ஞாயிறு, 7 ஜூன், 2009

நடை மேடை பதிமூன்று (Platform No.13)



நந்தாவின் பிளாக் (blog) ‘காதல் தீ’ யிலிருந்து...
காதல் தீ
29 ஜனவரி, 2009, வியாழன்
என் தேவதை
என் மண்டைக்குள் ஒரே ரீங்கார சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பறவைகளின் ஒலியும் கூடவே ஒலித்தது. அது விடாமல் விட்டு விட்டு அடித்தது.. வேகமாக புரண்டு படுத்தேன். தலைகாணிக்கு அடியில் அது சமர்த்தாய் அடிப்பதை நிறுத்திவிட்டு தேமேன்னென்று கிடந்தது. எடுப்பதற்குள் கட்டாகி விட்டது. மிஸ்டு காலை பார்த்தேன்.... என் டைரக்டர்.... பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்..என்றார், ஆச்சரியமாக இருந்தது, என் பிறந்த நாள் இவருக்கு எப்படி தெரிந்தது. நெகிழ்ந்து போய் முதல் வாழ்த்துக்கான நன்றியைச் சொல்லிவிட்டு..அவரைத் தொடர்ந்து பாலா, அருண் அனிதா எல்லாரும் சொன்ன வாழ்த்து மழையில் நனைந்து குளிர்ந்து நிற்கையில் அன்வர் வந்தான்.

‘ஹேப்பி பர்த்டே நந்தா எங்கடா ட்ரீட்? ம். சீக்கரம் கிளம்பு பாலா அருண் வந்துட்டே இருக்காங்க...முதல்ல சத்யம் தியேட்டர், அப்படியே காரைக்குடி, அதுக்கப்பறம் பிக்னிக்ல ஒரு லார்ஜ், அத்தோட உன்னை விட்டுடறோம், ஓகேவா...எழுந்திரு நண்பா’ என்றான் ஆர்வமாக.

‘அவளைப் பார்த்ததுக்கு அப்பறம்தாண்டா எதையுமே சொல்ல முடியும்...நான் இப்போ அங்கேதான் கிளம்புறேன், உனக்கு மதியம் கால் பண்றேன், நீ இப்போ பாக் ஆஃப் ஆகு, ஓகேவா...என்றேன்

முறைத்த அவனை கெஞ்சி கொஞ்சி அனுப்பிவிட்டு வேகவேகமாக பல் தேய்த்தேன், கயல்விழி எழுதியதாக நினைத்து நேற்று நானே எனக்கு எழுதிக் கொண்ட கடிதம் கண்ணில் பட்டது, எடுத்து வாசித்தேன்..

ப்ரியமான உனக்கு,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நீ தினமும் என்னை பின் தொடர்ந்து வருகிறாய், என் நிழலைப் போலவே. உன்னை எனக்கு பிடித்துத் தானனிருக்கிறது, ஏன்? தெரியவில்லை....உன்னை என்னால் விலக்க முடிவதில்லை. தவிர்ககமுடியாததாகிப் போனது உன் பார்வையும், உன் புன்னகையும், உன் இருப்பும். முன்பெல்லாம் வாரம் ஒரு முறை வருவாய், இப்போதெல்லாம் தினமும் தினமும். ஒரு வார்த்தைக் கூட பேசாமல் என் கண்களுக்குள் என்ன தேடுகிறாய். காதலையா? இரண்டு வருடம் என்னை தொடர்ந்து வருகிறாய், சளைக்கவில்லையா உனக்கு? அப்படி என்ன என்னிடம் கண்டாய்? நான் சாதரணமாகத் தானே இருக்கிறேன்? உன் கண்களுக்கு நான் நன்றி சொல்லப்போவதில்லை, இதயத்துக்குத்தான் நன்றிகள், அது தானே அன்பை சுமந்து என்னை அழகாக உன்னிடம் காட்டியிருக்கிறது? ப்ரியமானவனே நீ என்னிடம் எப்போது சொல்வாய், ‘உன்னை உயிராய் விரும்புகிறேன்’ என்று? காத்திருக்கிறேன்....ப்ரியங்களுடன் உன்னவள்

படித்ததும் சிரித்துக் கொண்டேன். மணி 8.30...அவசர அவசரமாக குளித்து ஷேவ் செய்து, புதுச் சட்டை போட்டுக் கொண்டு, லேசாக பவுடரை அப்பிய போது, கண்ணாடி சொன்னது, நல்லாதான்டா இருக்கே நந்தா...
இடுகையிட்டது நந்தா நேரம் 8.15 5 கருத்துரைகள் லேபிள்கள்: காதல்

காதல் தீ
29 ஜனவரி 2009, வியாழன்

சென்ட்ரல் ஸ்டேஷனில் என் வானவில்

ஆட்டோவைப் பிடித்து சென்ட்ரலுக்கு வந்து சேரும் போது மணி 9. எந்த தடத்தில் வருவாளோ என் தேவதை மனம் கவிதை போல ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தது. அரக்கோணத்திலிருந்து வந்த வண்டியில் அவள் இல்லை. அடுத்தது திருத்தணி ரயிலில் லேடிஸ் கம்பார்ட்மென்ட்டில் இருந்து இறங்கினாள். நான் சுறுசுறுப்பானேன்..

