நேற்று வீட்டுக்கு போனதும் என் பையன் ஓடி வந்து 'அம்மா குட்டி அணில், ரொம்ப குட்டிம்மா, அந்த அணில் மேலேர்ந்து தொம்முன்னு வுளுந்துடுச்சு...பாவம் அதோட அம்மா அளுது என்றான். எங்கடா அது, என்றேன், கிச்சன் பின் இருக்கும் சிட் அவுட்டில் ட்ரம் பின்னால் ஒளிந்திருக்கிறது என்றார்கள். என் அத்தை பால் கவர், வேண்டாத பொருள்களை எல்லாம் அங்கே வைத்திருந்தார்கள். ட்யூப் லைட் வெளிச்சத்தில் அணில் குட்டி இருக்கும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. க்ரீச் கிரீச் என்று பரணிலிருந்து அதன் அம்மா சத்தம் கொடுக்க இது சன்னமாக க்ரீச் என பதில் குரல் குடுத்துக் கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்னால் எங்கிருந்தோ வந்து எங்கள் கிச்சன் பரணில் தங்க ஆரம்பித்திருந்தது அம்மா அணில். கிச்சன் ஜன்னல் வழியே வரும், போகும். எங்கள் இருப்பை அவ்வளவாக கண்டு கொள்ளாது. விருட்டென்று ஒரு செகண்டில் ஓடிவிடும். எங்கே ஊர் சுற்றினாலும் இரவு வீட்டுக்கு வந்து சமத்தாக பரணில் செட்டில் ஆகிவிடும்.எங்கள் வீட்டில் ஒரு நபராகவே ஆகிவிட்டிருந்தது. அதன் சத்தமும் அவ்வப்போது வெளிநடப்பு செய்யும் காட்சியுமே அது இங்கேதான் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரிய வரும். அது எப்போ குட்டி போட்டது என்றே தெரியவில்லை. ஒன்று இரண்டானது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. குட்டி அணிலின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும், அவ்வப்போது அதற்கு ஸ்னாக்ஸ் அனுப்பிக் கொண்டிருப்பார்கள் அத்தையும் என் மகனும். இவ்வாறு இருக்கையில் எப்படியோ குட்டி தவறி கீழே விழுந்திருக்கிறது. என் மகனுக்கு ஒரு பக்கம் அதைப் பார்த்து மகிழ்ச்சி. ஏ,அணில், அளகா இருக்குல்ல...என்றிருக்கிறான். ஆனாலும் அவன் பிஞ்சு மனம் அதற்காக இரங்கியது. அம்மாகிட்டதான் குட்டி இருக்கணும் என்று யார் அவனுக்கு சொல்லித்தந்தது. தன்னைப் போல அணில் குட்டியை நினைத்திருக்கிறான்.'அம்மா பீச் (ப்ளீஸ்) அதை பிடிச்சு மேல விடுடா (சக்திவேல் எல்லாரையும் டா என்றுதான் சொல்லுவான், ஒருமுறை மிஸ்ஸிடம் எழுதமாத்தேன் டா என்று சொல்லியிருக்கிறான், மிஸ் டென்ஷனாகி என் கணவரிடம் please teach manners to this boy என்றிருக்கிறார், கணவர் என்னிடம் சோகமாக இதைச் சொன்னபோது, நான் சொன்னேன் please ask that teacher to first enjoy children's unadultered lovable words..மரியாதை பற்றி கட்டாயம் நாம் சொல்லிக் தரலாம், அவன் மழலையை முதலில் நீங்களும் ரசியுங்கள் என்றேன். பிள்ளைகளின் குழந்தைத்தனங்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுக்கும் வேலையை நம் பள்ளிகள் வெகு சிறப்பாக செய்கின்றன ). குட்டி அணில் சத்தம் போடுவதை நிறுத்தியிருந்தது. அது எங்கே பதுங்கியிருக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. 'தூங்குடா பாப்பா காலைல பாத்துக்கலாம் என்று மகனிடம் ச்மாதானம் சொல்லிவிட்டு சாப்பிட்டு படுத்துவிட்டோம். ஆனால் அந்த அணிலின் சத்தம் இரவு முழுவதும் கனவில் கேட்டுக்கொண்டேயிருந்தது.
