சனி, 3 அக்டோபர், 2009

அவனுக்கு ப்ரியம் என்று பெயர்



வெகு நாள் கழித்து மனம் லேசாகி சந்தோஷத்தில் மிதந்தது. குழந்தைகளைத் தூக்கி தட்டாமாலை சுத்தி அவர்களுக்குப் பிடித்தவற்றை வாங்கித் தந்தேன். என்னம்மா ஆச்சு என்றார்கள். என்னுடைய லேப்டாப்பில் ’ஓ பட்டர்ஃப்ளை பாடலை’ ஒலிக்கச் செய்து ஹெட் போனில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்றின் கொதிநிலைகள் இன்று காணாமல் கரைந்து போகும் போது எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது. என் மகிழ்ச்சிக்குக் காரணம் இரண்டு விதயங்கள். ஒன்று என் நாத்தனாரின் கணவர் உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதம் ஹாஸ்பிடலில் இருந்தார். வீட்டில் எல்லாருக்கும் மனக் கஷ்டம். ஹாஸ்பிட்டல் வீடு என்று ஒரே வீட்டின் சாதாரண நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருந்துக்குக் கூட கெட்டப் பழக்கங்களோ, அதிர்ந்து கூட பேசாத அன்பான அவருக்குப் போய் நோய்மை ஏற்பட்டாதே என வருந்தியிருந்தோம். நல்லபடியாக அவர் சரியாகி வீட்டிற்கு வந்துவிட்டார்.

மகிழ்ச்சியின் மற்றொரு காரணம் வெகு நாள் கழித்து சந்தித்த என் நண்பன். அவன் பெயர் – ஹா...பெயரில் என்ன இருக்கிறது. ப்ரியத்தில் அல்லவா...நான் கல்லூரி படிக்கும் போது என் நண்பனின் நண்பனாய் அறிமுகம் ஆகியவன். ஹாஸ்டலில் தங்கியிருந்த என் நண்பனுக்கு தொலைபேசும் போதெல்லாம் அவனுக்கும் ஹாய் சொல்வேன். இவனுக்கு லெட்டர்,க்ரீடிங் அனுப்பும் போதெல்லாம் அவனுக்கும் ஒரு வரி சேர்த்து எழுதுவேன். பய புள்ளைக்கு ஒரே வியப்பு. எப்படி STD செய்து பேசுகிறாள். அவளுடைய நண்பனுக்கென்றால் சரி நான் கூட தங்கியிருப்பவன் தானே, எதற்கு இந்த அன்பு என என் நண்பனிடம் கேட்கையில் என் நண்பன் சொல்லியிருக்கிறான், அந்த பிள்ளை அப்படித்தான், நீயின்னு இல்லை, என்னோட ஒரு பூனைக்குட்டி இருந்தாக் கூட அப்படித்தான் ப்ரியமா இருப்பா...அதற்கு அவன் அவங்களை லவ் பண்றியா என்று கேட்டிருக்கிறான். இவன் ச்சே சே நாங்கள் ஆறாவது படிக்கும் போதிலிருந்து ப்ரண்ட்ஸ் அதோட லவ் எல்லாம் அவளுக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல, நல்ல படிப்பா, என்று கொஞ்சம் கூடக் குறைய என்னைப் பற்றி பில்டப்புக்களை போட்டுத் தள்ள அவனுக்கு என்னைப் பார்க்க ஒரே ஆவல். அவனும் க்ரீடிங் கார்டுகள் அனுப்ப ஆரம்பித்தான். போனிலும் லெட்டரிலும் ப்ரியங்கள் தொடர்ந்தது. நட்பின் விலாசங்கள் விரிவாகிக் கொண்டே சென்றது.


