தன் நேரத்தையும் பொழுதையும் கழிக்கிறாள். பிரிவின் துயர் அவளை வாட்டி எடுத்தாலும் வந்துவிடுவான் எனும் நம்பிக்கைச் சுடர் அவள் மனவெளியெங்கும் மிகப்பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. காதலைத் தாங்கிய இதயங்களுக்கு காத்திருப்பும் சுகமான வேதனைதானே? சாங்யூ மறுபடியும் அவளிடம் வந்து சேர்கிறான். பின் ஒருபோதும் அவளை விட்டு அவன் பிரியவில்லை. சாங்யூவின் அறிவுத் திறனால் அந்த ஊர் கல்வி அறிவுக் கிடைகப்பெறுகிறது. சமூகப் பொறுப்பும் குடும்ப அக்கறையும் சரிபாதியாய் அவனை ஆக்கிரமிக்கின்றன. அற்புதமான காதல் ஜோடிகளாய் அவர்கள் தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் பற்றுதலாயும் மிகவும் அன்னோன்யத்துடன் வாழ்கிறார்கள்.

தந்தையின் மரணம் தாயை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதை லூவோ அறிந்திருந்தான். அவர்களின் காதலை அர்த்தப்படுத்த மகனாய் தன்னால் இயன்றதைச் செய்ய முடிவெடுத்தான். கிராமத் தலைவரிடம் பணம் கொடுத்து சவ ஊர்வலத்திற்காக சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சொன்னான். ஆனால் அவனே ஆச்சரியப்படும்படியாக தந்தையிடம் படித்த மாணவர்கள் நூற்றுக்கணக்கில் திரள் திரளாய் அந்த பனிநாளில் தங்கள் மாஸ்டருக்கு இறுதி மரியாதையை செலுத்த வந்து கொண்டிருப்பதைப் பார்த்து மனம் நெகிழ்ந்தான். பணத்திற்காக கூடிய கூட்டமல்ல அது ஆத்மார்த்தமாய் இறுதி அஞ்சலியை செலுத்த அவர்கள் வந்திருந்தார்கள். அந்த ஊர்வலம் மெல்ல நகர்ந்து பள்ளிக்கு எதிரே இருந்த பழைய கிணற்றின் பக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. . நிறைவான வாழ்வை மட்டுமல்லாது நிறைவான சாவையும் தன் தந்தை சந்தித்திருக்கிறார் மொத்ததில் அவர் வாழ்ந்திருக்கிறார் இன்னும் கூட வாழ்ந்து கொண்டிருப்பார் என்றுணர்கிறான் லூ. எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் தன்னுடன் வர மறுத்த தாயின் ஆசைக்காய் அவர்களின் பள்ளியில் ஒரு நாள் பாடம் சொல்லிக்கொடுக்கிறான் ஜாவோ சாங்யூவின் காதலின் உயிர் சாட்சியான லூவோ யூசெங்.

‘தி ரோட் ஹோம்’ மென் சோகக் கவிதையாய் நிறைவடைந்தாலும் ஜோவோவின் புன்சிரிப்பும் தேடலும் காதலின் தீவிரமும் அன்பும் இது போன்ற எண்ணற்ற நல்லுணர்வுகள் நம்மை ஏதேதோ செய்கின்றது. காதலித்துப் பார்த்தால்தான் புரியும் காதலின்பம், ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்பது சத்ய வாக்கல்லவா? காதல் மனிதர்களினூடே உருகி கரைந்து உருண்டோடிக் கொண்டிருக்கிறது காலம் காலமாய். ஒரு துளி பருகினாலும் அமிர்தம் அமிர்தம்தான். ஜாவோவும் சாங்யூவும் அமிர்தம் பருகியவர்கள்.
நன்றி - http://www.thadagam.கம



7 கருத்துரைகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\காதல் மனிதர்களினூடே உருகி கரைந்து உருண்டோடிக் கொண்டிருக்கிறது காலம் காலமாய்.\\

அருமையா சொன்னீங்க‌

கார்த்திக் சொன்னது…

அந்தப்பொண்ணு அவருக்கு சாப்பாடு கொண்டுகிட்டு போர அந்த பீங்கன் பாத்திரம் உடஞ்சதியும் அத எல்லாத்ததையும் பத்திரமா கொண்டுவருவா.அதையும் ஒரு மனுசன் ஒட்டி திறும்ப பயன்படுத்த தருவாரே.
சீனாக்காரன் சீனாக்காரந்தான்.

நல்ல விமர்சனம்.

S.A. நவாஸுதீன் சொன்னது…

விமர்சனம் மிக அருமை உமசக்தி.

"மனிதர்களும் காதலினூடே உருகி கரைந்து உருண்டோடிக் கொண்டிருக்கிறார்கள் காலம் காலமாய்" என்பதும் தெரிகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

நேர்த்தியான நேரில் பார்ப்பது போன்றதொரு விமர்சனம்.

சூரியன் சொன்னது…

.. காதலின் ஆரம்பப் புள்ளி ...
யாருக்குமே தெரியாதுனு நினைக்கிறேன் ..

வால்பையன் சொன்னது…

டி.வி.டி இருக்கு!
இன்னும் பார்க்கலை,
நாளைக்கு பார்த்துவிடுகிறேன்!

soorya சொன்னது…

எனக்கு இப்படியான படங்கள் ரொம்பப் பிடிக்கும்.
இப்போ இங்கே கிடைப்பதில்லை.
ஆசை ஆசையா இருக்கும் அந்தச் சீனத்துச் சிட்டுகள்.
முன்பு உங்களுக்கு ஒரு நூல் பரிந்துரைத்தேன் ..சீன அகராதி காதலர்களுக்கு.! என்று, படித்தீர்களா..?