புதன், 17 ஜூன், 2009

“கேணி” இலக்கிய சந்திப்பு

எழுத்தாளர் ஞாநியின் புது வீட்டின் பின்னால் அழகான கிணறும் தோட்டமும் உள்ளது என்று நண்பர் பாஸ்கர் சக்தி சொன்னார். ஞாநியும் பாஸ்கரும் பேசிக்கொண்டிருக்கையில் இலக்கிய கூட்டங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றடி இருவருக்கும் நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்று தோன்றியது. அந்த எண்ணத்தை தீவிரப்படுத்தி “கேணி” என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை ஞாநி உருவாக்கினார்.

நல்ல சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளைப் பற்றி உரையாடலாம். வாசிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் இளைய தலைமுறை நண்பர்களுக்கு ஊக்குவிக்கலாம் என்ற அடிப்படையில் ‘கேணி’ ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு துவங்கி 6.30 வரை ஒரு படைப்பாளியோ, வாசகரோ இலக்கியம் தொடர்பான விதயங்களைப் பேச வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது..

இதன் முதல் கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “எனக்கு பிடித்த சிறுகதைகள்” என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார்.


14.06.09 தேதி ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஞாநியின் கே.கே.நகர் வீடு இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. ஞாநியும் பாஸ்கரும் கேணிக்கு ஏதோ இருபது அல்லது அதிகபட்சம் முப்பதி பேர் வருவார்கள் என்று அவதானித்திருந்தார்கள். ஆனால் வந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை தாண்டியது. பேசுபவர் பேசினால் கேட்பவர்களின் கூட்டம் அதிகமாகத்தானே இருக்கும்? தீரா உரையாடலின் சொந்தக்காரர் என்று ஞாநியால் புகழப்படும் எஸ்.ரா கம்பீரமான குரலில் பேச்சை ஆரம்பித்தார். வெகு சுவாரஸ்யமான அவரின் பேச்சை நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ரஷ்ய எழுத்தாளர் லெர்மர்தேவினுடைய கதையில் வரும் சம்பவமொன்று, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘வானப்ரஸ்தம்’, புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி’ எனும் கதை, வைக்கம் முகமது பஷீரின் ‘மந்திரப் பூனை’ மற்றும் ப்ரெஞ்ச் கதையொன்று என தன்னை பாதித்த ஐந்து கதைகளைச் சொன்னார். ஏற்ற இறக்கங்களுடனும் அனாயசமான பேச்சுத் திறனாலும் அவர் சொல்லிக் கொண்டிருக்க மந்திரத்தால் கட்டிப்போடப்பட்டது போல அனைவரும் எதையும் தவற விடக்கூடாத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.

அவர் பேசியதிலிருந்து என் நினைவில் நின்றவை:

“நாம் யாரும் கதை தெரியாதவர்கள் இல்லை.
எது கதை? அதை கதையென்று ஏன் சொல்கிறோம். ஒரு வசதிக்காகத்தான். வாழ்க்கையை வெவ்வேறு விதமாக எப்படி நாம் பார்க்கிறோம் என்பதை அது கற்றுத் தருகிறது. உலகின் தலைசிறந்த கதையை அளக்க இலக்கணம் எதேனும் இருக்கிறதா? நல்ல கதையை அளப்பது எது? அதற்கான ஸ்கேல் என்னவாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் அது வாழ்க்கையைப் பற்றிய உண்மைத் தன்மையை சொல்வதுதான். True to life - நேரடியான உண்மை. அந்த உன்மையை எப்படி சொல்வது. எழுத்தாளரின் சொந்த பார்வை. அந்த உண்மையை எப்படி சொல்கிறான் அதன் பின் அதை சொல்லக் கூடிய டோன்,. கதை சொல்லும் போது வறட்டுத்தனமான குரலில் அல்லாமல் எப்படி சொல்வது என்பது முக்கியம். அதிகாரம் அநாவசியம்.

