ஞாயிறு, 5 ஜூலை, 2009

தொலைந்த காதல்

முதல் சுற்று

ரஞ்சனி மறுபடியும் எதிர் ப்ளாட்டிற்கு குடி வந்துவிட்டாள். வாழ்வின் மொத்த அலுப்பும் அவள் முகத்தில் தென்பட்டது ஏன் என்று தெரியவில்லை. சந்திரனை ஒரேடியாக தலைமுழுகிவிட்டு வந்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். சொந்தமாக ஒரு பார்மஸியை தெருமுனையில் தொடங்கியிருக்கிறாள். அவளின் தைரியமும் திமிரும் எனக்கு இன்றளவும் பிடிக்கும். சுயம் சார்ந்த சிந்தனைகள் அவளிடம் இருக்கும். தனக்கு என்னத் தேவை என்பதில் மிகவும் தெளிவாக இருப்பவள். அனேகமாக அவள் கோட்டைவிட்ட ஒரே விஷயம் நானாகத் தான் இருக்கும். அந்த ப்ளாட்டில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்ய வைத்துவிட்டு, வீட்டை கொஞ்சம் சரி செய்து இதோ கடைசியில் மீண்டும் என் கண் முன் வந்தேவிட்டாள். எப்படி அவளால் கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் வளைய வர முடிகிறது? எனக்கு முதலில் மிகப் பெரிய கோபம் இருந்தாலும் அவளின் மென்சோகமும் கண்ணீர் தளும்பிய விழிகளும் அதை வெகு சீக்கிரத்தில் கரைத்துவிட்டது. என்ன இருந்தாலும் பழைய காதலியாயிற்றே.

ரஞ்சனி என்னை கொன்றவள், உயிரோடு புதைத்தவள். இத்தனை வருடங்கள் கழித்து அவள் மீண்டும் என் வாழ்வில் குறுக்கிடுகிறாள். ராஜு, தங்கம், பிரின்ஸ் என தன் இனிமையான குரலினால் குழைகிறாள். தூங்கிட்டியா சாப்டியா என்று எதிர் வீட்டில் இருந்துகொண்டு மெசேஜ் போடுகிறாள். என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி ‘ஏன் போனாய், போய்விட்டாய் அல்லவா எதற்காக திரும்பினாய்’.

விருப்பமாகவும் அதே சமயம் வெறுப்பாகவும் இருந்தது அவளின் செயல்கள். யாருமற்ற தனிமை வேறு என்னை நிலைகுலைய வைக்கிறது. டீவியை போட்டேன். க்ரிக்கெட் மாட்ச். மனம் அதில் லயிக்கவில்லை. திரைச்சீலையை விலக்கி ஜன்னலூடே எட்டிப் பார்த்தேன். இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? புதைந்து கொண்டிருந்த அவள் நினைவுகளின் கனம் முன்னெப்போதையும் விட மேலதிகமாய் என்னை வாட்டியது. ரஞ்சனி, ரஞ்சனி என்று மனதிற்குள் மந்திரம் போல அவள் பெயரை உச்சரித்தபடியே கண் மூடி நித்திரைக்குள் செல்ல முயன்றேன். என்றைக்கும் இல்லாமல் இப்போது நைட் லாம்பின் வெளிச்சம் கூட கண்ணை உறுத்தியது. அணைத்துவிட்டுப் படுத்தேன். கும்மிருட்டு. குழந்தையின் அழுகுரல் போன்ற பூனையின் புணர்ச்சி சத்தம் விட்டு விட்டுக் கேட்டது என் எரிச்சலை பன்மடங்காக்கியது. உறக்கம் வர மறுக்கும் இந்த நிசியில் செய்வதற்கு எதுவுமில்லாமல் இப்படி சும்மா எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்பது ஆயாசமாக இருந்தது. ஹெலன் வேறு ஊரில் இல்லை. ரேச்சலை அழைத்துக் கொண்டு அவள் பங்களூருக்குப் போய் விட்டாள். அவளுடைய சொர்க்கம் அம்மா வீடு. நல்ல வேளை அது ஊர் விட்டு இருந்தது. சென்னையில் இருந்திருந்தால் நான் நிரந்திர பிரம்மச்சாரியாக காலத்தை கழிக்க வேண்டியிருக்கும். ஹெலன் இரண்டு மாதம் கழித்துதான் வருவாள் அடுத்த மாசம் நான் ஒரு முறை போக வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு கர்த்தரின் பெயரால் ஸ்தோத்திரம்தான். ரேச்சலைதான் அதிகம் தேடுகிறது. முதல் குழந்தைக்கு ஏஞ்சல் என்று பெயர் வைக்கவேண்டும் என்று நானும் ரஞ்சனியும் முன்பு பேசியிருந்ததை நினைத்தேன். எத்தனை கனவுகள் கண்டிருப்போம், எவ்வளவு வார்த்தைகளை இறைத்திருப்போம். எல்லாம் அர்த்தமற்று ஒன்றுமில்லாமல் ஆகிப்போனது காலத்தின் கட்டாயமெனில் இப்போது மீண்டும் அவள் என் முன்னால் ஏன் வரவேண்டும்?

என்னால் எப்படி தூங்க முடியும்? மூளை கொதித்துக் கொண்டிருக்கிறது. தப்பியோட முடியவில்லை. மின்விசிறியின் சத்தம் மண்டைக்குள் கேட்டது. அதை அணைத்துவிட்டு ஏசியை போட்டேன். குளிர் பரவுவதற்கு சற்று நேரமாகும். தலையணையை எடுத்து காலுக்கடியில் போட்டுக் கொண்டேன். ரஞ்சியின் அருகாமை நினைவுகளால் உடலின் அனல்காற்று மனது வரை பாய்ந்து என்னை சூடாக்கியிருந்தது. வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கின்ற கவிஞனைப் போல இப்படி என்னை அலைக்கழிக்கிறாள். அறுக்க முடியாத பந்தமாய் அவளன்பு என்னை இறுக்கி கட்டுகிறது. என்னால் எங்கும் போக முடியாதபடி அது என்னை ஓரிடத்தில் ஆணியடித்து வைத்துள்ளது. நான் உன்னிடம் மறுபடியும் தொலைந்துவிடுவேனா ரஞ்சனி? இனி எப்படி அணுகுவது இவளை. என்னை முழுவதும் எடுத்துக் கொண்ட மாகாளி இவள், ஓரே நாளில் குப்பையாய் மதித்து தூக்கி எறிந்த யட்சியும் ஆனவள். இன்றளவும் கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் கட்டி வைத்து என்னை பொம்மையாக ஆட்டுவிப்பவள். என்னுயிரை விட்டாலன்றி இவளை மறக்க முடியாது போலிருக்கிறது. இப்போது கண் முன்னால் வந்து பூச்சாண்டி காட்டும்போது மறுக்கவும் முடியவில்லை. ஆறு ஆண்டுகள் முன்பு அவள் எனக்கானவள் எனக்கு மட்டுமேயானவள். இப்போது அவள் சந்திரனின் மனைவி இரண்டு குழந்தைகளின் தாய். என்னால் அவளை தள்ளமுடியவில்லை,அள்ளவும் முடியவில்லை. ‘அழகி’ படம் நினைவிற்கு வந்தது. சில சமயம் சினிமா வாழ்க்கைக்கு அருகில் இருக்கிறது. நிஜத்தில் நடப்பதைத் தானே நிழலில் படச்சுருளில் காட்டுகிறார்கள். ரஞ்சனி வேறு நந்திதா தாஸ் போல மென்சோகத்துடன் காணப்படுகிறாள். வீதிக்கு வந்துவிட்டாளா இல்லை என்னை வீதியில் நிறுத்தப்போகிறாளா தெரியவில்லை.