அழத்தமான நீலநிற ஜீன்ஸ், கறுப்பு டாப்ஸ் அணிந்திருந்தாள். கயல்விழி என்ற பெயருக்கு ஹோம்லி முகத்தையும் புடவையையும் கற்பனை பண்ணியிருந்தால் அது உங்கள் குற்றம். கயலின் தகப்பனுக்கு வேண்டுமானால் இலக்கிய ரசனை தமிழ்ப்பற்று இவையெல்லாம் மிகுந்து பெயரை கயல்விழி என்று வைத்துவிட்டார் போலிருக்கிறது. அவளுக்கும் அவள் பெயருக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. குட்டையாக வெட்டப் பட்டிருந்த முடி தோளில் அழகாக படிந்திருந்தது. பெரிய கண்கள், அளவான நாசி, பொன்னிறம்...இவ்வளவு சிறிய பொட்டை ஏன் இவள் வைத்துக் கொள்கிறாள், அதற்கு சும்மாவே அந்த பிறைநெற்றியை விட்டுவிடலாமே? உதட்டில் ரோஜா வண்ண லிப்ஸ்டிக். காதில் சின்னதாக ஒரு தோடு. தோளில் லாப்டாப்(அபீஸில் கொடுத்தது) கையில் சோனி வாக்மேன் சீரீஸ் கைப்பேசி அதுவும் ஆபிஸ் கொடுத்ததுதான். வாழ்க அந்த ஆபிஸ்..ப்ளைட்டிலிருந்து இறங்கியவள் மாதிரி இருந்தாள். எலக்ட்ரிக் ரயிலில் அதுவும் முதல் வகுப்பு கூட இல்லை, சாதரண பெட்டியில் பயணம் செய்தவள் என்று யாராவது சொன்னால் நம்ப மாட்டார்கள். எட்டு மாசம் பின் தொடரும் எனக்கல்லவா தெரியும் என்னவளின் எகானாமிக் ஸ்டேடஸ், எல்லா கஷ்டங்களையும் தன்னோடு வைத்துக் கொள்ளும் அந்த புன்னகை முகத்தை கைகளில் ஏந்தி நானிருக்கிறேன் உன்னோடு என்றும் எப்போதும் என்று சொல்லத் துடிப்பேன்...வழக்கம் போல மெளனமாகவே பார்த்தவுடன் திரும்பி வந்துவிடுவேன், இனி மாலை வரை மறுபடி காத்திருக்கவேண்டும். அதுதான் என் தவம். யாரோ காறித் துப்பும் ஓசை கேட்கிறது...நாட்டில் என்ன என்ன பிரச்சனைகள் இருக்கிறது, இவன் நூல் விடறது தலையாய விஷயம்னு சொல்றான்னு நினைக்கறீங்களா...பரவால்லை உங்க பிரச்சனை உங்களுக்கு எனக்கு இதுதான் இவள்தான் சகலமும்...பாரதிக்கு ஒரு கண்ணம்மா நந்தாவுக்கு கயலம்மா.... ..

இடுகையிட்டது நந்தா நேரம் 5.25 4 கருத்துரைகள் லேபிள்கள்: காதல்

காதல் தீ
30 ஜனவரி 2009, வெள்ளி
இரவா பகலா கனவா நினைவா

அவள் என்னைக் கடந்து போகப் போகிறாள். ஒரு கணம் என்னைப் பார்ப்பாள் – இதுக்குத் தானே ஆசைப்பட்டாய் நந்தா என்று காத்துக்கிடக்கிறேன். அவள் என்னை நெருங்கி வந்தாள். பார்த்தாள். அந்த பார்வையில் சிநேகம் இல்லை, ஒருவித எரிச்சல் இருந்தது. லேசாக முறைத்த மாதிரி கூட இருந்தது.

ஹலோ, என்றாள். என்னிடம்தான் பேசுகிறாள் என்று உறுதி செய்து கொண்டு, இத்தனை நாள்கள் மனதார செய்த ப்ரார்த்தனைகள் வீண் போகவில்லை...உச்சிப் பிள்ளையாரே இதோ வரேன், அடுத்த வாரமே வந்து உனக்கு க்ரேட் சல்யூட் வைக்கிறேன்...அவள் மறுபடியும் ஹலோ உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்.

சொல்லுங்க கயல்விழி என்றேன். அவள் பெரிதாக ஆச்சரியம் அடையவில்லை. இங்க பாருங்க, கொஞ்ச நாளாவே கவனிச்சுட்டு வரேன்...உங்களுக்கு வேலை ஏதுவும் கிடையாதா, காலைல இதே டைமுக்கு வரீங்க, சாயந்திரமும் வரீங்க...என்ன வேணும் உங்களுக்கு....