வாசிப்பவன் சொந்த வாழ்க்கையில் கூட துயருற்று கண்ணீர் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கதையில் வந்த மனிதனின் துயர் தாங்க முடியாமல் சிலர் அழுவார்கள். சில கதாபாத்திரங்களின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு பெயராக கூட வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில கதைகளை வாசித்து நானும் பல நாள் இரவு தூக்கத்தை இழந்திருக்கிறேன்.

கதைக்கு என்ன மாதிரியான முடிவு என்பது முக்கியம். எந்த மொழியானாலும். நேராக சொல்லும் போது குரல் வழியாக சொல்ல முடிகிறது. சொற்களை உச்சரிக்கிறோம்.

சிறுகதையில் உரையாடல் எழுதுவது சுலபம். மெளனத்தை எழுதுவது தான் கஷ்டம்.

நம்மில் பெரும்பான்மையினர் யாரிடமோ எதுவோ சொல்ல நினைத்து சொல்லாமல் விடுக்கிறோம். ஆத்மார்த்த அன்பினைக் கூட பகிர முடியாதவர்களாகிப் போகிறோம்”

எஸ்.ரா பேசிக்கொண்டிருந்த போது லேசான தூறல் போட ஆரம்பித்திருந்தது. அவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டிருந்த அச்சிறு கூட்டம் அதை பொருட்படுத்தாது அப்படியே கேணிக்கருகில் அமர்ந்திருந்தது. செவிக்கு உணவில்லாத போது சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும் ஆனால் செவிக்கும் வயிற்றுக்கும் சேர்த்து அழகான தொன்னையில் கொண்டைக் கடலைச் சுண்டலும் அதன் பின் டீயும் தரப்பட்டது. சுண்டலை சாப்பிட்டுக் கொண்டே கூட்டத்தினர் மேலும் மேலும் எஸ்.ராவிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சளைக்காமல் எல்லாக் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

கதை கேட்டல் என்பது எவ்வளவு அற்புதமான விதயம் என்று பல நாள் கழித்து உணர்ந்தேன். சரளமான அவரின் பேச்சு, இயல்பான நகைச்சுவையுணர்வு, தெளிவான உச்சரிப்பு என்று கேட்பவரைக் பிரமிக்க வைத்துவிட்டார். கதை சொல்லல் என்பது ஏன் அருகிப் போய்விட்டது. நம் குழந்தைகளுக்கு யார் கதை சொல்லி அவர்களின் அந்த ஆர்வத்தை வளர்ப்பார்கள். நாம் தான் தொடங்க வேண்டும் என்றார் எஸ்.ரா. சின்னஞ்சிறு கதைகள் இன்றைய வாசிப்பு சூழலில் மிகவும் தேவை என்றார். Fables வகைப்படும் கதைகள் வாசிக்க எளிமையும் கருத்தாழமும் கொண்டதாக இருக்கும் என்றார். அது போல தமிழில் எழுதப்படவேண்டும் என்றார். எஸ்.ராமகிருஷ்ணன் இத்தகைய உயரத்தை அடைய அவரின் உழைப்பும், தேடலும், மொழித்திறனும், மொழியின் மீதுள்ள தீராக் காதலும் என்பதை நேரடியாக கண்டுணர்ந்தேன்.


அவர் அடிக்கடி சுட்டிக்காட்டும் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கோணங்கி, டால்ஸ்டாய். சமகால எழுத்தாளர்கள் சிலர் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த ஜே.பி.சாணக்கியா, சந்திரா போன்றவர்கள் காணாமல் போன சோகத்தை பகிர்ந்து கொண்டார் எஸ்.ரா. என்னுடைய நண்பர்களான இவ்விருவரும் எங்கும் போகவில்லை எழுதுவதை தற்காலிகமாய் நிறுத்தியிருந்தார்கள், வேறு என்ன செய்து கொண்டிருந்தாலும் எழுத்து இவர்களை ஈர்த்துக் கொண்டேயிருந்ததால் மீண்டும் புதிய விசையுடனும் உத்வேகத்துடனும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசி முடித்தப் பின் கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளை எஸ்.ராமகிருஷ்ணன் இளம் வாசகர்களுக்காக பட்டியலிட்டுத் தந்துள்ளார். அந்த பட்டியல் அவரின் ப்ளாக்கிலும் உள்ளது. அவை