குற்றுயிராய்க் கிடக்கின்ற என்னை ஒரேடியாக கொல்லத்தான் வந்திருக்கிறாளா? அப்படித்தானிருக்கவேண்டும். ஆனாலும் நான் தப்பி ஓடி விடுவேன்.எங்களுக்கிடையே ஒரு சூட்சும கயிறு இருக்கிறது, அது முன்பு ஒரு போதும் இருந்தது இல்லை. ஆனால் இப்போது இருக்கிறது. ரஞ்சனியை நிதானமாகத் தான் கையாளவேண்டும், எனக்கு அவள் பிசாசு மற்றும் தேவதை. இரண்டு முகம் அவளுக்கு. இந்த என் நிதானம் ஆச்சரியமான நிதானம் எனக்கே அதிசயமாய்த்தான் இருக்கிறது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் அவதானித்தேயிருக்கிறேன். பார்வையாளனாய் இருந்தவன் முதல் முறையாய் கூண்டுக்குள் சிக்கியுள்ளேன். இது கொஞ்சம் சிக்கலான இடம்தான். புதிர்த்தன்மை நிறைந்துள்ல இப்புது விளையாட்டின் விதிமுறைகளை நானறியேன்.

மிகவும் சோர்வாக இருந்தது. மொபைலில் மெசேஜ் டோன் கேட்டது. எடுத்துப் பார்த்தேன் அவள்தான் தான். மணியைப் பார்த்தேன். 12.45. இந்நேரத்தில் என்ன சொல்லப்போகிறாள். ‘ராஜு, தூங்கிட்டியா? காலை உன்னை சந்திக்க வேண்டும், அவசரம். குட் நைட். பதில் அனுப்பத் துடித்த மனதை அடக்கிக் கொண்டேன். ‘ஏன் இப்படி சித்ரவதை செய்கிறாள்’? என் மனதின் துடிப்புகள் அவளுக்குத் தெரியுமா? தெரிந்தே கொல்கிறாளா?

கேள்விகள் கேள்விகள் என்னை இம்சிக்கும் கேள்விகள். எனக்கு மீண்டும் ஒரு வரம் கிடைத்திருக்கிறது. வைத்துக் கொள்வதா விடுப்பதா தெரியவில்லை. விடிய விடிய தூங்காமல் இருந்ததினால் கண்கள் நெருப்பாய் எரிந்தது. பாத்ரூம் போய்விட்டு பல் விளக்கி பேப்பர் படிக்க அமர்ந்தேன். இரவின் அயற்சி தொடர்ந்தது. பேப்பரை தூர எறிந்துவிட்டு குளித்து முடித்தேன். கொஞ்சம் புத்துணர்வு ஏற்பட்டது போலிருந்தது. ஆனாலும் உள்ளிருந்து ஏதோ இனம் தெரியாத உணர்வொன்று கிளர்தெழுந்து கொண்டேயிருந்தது. வெகு நாள் கழித்து இப்படி தளும்பிப் போய் நிற்கிறேன். நான் இன்றி என்னை யாரும் நகர்த்த முடியாது. இவளால் மட்டும் எப்படியோ அது சாத்தியமாகிறது. ப்ரின்ஸ் ஜெபராஜ், யாரிடமும் எதற்காகவும் என்னை இழக்காதவன். நான் தேர் என்று இறுமாந்திருந்தேன். தேருக்கும் சக்கரம் இருக்கும் வரை அது நகரும். நகரத்தான் வேண்டும் என்று அவள் நிரூபிக்கப் பார்க்கிறாள். தலை சீவிக் கொண்டிருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. ரஞ்சனிதான். ‘ராஜ், குட் மார்னிங். ப்ரிட்ஜில முட்டை இருக்கா, கடைக்கு போக நேரம் இல்லை’ என்று கேட்டபடி நேராக ப்ரிட்ஜை திறந்து எடுத்துக் கொண்டு திரும்பியவளைப் பார்த்தேன். அப்போதுதான் குளித்திருந்தாள். சிவப்பும் கருப்புமான நைட்டியின் க்ளிவேஜ் தெரிந்தது. அழகாக அம்சமாக கொஞ்சமும் சிதையாமல் அப்படியே இருக்கிறாள். என் கண்கள் அவள் உடல் முழுவதும் பார்ப்பதை லேசான சங்கடத்துடன் பார்த்தாள். அப்பறம் வரேன் என்றவளை இழுத்தணைத்து அழுத்தமாய் முத்தம் கொடுத்துவிட்டேன். அடிபட்ட பார்வையுடன் என்னைச் சலனமின்ற பார்த்தாள், இன்னும் தீராத தாகத்துடன் அவள் உதடுகளை உதடுகளால் கவ்வினேன். விடுபடமுடியாத அவள் உடலின் லேசான மின்னதிர்வை உணர்ந்தேன். என்னைத் தள்ளவில்லை. ஆனால் எதிர்வினைகள் ஏதுமற்று என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பறம் வரேன் என்று முனகிவிட்டு சென்றுவிட்டாள். என் உடல் விரைத்து உயிர் கசிந்து அவளுடலுக்காய் ஏங்கியது. நான் சரியாவதற்கு வெகு நேரமாயிற்று. மொபைல் அடித்தது. ஹெலன் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தாள். சத்தம் ஏதுமில்லாத தனிமை இந்த நொடி எனக்குக் கிடைத்தால் போதுமென்றிருந்தது. ஓடி ஒளிய இடமேதுமில்லாமல் வழக்கம் போல வேலைக்குச் சென்றேன்.