‘என் பேர் நந்தன் கயல்விழி. டைரக்டர் ப்ரியன்கிட்ட உதவி இயக்குனரா இருக்கறேன். உன்னை சாரி உங்களை எதேச்சையா எட்டு மாசதுக்கு முன்னாடி முதல் முறையா பாத்தேன்..அப்போ ராத்திரி பத்து மணி....நீங்க கொஞ்சம் பதட்டத்துல இருந்தீங்க...க்ரே கலர் ஜீன்சும் வொய்ட் டாப்பும் போட்டிருந்தீங்க...அன்னிக்குன்னு பாத்து ஸ்டேஷன்ல கூட்டமே இல்லை...நீங்க அடிக்கடி வாட்சைப் பாத்து டென்ஷனா பல்லை கடிச்சுட்டு இருந்தீங்க..பயணிகள் கவனத்திற்கு, திருத்தணி வரை செல்லும் அடுத்த மின் தொடர் வண்டி நடை மேடை 13 லிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்னு ரயில்வே அறிவிப்பு கேட்டதும் நீங்க ஓடிப் போய் லேடிஸ் கம்ப்பார்ட்மெண்ட்ல ஏறுனீங்க...யாருமே இல்லை அதுல, பயத்தோட உட்கார்ந்திருந்தீங்க...அப்போ ஒரு மூணு ஆம்பளைங்க அதுல ஏறிட்டாங்க...உங்களுக்கு உள்ளுக்குள்ள உதறலா இருந்தாலும் வெளிப்படுத்திக்கலை...சிட்னி ஷெல்டன் உங்களுக்கு துணையா வந்தார்...எனக்கு காரணம் சொல்லத் தெரியலை, பத்திரமா நீங்க வீட்டுக்கு போய்ட்டிங்கன்னு தெரிஞ்சாதான் நிம்மதியா இருக்கமுடியும்னு தோணிச்சு...அதனால நானும் அதே கம்பார்ட்மெண்டல ஏறிட்டேன்...அந்த தடிப்பசங்க தப்பான ஆளுங்க கிடையாது ஆனாலும் தனியா பாவமா இருந்தது..ஏன் இவ்வளவு லேட்டா ஒரு பொண்ணு கிளம்புதுன்னு பல கேள்விகள் எனக்குள் – பதில்தான் கிடைக்கவில்லை...அந்த மூவர் பெரம்பூரில் இறங்கிவிட்டார்கள். இரவு....தனிமை...நீ...மூன்றும் ஒரே நேர்க்கோட்டில். புத்தகம் படிக்கும் பாவனையில் அடிக்கடி நீ என்னை ஓரக்கண்ணால் பார்த்து பயந்து கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்...அடியே நான் உன் பாதுகாவலன், பயம் வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன்...தவிர்த்தேன்...நீ ஆவடியில் இறங்கும் வரை நான் உனக்காக அந்த ரயிலில் பயணித்தேன்...அன்று துளிர்த்த என் காதல் இதோ செடியாக, விருட்சமாகி உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது....

நான் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் போய்விட்டாள். இவ்வளவு நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தேனா அல்லது பிரம்மையாக மனதுக்குள் பேசினேனா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அவள் என்னை கடந்து போகையில் ஏற்பட்ட கற்பனை சுகத்தில் எனக்குத் நானே உருவாகிக் கொண்ட வார்த்தைகள்தான் அவை என்று உரைத்ததும் எனக்குள் சிரித்துக் கொண்டேன். எங்கேயோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது..

‘நீ வரும் வரைஉன்னைத் தேடுகிறேன்நீ வந்த பிறகுஎன்னைத்தேடுகிறேன்...!’

ரொம்ப டயர்டா இருக்கு, நாளைக்கு தொடருவேன்...

இடுகையிட்டது நந்தா நேரம் 11.40 pm 0 கருத்துரைகள் லேபிள்கள்: காதல்


காதல் தீ
31 ஜனவரி 2009, சனி
அலகிலா காதல் விளையாட்டு….

இன்று சீக்கிரம் எழுந்துவிட்டேன். கண் விழித்ததும் அவள் நினைவுதான்....சிரித்துக் கொண்டேன்..டேய் இந்த ரேஞ்சுல நீ போய்க்கிட்டிருந்தா..படம் எல்லாம் எடுக்க மாட்டே, மெண்டல் ஹாஸ்பிடல் தான்...கன்பர்ம்ட்....

இந்தக் காலத்தில் போய் காதலை சொல்ல தயங்குவார்களா யாரேனும். போன் நம்பரை வாங்கிவிடுகிறார்கள், ஹலோவில் ஆரம்பித்து நட்பாகி, பின் காதலாகி கண்ணீர் மல்கி, போராடி, கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிறார்கள். அதற்கு பின் சுயரூபங்கள் வெளிப்பட்டு அடித்து நாறி கோர்ட்டில் பிரியும் காதலகளும் இருக்கிறது, விரும்பிவிட்ட ஒரே காரணத்தால் அவனோ அவளோ எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழவும் செய்கிறார்கள். நான் அப்படிப் பட்டவன் இல்லை....நான் என் மனைவியை தேவதையாகத் தாங்குவேன்...பெண்கள் பூ போன்றவர்கள்...பூக்களை கசக்கக் கூடாது, வாட விடக் கூடாது...என் கண்மணியிடம் காதலை சொல்ல நான் தயங்கவில்லை...எப்படி சொல்ல, அவள் மனம் வாடாமல் ஒரு நல்ல சூழலில்...ஒரு மர நிழலில் அல்லது கடல் அலையில் கால் நனைத்தபடி....ம்....இனியும் தாமதிக்கக் கூடாது. சீக்கிரம் சொல்லிவிடவேண்டும்.