அரையாண்டுத் தேர்வு லீவில் என் நண்பனுடன் வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு அவனைப் பிடித்துவிட்டது. கொஞ்சம் பீட்டர் அதிகமானாலும் பையன் செம மண்டை. ப்ரில்லியண்ட். என் நண்பனும் அவன் மெரிட் ஸ்காலர்ஷிப் கதைகளைச் சொல்லவே ஒரு அடி தள்ளியே நின்று பேசினேன். ஆனால் literature, life, spirituality என வயதிற்கு மீறிய அவனின் பேச்சும் அறிவாற்றலும் என்னைக் கட்டிப்போட்டது. அவனுடைய அத்தனை தோழமைகளும் அதன்பின் அவன் வாழ்க்கையில் புள்ளியாகி மறைந்தனர். அவனின் ஒரே தோழி நான் தான் என தன் நட்புலகின் தேவதையாய் என்னை உயர்த்தி வைத்தான். என்னிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டான். என் குரலைக் கேட்காமல் அவனின் பொழுதுகள் விடியாது. எங்கள் வீட்டிலும் எங்கள் நட்பின் ஆழம் தெரிந்து ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பேங்க் எக்ஸாம் எழுதி முதல் தடவையிலேயே க்ளியர் செய்து வேலையில் சேர்ந்துவிட்டான். என்னையும் BSRB, TNPSC இதெல்லாம் எழுது என்று அன்புக் கட்டளையிடுவான். நான் அதையெல்லாம் மதித்தால்தானே.

என் பிறந்த நாளன்று எங்கு இருந்தாலும் நேரில் வந்து வாழ்த்துவான். நானும் அப்படித்தான். அப்போதெல்லாம் ஏப்ரலிற்கும் ஆகஸ்டிற்கும் இடைவெளி இல்லை எனத் தோன்றும். க்ரீட்டிங் காலரி எனும் ஒரு கடை பவுண்டன் ப்ளாசா அருகே இருக்கும். அதுதான் என் நட்பு தேசத்தின் கோட்டை. அங்கு அவனுக்காய் வாங்கிய பரிசுப் பொருள்களும், க்ரீட்டிங் கார்டுகளும் என் அன்பை அவனுக்கு முடிந்த வரை மொழிபெயர்த்தன. அவன் அனுப்பிய கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும், gift article ன் wrapper கூட பொக்கிஷமாய் என் அம்மா வீட்டில் பத்திரமாய் இருக்கிறது.

என் வாழ்வும் சூழலும் மாறி மாறி இருந்த போதும் எல்லா தட்ப வெப்பத்திற்கும் மாறி எனக்காய் எப்போதும் நின்றிருக்கிறான். கன்னிமரா லைப்ரரியில் உள்ளே இருக்கும் டீக்கடையில் நாங்கள் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அவனிடம் சொன்னேன் ‘ஷ்யாம் ஐம் இன் லவ்’ அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அவனைத்தான் ப்ரொபோஸ் பண்ணுகிறேனோ என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டான். அதன் பின் என் காதலைப் பற்றி சொன்னேன். கேட்டுக்கொண்டான். ஆனால் அவன் கொஞ்சம் பொஸஸிவ். அவனுக்கு என்னைத் தவிர யாரும் நண்பர்கள் கிடையாது. எனக்கோ அன்றிலிருந்து இன்றுவரை ஊர்ப்பட்ட நண்பர்கள். முதலில் என் காதல் அவனுக்கு உறுத்தலாக இருந்தாலும் இவனுடனான நட்பைப் பற்றி அவரிடம் விரிவாக பேசிவிட்டேன். அவருக்கு காதல் போதையில் இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. கல்யாணத்திற்கு வந்திருந்த அவன் நிறைய உதவிகளை என் வீட்டினருக்குச் செய்தான். அதன் பின் கணவர் குடும்பம் என நானும் அவனைச் சற்று மறந்திருந்தேன். ஆனால் அவன் அப்படியில்லை. என் ஆபிஸுக்கு போன் செய்து எப்படி இருக்கே, ஒழுங்கா சாப்பிடறியா, நேரத்துக்கு தூங்கறியா, இனிமே ஊர் சுத்தறதைக் குறைச்சுக்கோ, பொறுப்பா இருக்கணும், சரியா? அவன் எப்படி இருக்கான்? நல்லா பாத்துக்கறனா...ஒரு தந்தையின் அக்கறையோடு நிறைய கேள்வி கேட்பான். அவனைப் பற்றி ஏதும் கேட்கும் முன் தொலைபேசியை வைத்துவிடுவான். அவனின் நேசமும் மெய் அன்பும் என்னைப் பலமுறை நெகிழ்த்தும். மனம் சரியில்லாத சமயம் அவன் நம்பருக்கு அடித்து சும்மா பேசலாம்னு போன் பண்ணேன் என்றால் கேடி கண்டுபிடித்துவிடுவான். என்னடா ஆச்சு, உன் குரல் சரியில்லையே சண்டை போட்டியா, நீ தான் தங்கமாச்சே சமத்தா இருப்பியே என்ன பண்னான் திட்டினானா...அவன் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு செய்ய மாட்டான்னு சொல்லி லவ் பண்ணே...டாம் இட்...சரி என்ன செய்யறது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, வேற வழியே இல்லை. நீ பேசற feminism எல்லாம் பேச்சோடு வைச்சுக்கோ புரியுதா.. என ஆரம்பித்து குறைந்தது அரை மணி நேரம் அட்வைஸ் மழை. நானே வெறுத்துப் போய் ‘போடா’ என்று அவனையும் திட்டு வைத்துவிட்டு யோசித்துப் பார்க்கையில் என் மீதான அக்கறையில் அவன் எனக்கெதிராய் பேசுவது புரியும்.