2வது சுற்று

கடும் கோடையில் நீ பேசியது மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. இது மழையற்ற மழை. பெய்து ஓய்ந்த மழையின் ஈரத்தை உன் சுவாசத்தில் உணர்ந்தேன் ராஜ். விடாமல் பெய்த மழையினூடே சிறுமழையாக என் கண்களினின்று யாருமறியாமல் வீழ்ந்து கொண்டிருக்கும் கண்ணீரின் கதை தெரியுமா ராஜ் உனக்கு? நீ எனை அணைத்தது முத்தமிட்டது எல்லாம் உணர்வுகளற்ற இந்த உடலைத்தான். மரத்துப் போன என் மனத்தின் துயரின் ஆழங்களை நீயறிந்திருக்க நியாமில்லை.

வெளிப்பார்வைக்குத் தான் பேசுகிறேன் சிரிக்கிறேன். உள்ளுக்குள் சுக்கல் நூறாய் உடைந்து சிதறிக் கிடக்கிறேன். உன்னைப் பிரிந்து சந்திரனை கைப்பிடித்த நாள்முதலாய் சித்ரவதைகளின் மொத்த வகைகளையும் அனுபவித்தேன். அவனுக்கு நம்முடைய விஷயம் எப்படியோ தெரிந்திருந்தது. தவிர அவன் பழக்க வழக்கங்கள் எதுவும் சரியில்லை. தினமும் அடி உதை. கர்ப்பமாக இருந்த என்னிடம் சொல்லக் கூசும் வார்த்தைகளால் ஏசுவான். என் மகன் வயிற்றுக்குள் அடித்த அடிகளைவிட வெளியில் இவன் அடித்தது அதிகம் தெரியுமா. இந்தக் கொடுமையைப் பார்த்து என் அப்பா குற்றவுணர்வால் மருகியே இறந்துவிட்டார்.

என்னுடைய இரண்டாவது குழந்தை செல்மாவின் முகத்தை நான் ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன் என்றால் உன்னால் நம்ப முடிகிறதா? அவள் தனக்குப் பிறக்கவில்லை என்று இன்றளவும் நம்புகிறான். உன்னை சம்பந்தப்படுத்தி பல தடவை வயிற்றில் மிதிப்பான். சிகரெட் லைட்டரால் என் மேல் எத்தனை தடவை சூடு போட்டிருக்கிறான் தெரியுமா ராஜு. பிரசவம் முடிந்த ஒரே நாளில் என் குழந்தையைப் பறித்து அவனுடைய மாமாவிற்கு தத்து கொடுத்துவிட்டான். அவனுடைய தாய்மாமாவிற்கு குழந்தை கிடையாது. குழந்தைகளில்லாத அவர்கள் நம்மைவிட நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்றான். அவனுடைய அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக்கொண்ட என்னால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பத்து மாசம் சுமந்து பெற்றிருந்தால்தானே அதன் அருமை அந்த அரக்கனுக்குத் தெரிந்திருக்கும்? அவனை கெஞ்சி பார்த்துவிட்டேன் மிரட்டிப் பார்த்துவிட்டேன். பலனில்லை. கடைசியில் அவனுடைய மாமாவின் காலில் விழுந்து குழந்தையை திருப்பித் தந்துவிடுமாறு அழுது புலம்பினேன், என்னை அவர்கள் நாயை விட கேவலமாக நடத்தி விரட்டிவிட்டார்கள்.

என் அழுகைகள் அந்தக் கல் மனசுக்காரர்களை கரைக்கவில்லை. என் பிரார்தனைகள் எல்லாம் வீணாக்கி அவர்கள் தங்களின் வீட்டை மாற்றிச் சென்றுவிட்டார்கள். எவ்வளவு முயன்றும் என்னால் அவர்கள் என் குழந்தையை எடுத்துக் கொண்டு எங்கு போனார்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. நடைபிணமாய் ஆகிவிட்டேன். சந்திரன் மீது வழக்கு போட்டேன். டைவர்ஸ் கிடைத்துவிட்டது. ஆனால் என் மகளைப் பற்றித் தெரியவே தெரியாது என்று கோர்ட்டில் சத்தியம் செய்துவிட்டான். மூன்று வருடம் ஓடிவிட்டது ராஜ். எனக்கென்று யாருமேமில்லை. தனித்தீவில் சுடுமணலில் என் மகனுடன் மகளைத் தேடி அலைந்து திரிகிறேன். உன் வீட்டருகே நான் மீண்டும் வந்தது உன்னிடம் பிச்சை கேட்பதற்காகத்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் உனக்கு செய்த துரோகத்தை மன்னித்துவிடு அதற்காக நான் நிறைய அனுபவித்துவிட்டேன். உன் ரஞ்சனி செத்துவிட்டாள். என் மகளை மீட்டுத் தர உன்னால் தான் முடியும். நீ போலீஸ்காரன் மட்டுமல்ல, என் மனதிற்கு உகந்தவன். என் ப்ரியமான முன்னாள் காதலன். எனக்கு இருக்கும் ஒரே பிடிப்பு நீதான். செய்வாயா ராஜு?

மூன்றாவது சுற்று

ரஞ்சனிக்கு இவ்வளவு பெரிய துயர் ஏற்பட்டிருக்கும் என்று கனவில் கூட நான் நினைத்திருக்கவில்லை. அவள் என்னைவிட்டு ஒரேடியாய் பிரிந்த போதும் அவளுக்கு எவ்வித சாபமும் நான் தரவில்லை. என்னைத் தான் அதிகம் வருத்திக்கொண்டேன். என் தேவதை இப்படி சிதைந்துபோய் வந்திருக்கிறாள் என நினைக்கும் போது வயிறு எரிந்தது.