ஒரு குறுந்தொகை கவிதை. ஞாபகத்துக்கு வந்தது.
‘ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்துஅளிய தாமே கொடுஞ்சிறைப் பறவைஇறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்தபிள்ளை யுள்வாய்ச் செரீஇயஇரைகொண் டமையின் விரையுமாற் செலவே.’
பிரிவு எத்தகைய துயரான விஷயம். தலைவி சொல்கிறாளாம் தலைவனின் நிலையை குறித்த வருந்தத்தை, தந்தையை எதிர்நோக்கி நிற்கும் தன் பிள்ளைகளின் ஏக்கத்தை, இப்பறவையை கண்டாவது அவன் திரும்பக்கூடாதா என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.

இடுகையிட்டது நந்தா நேரம் 6.46 Am 7 கருத்துரைகள் லேபிள்கள்: காதல்
காதல் தீ
31 ஜனவரி 2009, சனி
நண்பர்களின் நக்கல்கள்
நேற்று நடந்தவற்றை அன்வரிடம் சொன்னபோது என்னை ஏதோ ஒரு அசிங்கமான ஜந்துவைப் பார்ப்பதைப் போல ஒரு ரியாக்ஷன் கொடுத்தான், ஒன்றும் சொல்லவில்லை. அருணும் அதேவித பார்வை பார்த்து, ‘இவரு பார்த்தாராம், பாத்தவுடனே மனசுக்குள்ள பத்திக்கிச்சாம், அந்த சைடு பத்தி கவலையே படாம இவரே லெட்டர் எழுதுவாராம், ரயில்வே ஸ்டேஷன்ல நின்னு பினாத்துவாராம், என்னடா இது, நானும் பலவிதமான கிறுக்குகளை பாத்திருக்கேன், இது எதிலயும் சேராத புதுசா இருக்கு ஏண்டா மச்சான், மறை கழண்டுடுச்சா, முழு லூசாயிட்டியா., டேய் அன்வர் பாத்துடா போற போக்குல நம்மளயும் இவன் கிறுக்கனா ஆக்கிடப் போறான்’ என்று எகிறினான்..நான் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அ.முத்துலிங்கத்தின் ‘வியத்தலும் நலமே’ என்ற புத்தகத்தை எடுத்து அமைதியாக வாசிக்கத் தொடங்கினேன். நண்பர்கள் தலையில் அடித்துக் கொண்டு, ‘இந்த சனியனை (என்னைத்தான்) விடவும் முடியலை, அவனோட இருக்கவும் முடியலை, ரொம்ப டூ மச்சா போறான் பா’ என்றபடி வெளியேறினார்கள். எனக்குத் தேவையான அமைதி கிடைத்தது.

இடுகையிட்டது நந்தா நேரம் 11.49 1 கருத்துரைகள் லேபிள்கள்: காதல்
காதல் தீ
1 பிப்ரவரி 2009, ஞாயிறு

என் குரு

டைரக்டர் ப்ரியன் என்னிடம் மரியாதையாக பழகுவார். வேலையில் ஏதாவது தப்பு செய்தாலும் சிநேகமாக எடுத்துச் சொல்வார். அவர் குருவாக அமைந்தது என் அதிர்ஷ்டம். அடுத்த ஷெட்யூலை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது, இலங்கையில் ஷுட்டிங். கயலைப் பாக்காமல் பதிமூன்று இரவுகள் பனிரெண்டு பகல்களைக் கடந்தாக வேண்டுமே. வலித்தது. வேலையில் இருந்து விலகிவிடலாமா என்று அபத்தமாக ஒரு எண்ணம் வந்தது. இது என் கனவு, இதுதான் நான். எனக்கு சினிமா தான் உலகம். என் படங்களை நான் உருவாக்குவதற்கு முன் நிறைய ஹோம்வொர்க் க்ரவுண்ட் வொர்க் செய்து கொண்டிருக்கிறேன். அவளை நான் தினமும் பார்ப்பது என் தினசரி வேலைகளுக்கு இடையில் கஷ்டம்தான். ப்ரியனிடம் சேருவதற்கு முன் ‘முன் பனி’ பத்திரிகைக்கு போட்டோகிராபராக வேலை செய்து கொண்டிருந்தேன். அது ஒரு இலக்கிய மாத இதழ். வேலை அதிகம் கிடையாது, சம்பளமும் அதுபோலவே. கயலைப் பார்க்கும் தலையாய பணி தடையில்லாமல் நடந்தது. ஆனால கடந்த சில நாள்கள் றெக்கை கட்டிக் கொண்டு பறப்பதைப் போல வேலைகள், வேலைகள், சிலசமயம் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியாது, கழுத்தை நெறிக்கும் பணிகள்....ஆனாலும் எத்தகைய சிரமத்திலும் அவள் முகத்தை பார்க்காமல் இருந்ததில்லை, காலை அல்லது மாலை, அல்லது இருவேளைகளில், அதை நான் செய்தே தீருவேன். அவள்தானே என்னை உருவாக்குபவள்...
இடுகையிட்டது நந்தா நேரம் 6.59 Am 3 கருத்துரைகள் லேபிள்கள்: குரு


காதல் தீ
2 பிப்ரவரி 2009, திங்கள்

பறந்து போகிறேன் என் பறவையே

இன்று மாலை கடைசியாக அவளைப் பார்க்க சென்ட்ரலுக்கு சென்றேன். எனக்கு எட்டு மணிக்கு ப்ளைட். அவளைக் காணும். ஏமாற்றமாக இருந்தது. டைரக்டர் வேறு போனில் அழைத்துக் கொண்டேயிருந்தார். இதற்கு மேல் தாமதிக்க முடியாது. புறப்பட்டு விட்டேன் அவளைப் பார்க்காமலேயே.......