நூறு சிறந்த சிறுகதைகள்
1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு ? கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ?97;ிற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன் 51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

இது போன்ற கூட்டங்களுக்குச் சென்று விட்டு வீடு திரும்புகையில் மனம் முழுவதும் கேள்விகளாலும், புது புது திட்டங்களாலும் நிறைந்துவிடும். அந்த எழுத்தாளரின் ஆளுமையை மனம் அசை போட்டபடி இருக்கும். அவரை பேசுபவராகவும் நம்மை கேட்டுக் கொண்டிருப்பவராகவும் எது நிறுத்தியுள்ளது என்று தீவிரமாக யோசிக்க வைக்கும். ஞாயிறு கேணிக் கூட்டமும் அதையெல்லாம் நினைவிற்கு கொண்டு வந்தது. வழமை போலவே முடிவு செய்தேன் - நிறைய எழுத வேண்டும் நிறைவாய் எழுதவேண்டும்.











30 கருத்துரைகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\சிறுகதையில் உரையாடல் எழுதுவது சுலபம். மெளனத்தை எழுதுவது தான் கஷ்டம்.\\

சரியாக சொல்லியிருக்கார்.

சிறுகதைகளின் பட்டியல் தந்தமைக்கு நன்றி, இங்கே இவை இருக்கின்றதா என பார்க்க வேண்டும்.
---------------------


தி.ஜாவின் படைப்புகளை பற்றி எழுதுங்களேன் உமாஷக்தி.

அமுதா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

அன்பின் உமாஷக்தி,

நிகழ்வு பற்றி முன்னரே அறிந்திருந்தேன். உங்கள் பதிவு மகிழ்ச்சி தந்தது.

பகிர்வுக்கு நன்றி தோழி !

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

அழகான பகிர்தல்

வழமை போலவே முடிவு செய்தேன் - நிறைய எழுத வேண்டும் நிறைவாய் எழுதவேண்டும். //

அதுதான் எனது எதிர்பார்ப்பும்,

உங்களின் ஈரமும், மென்மையான எழுத்துக்களைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் போல ஒரு உணர்வு.
ஏன் இப்படி ஒரு ஈர்ப்பு, உங்களின் கதை சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கக்கூடும். இல்லையா கதைசொல்லி.

கார்த்திக் சொன்னது…

// நம்மில் பெரும்பான்மையினர் யாரிடமோ எதுவோ சொல்ல நினைத்து சொல்லாமல் விடுக்கிறோம். ஆத்மார்த்த அன்பினைக் கூட பகிர முடியாதவர்களாகிப் போகிறோம்” //

ம்ம்

நான் திங்ககிழம தான் அவரோட சைட்டப்பத்து தெரிஞ்சுகிட்டேன்.ஒருவேல முன்னாடியே தெரிஞ்சிருந்தா வந்தாளும் வந்திருப்பேங்க.

சும்மா நேர்ல பாத்தமாதிரி இருந்துது உங்க பதிவு

பகிர்வுக்கு நன்றிங்க.

த.அரவிந்தன் சொன்னது…

லெர்மர்தேவி எழுதிய புத்தகத்தின் பெயர் ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள். எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லிய கதையின் பெயர் என்ன

ச.முத்துவேல் சொன்னது…

ரொம்ப நன்றி. உபயோகமுள்ள பகிர்வு.இன்னும்கூட ஒருமுறை படிக்கணும்.

ராமலக்ஷ்மி சொன்னது…

பகிர்தலுக்கு மிக்க நன்றி!

உமா சொன்னது…

சிறுகதை பட்டியல் மிக அருமை.அழகான பதிவு. நன்றி.

Krishna Prabhu சொன்னது…

நல்ல முயற்ச்சி. முகவரியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நானும் கலந்து கொள்வேனே.