அவள் செல்மாவை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். அதுதான் என் முதல் வேலை. ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டேன். டிபார்ட்மெண்ட் நண்பர்களிடம் சந்திரன் மற்றும் அவன் குடும்பத்தாரின் தகவல்கள் கொடுத்து உதவிக்கு அழைத்தேன். மூன்றே நாள்கள் அந்த மாமாவின் அட்ரஸிலிருந்து செல்மாவை மீட்டு இதோ எங்கள் கையில் இப்போது பூத்த ரோஜாவாய் செல்மா. குழந்தை அப்படியே ரஞ்சனி மாதிரியே இருந்தது. என் குட்டி இளவரசி என்று கொஞ்சித் தீர்த்தேன். ரஞ்சனியின் முகத்தில் பழைய ரஞ்சனியைப் பார்த்தேன். முதலில் செல்மா ரஞ்சனியிடம் வர மறுத்தது. சந்திரனுடைய மாமா அத்தையிடம் தான் இருப்பேன் என்று அடம் பிடித்தது. எல்லாவற்றையும் பல்லைக் கடித்துத் தாங்கிக் கொண்டு ரஞ்சனி குழந்தையிடம் அன்பைக் கொட்டினாள். பெற்ற பாசம் வளர்த்த பாசத்தை வெகு சீக்கிரம் வென்றுவிட்டதை கண்ணால் பார்த்தேன். ரஞ்சி ரஞ்சி அம்மா என்று அழகாக செல்மா அவளிடம் ஒட்டிக் கொண்டாள். குழந்தைகளை அழைத்துக் கொண்டு விஜிபி, மாயாஜால், கிஷ்கிந்தா என்று சுற்றினோம். ரஞ்சி என்னிடம் நன்றி சொல்லியே சோர்வுற்றாள். அவளால் நினைத்துப் பார்க்கவே முடியாத கனவை நான் சாத்தியப்படுத்தியிருக்கிறேன். என் ரஞ்சனிக்காக இதைக்கூட செய்யாவிட்டால் நான் இருந்தென்ன பயன்? தாய்மையின் நிறைவில் அவள் குழந்தைகளுடன் இனி இந்த வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியுடன் கடந்துவிடுவாள்.

ரஞ்சனி, வாழ்வின் பாதைகள் நெடியவை. நிறைய மனிதர்களை நாள்தோறும் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். சில பேர் சிரித்துவிட்டு நம்மைத் தாண்டிப் போய் விடுவார்கள். சிலர் நின்று பேசிவிட்டுச் செல்வார்கள். சில பேர் சற்று தூரம் வரை வழித்துணையாக வருவார்கள். சில பேர் நாம் நடப்பதைக் கேலி செய்வார்கள். தப்பான பாதையைக் காட்டி குழப்பிவிடுவார்கள். தங்களுக்குப் பிடித்த பாதையில் நம்மை இழுத்துச் செல்ல முனைவார்கள். இதிலிருந்தெல்லாம் மீண்டு நடக்க வேண்டுமென்றால் எதிரே வருபவர்களைப் பற்றிய கணிப்பும், நம் பாதை எதுவென்கிற தெளிவும் நமக்கு வேண்டும். ரஞ்சனி, என் தேவதைப் பெண்ணே, முன்பு உன் பாதையில் நானும் எதிரே வந்தேன். என்னுடன் சேர்ந்து இறுதி வரை பயணம் செய்வாய் என இறுமாந்திருந்த சமயம் ஒரு வார்த்தைக் கூட என்னிடம் சொல்லாமல் விட்டு விலகிவிட்டாய். பாதைகள் ஏதும் தெரியாத இருள் வெளிகளில் கனவுகள் யாவற்றையும் இழந்து பைத்தியம் பிடித்து அலைந்து திரிந்தேன். என்னை சரி செய்ய எத்தனை வருடங்களாகியது என்று உனக்குத் தெரியாது. இன்றுவரையிலும் முழுவதுமாய் உன்னை மறக்க ஏலாமல்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் மீண்டும் என் பாதையின் எதிரே வந்திருக்கிறாய் ரஞ்சி. என்னை நீ எந்த இடத்தில் இன்று வைத்திருக்கிறாய் என்று யோசித்து யோசித்து குழம்பிப் போய்க்கிடக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது சற்றுத் தூரம் வரை உன்னுடன் பேச்சுத் துணையாக இருக்கப் போகின்றவன் நானென்று. அதுதான் என் இடம். உன் பயணம் மேலும் தொடரும் அவர் பயணமும் எவர் பொருட்டும் நிற்பது கிடையாது ரஞ்சனி. எதிர்ப்படும் யாரேனும் உனக்கு என்னைவிட இணக்கமான துணையாக கிடைக்கலாம். நீ அத்துணையின் கைகோர்த்து தொடர்ந்து பயணிப்பாய். நல்லது. ஆனால் எனது ஆசை விருப்பம் இதில் ஒன்று உண்டு. ஒரு நவம்பர் மாதம் மழை நேரத்து மாலையில் எனக்கு அறிமுகமான கனவும் காதலும் நிறைந்த கண்களை நான் நேசிக்கிறேன். அந்தக் கண்கள் அன்று கண்ட கனவுகளைத் தொலைத்துவிடக்கூடாது. உன்னை உன் கனவுகளுக்காகவும் அறிவுக்காகவும் உனது வருத்தம் சோகம் பொறுப்புகள் அத்தனையோடும் சேர்த்து எதிர்ப்பார்ப்புகள் குறைவாக நேசித்தவன் என்கிற நிறைவு இப்போது எனக்கிருக்கிறது. நீ இன்னும் தெளிவாகும் வரை, உன் டிப்ரஷனிலிருந்து வெளிவரும் வரை ஒரு நல்ல நண்பனாக, உனக்கு தார்மீக பலமாக கொஞ்ச காலம் இருப்பேன். நான் வழிப்போக்கன் தானே ரஞ்சனி? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

நான்காவது சுற்று

செல்மாவை ராஜு மீட்டுத் தந்ததும்தான் என் இயல்புக்குத் திரும்பினேன். நேற்று காரைக்குடியில் சாப்பிட்டுவிட்டு என்னை தெருமுக்கில் இறக்கிவிட்டான். அவனின் ஸ்பரிசம் என்னை அனல் மீதேற்றியது. இவ்வளவு நாள் உறங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒரு உணர்வு சட்டென்று விழித்துக் கொண்டது. அவனுடைய அணைப்பும் முத்தமும் ஞாபகத்திற்கு வந்து உயிரை வதைத்தது. இந்த இரவு மிருகமாய் மாறி என்னை வதைக்கிறது. என் மென்னுடலுள் ஏதோவொன்று பொங்கிப் பொங்கி அணைகிறது. ஹோட்டலில் சாப்பிடும் போது என் கண்களைப் பார்த்து பேசிய அவன் விழிகளின் ஒளி என்னை உடைத்துப் போடுகிறது. எத்தனை தெளிவாய் பேசுகிறான். வழித்துணையாம் பேச்சுத் துணையாம், இனிய நண்பனாய் என்றும் இருப்பானாம். எப்படி சாத்தியம், நட்பு காதலாகும் சாத்தியங்கள் நிறைய இருக்கிறது இவ்வுலகில், கனிந்த காதலொன்று மீண்டும் நட்பாய் மாறுவது எங்கனம்? நட்பிற்கு களங்கம் விதைப்பவளாய் நானிருக்க மாட்டேன்.