‘அன்று உன்னிடம்
சொல்லமுடியாமல்
தவித்தேன்...!
இன்று உன்னை
மறக்க முடியாமல் தவிக்கிறேன்..!
ஓ...இதுதான் காதலா’...?

-யாரோ

இடுகையிட்டது நந்தா நேரம் 7.10 pm 0 கருத்துரைகள் லேபிள்கள்: காதல்


கயல்விழியின் ப்ளாக்கிலிருந்து (அவள் தன் நிஜப் பெயரை மறைத்து ‘மின்னு’ என்ற பெயரில் பதிவுலகில் உலவி வருபவள்)

அந்திவானம்
இவன் யாரோ

3.02.09 செவ்வாய்

என் கண்கள் விடாமல் அவனைத் தேடியது. என்ன ஆனது, மழையோ, வெயிலோ, புயலோ, எவ்வித இயற்கை மாற்றமும் அவன் வரவைத் தடுத்ததில்லை.. இன்று என்ன? என் மனம் மிகவும் தவித்தது.

இதயம் படத்தில் வரும் முரளி போல அவன் மனதுக்குள் ஏதேதோ தயார் செய்து கொண்டே இருப்பான்....அவன் யார், எங்கிருந்து வருகிறான்....ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் விட்டது எவ்வளவு பெரிய பிழை. நிச்சயம் அவன் தப்பானவன் கிடையாது. அவன் என்னை பார்ப்பது எட்டு மாதங்களாக...இவ்வளவு நாளில் அத்துமீறி ஒரு நாள் கூட நடந்தது கிடையாது. பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் ஏனோ விலகி விடுவான். அவனை நான் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். காதலா இல்லை ஈர்ப்பா என்று தெரியவில்லை...பேசினால்தானே தெரியும், அவன் எப்படிப் பட்டவன் என்று...ஆனால் நான் உள்ளுணர்வின் தடத்தில் போகின்றவள்...இவன் எனக்கானவன்...என்னை ஆழமாக நேசிப்பவன். அவனிடம் தடம் மாறி போய்க் கொண்டிருந்தது என் இதயம். இன்று என் பிறந்த நாள், அவனிடம் நானே போய் பேசி விடுகிறேன், அதன் பிறகு பார்க்கலாம்,

பதித்தவர் மின்னு at 10.06 pm இடுகை - தேடல்

3 comments:
சாந்த சொருபி said...
மின்னும்மா, பின்னறீங்க...தும்மலையும் காதலையும் மறைக்க முடியாதும்பாங்க...அவரு சொல்வாருன்னு நீயும், நீ சொல்லட்டும்னு அவரும் காத்திருந்தே காணாம போயிட போறீங்க....பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Anonymous said...

என்ன கலிகாலம் பாருங்க...நெட்ல பதிவு செய்யறதுக்கு பதில் அந்த மகாபுருஷனிடம் நேரடியா பேசிடலாம் இல்லை..எங்க தான் போகுதோ இந்த உலகம்...என்ன கொடுமை சரவணா?

மின்னு said...
நன்றி சாந்த சொருபி அக்கா! சீக்கிரமே அவன்கிட்ட என் காதலை சொல்லிடறேன்..இல்லை சொல்ல வச்சிடறேன்..

அன்பு said...
உங்க பதிவுகள் நல்லாருக்குங்க. சமீபமா காதலைப் பற்றி மட்டும் எழுதறீங்க போலருக்கு...எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கங்க..சார் யார்னு தெரியலை...ரொம்ப லக்கி அவரு...சொல்லாம மூடி வைக்கறதில்லை காதல்...சீக்கரம் டிக்ளேர் பண்ணிடுங்க...மறக்காம அதைப் பத்திய பதிவையும் போட்டுடுங்க...
அந்திவானம்
காதல் மற்றும் கேள்வி
4.02.09 புதன்

முன்பெல்லாம் அவனைப் பார்த்ததும் எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் அவன் சுபாவமும், பூனைத்தனமும் எனக்கு பிடித்துவிட்டது. எனக்கே தெரியாமல் அவனை நானும் பார்க்கத் தொடங்கிவிட்டேன். அந்தக் கணம், அவனைக் கடந்து போகும் அந்தக் கணத்துக்காகத் தான் என் ஒப்பனைகள் எல்லாம்...இது நேசத்தில் கொண்டு போய் விடும் உறவு என்று என் உள்மனம் எனக்குச் சொல்லிவிட்டது, அவனே பேசட்டும்...தைரியம் இல்லாத ஆண்களை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை. அவன் தன் காதலை என்று எப்போது எங்கிருந்து தொடங்குகிறான், பார்க்கலாம்...இது போட்டி இல்லை, வாழ்க்கை என்று தெரிந்திருந்தாலும் என் மனம் லேசில் மாறுவதாக இல்லை. பேசட்டும்....நேசத்தை சொல்ல எது தடையாக இருக்கமுடியும்? நானென்ன அடித்துவிடவா போகிறேன், அந்த அன்பானவனை...அன்பானவனா? தெரியவில்லை. அவனைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று உருகி கரைந்து அவனிடம் போய் சேரத் துடிக்கிறது.