அவனுடைய கல்யாணத்திற்கு என் அப்பாவுடன் போனேன். அவன் திருமாங்கல்யம் கட்டும் போது மனதார வாழ்த்தினேன். அவன் மனைவி லெக்சரர். அதிலிருந்து அவனிடம் போன் பேசும் போது டீச்சர் மேடம் என்ன சொல்றாங்க என்பேன். உன்னை விட அராஜகக்காரி, பிடிவாதக்காரி அதனால் நான் டோட்டல் சரண்டர் என்பான். பெண்ணை மதிக்கும் அவன் போன்ற ஆண்கள் என் நட்பு வட்டாரத்தில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். காலையில் அவன்தான் தளிகை. டிபன் செய்து மனைவிக்கும் தனக்கும் பேக் செய்து டைனிங் டேபிளில் வைத்துவிடுவான். இரவில் அவள் சமைப்பாள். இருவரும் அழகான கவிதை போன்றதொரு வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள். அவ்வப்போது சண்டை வந்தாலும் நம்மாள் தான் முதல் சரண்டர். தன்னுடையவளிடம் ஒரு நாளும் என்னை விட்டுக் கொடுத்து பேசமாட்டான். நான் தான் பலமுறை அவனை விட்டுக் கொடுத்தும், சூழல் காரணமாய் பிரிந்தும் செல்வேன். காரணங்கள் பலப்பல ஆனால் ஈகோவே இல்லாமல் அல்லது என்னிடம் காட்டாமல் அன்று பூத்த மலர் போல கள்ளமில்லாச் சிரிப்புடன் என்னை எதிர்நோக்கி வருவான். அவனுக்கு நான் இந்தப் பிறவியில் என்ன கைமாறு செய்துவிட முடியும் பேரன்பினளாய் இருப்பதை விட. இன்றளவும் அவனின் அன்பை நினைத்தாலே உருகிக் கரைந்துவிடுவேன். பதினைந்து வருடங்களாக தொடரும் இந்தப் ப்ரியம் எல்லாப் புயலையும் சந்தித்து இன்று அழகான ரோஜாச் செடியைப் பொலிருக்கிறது. சந்திப்பதும் பேசுவதும் குறைவாக இருப்பினும் மெசேஜிலும் சேட்டிலுமாய் அவன் ப்ரியம் நிரம்பி வழியும். உடம்பைப் பாத்துக்கோ, கேரியர் ரொம்ப முக்கியம். டேக் கேர். நான் அவனை டா என்று சொல்லிப் பழகிவிட்டேன். இன்றளவும் அவனுக்கு நான் மா தான். ஏம்மா...என்னம்மா.அல்லது டா ஏண்டா இப்படி இருக்கே...நீயேன்டா இதுக்கு அழணும். என் தங்கமில்ல....என்று தான் விளிப்பான்.