மோகமும் மெளனமும் அருகருகே நிற்கிறது. பாறையாய் இறுகிக் கிடந்தவள் திடீரென்று உடைபட்டு உருகத் தொடங்கிவிட்டேன். ராஜு, இப்போது உன் மீது மீண்டும் கிளர்ந்தெழுகின்ற இந்த உணர்விற்கு என்ன பதில் சொல்ல? இது காதல் இல்லைதான், காமம். வெகு நாள் நான் மறந்துபோயிருந்த அது என்னுள் பல்கிப் பெறுகி உன்னை வந்தடைந்துவிட்டது. சந்திரனுடன் வாழ்ந்த காலங்கள் முழுவதும், மனதின் அடியாழத்துள் ரகசியமாய் உன்னைப் புதைத்து வைத்திருந்தேன் தெரியுமா உனக்கு? அவன் என்னை அடித்து துன்புறுத்தும் போதெல்லாம் எங்கேயாவது உன் குரல் கேட்குமா என்று ஏங்கியிருந்தேன். காதலித்த போழ்துகளில் கனவு வெளிகளில் எத்தனையோ முறை கூடிக் களித்திருக்கிறோம்தானே? நான் சிதறிக் கிடக்கிறேன் ராஜு வெறுப்பின் அடிஆழம் வரை சென்று திரும்பியவள் நான். ஆனாலும் மனதின் ஆதி ஆசையான காமத்தை துறக்கமுடியவில்லை. எனக்கு அதில் கசப்பான அனுபவங்கள் மட்டுமே கிடைத்திருந்த போதினும். என்னுடலில் எத்தனை தழும்புகள் தெரியுமா? அதையும் மீறி இந்த வெட்கம் துறந்த உடல் மற்றொரு உடலைக் கேட்கிறது. வெட்கம் என்பதே மிகையுணர்வு, அது பெண்கள் மீதேற்றப்பட்ட பாதுகாப்பு வளையம். காலம் காலமாய் கட்டமைத்த புனிதங்களின் மீதேறி உன் உடலை அடைந்து அடுத்து என்ன செய்யப் போகிறேன்? இது சரியா தவறா. எப்படிப் பார்த்தாலும் மனதில் விழுந்த முதல் ஆண் நீதானே, நீ என் செல்மாவை என்னிடம் சேர்த்தவன். உனக்கு நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். என் அன்பையும் நன்றியையும் எப்படி வெளிப்படுத்துவேன்? அன்பின் உச்சமான வெளிப்பாடு உடல் பகிர்வுதான் ராஜு. என்னை எடுத்துத் தான் என்னை நீ மீட்டுத் தரவேண்டும்.

யாருக்கும் தெரியாமல் நீயும் என்னை அழைப்பது என் காதுகளில் விழுகிறது. உன் விழைவுகள்தான் எனக்கும். ஆனால் உன்னால் வெளிப்படையாக சொல்ல முடியும். எனக்கு சிரமம், சிக்கல், மிகப் பெரிய மனப்போராட்டம். என்னுடைய மொராலிட்டி. தூய்மை புனிதம் கற்பு இதெல்லாம் பிரச்சனை இல்லை. கசந்துபோன மண வாழ்க்கையில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டேன். நினைவிருக்கிறதா ராஜு, என்னை நீ எப்படியெல்லாம் கொண்டாடுவாய். வணங்குவாய். வழிபடுவாய் அதெல்லாம் வேண்டும். நீ உன் மனைவியிடம் எப்படி நடக்கிறாயோ தெரியாது, ஆனால் என்னை தேவதையாகவும் தெய்வப்பெண்ணாகவும் தான் நடத்தினாய்; நான் உன்னை விட்டு பிரிந்திருந்தாலும் உள்ளுக்குள் உன்னை தினம் தினம் நினைத்துக் கொண்டுதானிருந்தேன். என்னை பூஜித்த உனதன்பிற்கு நான் எதுவுமே செய்யவில்லை. பிரிந்து சென்றதுதான் மிச்சம். இதோ வெகு அருகில் வந்திருக்கிறேன். எடுத்துக் கொள் நான் உனக்கானவள். இனி உனக்கு மட்டுமேயானாவள். உனக்கு தேவைப்படும்போதெல்லாம் நான் தடாகமாவேன். என் குளத்தின் தாமரையாகிவிடு ராஜு, உடனடியாக வந்துவிடு, வந்தென் உயிரைத் தின்றுவிடு தழலென எரியும் என் மோகத்தைக் தீர்த்துவிடு, முடியாதெனில் என் மூச்சையாவது நிறுத்திவிடு.

ஐந்தாவது சுற்று

பிரிந்த நண்பர்கள் வெகு நாள் கழித்து சேர்ந்ததைப் போல பேசினோம் பேசினோம் நிறைய பேசினோம்.
தூக்கம் வரவில்லை. ரஞ்சனியை நான் ஏமாற்றுகிறேனோ என்று மனம் ஏசியது. அவளுடைய அவல நிலையைப் பயன் படுத்தி அவளையே எடுத்துக் கொள்ள பார்க்கிறேனா. பாவம் அவள், அவள் கண்கள் என்னை நன்றியுடனும் காதலுடனும் பார்க்கும் போதெல்லாம் நான் கடிகாரத்தையோ டீவியையோ பார்க்கிறேன். அவளின் தேடலும் தேவையும் எனக்குத் தெரிந்திருந்தது. எனக்கு அவளைவிட மேலதிகமாய் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய ஈகோ அதை ஒத்துக் கொள்ளவில்லை. நான் இம்முறை அவளை அலைக்கழிக்கிறேன். ஐந்தாண்டு காலக் காதலில் சில முத்தங்கள் அவசர அணைப்புகள் மட்டுமேயான தகிப்பான மன நிலையில் இரவு பகலாக அவளை மனதால் சுமந்து திரிந்திருக்கிறேன். ரஞ்சனிக்கு ப்ளூ பிடிக்கும், ரஞ்சனிக்கு கமல் பிடிக்கும், ரஞ்சனிக்கு காரம் ஆகாது, ரஞ்சனிக்கு கத்தி பேசினால் பிடிக்காது, ரஞ்சனி...ரஞ்சனி...ரஞ்சனி...வேறு யாருமேயில்லாத உலகத்தில் அவளுடன் அவளுடன் மட்டுமே வசித்திருந்திருக்கிறேன். ஒரு இன்விடேஷனில் எல்லாக் கனவுகளையும் சிதைந்து போனது.

