வியாழன், 30 ஏப்ரல், 2009

பூனைகள் இல்லாத வீடு – சந்திரா



சில கதைகளை வாசித்தவுடன் அதை மறந்துவிடுவேன். சில கதைகள் என்னுடன் உரையாடிவிட்டு விடைபெற்றுச் சென்றுவிடும். வெகு சில கதைகளே அபூர்வமாய் என்னுடன் தங்கிவிடும். அப்போதைக்கு நீங்கினாலும் சில நாள் கழித்து மீண்டெழுந்து நலம் விசாரிக்கும். மீள்வாசிப்பு செய்து மன அடுக்குகளில் பத்திரப்படுத்திக் கொள்வேன். செல்மா, செல்வி, குந்தவை, அருள்மொழிவர்மன், அரவிந்தன், என்று நிறைய பேர் மனதெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள். இப்போது தோன்றிய பெயர்கள் இவ்வளவே இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். இத்தொகுப்பில் சிலர் அத்தகைய சாத்தியங்களை எனக்குக் காண்பிக்கிறார்கள்.

‘புளியம் பூ’, ‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’, ‘பூனைகள் இல்லாத வீடு’, ‘கிழவி நாச்சி’, ‘நிகிலா’ ‘ஏழு கன்னிமார்’ கள்வன், ‘அத்துவானக்காட்டு எருமைகளும் அஸிஸ்டெண்ட் டைரக்டரும், பூச்சி, தோழ்ர்கள் கடத்தல்காரர்களான கதை, ராஜா ராணி ஜோக்கர்’ என இத்தொகுப்பில் மொத்தம் பதினொன்று சிறுகதைகள். ஒன்றை விட ஒன்று சிறப்பானதாய், முழுமையானதாய், ஒன்றை விஞ்சிய மற்றொன்றாய் தொடர் வாசிப்பில் என்னை ஆழ்த்தியது. சந்திராவின் எழுத்தின் மீது பிரமிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. பதின்ம வயது சித்திரங்களை அழகாய் சில கதைகளில் ஆழப் பதித்திருக்கிறார். பெயர் தெரியாத கிராமப் பரப்புகளில் நடந்து திரிந்த அனுபவத்தை இக்கதைகள் அள்ளித் தருகின்றன. வெள்ளந்தியாக, சின்னஞ்சிறுமியாக, கிராமத்துக் குயிலாக, இக்கதையின் நாயக நாயகிகள் நம்மை வெகுவாய் கவர்கிறார்கள். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு இது.

இக்கதைகளில் என்னை வெகுவாக பாதித்த கதை ‘நிகிலா’ துணிக்கடையில் வேலை செய்யும் ஏழைப் பெண் நிகிலா காதலில் வீழ்கிறாள். செல்வம் ஆரம்பத்தில் நல்லவனாய் இவளுக்கானவனாய் இருக்கிறான். காதலும் தாம்பத்யத்தின் ஆரம்ப கால மோகங்களும் அவர்கள் ஏழ்மையை வெல்கிறது. ஆனால் நிதர்சனம் தன் கோரங் கரங்களால் அவர்களை கீறிப்பார்க்கிறது. வாழ்வின் சூழல்களையும் அன்றாட பிரச்சனைகள் வயிற்றுப் பாடுகளுக்கான கேள்விகள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல நிகிலாவிடம் பத்திரமாய் இருக்கச் சொல்லிவிட்டு பணம் தேடும் பொருட்டு சென்னைக்கு போய் சம்பாதித்து வருவதாய் சொல்லிவிட்டுச் செல்கிறான் செல்வம். அவன் அவளிடமிருந்து வறுமையிலிருந்து அவளின் பசிகளுக்கான கேள்விகளுக்கும் பதில் சொல்ல ஏலாமல் தப்பியோடிய கள்வனா அல்லது நிஜமாகவே பொருள் தேடச் சென்ற பொறுப்பான கணவனா என்பது கதையில் இல்லை. பெண் படும் பாட்டை வார்த்தை வார்த்தையாய் நிகிலாவின் அவல வாழ்க்கை நமக்குச் காட்சிப்படுத்தப்படுகிறது.

செல்வத்தைப் பற்றிய எவ்வித தகவலுமின்றி நிகிலா மெலிந்து உருகுகிறாள். நாள்கள் மாதங்களாகிறது. வயிற்றுக் குழந்தை வேறு அவளுள் மிதித்து துவைத்து உலகைக் காணும் ஆசைகளை தாயிடம் சொல்கிறது. என்ன செய்வது என்பது தெரியாமல் நிகிலா சென்னைக்கு வந்து திசை தெரியாமல் செல்வத்தைத் தேட ஆரம்பிக்கிறாள். தேடல் இந்த ஒரு பதம் தான் எல்லார் வாழ்க்கையையும் ஊசலாட்டத்திற்குள் கொண்டு நிறுத்துகிறது.. அடிப்படைகள் கிடைத்துவிட்ட நம் போன்றோரின் தேடல்களின் திசைகள் வேறு மாதிரி, ஆனால் நிகிலா தேடுவது இழந்துவிட்ட தன்னுடைய வாழ்வாதாரத்தை, காதல் பொக்கிஷத்தை, உயிர்க் கணவனை, தன் பிள்ளையின் தகப்பனை.

நிகிலாவிடம் பணம் இல்லை. தங்குமிடமில்லை. ஏழைக்கு வீதிதானே வீடாகிறது? பள்ளியொன்றின் ஓரத்தில் தங்கி செல்வத்தை தேடத் தொடங்குகிறாள். அவளின் பரிதாப நிலை பார்த்து உதவி செய்கிறாள் எதிர் ப்ளாட் பாயம்மா. வீட்டு வேலைக்கமர்த்தி வயிறார உணவளிக்கிறாள். அவளுடன் மற்றொரு நாடோடிக் குடும்பமும் பள்ளியில் தங்கியிருக்கிறது. அக்குடும்பத்தின் மருமகள் இவளின் நிலையைப் பார்த்து இரக்கப்படுகிறாள். அவ்வப்போது கொஞ்சம் உணவு தருவதை அவள் மாமி கண்டிக்கிறாள். நாமே அன்றாடக் காய்ச்சிகள் ஒரு கை அதிகமானால் எனும் அவள் வாதம் நமக்கு ஈகைக்கு எதிராய் தோன்றினாலும் அவரவர் பசி அவரவர் நியாயங்களைக் கட்டமைக்கிறது. நிகிலாவால் அவனை கண்டு பிடிக்கவே இயலவில்லை. அத்துவானக் காட்டில் அகப்பட்ட மானாய் அதுவும் கர்ப்பத்தின் சங்கடங்களோடு சரியான உணவில்லாமல் உறைவிடமில்லாமல் வேதனையின் துயரின் உச்சத்தில் நின்று தவிக்கும் பேதைப் பெண்ணாய் கஷ்டப்படுகிறாள். அவள் யாரிடமோ ஏமாந்து வயிற்றில் பிள்ளையை வாங்கியிருக்கிறாள் என பொரணி பேசுகிறார்கள். இந்த நிலையிலும் அவள் ஆசுவாசப்படுவது கர்ப்பமாக இருப்பதால் ஆண்களின் அத்துமீறல்கள் இல்லாமல் சற்று நிம்மதியாக இருக்கமுடிகிறது. பள்ளியில் அவளுருப்பதால் இரவில் இலைமறைவாக அங்கு நடக்கும் குற்றங்களுக்கு சாட்சியாக நிற்கிறாள். குற்றத்தின் தலைவனொருவன் அவளைப் பற்றிய புகார்களை வீதி வீதியாய் பரப்பி அவள் அங்கு நிலைத்திருப்பதை தன் வன்கரங்களால் தடுக்கிறான். கொடிய விதியாலும் அவனின் சதியாலும் மீண்டும் வீதிக்கு வந்த நிகிலாவிற்கு சொல்லொண்ணா வலி மனதிலும் வயிற்றிலும் ஏற்படுகின்றது. அது பிரசவ வலியென்பதைக் கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அக்கதை இப்படி முடிகிறது “பள்ளிக்கூட மூலையில் கிடந்த லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு, வலி நிரைந்த வயிற்றீல் கைகளை வைத்தபடி, கண்களெல்லாம் செல்வம் உருவம் நிறைய எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு போய்க் கொண்டிருந்தாள் நிகிலா. விழுந்து கிடந்த கொன்றை மரத்தை பள்ளிக்கூட மைதானத்திலிருந்து யாரோ அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.”