எனக்கு காதல் மேல் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. என் தோழிகள், நண்பர்கள் சிலர் காதலித்து, பீச் பார்க் என்று சுற்றிக் களைத்து பின் சிலர் திருமணம் செய்து கொண்டு காதலை சாகடித்தார்கள், சிலர் திருமணம் செய்ய முடியாமல் தங்களை சாகடித்துக் கொண்டார்கள். வேறு சிலர் வேறு வேறு நபரை கல்யாணம் செய்து கொண்டு பழைய நிறைவேறாத காதலை மனதில் சுமந்து கொண்டு தன் துணையை சாகடித்துக் கொண்டிருந்தார்கள். எது காதல்? எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.

இந்த இருபத்தி ஐந்து வருட வாழ்க்கையில் நான் பெரிதாக என்ன செய்துவிட்டேன்...காதலிக்கக் கூட எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தது. நான் கேள்விகளால் சூழப்பட்டவள். எதற்கெடுத்தாலும் கேள்வி, எப்போதும் ஆச்சரியங்களாலும் கேள்விகளாலும் நிறைந்தது என் மனது. நான் தனிமை விரும்பி, சின்ன வயதில் தோட்டத்தில் தான் என் பாதி நாள்கள் கழியும்...செடி, கொடி, மரம், பூக்கள், வண்ணத்துப் பூச்சிகள், கிளி, குருவி, அணில் என்று என் வாழ்க்கை இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது. அது ஒரு நிலாக்காலம்.
பதித்தவர் மின்னு at 11.08 பம் வகை - காதல்

15 comments:

அந்திவானம்
கோபம்
5.02.09 வியாழகிழமை

கடைசியாக அவனைப் பார்த்த அன்று ஏன் எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. புது ட்ரஸ் போட்டிருந்தான்..வழக்கம் போல உள்ளத்தை உயிரை ஊடுருவும் ஒரு பார்வை. அப்படி என்ன பயம் ஒரு ஆணுக்கு. என்னை மீறி வந்த எரிச்சலில் அவனை முறைத்து விட்டேன். எவ்வளவு மெதுவாக அவனைக் கடந்து போக முடியுமோ அவ்வளவு மெதுவாகப் போனேன். என்னைப் பார்ப்பதைத் தவிர உலகத்தில் முக்கியமான விஷயம் எதுவுமேயில்லை என்பதைப் போல கண்ணுக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். நான் பேச நினைத்தேன்...ஆனால் இன்று வேண்டாம் என்று முடிவெடுத்தது தப்பாகிவிட்டது. நானே பேசியிருக்கலாம். எங்கிருந்துதான் எனக்கு ஈகோ வந்து தொலைத்ததோ....அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து உடனடியாகப் போய் விட்டேன்...அவன் முகம் வாடிக் கொண்டிருந்தது..ஏதோ பேச ஆரம்பிப்பது போன்ற முகபாவத்துடன் இருந்தான், அதற்குள் நான் விலகிவிட்டேன்....என்ன சொல்ல முயற்சித்திருப்பான்? மனம் அந்த கேள்விக்கு விடை கிடைக்காமல் தவித்துத் கிடந்தது. ஒரே குழப்பமாக இருந்தது. எந்த வேலையும் ஓடவில்லை.

பதித்தவர் மின்னு at 09.08 pmவகை - காதல்

5 comments:

அந்திவானம்

எங்கிருந்து வந்தாயாடா எனைப் பாடுபடுத்த...
06.02.09 வெள்ளி

என் கவலை மேலும் அதிகரித்தது, நான்கு நாளாக அவனைக் காணவில்லை.

அவன் வரவேயில்லை. நாள்கள் நீள்கிறது...

அவனைப் பார்க்காமல் என் இதயம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. யாரிடம் கேட்பது? என்ன விசித்திரமான பிரச்சனை எனக்கு. அவன் உயிருடன் எங்காவது நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

அவன் நண்பன் அன்வர் என்னைச் சந்த்தித்தான். என் காதலனின் பெயர் நந்தா என்று அவன் நண்பன் சொல்லித்தான் எனக்கு தெரியவந்தது. காலம் கடந்து எதை செய்தாலும் அதற்குண்டான வினைகளை எதிர்கொண்டாக வேண்டும் அல்லவா? என்னவன் என் மீது கொண்ட காதலைப் பற்றிக் கூறினான். நந்தா உருகி உருகி எனக்கு எழுதிய கடிதங்களை காட்டினான். அந்த கடிதங்களை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று தெரியாது. அது முழுவதும் கண்ணீரால் நனைந்து விட்டது...

‘நீங்க அவன்கிட்ட பேசிருக்கலாம் கயல்விழி, உங்களை அவன் உயிருக்குயிரா நேசிச்சான்...ஒரு சின்ன வெற்றிக்குப் பிறகு தன்னோட காதலை சொல்லாம்னு நினைச்சான்...’