நான் போலீஸ் ட்ரெயினிங் போயிருந்த சமயம் அவசர அவசரமாய் இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து தில்லிக்கு அனுப்பி விட்டார்கள் இவளுடைய பெற்றோர்கள். நான் க்ரிஸ்டியனாம், கறி மீன் வாசம் அவர்கள் குடும்பத்திற்கே ஆகாதாம். இவள் எனக்காக சமைத்த சிக்கன் எங்கள் அன்பின் ஆழங்களை எங்களுக்கு உணர்த்திய அளவிற்கு அவர்களுக்கு உணர்த்தவில்லை, அச்சூழலில் எங்களுக்கு எல்லாவற்றையும் விட்டு ஓடிவிடத் தெரிந்திருக்கவில்லை. அவள் அப்பா கூரியரில் அனுப்பிய இன்விடேஷன் தகவலுக்கானது என்பதை பின்னால் அறிந்துகொண்டேன். அவளற்ற உலகம் இருட்டாய் இருந்தது. எந்தப் பாதையும் எனக்கு வெளிச்சத்தை காண்பிக்கவில்லை. தட்டுத் தடுமாறி நின்று நிலைப்பதற்கே சிலவாண்டுகள் பிடித்தது. அதன்பின் ஹெலனை மணம் செய்து அடுத்த ஆண்டு ரேச்சல் பிறந்து இதோ ஒரு வாழ்க்கைச் சுற்றை முழுவதுமாய் முடித்துவிட்டு எதிர் எதிராய் நிற்கிறோம். அவளுக்கு என்னால் முடிந்த உபகாரத்தை செய்துமுடித்துவிட்டேன். இனி விடைபெறுதல் என்பதுதான் அடுத்த கட்டம். அதுதானே நியாயம் கூட? எல்லாவற்றையும் மீறி என்னிடம் என்ன வேண்டும், எனக்கு அவளிடம் என்ன வேண்டும் என்பதை இருவரும் அறிந்திருந்தோம். நாளை என் பிறந்த நாள், இதை அவள் முன்பு எப்படியெல்லாம் கொண்டாடுவாள் என்பதை எண்ணிப் பார்த்து நெகிழ்ந்தேன். மனம் எதிர்பாராத பரவசத்திற்கு தன்னை தயாராக்கிக் கொள்ள ஆரம்பித்தது. பேசிவிட வேண்டும், இதற்கு முடிவென்பது இருந்துதானாக வேண்டும்.

நான் அவளிடம் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன். ரஞ்சி ரஞ்சி என்று மறுபடியும் கொஞ்சவாரம்பித்துவிட்டேன். இருவருமே ஒருவருக்கொருவர் கண்களால், புன்னகையால் எங்களின் இருப்பால் நெகிழ்கிறோம். நேசிக்கிறோம், இந்த முறை எங்கள் நேசிப்பில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான் அது தூய்மையான காதல். அந்த பாசாங்கான சொல்லை கடந்துவிட்டோம். அவளும் ஒரு தெளிவில்தான் நிற்கிறாள். பிறந்த நாள் பரிசாக அவளை முழுதாய் பார்க்கவேண்டும் என்று சொன்னேன். முதலில் தயங்கினாலும் என் கெஞ்சுதல்கள் அவளைக் கரைத்தது. ‘என்ன ராஜும்மா இப்படி கேக்கறே உன்னை ஏமாத்தவும் முடியலை ஆனால் ரொம்ப கூச்சமாயிருக்கு. என்னை தரச் சொன்னா கூட தந்திடறேன் இது வேணாமே’ என்றாள். பிடிவாதமாய் நின்று பார்க்க வேண்டும் பார்த்தேயாகவேண்டும் என்ற என் தொடர் தாபத்தை தகிப்பை புரிந்துகொண்டு சேரில் கட்டிப்போட்டுவிட்டு எனக்காக எனக்காக என்னை முன்பு உயிருக்குயிராய் காதலித்த குற்றத்திற்காய் தன்னுடைய நைட்டியை கழட்டி என்மீது எறிந்தாள். அவளின் வளைவுகள், அவளின் அழகான திமிறிய முலைகள், சதைப்பிடிப்பான தொடைகள், என்னை பித்தேறச் செய்கின்ற யோனி, குழைவான இடுப்பு பெண்ணுடல் சொர்க்கம். பெண்ணுடல் அதிசயம். பெண் தேவதைதான் சந்தேகமேயில்லை. அங்குலம் அங்குலமாய் அவளை துய்க்க விரும்பினேன். தொட்டுத் தழுவ ஆசைப்பட்டு கட்டை அவிழ்க்க மன்றாடினேன். புன்னகைத்துவிட்டு என் கைலியையும் சட்டையையும் அணிந்து கொண்டு கட்டை அவிழ்த்தாள், அவளின் நிர்வாணத்தை விட இது அதிகமாய் என்னை பைத்தியமாக்கியது. என் வாசனை அவள் உடலின் மீதிருந்து என் உடைவழியாக கசிந்தது.

ஒரு முறை – ஒரே ஒரு முறை அவளுடான உடல் பகிர்வில் எங்களின் இந்தக் ஆவேசம் அடங்கிப் போகும் என்று தெரிந்தது. அவளுடைய உடல் என் பக்கத்தில் இருந்தபோது பிரமிப்பாய் இருந்தது. கன்னம் குழிவிழ சிரிக்கும் அவள் சிரிப்பையெல்லாம் சிதற விடாமல் கைகளில் ஏந்தி ஆராதித்தது நினைவில் நிழலாடியது. கையருகே காதலி. பழகிய தேவதை. மனக் குரங்கிடம் மண்டியிட்டுச் சொல்லிவிட்டாயிற்று அது கேட்பதாய் இல்லை உடையற்ற அவளுடல் மட்டுமே கனவிலும் நினைவிலும் தென்பட்டுக் கொண்டிருக்கிறது. இவள் அதன் பின் சலித்துப் போவாளா? தீர்ந்துவிடக் கூடிய ஆசையா இது. தொட்டபின் கொழுந்துவிட்டு எரிந்து தொடர்கதையாகிவிட்டால்? எதிலிருந்து துவங்குகிறோம் இப்பயணத்தை – எதில் கொண்டுவிடும் இது என்பது தெரிந்திருக்கிறதே. அவள் சந்திரனை விட்டு விட்டாள் ஆனால் நான் ஹெலனை தாங்கிக்கொண்டிருக்கிறேன். இது ஹெலனிற்கு தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் கொன்று விடுவாள். மிகவும் பொசசிவான பெண். திருமணமாகி இத்தனை வருடங்களில் எங்களுக்குள் பெரிதாய் ஈகோ இல்லை. நானே பலசமயங்களில் விட்டுக் கொடுப்பவனாய் இருந்திருக்கிறேன். ஹெலனுக்கு நான் வேண்டும். அவளை மீறி என்னாலும் ஏதும் செய்ய முடியாது அதனாலேயே இவ்வளவு நிதானமாய் என்னால் யோசிக்க முடிகிறது. உடலின் பதட்டங்களை கவனிக்க முடிகிறது. புத்தியால் மனதால் எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்க முடிகிறது. ரஞ்சனியுடனான உறவு முறிந்துவிட்ட ஒன்று. கண்ணாடி குவளை உடைந்தது உடைந்ததுதான். இனி என்ன செய்தாலும் ஒட்ட வைக்க முடியாது. ஹெலனை எனக்கு மிகவும் பிடிக்கும், என் துணை என்பதற்காய் மட்டுமல்ல அவள் அப்பாவி. குழந்தைத்தன்மைகள் நிறைந்தவள். சர்ச்சில் எல்லோர் முன்னிலையில் வாக்குறுதிகள் கொடுத்து மோதிரம் மாற்றிக் கொண்ட உறவு இது. எனக்காக சாப்பிட்டு, எனக்காக தூங்கி, எனக்காக வேலைகள் செய்து என்று குழந்தையைப் போல என்னை பராமரிப்பவள். அவள் என்னுடைய மனுஷி மாமனுஷி. என் இத்தனை கேள்விகளுக்குப் பின்னாலும் அவள் இருக்கிறாள் அதுதான் காரணம். அதற்கு மேல் ரேச்சல் அவள் புன்னகை இல்லாமல் என் பொழுதுகள் விடிவதில்லை. என்ன செய்வது? இவையெல்லாம் என் புத்திக்கு தெரிகிறது கொழுந்து விட்டு எரியும் விரகத்திற்கும் ஆசைக்கும் தெரியவில்லை. பழையவள் புதிதாய் தெரிகிறாள் புத்தும் புது மலராய் என்னை அணைத்துக் கொள் என்கிறாள், உயிர் கசிந்து நிற்கிறாள். என்ன செய்வது?