வேலை சூழல் காரணமாய் கிட்டத்தட்ட இரண்டு வருடம் அவனை சந்திக்காமல் இருந்துவிட்டேன். அதற்குக் காரணம் சிறிய ஊடல். அலுவலகத்தில் வேலை அதிகம் அம்பத்தூரிலிருந்து ஆபிஸ் ட்ராவல் நேரம் கிட்டத்தட்ட 1 ½ மணி நேரம் என வாழ்க்கை வேகமாக சுழன்று கொண்டிருந்தது. வழமை போலவே என்னுடைய போன் எப்போதும் நண்பர்களின் குரலால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. ஷ்யாம் போனில் அழைக்கும் நேரத்தில் ஒன்று வேலை இருக்கும், அல்லது ட்ரெயினில் இருப்பேன், இரைச்சலில் சத்தம் கேட்காது, அல்லது வேறு யாருடனோ பேசிக் கொண்டிருப்பேன். இவன் தானே அப்பறம் பேசறேன் என நினைத்து கட் செய்து, அப்பறம் பேச ஏலாமல் போய்விடும். பொறுத்து பொறுத்து அவன் ஒரு நாள் பொங்கி எழுந்து ஏன் இப்படி செய்யறே, நான் என்ன தப்பு செஞ்சேன் ஏன் அவாய்ட் பண்றே அப்படி இப்படியென்று பீலிங்ஸை போட்டான், எனக்கு வேறு ஏதோ டென்ஷன், எல்லார்கிட்டயும் பேசணும் சிரிக்கணும் நான் என்ன மிஷினா...என்று ரீதியில் ஏதோ திட்டிவிட்டேன். பாவம் அவன் என்னைவிட சென்சிட்டிவ். அன்று அவன் மொபைல் நம்பரை கட் செய்து தூக்கி எறிந்துவிட்டான். நான் அதன் பின் என் வேலையில் ஆழ்ந்துவிட்டேன். ஒரு மாதம் கழித்து தான் இவனின் ஞாபகம் வந்தது, அழைத்துப் பார்த்தபோது அலைபேசி எண்ணிற்கு உயிர் இல்லை. பதறி அவன் அலுவலக லேண்ட் லைனில் பிடித்துவிட்டேன். மிகவும் விட்டேத்தியாக பேசினான். என் மீது கோபம் ஏதுமில்லை, என் வேலைகளுக்கு அவன் இடைஞ்சல் செய்யவில்லை என்று ஏதேதோ சொன்னான். எனக்கு சங்கடமாகிவிட்டது. அப்படி இல்லைடா என்று எவ்வளவோ சமாதானம் செய்துவிட்டேன். ஆனால் அந்த அன்பாலானவனின் புண்பட்ட மனதிற்கு மருந்தாக என்னிடம் வார்த்தைகள் இல்லாமல் போய்விட்டது.

மன்னிப்புக் கேட்டும் அவன் விடுவதாயிலலை. என் ஆபிஸ் நம்பருக்கு கூப்பிடாதே என்று சொல்லிவிட்டான். அவனுடன் பேசாவிட்டாலும் அவனைப் பற்றி நினைக்காமல் இருக்க மாட்டேன். எங்கு போகப் போகிறான் நேரில் சென்று பேசினால் சரியாகிவிடுவான் என்று அப்படியே ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது. இடையில் இரண்டு முறை தொலைபேசியில் பேசினேன். சரியாகப் பேசவில்லை. இதுவரையில் என்னிடம் இவன் கோபத்தைக் காட்டியதே இல்லையே என மிகவும் வருத்தப்பட்டேன். சராவிடம் கூட சொல்லிப் புலம்பினேன். அவர் நீ என்னை டார்ச்சர் பண்ற மாதிரி அவனைப் பண்ணினா, அதான் தாங்க முடியாம ஓடிட்டான் என்று கிண்டலடித்தார். மெக்கானிக்கலாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க நேற்று என் செல்போனிற்கு பரிச்சயமில்லாத நம்பரிலிருந்து மெசேஜ் ‘உன் ஒவ்வொரு வெற்றியிலும் நான் சந்தோஷம் படுவேன். உன்னுடைய நண்பனாய் மட்டுமில்லை ரசிகனாய் கூட...என்று வந்திருந்தது. பெயர் இல்லாமல் வந்த மெசேஜைப் பார்த்ததும் அது யார் அனுப்பியது என்று ஒரு நொடியில் கண்டுபிடித்துவிட்டேன். அவனுடைய style of writing ஐ வைத்து ஷ்யாம் என அறிந்தேன். (அவன் தாய் மொழி தெலுங்கு, ஹிந்தி செகண்ட் லேங்வேஜ், பேசுவது எழுதுவது என எல்லாமே ஆங்கிலம் தான். அதுவும் அவனுடைய வார்த்தைகள் straight down from the heart always….எனக்காக என் கவிதைகளை வாசிப்பதற்க்காக தமிழை தட்டுத் தடுமாறி படித்திருக்கிறான்)