எங்கே இருக்கார்னு உங்களுக்குத் தெரியாதா அன்வர்? நீங்க நெருக்கமான நண்பர்களா இருந்திருக்கீங்க..உங்ககிட்டகூட சொல்லாம எப்படி அவர் இருக்க முடியும்...எனக்கு அவர்மேல ஈடுபாடுகள் இருக்கு, ஆனா அவர் முதல்ல சொல்லட்டும்னு தான் காத்திட்டிருந்தேன்...

‘கயல்விழி, என் நணபன் மென்மையானவன், அவன் என்னதான் எங்களோட பேசி சிரிச்சாலும் அவனுக்குன்னு ஒரு ப்ரேத்யகமான உலகத்தை உருவாக்கி வச்சிட்டு அதுக்குள்ளயே தான் இருப்பான். நாங்களும் அவன் தனிமையை கெடுக்க மாட்டோம்...எவ்வளவு ப்ரியமானவனா இருக்கானோ அவ்வளவு விலகியவனாகவும் இருந்திருக்கான். அதான் என்கிட்ட சொல்லலை...’

அவள் கண்கள் லேசாக கலங்கியது

‘இந்தக் காலத்துல நேத்து பாத்த பொண்ணை இன்னிக்கு நம்பர் கண்டுபிடிச்சு நாளைக்கே ஊரை விட்டு கிளம்பற அளவுக்கு காதல் மலிஞ்சு கிடக்கு, ஆனால் உண்மையா நேசிக்கற உங்க ரெண்டு பேரோட காதல் கட்டாயம் அவனை உங்களுக்குத் தேடி தரும்...நான் வரேங்க....
அவரைப் பத்தி எதாவது தகவல் கிடைச்சா கட்டாயம் சொல்லுங்க அன்வர்...

அவனுடன் ஷுட்டிங் சென்றவர்கள் எல்லாரும் திரும்பி விட்டார்கள்...அவன் எங்குச் சென்றுவிட்டான்? அவர்களுக்குத் தெரியவில்லை. ப்ரியனிடம் கேட்டபோது அவன் லீவ் எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று விட்டான் என்றார். அவன் ஊர் எது? இத்தனை நாள் பழகிக்கொண்டிருந்த நண்பர்களுக்குக் கூட தெரியவில்லை. அவன் தெரிவித்திருக்கவில்லை. தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டிருந்தான். ஏன் என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

காலத்தின் பெருவழியில் சில காதல்கள் காணாமல் போகின்றன...என்னுடைய இந்த நேசமும் தொலைந்து போய் விடுமா? என் கண்கள் அவனைப் பார்க்காமல் ஒளியிழந்து விட்டது....அவனுக்காக உருகி உருகி நான் ஒரு கடிதம் எழுதினேன், அவன் வருவானா அதைப் படிப்பதற்கு?

ப்ரியமான உனக்கு, எங்கே போனாய்? நீ இல்லாமல் நான் தவித்து போய் வெறுமையாக உணர்கிறேன். சீக்கிரம் வா. உன்னிடம் சொல்வதற்கு ஒரு வாழ்நாள் முழுக்க சொல்ல வேண்டிய விஷயங்கள் என்னிடம் உள்ளது. இப்போதே என் அன்பையெல்லாம் கொட்டி ஒரு முத்தம் உனக்குத் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உன்னைப் பார்க்கவேண்டும், உன் மார்பில் புதைந்து கிடக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏன் இப்படி என்னை வதைக்கிறாய். நான் எந்தப் புயலிலும் சிக்காத ஒரு மலரை போலத் தானே என் பயணத்தை தொடர்ந்திருந்தேன். எங்கிருந்தோ வந்தாய்...என்னில் விழுந்து, என்னை இழுத்துச் சென்றுவிட்டாய்....இப்போது அந்தரத்தில் விட்டு விட்டுச் சென்றுவிட்டாய். நான் என்ன செய்வது? செயலற்றுக் கிடக்கிறேன்....என்னவனே நம் காதல் எத்தகையது தெரியுமா? ஒரு வார்த்தைக்கூட பேசாமல் உடைந்து போன காதல் நம்முடையது...இது விதியா அல்லது யாரேனும் செய்த சதியா, தெரியவில்லை...உன் முகம் என் மனத்தடத்தில் பதிந்து போய்விட்டது. இனி அதை அழிக்க என்னால் முடியவே முடியாது. என் விழிகள் இப்போதெல்லாம் ஈரமாகவே இருக்கிறது. நீ சீக்கிரம் வந்தால் அது காய்ந்து போய் காதலால் நிரம்பி விடும். வருவாயா? அந்த மணித்துளிக்காக காத்துக் கிடக்க முடிவு செய்துவிட்டேன். நம் மனதுக்குள் முளைத்த இந்தக் காதல் மகத்தானதாக இருந்தால் அது நம்மை ஒன்று சேர்க்கட்டும்....கண்ணீர் காயும் முன் என்னை ஒரு முறை பார்த்தால் கூட போதும், உன் இன்னுயிர் வாடாமல் வாழும்...உன்னவள்.
பதித்தவர் மின்னு at 11.09 pmவகை - தேடல்

36 comments:
பிப்ரவரி 14, 2009

அவன் பதித்தவைகளையும் இவள் எழுதியவற்றையும் படித்த ஒரு வலைப்பதிவாளர் (க்ரியா ஊக்கி என்ற ப்ளாக்) அன்பர் இரண்டு வலைத்தளத்துக்கும் இணைப்பை ஏற்படுத்தி காணாமல் போன நந்தாவையும் பிரிவுத்துயரில் வாடியிருந்த மின்னு என்ற கயல்விழியையும் சேர்த்து வைத்துவிட்டதாக மற்றொரு வலைப்பதிவாளர் (சந்தன மரம்) சொல்லக் கேள்வி.