ஆறாவது சுற்று

அதீத மனதில் எழுந்த ஆசையை என்ன செய்ய? இவனின் மாய வசீகரங்கள் மீள்வதை செய்ய ஆரம்பித்துவிட்டன. இனி இவனின் அழைப்பின் குரலுக்கு கட்டுப்படாமல் இருக்க ஏலாது. இரு கைகளை விரித்த வாவென்று அழைத்தால் அக்கணத்தை எப்படி எதிர்கொள்வது? மறுக்கவே முடியாமல் அவன் மார்பில் புதைந்துவிடுவேன். சாகசக்காரி இல்லைதான் எனினும் அந்த சாட்டையை எடுக்கப் பிரயத்தனப் படுவேனோ? உன்னைவிட்டு வெகுதூரத்தில் இருந்தப்போது இவ்வளவு பிரச்சனைகள் இல்லை, அருகில் நிற்கும்போதெல்லாம் உயிர் கரைந்துபோகிறேன். வாழ்வின் பாதங்கள் என் மீதேறி நடந்தது நம் பிரிவைச் சொன்ன சொல்லை வெறுக்கிறேன். இதுவரை இவ்வாழ்வில் பெரியதாய் நான் நேசித்தவை எல்லாவற்றையும் உன் காலடியில் கொட்டிவிட ஆசைப்படுகிறேன். நீயில்லாமல் எனக்கு வேறு நேசங்கள் வேண்டியிருக்கவில்லை. என் மனதின் நிரந்தரக் காதல் நீயென்று தெரிந்தும் பேச இயலாமல் மெளனமாய் இருந்து என்ன பயன். என்னை மனதிற்குள் தத்தெடுத்துக் கொள். நான் உனக்கானவள். ஒரு முறை வாழ்விலே ஒரு முறை முறை தப்பலாம் நீ எனக்கானவன் வாழ்வின் கொடுங்கரங்கள் உன்னை என்னிடமிருந்து பிரித்திருக்கலாம். அடைய முடியா பொருளின் மீது ஆசை போகாது – அடைந்துவிடலாம். அப்போதுதான் அடங்குவோம். நீ என் வெளியிலும் நான் உன் மடியிலும் புதைந்து கிடக்கலாம். கூடலின் எல்லா சாத்தியங்களையும் நிகழ்த்துவிட்டு மனதாலும் உடலாலும் பிரிந்துவிடலாம். அப்போதுதான் நம் நேசம் முழுமையடையும் நம்மைப் போலவே, அதன் பின் அது வெறிபிடித்து ஆடாது. கூக்குரல் போடாது. முடிவு செய்துவிட்டேன். உன்னுடன் இவ்வகையாய் இவ்வகையில் மட்டுமே நேசம் முறிப்பதென்று. நாளை உன்னிடம் சொல்லும் வரை என்னுள்ளே பெருகி பெருகி அலையலாய் நிகழ்த்தும் கற்பனைகளை அணைத்தபடி தூங்கிப் போகிறேன். வா கனவில் வந்து கட்டி அணைத்துக் கொள்....

இறுதிச் சுற்று

அவள் வீட்டிற்கு சென்றேன். புன்னகையுடன் வரவேற்றாள். சப்பாத்தி சப்ஜி செய்திருந்தாள். அதிகம் பேசாமல் சாப்பிட்டேன். குழந்தைகள் தூங்கியிருந்தார்கள். அவள் மீதான பார்வையை அகற்ற முடியாமல் தவித்துக் கிடந்தேன். ஈரக்கூந்தலை டவலால் சுற்றியிருந்தாள். டீவியை ஆப் செய்துவிட்டு என்னருகில் வந்தாள். என்னுடைய ரூம் சாவியை கையில் சுழற்றிபடி என்ன கிளம்பறியா இல்ல இருக்கப் போறியா பிரின்ஸ் ஜெபராஜ் முழுப்பெயரிட்டு என்னை அழைத்தாள்.

ஸ்பீக்கரில் சன்னமாக கஸல் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘உயிர் எழுத்து’ ஜூலை மாதம் (current issue) வெளிவந்துள்ளது

14 கருத்துரைகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

‘உயிர் எழுத்து’ ஜூலை மாதம் (current issue) வெளிவந்துள்ளது\\

இதற்கு முதற்கண் வாழ்த்துகள்

படித்துவிட்டு மீண்டும் வருகிறேன் ...

ஜானி வாக்கர் சொன்னது…

நல்ல இருந்துசுங்க.

ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டியது.

ச.முத்துவேல் சொன்னது…

எனக்குப் பிடித்திருந்தது. இதழிலேயே படித்திருந்தென். முடித்தவிதம் சிறப்பு.சில சுற்றுக்களாய் எழுதுவது, புதிய, படைப்பூக்கமான சிந்தனை.

ஜோதி கார்த்திக் சொன்னது…

மிகவும் அருமை , தொலைந்து போன காதலையும் & காதலியையும் நினைத்துகொண்டெ ஒரு அருமையான இரானிய திரைபடம் பார்த்த உனர்வு


படம் முடிந்தும் எழுந்து பொக மனமில்லமல் அமரும் ரசிகனை போல் உனர்கிரேன்

நிலாரசிகன் சொன்னது…

வாழ்த்துகள் உமா.