இக்கதை கதையாக ஏற்படுத்திய பாதிப்பை விடவும் பெண்ணாய் இருப்பதின் பிரச்சனைகளை கதை போக்கில் அலசுகிறது. காதல், கல்யாணம், குழந்தை, பிரசவம் எல்லா வலிகளும் பெண்களுக்கு, இன்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற விதயங்களுக்கு பார்வையாளனாய் மட்டும் இருக்கும் ஆண்கள் எப்படி குற்றவுணர்வு சிறிதுமின்றி மேலும் மேலும் எம் பெண்களுக்கு அழுத்தம் தருபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

அடுத்து நான் மிகவும் ரசித்த கதை தொகுப்பின் தலைப்புக் கதையான ‘பூனைகள் இல்லாத வீடு’ வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் பண நடமாட்டம் அதிகமிருக்காது . வறுமையின் நிறங்கள் அவ்வளவு எளிதாய் அவர்களுக்கு ஊடுருவ முடியாது. காலையில் கஞ்சியை குடித்திருந்தாலும் நுனி கசங்காத சட்டைகள் அணிந்திருப்பார்கள். உண்மை நிலை வெளியில் தெரியாத வண்ணமாய் இருக்கும் அவர்கள் வாழ்க்கை முறை. இன்னும் துல்லியமாக என்னால் சொல்ல முடியும் ஏனென்றால் என் தாத்தாவின் தொடர்ச்சியாக அப்பா இருவரும் மிகப் பெரிதாக வாழ்ந்து கெட்ட குடும்பம். கடைசி சொத்து வரை, கடைசி பொருள் வரை, கடைசி துணுக்கு தங்கம் வரை விற்று தின்று கெட்ட குடும்பம் என்று நெல்லையில் பட்டப் பெயர் எடுத்த குடும்பம் எங்களுடையது. இக்கதையுடன் என்னால் மிகவும் பொருந்திப் போக முடிந்தது. நாங்கள் ஊருக்குச் சென்றால் மச்சில் (மாடி) இருக்கும் ஒரு அறையில் கொட்டிக் கிடக்கும் பழமையும் புராதானமும் கலந்த பொருள்களை ஆராய்ச்சி செய்து பொழுது போக்குவோம். நான் பெரும்பாலும் அவ்வகழ்வாராய்ச்சி அறையில் கிடைக்கும் புத்தகங்களுடன் பேச ஆரம்பித்துவிடுவேன். என் தங்கை கைக்கு கிடைத்த் மரப்பாச்சி பொம்மைகள், சிறு சிறு விக்கரங்கள், வெண் சங்கு, இன்னும் நியாபகத்தில் நிற்காத பல பொருள்களை ஒவ்வொரு விடுமுறையின் போது அங்கிருந்து கடத்திக் கொண்டு வருவாள். இக்கதையிலும் வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டமான நிலையிலும் அப்பிள்ளைகள் கோவிலுடன் இணைந்த தங்கள் வீட்டை பெருமையின் சின்னமாக நினைக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்கிறார்கள். தங்கள் விளையாட்டுக்களையும் படிப்பையும் அவ்வீட்டின் அழகான வெளிகளில் நிகழ்த்துகிறார்கள். அவர்களுடன் அவர்களிடம் வந்து சேரும் சாம்பல் நிறப்பூனையொன்றும் வளர்ந்து வருகிறது. இவர்களும் பெரியவர்களாகிறார்கள் அவ்வீட்டின் கடைசி மகன் அதாவது இக்கதை சொல்லியின் அக்காவிற்கு திருமணமாகிறது. பூனை அப்போது குட்டிகளை ஈனுகிறது. அச்சமயம் மகளின் பிரசவத்திற்காக தாய் அங்கு செல்கிறாள் பூனைகளை கருத்தாய் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு. அவன் அன்பும் அக்கறையுமாய் அதனை பேணிப் பாதுகாத்தும் குட்டி ஒன்று காணாமல் போகிறது. இக்கதையில் பூனை குறீயீடாக இருந்து அவர்களின் வாழ்வின் நிகழ்ச்சிகளை நமக்கெடுத்தியம்புகிறது.
கதையும் புனைவும் தேர்ந்த கையினால் அடுக்கடுக்காய் அழகான புள்ளியில் இழைந்திழைந்து நம்மை வாசிப்பானுபவத்தின் பரவசத்திற்குக் கடத்திச் செல்கிறது. அவ்வீட்டில் மீண்டும் வசந்தங்கள் துளிர்க்கிறது. பெரிய படிப்புகள் படித்து எல்லோரும் ஒருவழியாய் வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள். இடையில் எல்லாப் பூனைகள் காணாமல் போய் கடைசியில் பெரிய பூனையும் செத்துப் போகிறது. அவ்வீடு அதன் பின் ‘பூனைகள் இல்லாத வீடாகிறது’. அங்கு அதற்கு முன்னரும் பூனைகள் இல்லை, அதன்பின்பும் பூனைகள் இல்லை. காலம் நகர்கிறது.....வாழ்க்கை வழிந்தோடுகிறது.....