Is that you my friend, how are you, happy to receive such a wonderful mail from my beloved friend after a very very long gap….call me right away or else you will be killed…என பதில் அனுப்பினேன். உடன் அழைத்தான். ஏன்மா இன்னும் உன் மிரட்டலை விட மாட்டியா...என ஆரம்பித்து இன்று என்னைப் பார்த்தே தீர வேண்டும் என போனில் சொன்னதும் மகிழ்ச்சியுடன் சரியென்றேன். எனக்கே கொஞ்சம் படபடப்பாக இருந்தது. எப்படி இவனிடம் பேசாமல் இருந்துவிட்டேன் என குற்றவுணர்வும் மேலெழுந்தது. ஜூஸ் கடையில் நான் ஆர்டர் செய்யாமலேயே ’ஆப்பிள் ஜூஸ் வித் அவுட் ஐஸ்’ கரெக்ட் தானே, எதாவது மாற்றம் இருக்கா...என்றான். இல்ல ஷயாம். நீ அப்படியே தான் இருக்கே என்றேன் அவனின் ப்ரியத்தில் நனைந்தபடி.

இத்தனை நாள் எங்கே இருந்தே, எப்படி உன்னால எங்கிட்ட பேச முடியாம இருக்க முடிஞ்சுது...அவ்வளவு வேலை, அவ்வளவு ப்ரெண்ட்ஸ் என்று கேட்க ஆரம்பித்து அவசர அவசரமாய் நலங்கள் விசாரித்து பேசிப் பிரியும் வேளையின் பாத்துப் போடா என்பதிலிருந்து வீட்டுக்கு வரும் வரையிலும் அவன் ப்ரியம் மீண்டும் பெரும் நிழல் போலத் தொடர்ந்து வந்தது. இனி என்னிடம் கோவித்துக் கொள்ளவே மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்துச் சென்றான். நானும் அவனை அலட்சியப்படுத்த அப்படிச் செய்யவில்லை, நிஜமாவே ஒரு take it for granted tone தான் வேறு எதுவும் இல்லை. ஆனா உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் என்றேன். ஒரு புன்னகையில் எல்லாவற்றையும் சமன் செய்தான்.

அன்பின் நனைவதும் நனைப்பதும் தானே வாழ்க்கை? இதில் ஆண் என்ற உருவத்தில் இருப்பதால் அதை இழக்க வேண்டுமா என்ன? இன்று வரையிலும் அவனுடைய genuineness ல் எவ்வித மாற்றமும் இலலை. என் கணவருக்கும், பிள்ளைகளுக்கும் அவன் நல்ல தோழனாய் இருக்கிறான். என்றும் இருப்பான். ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே எனக்கு ஷ்யாமை அறிமுகப்படுத்திய நண்பன் ரவி இப்போது எங்கு இருக்கிறான் என்று தெரியாது. அளவில்லா ப்ரியத்தை கைக்காட்டி விட்ட அவனின் ப்ரியங்களையும் சேர்த்தே நினைத்துப் பார்க்கிறேன். நினைவுகள் சுகமானது...இந்த இரவின் இதத்தைப் போல....