விடிந்ததும் நேராக அணிலின் தற்காலிக பதுங்கு குழிக்குச் சென்றேன். அது பால்கவர்களின் அடியில் ஒளிந்திருந்தது. மெல்ல எல்லாவற்றையும் விலக்கி அதை பிடிக்க முனைகையில் அது தப்பி ஓடி கிச்சனில் சிலிண்டர் வைக்கும் இடத்திற்கு தாவிப் பெயர்ந்தது. நான் குனிந்து லாவகத்துடன் அதை மறுபடியும் பிடிக்க முயற்சிக்கையில் அரிசி மூட்டைக்கு பின்னால் ஒளிந்து என்னை பழிப்பு காட்டியது. பார்வையாளர்களான என் மாமியார், சக்திவேல் மற்றும் சரா (கணவர்) நான் ஏதோ வீர சாகசம் செய்யப் போவதைப் போல எட்டியே இருந்தனர். சரா என்னை பயமுறுத்துவிதமாக ஏய் கடிக்கபோகுது பாரு, அது அங்கேயே இருக்கட்டும் பாத்துக்கலாம் என்றார். ஆனால் எனக்கு அது சரியென்று தோணவில்லை. எப்படியோ டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டை அந்த அணிலுடன் விளையாடி அந்த சின்னஞ்சிறு அணிலை கையில் பிடித்துவிட்டேன். அது ரொம்ப குட்டியாக இருந்ததால் கையை விட்டு முதலில் நழுவி விட்டது. மறுபடியும் பிடித்தேன், நெளிந்தது கொண்டே என் உள்ளங்கையை பிராண்டி, கடித்து அட்டகாசம் செய்தது. அதன் பயம் அதற்கு, நான் அதைத் தாயிடம் சேர்க்க பாடுபடுகிறேன் என்று தெரியவா போகிறது. அதன் குட்டிப் பல்லின் கடியைத் தாங்கியபடி நான் 'ஸ்டூல் ஸ்டூல் என்று கத்த சரா ஸ்டூலை எடுத்துப் போட்டார். நான் அதிவேகமாக அதில் ஏறி பரணில் அதை விட்டேன். அப்பாடா அதன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. என் உடலும் நடுங்குவதை உணர்தேன். ஒரு நொடிதான் சிலிர்த்து எழுந்த அது, மாரத்தான் ஓட்டம் ஓடி, பரணில் இருந்த கோணியின் பின்னால் ஒளிந்து கொண்டது. கொடுமை என்னவென்றால் இதைத் தேடி அதன் அம்மா புறப்பட்டு போயிருக்கிறது. தேடிக் களைத்து அது எப்போது வருமோ தெரியாது. ஆனால் வந்தது அது சந்தோஷப்படும்.
சக்திவேலுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி, அணிலை பிடிச்சுட்டா உமா, என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்று ஸ்கூலில் அவன் நண்பர்களிடம் கூட அதைச் சொல்வான் என்று நினைக்கிறேன். கையை நல்லா டெட்டால் போட்டு கழுவு என்ற என் கணவரின் அறிவுரையை ஏற்காமல் சும்மா கையை கழுவிவிட்டு அந்த அணிலின் மென்மையான சிறிய உடலின் ஸ்பரிசத்தை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்னை ஓர் ஆலயத்தில் ரஜினி குட்டி யானையை தாயிடம் சேர்ப்பார். அந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் என் கண்கள் கலங்கும். இன்றும் ஏனோ கண்கள் லேசாக கலங்கியது, சிறிய ஆரஞ்சு சுளை ஒன்றை பரணில் வைத்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்துவிட்டேன். அம்மா அணில் வந்திருக்குமா, அந்தக் குட்டி இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் என்று நினைத்தவாறே இப்பதிவை எழுதி முடிக்கிறேன்.