எல்லாக் கதையைப் பற்றியும் சொல்ல ஆசை, ஆனால் இதுவே மிகப் பெரிய பதிவாகிவிட்டது. இக்கதைகளை எழுதிய சந்திரா பத்திரிகையாளராய் இருந்து, சினிமா துறைக்குச் சென்றவர். அமீரிடம் உதவி இயக்குனராய் இருந்து தற்போது தாமிராவிடம் இணை இயக்குனராய் இருக்கிறார். இவரின் சொந்த ஊர் தேனியின் கூடலூர். எம் மண்ணின் படைப்பாளிகளின் எழுத்துக்களும் திரை ஓவியங்களும் ஒரு போதும் சோடை போவதில்லை என்பதை மிகப் பெருமையுடன் இங்கு பதிவு செய்கிறேன்.

புதன், 29 ஏப்ரல், 2009

மர்மச் சிறைச்சாலைகள்


செய்தி :

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் அதிர்வின் Report
பிரசுரித்த திகதி : இருபத்தியொன்பது ஏப்ரல்.

கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் முடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார்.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரவேண்டிய பொறுப்பை மக்களாகிய உங்களிடன் நாம் ஒப்படைக்கிறோம். உண்ர்ச்சி மிகு அதிர்வு வாசகர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். 'கருணையற்ற' மனிதர்களின் வசம் நம்மை ஒப்படைத்துவிட்டு ஒப்பாரி வைப்பதில் என்ன பயன்?

இன்று ஈழத்தமிழர் உண்ணாவிரதத்தில் தமிழ்நதி கலந்து கொள்ளப்போவதை அறிந்து அவளின் தோழியாய் வருத்தப்பட்டேன். ஆனால் நம் சகோதர சகோதரிகள் அங்கு அனுபவிக்கும் துயரையும் கொடுமைகளையும் கண்டும் பார்த்தும் அறிந்தும், மனம் மிகவும் சங்கடப்படுகிறது. இந்தப் புகைப்படத்தை பார்த்ததும் என்னால் வேறு வேலைகளை ஈடுபடமுடியவில்லை. இளம் பெண்கள் ஒருத்தியல்ல ஓராயிரம் பேர் மானபங்கப்படுத்தபடுத்தப்படுகிறார்கள். காப்பாற்ற எந்த குழலூதும் கண்ணணும் இருக்கவில்லை.

இலங்கை அரசின் கீழ்த்தரமான செய்கைகளை கண்டிக்க நாதியில்லாமல் போனோமே.... இங்கு நடக்கும் நாடகங்கள் அரசியல் கோமாளித்தனங்கள், பழி வாங்குதல்கள், வாக்குச் சேகறிப்பிற்காக சோரம் போகும் கேவலங்கள், ஆதிக்க வெறிகள், சுயநலத்தின் உச்சங்களை கண்டு வெறுப்பும் கோபமும் என்னவிதமான சமுகத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம்? இரக்கமும், மனிதாபிமானமும் அற்று இருக்கும் இவர்களுக்கெல்லாம் விழுந்தடித்துக் கொண்டு நாற்காலி அமைத்துக் கொடுத்துவிட்டு பின்னர் ஐயோ பாருய்யா அவனை என்ன ஆட்டம் போடறாங்கவென்று விமர்சித்து வாழ்வது ஆண்டாண்டு காலம் பழகிய விதயமாகிப் போனது. சாமான்யனாய் என்னால் என்ன செய்ய முடியும் என சலித்து சலித்து இப்படியே இருக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் இலங்கையிலிருக்கும் நம் சக தமிழனுக்காக குரல் கொடுத்தால் இந்த அரசாங்கத்தின் இறையாண்மைச் செயல்கள் சிறிதேனும் யோசிக்கப்படுமல்லவா? முதலில் இறையாண்மை என்றால் என்னவென்பதை அறியாமல் இருப்பவர்களிடம் அதைப் பற்றி பேசி என்ன பயன்? பழிவாங்குதல்களுக்குப் பெயர் இறையாண்மையா..என்ன கொடுமை இது? வரலாறு இவர்களை யாரையும் ஒரு போதும் மன்னிக்கபோவதில்லை. எதிரியை விட கொடியவன் துரோகி. கருணா என்ற பெயரே துரோகங்களின் படிமமா? இது அவங்க உள்நாட்டு பிரச்சனை நாம என்ன செய்ய முடியும் என்று என் தோழி ஒருத்தி என்னிடம் கேட்டாள். காரணம் எதுக்கு தேவையில்லாத துக்கத்தை உள்வாங்க வேண்டும் என்பதே. பிரபாகரன் என் தலைவன் என்று சொன்ன என் நண்பனை மேலதிகமாய் என்னால் நேசிக்கமுடிகிறது. தமிழ் உணர்வு என்பது பொது இல்லையா? எல்லாருமே தனித்தனி தீவுகளா? எது நம்மையெல்லாம் ஒன்று சேர்க்கும்? இன்று என் வண்டியில் பெற்றோல் இருக்கிறது. அது போதும் என்று சொல்பவர்களிடம் இப்படிச் சொல்லத் தோன்றுகிறது - ...............................................(பிடித்த கெட்ட வார்த்தையை இட்டு நிரப்பிக்கொள்ளலாம்)

நாமெல்லாம் மனிதர்கள் என்பதை நிரூபிககும் தருணத்தில் வெந்த சோற்றை தின்று செரித்து, வெயில் கொடுமைகளைப் பேசி, (“வெயிலைவிடக் கொடுமையாக எரிக்கிறது பிணங்களின் மீது அரசியல் செய்பவர்களின் வார்த்தைகள். ‘மக்கள் இனியும் முட்டாள்கள் இல்லை’என்பதைத் தேர்தல்முடிவுகள்தான் தெளிவுபடுத்தவேண்டும். எல்லா அற்பத்தனங்களையும், கயமைகளையும், தகிடுதத்தங்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் வரலாறு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ, மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜபக்சே பாடம் கற்பிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.” – தமிழ்நதி)செல்வராகவன்களின் கெளதம் மேனன்களின் அடுத்த படம் என்பதை பற்றியெல்லாம் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சுயநலங்களின் முட் கீரிடங்களை மலர் க்ரீடங்களாய் நினைத்து திரிந்து கொண்டிருக்கலாம். இன்று மாலை 4 மணிக்கு சன் டீவியில் புதுப் படத்தையும், இரவு நம்மை பார்த்து அவர்கள் எள்ளி நகையாடும் 'அசத்தப் போவது யாரு' பார்த்து வயிறு புடைக்க சிரித்து, அவரவர் சொந்த வாழ்வின் ஒரே வடிகாலான இணையுடனான கூடல்களை முடித்து, எந்தவித உறுத்தலும் இல்லாமல் நிம்மதியாக உறங்கி, மறுநாள் காலையில் செய்தித்தாளைப் பார்த்து 'ச்சோ...மூன்னூறு பேரு செத்துட்டாங்களாம்....என்னத்த செய்ய...பேசுகிறோம், பேசுகிறோம்..பேச மட்டும் செய்கிறோம்.....