எனது மின்னசல் முகவரி: enathu.payanam@gmail.com

கிருத்திகா சொன்னது…

பகிர்விற்கு நன்றி...

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Vetrimagal சொன்னது…

//கதை கேட்டல் என்பது எவ்வளவு அற்புதமான விதயம் என்று பல நாள் கழித்து உணர்ந்தேன். சரளமான அவரின் பேச்சு, இயல்பான நகைச்சுவையுணர்வு, தெளிவான உச்சரிப்பு என்று கேட்பவரைக் பிரமிக்க வைத்துவிட்டார். கதை சொல்லல் என்பது ஏன் அருகிப் போய்விட்டது. நம் குழந்தைகளுக்கு யார் கதை சொல்லி அவர்களின் அந்த ஆர்வத்தை வளர்ப்பார்கள். நாம் தான் தொடங்க வேண்டும் என்றார் எஸ்.ரா. சின்னஞ்சிறு கதைகள் இன்றைய வாசிப்பு சூழலில் மிகவும் தேவை என்றார்.//

மிகவும் உண்மையான வார்த்தைகள். 50 வருனங்களுக்கு முன்னால் அய்ந்தாம் வகுப்பில் சீதா டிச்சர் சொன்ன கதைகளும், அவர் சொன்ன விதமும் மனதில் குதித்து ஓடுகின்றன. அந்த ஆர்வமே தேடி தேடி படிக்கும் வெறி ஏற்றியது.

உங்கள் வலைப்பதிவை ரசித்து படிக்கிறேன். வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. வணக்கம்.

சாணக்கியன் சொன்னது…

சென்னையில் இல்லாததால் நிறைய இழப்பதாகத் தோன்றுகிறது. இக்கூட்டம் மட்டுமின்றி, கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டங்கள் மற்றும் பைத்தியக்காரனின் உலக சினிமா காட்சிகள்... ம்...

Anoch சொன்னது…

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

உமாஷக்தி சொன்னது…

Thank you so much Anoch.

உமாஷக்தி சொன்னது…

ஜமால் கருத்துரைக்கு நன்றி. தி.ஜா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். நிச்சயம் எழுதுகிறேன். ஊக்கப்படுத்தியதற்கு நன்றி தோழர்.

உமாஷக்தி சொன்னது…

நன்றி அமுதா, ரிஷான்.

உமாஷக்தி சொன்னது…

நன்றி அமித்தும்மா..நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பு பொய்யாகாது. எழுதும் உத்வேகமும் ஆசையும் ப்ரியமான நண்பர்களின் அன்பான வாழ்த்துக்களால் மேலும் உறுதியடைகிறது. அமித்தும்மா உங்கள் பாராட்டு எனக்கு மிகப் பெரிய டானிக். கதைசொல்லி என்று என்னை விளித்த போது மிகவும் நெகிழ்ந்தேன் தோழி.

உமாஷக்தி சொன்னது…

கார்த்தி இனிமேல் முன்னரே அறிவிக்கிறேன். அடுத்த முறை கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்.

உமாஷக்தி சொன்னது…

லெர்மதேவ் கவிஞர் மற்றும் எழுத்தாளர். அவரைப் பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Mikhail_Lermontov
நன்றி த.அரவிந்தன்.(உங்கள் பெயர் எனக்கு மிகப் பிடித்த பெயர். ந.பார்த்தசாரதி அவர்களின் குறிஞ்சி மலர் கதை நாயகன் பெயர் அரவிந்தன். ;)) மேலும் பாண்டிச்சேரி அரவிந்தர் பிடிக்கும்.

உமாஷக்தி சொன்னது…

நன்றி ச.முத்துவேல். ரொம்ப நாளாச்சு உங்களுடன் கதைத்து?