முற்றும் என்று போட முடியாத ஒரு கதை

14 கருத்துரைகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இத்தனை பெரிய பதிவா

சரி படித்து விடுவோம்ன்னு படித்தால்

இது என்ன வென்று சரியாக விளங்கயில்லையே

பிரிந்த இருவர் ஒன்று சேர்ந்து இருப்பார்களாயின் மிக்க சந்தோஷம்

நட்புடன் ஜமால் சொன்னது…

இது கதைக்காக எழுதின கதையா சொல்லுங்க

இம்மா பெர்சு எத்தனவாட்டி படிக்கின்றது.

கதை தான் என்றால் வித்தியாசமான ஒரு முயற்சி.

இல்லையென்றாலும் இப்படி ஒரு விதமாக பதிந்திருப்பதும் புதுமை தான்.

சீக்கிரம் சொல்லுங்கோ !

உமாஷக்தி சொன்னது…

ஜமால் இது கதை..ரீல்..சும்மா ப்ளாக்கை டைரி மாதிரி உபயோகிப்படுத்திய இருவரின் காதல்கதை.அவ்வளவே. இதுக்கு நீங்க இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ண வேணாம். Date, time and title எல்லாம் சேர்த்து இன்னொரு தடவை வாசிங்க..புரியுதான்னு சொல்லுங்க. சரியா?

பெயரில்லா சொன்னது…

sathrana kathai thaan.. style superrrrrrrrr... !!!

nalal velai nandhavayum , kayalayum ..antha cria ooki pathivar serthu vaithu vittar. padam subamaha mudinthathu! :-) muthuvalavan

நட்புடன் ஜமால் சொன்னது…

புரிந்ததுங்கோ!

ஏதோ புச்சா வாசிக்க தொடங்கியிருக்கேன்.

புரிய வைத்ததற்கு நன்றிங்கோ.

சொல்லியிருக்கும் விதம் மிக அருமை.

இதற்குமேல் எதுனா வார்த்தைகள் இருப்பின் போட்டு நிறப்பிடவும்

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

உமா

ப்ரிண்ட் எடுத்து தனியா வெச்சிருக்கேன், பொறுமையா படிக்க..

எப்படிப்பா. இவ்ளோ நீ.......ளமா டைப் செய்யறீங்க

vinu சொன்னது…

thoooooooooooooool pa its fantastic i just read once but all the characters and scenes stood in my heart for ever. great love story i read ever. i will come back daily to ur page with lots and lots of expectations than you thanks a lot to share a wonderful story

vinu சொன்னது…

eathachaiyaga sumaar 12 manikku ungal kathaigalai padikka aarambithean itho ippoluthu mani 4 innum thuuukkam varavillai 11 manikku aluvazagam chealla veandum meendum varuvean ungal ealla paathirangalum ean vizhigalukkul thanks pa

உமாஷக்தி சொன்னது…

ஜமாலுக்கு வர வர கிண்டல் அதிகமாயிருச்சு இல்லை? ;))) எப்படியோ புரிஞ்சு ரசிச்சிருந்தீங்கன்னா சரி.

உமாஷக்தி சொன்னது…

அமித்தும்மா இதுவும் எப்பவோ எழுதின கதை. என்னுடைய பழைய ப்ளாக்ல இருந்தது. அந்த ப்ளாக் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்து போச்சு. சரின்னு இதுல repost பண்ணியிருக்கேன். வாசிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க..

உமாஷக்தி சொன்னது…

thank you so much vino. your kind words of appreciation made me feel very happy. will surely write good stories and meet your expectations. thanks again

உமாஷக்தி சொன்னது…

thanks again vinu. dont strain this much to read, it will be there only nah...after reading pls let me know your comments

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

கதை நல்லா இருந்துது உமா.

காதல் கதையா இருந்தாலும், அதுக்கு நீங்க செல்க்ட் பண்ண ப்ளாட்பார்ம் அதான் ப்லாக் + பின்னூட்டம் + அப்புறம் க்ரியா ஊக்கிங்கிற ப்லாக் வாசிப்பவர், சாந்த சொரூபி இப்படியெல்லாம் கொண்டு போன ட்ராக், ரசிக்கும்படியாக இருந்தது.

இது மாதிரி நிஜத்துல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அடலேறு சொன்னது…

இந்த கதை படித்து முடித்தும்
“ என்னையே திட்டிக்கொண்டேன்” இவ்வளவு நாட்களாக ஏன் இந்த கதயை படிக்கவில்லை என்று.பாத்திரங்களின் படிப்பும்,மொழி நடையும் அதிவேக மின் ரயிலாய் இழுத்து செல்கிறது கதைக்குள்.
வாழ்த்துக்கள் உமா.