சனி, 18 ஏப்ரல், 2009

தோற்ற மயக்கம் - சிறுகதை


‘சந்தோஷ், அந்தப் பொறுக்கி பேரு குமரப்பா. எங்க காலேஜ் தான் படிக்கறான் என்னைய ஆறு மாசமா காதலிக்கறானாம்..... சரியான பைத்தியம்பா... தேவதைங்கறான், தெய்வம்னு சொல்றான், விட்டா தூக்கிட்டு போயிடுவானாம். புல்ஷிட்...’

‘ஏன் சொல்ல மாட்டான் நீ தான் தங்க கிளியாச்சே....நானும் உன் வயசுக்காரனா இருந்தா இப்படியெல்லாம் சொல்லியிருபேனோ என்னவோ...

‘சும்மா இருங்க சந்தோஷ் எப்பவும் விளையாட்டு தான் உங்களுக்கு, நீங்க எனக்கு நல்ல ப்ரண்ட்.. எனக்கு இந்த லவ் நான்சென்ஸ் எல்லாம் பிடிக்காது..

சந்தோஷ் சந்தோஷ் என்று அவள் அழைக்கும் போது நான் நெகிழ்ந்து போவேன். தேவதையின் மறுபதிப்பான அவள் என் புதிய ஸ்நேகிதி. நான்கு மாதம் முன் ரயிலில் சந்தித்திருந்தோம். தற்செயலாக சில சமயம் ஏற்படும் இத்தகைய சந்திப்புக்கள், எதிர்பாராத சந்தோஷத்தை அள்ளித் தந்துவிடும். பாட புத்தகத்துள் புதைந்து கிடந்தவளை என் மென்மையான சிரிப்பும் எதாவது வேண்டுமா என்ற அக்கறையான விசாரிப்பும் அவளின் மனத் தடைகளை தகர்த்தது..

ஹர்ஷியிடம் பேசுவதே அலாதியானது. அவள் குரல்...தேனும் சாக்லெட்டும் உலகின் அத்தனை இனிப்புகளையும் கலந்து கட்டியது போன்ற அற்புதமான குரல்... அவளின் பெயரை என் மொபலைலில் ‘குரலினியாள்’ என்று பதிவு செய்திருந்தேன். அதை அவளிடம் சொன்ன போது அழகாகச் சிரித்தாள். ஆயிரமாயிரம் முத்துக்கள் உதிர்ந்து வழிந்தது செல்போனிலிருந்து தரையிலும் பின்பு அந்த அறை முழுவதும்

நான் ஒரு வேலையாக பங்களூரூக்கு போய்க் கொண்டிருந்தேன், அவள் சென்னையில் ஒரு வொர்க் ஷாப் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். M.E படிக்கிறாளாம். கடைசி வருடம். சார் என்று இழுத்தவளிடம் ‘கால் மீ சந்தோஷ்’ என்று சொன்னேன்.

பங்களூரில் இறங்கியதும் தினமும் போன் செய்யும் படி அன்புக் கட்டளையிட்டாள். பிரியாவிடை கொடுத்தனுப்பிய நான்கு மாதங்களில் தினமும் அவளிடமிருந்து ஃபோன் வந்துவிடும். அவளிடம் பேசாவிட்டால் அன்றைய தினம் ஏதோ போலிருக்கும். அவள் மீது இனம் தெரியாத ஒரு மெல்லிய ப்ரியம் என் மனம் முழுவதும் படர்ந்திருந்தது. அதன் பெயர் நிச்சயம் காதல் இல்லை.

36 வயதாகிவிட்டாலும் நான் பார்ப்பதற்கு இளமையாக இருப்பேன். எல்லாவற்றிலும் சற்று அதிகமாகவே அழகியல் எதிர்ப்பார்ப்பேன். என் பேச்சு, சிரிப்பு, நெடிய உருவம், நிறம், நிகோடின் படியாத ரோஸ் நிற உதடு, மீசை, கொஞ்சம் போல பெண்மைத்தன்மை இதெல்லாம் என் ப்ளஸ். சின்ன வயதில் பெற்றோர், உறவினர்கள், அக்கம் பக்கம் வீட்டினர் இவர்களெல்லாம் ‘அழகன்’ என்று சொல்லி சொல்லியே என் தலைக்கு மேல் கண்ணுக்குத் தெரியாத ஒரு கொம்பை சீவி வளர்த்து விட்டிருந்தனர்.

பொதுவாக ஆண்களுக்கு பிடித்தவைகளுல் முதன்மையானது பெண்கள், மேலும் பெண்கள்,மேலும் மேலும் அழகான பெண்கள்.. டீன் ஏஜ்ஜில் நான் செயத அலப்பறைகளின் எண்ணிக்கை சிந்துபாத் கதைகளை விட நீளமானது. தோழர்களை விட தோழிகளே அதிகம் எனக்கு. சில பல காதல்கள், தோல்விகள்...எல்லாக் காதல்களும் முறிந்து போவதற்கு ஒரே காரணம் பெண்களுடன் கூடவே பிறந்த பொஸஸிவ்னெஸ். அப்போதெல்லாம் நான் கட்டற்ற சுதந்திர விரும்பி. என்னை சந்தேகித்து சண்டை போடும் காதலியை ஜஸ்ட் லைக் தட் போனால் போகட்டும் போடி என்று விட்டுவிடுவேன். இப்படி நிலைக்காத காதல்களால் அலைக்கழிக்கப் பட்டு கடைசியில் விரக்தியின் உச்சத்திற்கு போன சமயத்தில்தான் ஜோதியை சந்தித்தேன். மண வாழ்க்கை என்ற ஒன்று அமைந்து மகனொருவனும் பிறந்துவிட்டான். நானும் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்திருந்தேன்.

ஜோ ஹர்ஷிதாவிடமிருந்து வந்த போன் கால்களை வேரைப் பிடித்து என்னை உலுக்கியெடுத்த கதையை எழுத வேண்டும் என்றால் 192 பேஜேஸ் அன்ரூல்டு நோட் புக்தான் வேண்டும். அப்பறம் இது ஏதோ நிஜமான நேசம் என புரிந்து கொண்டு சில சமயம் அவளும் போனில் ஹர்ஷியிடம் பேச ஆரம்பித்திருந்தாள். ‘ஹாய் ஜோ, ராகுல் எப்படியிருக்கான் என்று அவளையும் செல்லம் கொஞ்சுவாள். ராகுலிடமும் அடிக்கடி படி படி என்று அட்வைஸ் செய்வாள். எங்கள் குடும்பத்துடன் அப்படியே குரல் வழியாகக் கலந்து விட்டாள். சென்னை வந்தால் எங்கள் வீட்டில் தான் தங்குவேன் என்பாள்.

‘என்ன சந்தோஷ் நீங்க எதோ யோசனையிலேயே இருக்கீங்க, நான் எவ்வளவு சீரியஸான விஷயத்தை பேசிட்டிருக்கேன்...அந்த குமாரப்பாவை எப்படி டீல் செய்யறது? எனக்கு படிக்கணும்...தூக்கம் வேற வருது...ஹாவ்..என்று அழகாக கொட்டாவி விட்டாள்’.