21 கருத்துரைகள்:

பெயரில்லா சொன்னது…

Great........Like Shyam I had lost a brother (not own brother once office colleague) because of his wife's character. You should also thank your husband and Shyam's wife too for allowing you people to grow your wonderful friendship. Do not loss this friendship for anyone's sake.....Wish you many more years filled with friendship. Truly tears rolled out of my tears thinking of my past days with brother as your story and my story were mostly same....

உமாஷக்தி சொன்னது…

Thank you. Shyam's wife and my husband should be thanked for their attitude. my hubby knows about me, he is a gem of a person. he was also once my friend, then lover and finally into wed lock. there were so much of compromises in the last relationship, but life is like that.

Losing a relationship is painful. and the more intense the closeness is the more painful it would be. I share your pain but dont think that u lost your brother,search him he will come back to you.

Thanks for sharing your thought. BTW whats your name?

யாத்ரா சொன்னது…

அன்பை பரிசுத்தமான நேசத்தை யார் எங்கு சொல்லக் கேட்டாலும் மனம் கரைந்து போகிறது. ரொம்ப நெகிழ்வான பதிவு.

நிலாரசிகன் சொன்னது…

தலைப்புக்காகவே இருமுறை வாசிக்கலாம். நல்ல பகிர்வு.நல்ல நண்பன் உமா :)

Krishna Prabhu சொன்னது…

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க... இந்த மாதிரி அன்புதான் வாழ்கைக்கு சுவை கூட்டுகிறது.

SS JAYAMOHAN சொன்னது…

வணக்கம் உமா ஷக்தி,

உங்களின் பசுமையான நினைவுகளை
அழகாகப் பதிவு செய்து உள்ளீர்கள்.

இம் மாதிரியான பதிவுகளை பதிவு
செய்வதற்கும் கொஞ்சம் துணிவு
வேண்டும்.

எல்லோருக்கும்
காதல் அனுபவம் ஏற்பட்டிருக்காது.
அதனால் காதலன்/காதலி இருப்பார்கள்
என்று சொல்ல முடியாது.

ஆனால், எல்லோருக்கும் மனதிற்கு இனிய நண்பர்கள் நிச்சியமாக இருப்பார்கள்.

நட்பு மனதிற்குள் என்றும்
வீசும் வாசனைப் பூ.

எஸ். எஸ். ஜெயமோகன்

உமாஷக்தி சொன்னது…

நன்றி ஜெயமோகன். நெஞ்சில் உரமும் நேர்மையும் சேர்ந்திருந்தால் நட்பின் உள்ளங்களை மட்டும் என்ன, உலகையே வெல்லலாம் தானே தோழர்?

நிபந்தனைகளற்ற அன்பு சில சமயம் சாத்தியப்பட்டு போகின்ற போது அவ்வன்பை வைத்து என்ன செய்வது என நாமே திகைத்துப் போவதுண்டு. என் வாழ்வில் நான் கண்டுணர்ந்த உண்மை மெய்யன்பு பொய்க்காது...
பகிர்விற்கு நன்றி ;)))

உமாஷக்தி சொன்னது…

நிஜம் தான் யாத்ரா....சொல்ல நினைத்தது கடல் அளவு, ஆனால் வார்தைகளில் சிக்கியது கையளவே...எழுதிவிட்டு மீள்வாசிப்பு செய்தபோது நானே கொஞ்சம் நெகிழ்ந்துவிட்டேன்...உன்னைப் பற்றி எழுதிருக்கேன்...படி என்று அவனிடம் சொன்னபோது கூச்சத்தோடு எதுக்கு அதெல்லாம் என்றான்...அப்பறம் சரியென்றான்...வாசித்ததும் அவன் முகத்தில் தோன்றும் புன்னகையை கற்பனையில் காண முடிகிறது ;))))

யாத்ரா உங்களைப் போல் ஈர மனம் படைத்த இனிய நண்பர்கள்தான் என் வாழ்வின் மற்றும் எழுத்தின் ஆதாரம். பகிர்விற்கு நன்றி தோழர் ;))

உமாஷக்தி சொன்னது…

நன்றி நிலா. தலைப்பு முழுக்க முழுக்க எனக்குச் சொந்தமானது அல்ல. எனக்கு மிகவும் பிடித்த கவிஞரான அப்துல் ரகுமானின் ‘அவளுக்கு நிலவென்று பெயர்’ என்பதிலிருந்து எடுத்தது தான். இத்தலைப்பை நான் மிகவும் ரசிப்பேன். உங்களுடைய பெயரும் அதில் இருக்கிறது தானே?