இராயர் அமிர்தலிங்கம் சொன்னது…

உங்கள் பதிவுக்கு தான் காத்திருந்தேன்

படிக்க கொஞ்சம் நேரம் வேண்டும்

அதுவும் காதல் பற்றி!!!!

ரொம்ப நன்றி

நட்புடன் ஜமால் சொன்னது…

[[ஏன் இப்படி சித்ரவதை செய்கிறாள்’? என் மனதின் துடிப்புகள் அவளுக்குத் தெரியுமா? தெரிந்தே கொல்கிறாளா?\\

சத்தம் ஏதுமில்லாத தனிமை இந்த நொடி எனக்குக் கிடைத்தால் போதுமென்றிருந்தது. ஓடி ஒளிய இடமேதுமில்லாமல் வழக்கம் போல வேலைக்குச் சென்றேன்.]]

சாதாரணமானவனின் நிலை.


[[நீ எனை அணைத்தது முத்தமிட்டது எல்லாம் உணர்வுகளற்ற இந்த உடலைத்தான். மரத்துப் போன என் மனத்தின் துயரின் ஆழங்களை நீயறிந்திருக்க நியாமில்லை.

என் மகன் வயிற்றுக்குள் அடித்த அடிகளைவிட வெளியில் இவன் அடித்தது அதிகம் தெரியுமா. ]]

கஷ்ட்ட நிலை

[[நீ போலீஸ்காரன் மட்டுமல்ல, என் மனதிற்கு உகந்தவன்]] காதலான நம்பிக்கை

[[வாழ்வின் பாதைகள் நெடியவை. நிறைய மனிதர்களை நாள்தோறும் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். சில பேர் சிரித்துவிட்டு நம்மைத் தாண்டிப் போய் விடுவார்கள். சிலர் நின்று பேசிவிட்டுச் செல்வார்கள். சில பேர் சற்று தூரம் வரை வழித்துணையாக வருவார்கள். சில பேர் நாம் நடப்பதைக் கேலி செய்வார்கள். தப்பான பாதையைக் காட்டி குழப்பிவிடுவார்கள். தங்களுக்குப் பிடித்த பாதையில் நம்மை இழுத்துச் செல்ல முனைவார்கள்.]]

தடுமாறும் தடம் மாறும் நிலை

\\என் குளத்தின் தாமரையாகிவிடு ராஜு, உடனடியாக வந்துவிடு, வந்தென் உயிரைத் தின்றுவிடு தழலென எரியும் என் மோகத்தைக் தீர்த்துவிடு, முடியாதெனில் என் மூச்சையாவது நிறுத்திவிடு.
\\

பாரதியின் பாடல் நினைவுக்கு வருகின்றது

[[நான்காம் சுற்று - சுற்ற வைத்து விட்டது]]

[[இந்த முறை எங்கள் நேசிப்பில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான் அது தூய்மையான காதல்.]] நேர்மை ...


[[ன் வாசனை அவள் உடலின் மீதிருந்து என் உடைவழியாக கசிந்தது.]] சுகந்தம் ...

[[என்ன கிளம்பறியா இல்ல இருக்கப் போறியா]] கிளாஸிக்

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

இந்தக் கதை படித்து முடித்தவுடன் எனக்கு என்னன்னவோ உணர்வுகள் தோன்றியது.

பிரின்ஸ் ஜெபராஜ் என்று ரஞ்சி கூறிய தொனியை வைத்து அவள் மேற்கொண்டு உறவை நீட்டிக்கமாட்டாள் என்ற முடிவை எடுத்துக்கொண்டேன்.
முடிவைக்கூட தடம் மாறாமல் வைக்க மிகவும் மெனக்கெடுகிறது பாருங்களேன் இந்த பாழும் மனது!

சைதை முரளி சொன்னது…

‘‘ஆசை முகம் மறந்துபோச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
எனில் நினைவுமுகம் மறக்கலாமோ’’

என்ற பாரதியின் பாடல் வரிகளை நினைவில் கொண்டுவந்து ‘பசக்’என்று ஒட்டவைக்கிறது கதை. ஒன்றும் சொல்லமுடியாமல் தவிக்கும் உணர்வின் ஓட்டங்களை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

இன்று அன்புடன்,
சைதை முரளி.

soorya சொன்னது…

தோழிக்கு,
தொலைந்த காதல்...
நன்றாகவே வந்திருக்கிறது.
மனசு தொடும்,,நெருடும்,,விரகத்தில் விரக்தியுறும்..
வாக்கியங்கள் மிக அழகாக கதை முழுவதும் பரவலாக வந்து விழுந்திருக்கின்றன.
மோகமும் மெளனமும் அருகருகே நிற்கின்றன.
சில போதுகளில் நிறுத்திவிட்டு..மூச்செறிந்துவிட்டு மீண்டும் வாசித்த கதைகளில் இதுவுமொன்று.
வாழ்த்துகள்.
தொடர்க.

sakthi சொன்னது…

அருமையான கதை

பிரபல எழுத்தர்கள் போல் உங்கள் நடை உமா சக்தி மா.....

சாணக்கியன் சொன்னது…

உணச்சிக்குவியல்...

படிப்பவர்களாலேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத போது பாவம் அந்தக் காதலர்களால் எப்படி முடியும்?

சாணக்கியன் சொன்னது…

/* பிரின்ஸ் ஜெபராஜ் என்று ரஞ்சி கூறிய தொனியை வைத்து அவள் மேற்கொண்டு உறவை நீட்டிக்கமாட்டாள் என்ற முடிவை எடுத்துக்கொண்டேன்.
முடிவைக்கூட தடம் மாறாமல் வைக்க மிகவும் மெனக்கெடுகிறது பாருங்களேன் இந்த பாழும் மனது!
*/

அமித்து அம்மா, அவள் மேற்கொண்டு உறவை நீட்டிக்கமாட்டாள் என்பதுதான் அவளது தீர்மானம். ஆனால் அவள் நினைத்த விதத்தில்தான் உறவை முறித்துக் கொண்டாள் என்பதை சரியாகப் புரிந்துகொண்டீர்களா என சந்தேகிக்கிறேன். இரவில் குளித்துவிட்டிருக்கிறாள், ராஜின் வீட்டுச் சாவியை தன் கையில் வைத்திருக்கிறாள்...

கிருத்திகா சொன்னது…

உயிரெழுத்தில் பார்த்தவுடன் வாழ்த்து கூற வேண்டும் என நினைத்தேன்... இங்கு இட்டு அந்த வாய்ப்பை தந்துவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்.