‘ம்..கொஞ்ச நாள் பாரு.. பையன் ரொம்ப வாலாட்டினான்னா பிரின்ஸிகிட்ட சொல்லிடு. அப்பா காதுலேயும் ஒரு வார்த்தை போட்டு வையி..எனக்கு அடுத்த மாசம் அங்க ஒரு வேலையிருக்கு. நான் வந்து அவனை ஒரு தட்டு தட்டறேன். அப்பறம் உன்கிட்ட எப்படி வாலாட்டாறான்னு பாக்கறேன்’

ம்...

‘சரி தங்கம்...நீ போய் படி...அப்பறம் தூங்கு சரியா? குட் நைட் பேப்’.

‘குட் நைட் ட்யூட்’

இன்று வெகு நாள் கழித்து லேசாக ட்ரிங்க் போட்டிருந்தேன். ஒரு குரலின் போதை போதாதற்கு குடியின் மெல்லிய போதை. உடல் கண கணவென்றிருந்தது. பெட்ரூமிற்கு போனேன். ஜோதி ஒரு பூனைக்குட்டியைப் போல சுருண்டு படுத்திருந்தாள். தன் பிஞ்சுக் கைகளால் ராகுல் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். எவ்வளவு அழகான காட்சி இது. ஜோவை விழுந்து விழுந்து காதலித்த கணங்களை நினைத்துப் பார்த்தேன். இப்போதும் அவள் மேல் காதல் இருக்கத் தான் செய்கிறது. அலுத்து சலித்துப் போகும் இயந்திர வாழ்வும் அவளிடமிருந்து எடுப்பதற்கு ஏதும் இல்லை எனும் அளவிற்கு அவளை அறிந்தாகிவிட்ட நிலையும் வாழ்வின் மீதான சலிப்பை ஏற்படுத்துகிறது. ஜோ குறையே சொல்ல முடியாத அற்புதப் பெண், எனக்காக எதையும் செய்யும் அன்பு. ஏன் தான் மட்டும் எப்போதும் அலைந்து திரியும் இயல்பினனாகி இருக்கிறோம், ஒரு வேளை இது ஆணின் புத்தியோ என்று நினைக்கையில் அயற்சியாக இருந்தது. விலகியிருந்த போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டேன். புரண்டு படுத்து மீண்டும் போர்வை விலகிக் கிடந்தாள்...அழகான ராட்சசி...

ஏதெதோ யோசித்தபடி சோபாவில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டேன்.

பரீட்சை சமயமானதால் ஹர்ஷிதா போன் செய்வதில்லை. நானும் அலுவலக வேலை நெருக்கடிகளால் கொஞ்ச நாள் எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.

அன்றைய தினசரியைப் புரட்டியபோது மிகவும் அதிர்ந்து போனேன். ஹர்ஷிதாவின் படம் செய்தியுடன் வந்திருந்தது. அவள் முகத்தில் அவளுடன் படித்த மாணவன் ஆசிட் அடித்துவிட்டானாம். அவன்...அவன் ஹர்ஷி போனில் குறிப்பிட்ட குமாரப்பாவேதான். என்ன கொடுமை இது. பதட்டத்துடன் படித்து முடிப்பதற்குள் வேர்த்து விட்டது. ‘ஜோ’ என்று கத்தியதில் அவள் ஓடி வந்து என் கோலத்தைப் பார்த்து பயந்து ந்யூஸ் பேப்பரை வாங்கி அவசர அவசரமாக படித்தாள். அவளாலும் இச்செய்தியின் துக்கத்தைத் தாங்க முடியவில்லை.

‘என்னங்க இது, சே...என்று கலங்கினாள்.

‘நான் கிளம்பறேன் மா...நீ பத்திரமா இருந்துக்க...வேணும்னா ராகுலைக் கூட்டிட்டு உன் அம்மா வீட்டுக்கு போய் இரு..நான் ரெண்டு நாள்ல வந்துடறேன்.

மனம் பதைத்துக் கொண்டேயிருந்தது. என்ன கொடுமை இது. படிக்கும் வயதில் என்ன காதல் அந்த அயோக்கியனுக்கு? குமரப்பா – இருந்திருந்து உனக்கு என்ன வயதிருக்கும்? இருபது? என்ன குரூரமான மனது உனக்கு?

நானும்தான் இளம் வயதில் பெண்களின் மேல் மையலும், கிறக்கமுமாய்த் திரிந்திருக்கிறேன்.ஆனால் நான் பெண்களின் அழகை ஆராதித்தேனேயன்றி ஒரு போதும் விருப்பம் இல்லாத பெண்கள் பக்கம் திரும்பியும் பார்த்ததில்லை. ஹர்ஷியின் மீது நான் அபிமானம் வைத்திருந்தது அவள் அழகும் குரலும் மற்றும் காரணங்கள் இல்லை. அவளின் ப்ரியமும், அக்கறையும், சமூக நலனும் அவள் மீதான என் அன்பை ஆழப்படுத்தியிருந்தது.

குமரப்பாவை போலீஸ் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கிறதாம். என்ன விசாரித்து என்ன என் பிரியமான தேவதையின் இழந்த முகம் திரும்பக் கிடைக்குமா ஹர்ஷிதா ஹர்ஷி ஹர்ஷிமா எப்படி துடிச்சிருப்பே - மனசு கனமாகிக் கொண்டேயிருந்தது.

பங்களூரூ - ஹர்ஷிதா அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலுக்கு விரைந்தேன். மெளனம் அடர்ந்த அந்த அறை என் செவிப்பறையை கிழித்தது.

அவள் அப்பா பத்மநாபாவிடம் என் தோளில் சாய்ந்து குலுங்கி அழுதார், அவரின் கண்ணீருக்கு என்னிடம் என்ன ஆறுதல் இருந்துவிட முடியும்? எனக்கு வார்த்தைகள் கிடைக்காமல் தொண்டைக்குள் சிக்கி தவித்தது. அவரே ஒருவாரு தேறி “என் குழந்தையை இப்படி பண்ணிட்டான் சார், அவன் மனுஷனா இல்லை மிருகமா? தான் உண்டு தன் படிப்பு உண்டுன்னு இருந்தாளே....அந்தக் கடவுளுக்கே பொறுக்கலையா...நான் இனிமே என்ன செய்வேன்...அவளை எப்படி தேத்துவேன்..”.

எனது நடுக்கம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவளைப் பார்க்காமல் அப்படியே ஓடிவிடலாமா என்று கூட அபத்தமாக நினைத்தேன். ஆனால் அவளைப் பார்க்க துடித்துக் கொண்டிருந்த மனசு அவளை நோக்கி என்னை வழிநடத்தியது.