பகிர்விற்கு நன்றி நிலா ;))))

உமாஷக்தி சொன்னது…

ஆமாம் க்ருஷ்ணா...அன்புடன் ஒருவரைப் பார்த்தாலும், புன்னகை செய்தாலும் even that counts. We should make this world a better place to live by spreading love...

பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா ;))

விக்னேஷ்வரி சொன்னது…

அழகான கவிதை.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

உங்களுக்கு ஷ்யாம்
எனக்கு செல்வி :)

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

உற்சாகம், நெகிழ்ச்சி என ஒரு கலவையான உணர்வு இந்தப் பதிவின் நெடுகிலும்.

நீங்கள் கொடுத்துவைத்திருக்கிறீர்கள் உமா, உங்கள் நட்பு நீங்கா நிலைபெற எனது வாழ்த்துக்கள்.

உமாஷக்தி சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி அமித்தும்மா!

உமாஷக்தி சொன்னது…

நன்றி விக்னேஷ்வரி ;)))

உமாஷக்தி சொன்னது…

உங்களுக்கு ஷ்யாம்
எனக்கு செல்வி :) ;))))) பகிர்விற்கு நன்றி அப்துல்லா

பெயரில்லா சொன்னது…

அது எப்படிங்க . ..வாசிக்கிற எல்லாரையும் feel பண்ண வச்சுடுறீங்க!
நட்பை கொண்டாடி , வாசிக்கிற எங்களையும் நட்பு மழையில் நனைய வச்சிடீங்க.
ஏதோ ஏதோ எண்ணங்கள்.., ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வரு விதமான நட்புகளை தாண்டி வந்திருப்போம், அப்படி கடந்து மறந்து போன சிலரை தேடி போக வைத்து விடீர்கள். பள்ளி நண்பர்கள் , கல்லூரி நட்புகள் , டியுசன் நண்பர்கள், தெரு நண்பர்கள் , விடுமுறைகளில் சொந்தகாரர் வீடுகளுக்கு செல்லும் பொழுது உருவான திடீர் நண்பர்கள், மேன்சன் நண்பர்கள் , இப்படி பல தருணங்களில் நண்பர்களை பழகி பிரிந்தும் மறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த பதிவு மூலம் மீண்டும் எல்லாரையும் நினைத்து பார்க்க வைத்துவிட்டீர்கள். நெகிழவும் வைத்துவிட்டீர்கள்
முத்துவளவன்

பெயரில்லா சொன்னது…

you didn't go find him for for two years. if he has not smsed back you would have conveniently forgotten him with nice excuses.

and if there had been ever a situation where his wife / your husband strongly objected and if it became a case of spouse / friend you both will always choose spouse. i haven't heard a case where people left their spouses for friends.

so continuing friendship is a matter of luck and convenience. It is a choice not a necessity. so please stop glorifying in the name of friendship

உமாஷக்தி சொன்னது…

//you didn't go find him for for two years. if he has not smsed back you would have conveniently forgotten him with nice excuses.//

hello love and friendship is not looking at each other - even after six years or 15 years true love stands- my friend stopped using mobile and i was unable to sms. i know his work place and when i went he was on leave for sometime. i know he or me will get back when we need to meet desperately and that has happened.

I will certainly glorify friendship and its my right, and what else - you dont even reveal your name ???

கலை சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
Bee'morgan சொன்னது…

காலையில் வந்ததும் எதேச்சையாக இப்பதிவுக்கு வந்தேன்.. ம்ம்ம்..

இன்னும் கொஞ்ச நேரத்துக்கு என்னால எதுவுமே பண்ணமுடியாதுன்னு தோணுது. ஒரு கலைடாஸ்கோப் மாதிரி, படிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதிற்கினிய ஒரு நண்பனின் வண்ணமயமான நினைவுகளை கிளறிச்செல்லும் இப்பதிவு. :) நன்றி