உமாஷக்தி சொன்னது…

மிக்க நன்றி ராமலஷ்மி, உமா, கிருஷ்ண பிரபு (மெயில் அனுப்பிவிட்டேன்)

உமாஷக்தி சொன்னது…

//சீதா டிச்சர் சொன்ன கதைகளும், அவர் சொன்ன விதமும் மனதில் குதித்து ஓடுகின்றன. அந்த ஆர்வமே தேடி தேடி படிக்கும் வெறி ஏற்றியது. // உங்களுக்கு சீதா டீச்சர் மாதிரி எனக்கு அமரகீதா டீச்சர். என் அம்மா தமிழ் இலக்கியம் படித்தவர்கள். இவர்களால்தான் தமிழார்வம் வளர்ந்தது. .


'சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்!' என்ற வாக்கியத்தை முதன் முறை வாசித்த போது புல்லரித்தது. நம்முடைய மொழி எத்தனை அழகானது. எப்படியெல்லாம் அது புறக்கணிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் தீர்வு என்ன - நிறைய கேள்விகள் உள்ளது.

//உங்கள் வலைப்பதிவை ரசித்து படிக்கிறேன்.// மிக்க நன்றி வெற்றிமகள். Dream spaces இன்றுதான் பார்த்தேன். வாசித்துவிட்டு சொல்கிறேன்.

soorya சொன்னது…

அன்புத் தோழி உமாவிற்கு,
சும்மா வலைப் பூவில் மேய்ந்த போது
இதையும் கண்ணுற்றேன்.

முதலாவது....
சாவிற் தமிழ் படித்துச் சாகவேணும்//எந்தன்
சாம்பரும் தமிழ் மணந்து வேகவேணும்.
.............
இதைச் சொன்னவர்
எங்கள் மாவிட்டபுரம் சச்சிதானந்தர். அற்புதமான ஈழக்கவிஞர்.
அவரை அறியாமலே ஈழக் கவிஞர் பலருளர். அதை விடுவம்.
................
ஞானி யை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அப்போ அவர் பரீக்சா நடத்திக்கொண்டிருந்தார்.
நாற்காலிக்காரர் அப்புறம் எத்தனையோ.
............
நான் எனது ஒரு பிரதியை அவருக்குக் காட்டி.. இதை நாடகமாக்கலாமா எனவும், இது அப்பட்டமான பிரச்சாரமாய் இருக்கிறதே இதை என்ன செய்ய ? எனக் கேட்டபோது,
பிரச்சாரம் இலக்கியமாகலாம் என அடித்துச் சொன்னார்.
இன்றுவரையும் என்னுடன் நட்புக்கொள்ளும்..ப்ரீதம் சக்ரவர்த்தி, பாலாசிங், நாஸர், தலைவாசல் விஜய் போன்றோரை எனக்குக் கோடிட்டவர் அவர்தான்.
எனினும் தோழி....அது ஒரு அழகிய நிலாக்காலம்.
நாந்தான் எல்லாமுமே இழந்து போனேனே.................................!

Joe சொன்னது…

சிறுகதைகள் பட்டியலுக்கு நன்றி.

அடுத்த சந்திப்பு எப்போது, எங்கே என்று சொல்ல முடியுமா?

வேற யாரு? ஒம்மவந்தான்! சொன்னது…

முடியல. நெசமாவே தாங்க முடியல ஆத்தா, மகமாயி. நீ இவ்ளோ தீவிர இலக்கிய வாதியா ஆயிருவன்னு கனவுலகூட நெனச்சிப்பாத்ததில்ல ஆத்தா.நீ நல்லாருக்கணும். வேற என்னாத்தச் சொல்ல?

உமாஷக்தி சொன்னது…

Soorya..உங்கட பகிர்விற்கு நன்றி. உங்களோட கதைக்கணும்.இமெயில் ஐடி அனுப்புங்க. சரியா.

உமாஷக்தி சொன்னது…

ஆஹா மக்கா. எம்புட்டு நாளாச்சு உன்னோட வாழ்த்தைக் கேட்டு. என்னோட இலக்கிய சேவை இந்த நாட்டுக்குத் தேவைன்னு காலம் சொல்லுச்சு கண்ணா, மணிவண்ணா, ராகவா..நன்றி மகனே நன்றி.

soorya சொன்னது…

my email
sooryavinothan@gmail.com
mail me soon.
thx