அவள் முகம் முழுவதும் கட்டு போடப்பட்டிருந்தது. கண்கள், காது கழுத்து, மார்பு, கைகள் என்று பல இடங்களில் திராவகம் தெறித்து அவளை சின்னா பின்னமாக்கியிருந்தது. ஹர்ஷி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் பொத்துக் கொண்டு வந்தது. ‘பை சந்தோஷ் என்று ரயில் நிலையத்தில் அவள் கண்கள் சிரிக்க என்னிடம் விடைபெற்ற காட்சி என்னுள் நிழலாடியது. இப்படி நான் என் வாழ் நாளில் அழுததேயில்லை. அவள் அப்பா என்னை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

‘தர்ட் டிகிரி பர்ன்ஸாம்...எப்ப மயக்கம் தெளியும்னு சொல்ல முடியாதுன்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க சார். தாயில்லாத பொண்ணை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா...என் குழந்தை மேல ஒரு தூசி பட்டாலும் துடிச்சுப் போவேன் சார்...பகவானே நான் என்ன பாவம் செஞ்சேனோ என்று கதறியது சென்னை வந்து சேர்ந்த இரண்டு நாள்களாகியும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

பத்து நாள்கள் கழித்து எல்லாருடைய பிரார்த்தனைகளையும் பொய்யாக்கிவிட்டு ஹர்ஷிதாவின் உயிர் பிரிந்தது.
அவளை கொன்றவன் பெரிய லெவலில் மூவ் செய்து சிறையிலிருந்து வெளி வந்துவிட்டானாம். பித்துப் பிடித்தவன் போலாகிவிட்டேன். அவளைக் கடைசியாக பார்க்கப் போகவில்லை....சவ ஊர்வலத்தின் ரோஜாப் பூக்களே எனக்கு உறுத்தும்...ஹர்ஷி என் செல்ல ரோஜா ! எப்படிப் போவேன் நான்?

‘குரலினியாள்’ என்று என் மொபைலில் இருக்கும் அவள் இனி என்னை அழைக்கவே போவதில்லை நினைக்கும் போது மனது பாரமாகி வலித்துக் கொண்டேயிருந்தது. அடிக்கடி லீவு போடுவதும், சற்று அதிகமாக குடித்துவிட்டு வெறித்தபடி அமர்ந்திருப்பதுமாக நாட்கள் கனமாய் நகர்ந்தன.

ஜோ மெல்லிய குரலால் ‘ட்ரை டு அக்ஸெப்ட் இட் பா ‘என்று சொல்லுவாள் முடியவில்லை. புற அழகை மீறி என்னை மிகவும் பாதித்த என் ஹர்ஷி....முகம் சிதைந்து போய் இந்தச் சின்ன வயதில்.....அழகாவது ஒன்றாவது...என்ன கடவுள் ! சேச்சே கடவுளாவது கத்திரிக்காயாவது.... உடைந்து போய்ப் புலம்பும் என்னைத் தேற்றுதற்குள் ஜோவிற்கு பெரும்பாடாகிவிட்டது.

வாழ்க்கை எனக்கு முதன் முதலில் கற்றுத் தந்த குரூரமான பாடம் ஹர்ஷியின் மரணம். ஆனால் உப்பும் சோறும் உள் இறங்க இறங்க எத்தகைய துக்கமும் கரைந்துவிடுமாம். அப்படித்தான் ஆனது. ஆனால் ஆறாத ரணமாக அடிநெஞ்சில் புகைந்து கொண்டேயிருந்தது ஹர்ஷிதாவின் பிம்பம்.

இப்போதெல்லாம் கனவில் வருவதைக் கூட ஹர்ஷிதா குறைத்துக் கொண்டாள். ஜோ தாய்மையின் அழகில் பொலிவாகியிருக்கிறாள். எங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும், அந்தப் பூக்குவியலின் பெயர் உங்களுக்கு தெரியும் தானே?
முற்றும்

வியாழன், 16 ஏப்ரல், 2009

மரணத்தின் வாசனை - த.அகிலன்

இரண்டு வாரங்களாக இந்தப் புத்தகம் என்னுடன் எல்லா நேரத்திலும் பயணித்து வந்தது. ஒன்றிரண்டு நாட்களில் வாசித்திருக்க முடியும். ஆனால் இப்புத்தகத்தின் ஆழமும், வாசித்தபின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? போரின் கொடூரங்களை பேரழிவுகளை வார்த்தை வார்த்தையாக கொட்டியிருக்கிறார் அகிலன். அவரைப்போல எம் ஈழ மக்களுக்கு அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும்துயர் என்று எப்போது எப்படி ஆறும்? காலத்தின் படர்ந்திருக்கும் இந்த ரத்தக் கறையை எவ்வளவு துடைத்தாலும் மறையுமா? பதில் சொல்ல யாரிருக்கிறார்? இத்தனைக்குப் பின்னும் வாழ்தலின் பேரலவலத்தை புனைவாயும் நிஜமாயும் விவரிக்கிறார் அகிலன். நம்முன் அலறித்துடிக்கும் அந்த ஓலத்தின் குரல் தமிழ்க்குரல் என்பதைத் தவிர நமக்கு போரின் அவலங்கள் பற்றி எவ்வளவு வாசித்தும் எத்தனை படம் பார்த்தும் தினம் தினம் செய்தி கேட்டும் என்ன தெரிந்துவிடும்?

‘மரணத்தின் வாசனை’ மூலம் அகிலனும் நானும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்.‘எதைக் கடந்துவிட்டதாய் நான் எண்ணிக் கொண்டிருந்தேனோ, அது என்னைத் துரத்துகிறது’ அவனைப் போலவே நானும் பல நாள்கள் துயருற்றிருக்கிறேன். பிரிவும், தனிமையும், மரணமும் செர்ந்து என்னை துரத்தியபடியே இருந்த காலகட்டங்கள் உண்டு. எம்மைவிட மிக வலிமையான அவற்றுடன் நான் போராடிச் சலித்து இறுதியில் சரணடைந்துவிட்டேன். என் பிரியமான தங்கையை மரணம் என்னிடமிருந்து இரக்கமில்லாமல் பிடுங்கிச் சென்றது. பின் அன்பான நண்பனை தெருவில் அடிபட்டு சாகச் செய்தது. எனக்கு தோழமையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த என்னுடைய பாஸை (boss) மலையிலிருந்து கீழ் தள்ளி சாகடித்து அகோரமாய் சிரித்ததுப் பார்த்தது. எல்லாமே எதிர்பாராத மரணங்கள்... இளமையின் வெவ்வேறு படிகளில் நின்றுகொண்டிருந்த அவர்கள் நினைத்திருப்பார்களா சாவு தங்களை இப்படி காவு கொள்ளுமென்று? பித்துப் பிடித்து செய்வதறியாது நான் கலங்கி நின்றிருந்தேன். யாரிடமும் காண்பிக்க முடியாத வேதனையை கவிதையாய், எழுத்தாய், என் டைரியின் தாள்களில் இறக்கி வைத்தேன். துக்கம் ஓரளவிற்கு இருநூறு பக்கங்களில் அடங்கிவிட்டது. ஆனால் அதன் வெம்மை என் மனதிற்குள் அணையா நெருப்பாய் இருக்கிறது, நான் இறக்கும்வரையிலும் அது இருக்கத்தான் செய்யும். தற்செயலாய் அதை வாசித்த என் நண்பர் ஒருவர் இரண்டு நாள் இரவு தூங்காமல் தவித்தாராம். அத்தனை வலியையும் வேதனையும் வார்த்தையின் வடிவில் பார்த்தவருக்கு அதிர்ச்சி. எப்படி தாங்கிக் கொண்டாய், இதற்குப்பின்னரும் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது, நானென்றால் பைத்தியமாகியிருப்பேனே என்றார். நான் புன்னகைத்து வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மகத்தானது மரணத்தை பற்றியது சிலருக்கு அது கொடூரமாக சொல்லித்தருகிறது, என்னைப் போல என்றேன். இப்போது அகிலனின் கதைகளை வாசிக்கும்போது எமக்கேற்பட்ட துன்பங்கள் மங்கலாகிக் கொண்டிருக்கிறது. தந்தையை, நண்பனை, சித்தியை, ப்ரியமான நங்கையை – சமீபத்தில் தன்னுடன் பிறந்தவனை என எத்தனை எத்தனை மரணங்கள் அவர் வாழ்வில். வழி நெடுக மரணத்தூனூடே பயணிக்கிறது அகிலனின் வாழ்வு இந்த சிறிய வயதில் எப்படி எப்படித் தாங்கிக் கொண்டார் என நினைக்கையில் மனம் கனத்துக் கிடக்கிறது. வெகு நாள் கழித்து முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் அழ நேர்ந்தது. காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து போடும் என்பதைத் தவிர அகிலனுக்கு ஆறுதலாய்க் கூற வார்த்தை ஏதுமில்லை என்னிடம்.



இப்புனைவுகளை நுட்பமான மொழிநடையில் ஈழத்தின் அழகுத் தமிழில் எழுதியுள்ளார் அகிலன். தொன்மையான நம் தமிழனின் மொழியது. சில வார்த்தைகள் புரியாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும்போது தெள்ளந்தெளிவாக புரிகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு கதைகள். எல்லாக் கதைகளுமே என்னை பாதித்தது, மிகவும் பாதித்த கதைகள் எண்டு சொன்னால், ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’, ‘செய்தியாக – துயரமாக – அரசியலாக’, சித்தி’, குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்’, ‘சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்’, ‘தோற்ற மயங்கங்களோ’. மற்ற கதைகளான ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’, ‘ஒருத்தீ’, ‘மந்திரக்காரண்டி அம்மாண்டி’, ‘கரைகளிற்க்கிடையே’ ‘நீ போய்விட்ட பிறகு’ ‘நரைத்த கண்ணீர்’, ஆகியவையும் மிகவும் நுட்பமான கதைகள்.

இப்புத்தகத்திலிருந்து என் மனதை பிழிந்தெடுத்த சில வரிகள், இதை எழுதும் போது அகிலனின் மனநிலையை அவதானிக்க முடிகிறது. என் கண்ணில் கண்ணீரை அல்ல அனல் நீரை வார்க்கச் செய்துவிட்டது இவ்வுரைகள்.

“மரணமும் அதுகுறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிட விரும்பாத சுவரைப்போலவும்....”

“அவர்கள் நேசித்த உடலைக் கண்ணுக்குள் வைப்பதும் யாருவருக்கும் பிரியமான ஒரு செய்லாயிருக்கிறது. நான் நினைத்தேன், மனிதன் உடலாகவே அறியப்படுகிறான். கறுப்பாய், ஒல்லியாய், குண்டாய் என அவனது உடலையே நம் நினைவுகள் முதலில் கொண்டாடுகின்றன. உடல் சார்ந்தே அவனுடைய பிறநினைவுகளும் வாழ்கின்றன. அந்த உடலின் பிரதிநிதியாகவே ஒரு மனிதன் குறித்த நினைவுகள் நமக்குள் தங்கிவிடுகின்றன. அதனால் அந்த உடலைக் கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிறோம்.....”

“துயர் தரும் மரணத்தின் கதைகளுக்கு இந்த நாட்டில் பஞ்சமா? குருதியும் எதிந்த தசைகளின் துர்மணமும் நிறைந்த கதைகள் தவிர வேறென்ன இருக்கிறது இங்கே. எல்லாரையும் கொன்று கொண்டோ அல்லது கொல்வதற்குக் கட்டாயப்படுத்திக் கொண்டோ இருக்கிறது.”

“தேவதையின் மரணத்தை அண்ணி கடிதத்தில் உறுதி செய்தாள். மெலிந்து கறுத்துப் போன உனது சீருடைப் படத்திற்உ உன் கிராமத்து வீட்டில் மாலைபோட்டு ஊதுபத்தி ஏற்றியிருப்பதாக, மரணத்தின் வாசனை அதனின்றும் கமழ்ந்து கொண்டிருப்பதை தான் போய் பார்த்தேன் என்று அண்ணி எழுதியிருந்தாள். மரணம் நாசமாய்ப் போக. அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை.”

“யுத்தம் கொடிய யுத்தம். மனித மனங்களை சிதைத்துக் குவித்துக் கொன்றுவிட்டிருக்கும் யுத்தத்தின் இன்னுமொரு சாட்சி இவன். இனி என்றைக்கும் திரும்பவியலாதது. பிரிவும் துயரமும் எதிர்ப்பார்ப்பு கலவையாகிப் பினைந்து கொண்டிருக்கிறது இவன் சிந்தனைகளை என்று தோன்றியது எனக்கு.”

புத்தகத்தை மூடி வைத்து இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருந்தேன். அகிலன் சொல்வது போல் ‘மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” ஆம்...


செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நான் பேச விரும்புகிறேன் – ச.தமிழ்ச்செல்வன்

நாம் நேசித்த மனிதர்கள் தொலைந்து போனால் வாழ்வில் சில காலமேனும் அவரின்மையால் வெறுமையாகவே இருக்கும். மனதின் அடி ஆழத்தில் நீர் பூத்த நெருப்பாய் அவர்கள் நினைவுகள் தேங்கியிருக்கும். நேற்றிரவு வாசித்து முடித்த ‘நான் பேச விரும்புகிறேன்' பெயரளவில் மட்டுமே அறிந்திருந்த சில கலை ஆளுமைகளை என் கண் முன் நிறுத்தி என் மனதிற்கு நெருக்கமானவர்களாக்கி அதன்பின் அவர்களை பிரிய வைத்தது. ஏதோ இனம் தெரியாத மந்திரத்தன்மையால் கட்டுண்டு கிடந்தது போல் இப்புத்தகத்தை வாசித்து முடித்தபின் நீண்ட நேரம் யோசித்தபடி செயலற்றுக் கிடந்தேன்.

எந்த தேசத்தில் வாழ்ந்தாலென்ன, கருணையும், கடும் கோபமும், காதலும், காமமும் துரோகமும் எல்லா பேராசைகளும் மனித இனம் முழுவதற்கும் உண்டான குணமல்லவா? இதில் கலைஞன் என்பவன் தனித்தவன். தன் சுயத்தின் தேடலின் மூலம் தன்னையே கண்டுணர்ந்தவன். ஐந்து கலைஞர்களின் வாழ்வை “நான் பேச விரும்புகிறேன்” வாயிலாக எழுத்துக்களாக வரைந்துள்ளார் தமிழ்ச்செல்வன். இதில் மூவர் பெண்கள்.


நான் பேச விரும்புகிறேன்

தலைப்புக் கட்டுரையான “நான் பேச விரும்புகிறேன்' நாயகி லிவ் உல்மன் என் மனதை கவர்ந்த இரண்டு ஆளுமைகளில் ஒருவர். நார்வே தேசத்தின் நாடக – திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர். கலையின் ஏதோ ஒரு வடிவத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவர்களின் முதல் இழப்பு தன் ப்ரியத்திற்குரிய குடும்பத்தினர்கள், இதில் பெரும் பாதிப்பு அடைபவர்கள் அவர்களின் குழந்தைகள். தங்கள் லட்சியங்களுக்கு நேரதிராக குடும்ப வாழ்க்கை இருக்கும்போது அவர்களால் சரியாக சமன் செய்ய இயலாத நிலையில் வெதும்பியே வாழ்கிறார்கள். அதுவும் பெண்கள் படும்பாடு உலகின் எந்த மூலையிலும் ஒன்றேதான். தாய்மை அது எம்மை எதைவிட்டு வேண்டுமானாலும் விலகச் சொல்லும். ஆனால் அதைக் கூட அளந்து கொடுக்க வேண்டிய நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக அப்பெண்கள் தவிக்கும் தவிப்பைச் சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. கலை வாழ்க்கையில் பயணப்படும்போது சிதறிப் போயிருக்கும் குடும்ப வாழ்க்கையை சீர் செய்ய இயலாத நிலையிலே மனமுடைந்து பல கலைஞர்கள் தன் இன்னுயிரை விட்டிருக்கிறார்கள். நாம் மிகவும் விரும்பிய நடிகர்களின் சிலர் வாழ்க்கை இன்னும் கூட அப்படித்தானே தொடர்கிறது?

லிவ் உல்மனின் வாழ்க்கையின் சிலச் சம்பவங்களை கடந்த காலம், நிகழ், மற்றும் அவரின் நினைவுக்குறிப்புகளாக நமக்குப் விவரிக்கப்படுகிறது. புகழின் உச்சியில் நிற்கும் லிவ் சிறுமியாக இருந்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் துறந்து மனம் விரும்பும் நடிப்புத் துறைக்குச் சென்றது, ஐந்து வருடமே நிலைத்திருந்த டாக்டர் ஜாப்பேவிடனுடான மணமுறிவு. மற்றொரு திருமணம், மனக் கசப்பு, அதுவும் முறிந்த நிலை. அதன்பின் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இங்மர்பெர்க்மனை மணந்தது - மகள் லின் பிறந்து வரை நெடுகிலும் லிவ்வின் மனச் சித்தரிப்புகள், உளைச்சல்கள், எழுத்தாக்கம் பெற்றிருக்கின்றன.

“எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ – சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்

-லிவ் உல்மன்


தன்னையும் பெர்க்மனையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள் லிவ் ‘ஒரே கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட ஒரு பெண்ணே அவருடைய கனவில் இருந்தாள். ஆனால் நானோ அவர் கவனமற்று இருந்தால் சிறு தூசியிலும் துகளிலும் கூட மோதி உடைந்து நொறுங்கிப் போகிறவளாயிருக்கிறேன்'.

பெர்க்மனுடைய பொறாமையுணர்வு அவளது சுதந்திரத்தின் எல்லைகளை நிர்ணயித்தபோது பெர்க்மெனையும் பிரிகிறார் லிவ்.

லிவ் உல்மன் கேட்கும் கேள்விகள் காலகாலமாக பெண்கள் கேட்கும் கேள்விகள்:

“ஒரு பெண் தன் தேவைகளுக்கே வேலைக்கு போனால் குழந்தையை அடுத்தவர்களிடம் விட்டுச் செல்கிற குற்றத்துக்கு – குற்றவுணர்விற்கு ஆளாக நேர்கிறது. ஆனால் ஒரு ஆணுக்கு – அவர் ஆணாய் பிறந்துவிட்டதாலேயே வேலைக்குப் போவதற்கு உரிமை பெற்றவராகி விடுகிறார். சகஜமாக எவ்வித குற்றவுணர்விற்கும் உள்ளாகாமல்.”

“பெண்ணை ஒரு ஆணின் பிற்சேர்க்கையாக – பின் இணைப்பாக மட்டுமே பார்க்க முடிகிற எந்த விழாவுக்கும் நிகழ்ச்சிக்கும் போவதை நான் நிறுத்திவிட்டேன்”

“பெண்கள் நேசத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். எத்தனையோ பெண்கள் வீடுகளைவிட்டு வெளியேறினால் நிச்சயமாக இப்போது இருப்பதைப்பார்க்கிலும் சந்தோஷமாக வாழமுடியும். என்றாலும் அவர்கள் வெளியேறுவதில்லை. தங்கள் இருப்பைவிடவும் மற்றவர்களுக்கான தங்களீன் அன்பும் காதலும் முக்கியமென்று கருதுகிறார்கள்”

இந்தக் கவிதையில் தன் விருப்பத்தை இவ்வாறு பட்டியலிடுகிறார் லிவ்.

“நான் பேசவிரும்புகிறேன்
தனிமையைப் பற்றி
இந்த வாழ்வைப் பற்றி
ஒரு பெண்ணாக வாழ்வது
என்றால் என்ன
என்பது பற்றி....”

என் மனதிற்குள் புகுந்துவிட்ட லிவ் உல்மன் வெளியேற மறுக்கிறார். “லிவ் நீ என் மனதுள் வாழ்கிறாய்” என்றேன். புன்னகைக்கிறாள்.


2. அவன் தன்னை வரையவில்லை

இகான் செலீ –ஆஸ்திரிய நாட்டு ஓவியர்.

இளம் வயதிலேயே மரபு சார்ந்த ஓவியத்திலிருந்து விடுபட்டு சுயரூப ஓவியங்கள் செலீயின் விருப்பமாக இருந்தது. தேடலுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த அக்கலைஞனின் பயணம் பரந்துபட்டது. எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டது. “என் ஓவியங்கள் கிழிந்த சுயத்தின் நவீன உணர்தலாகும்’ என்று சொல்கிற செலீயின் படைப்பாற்றல் அபரிதமானது.

அசந்தர்ப்பமான ஒரு சூழலில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறைக்குள் இருந்தபடியே தனது நிர்வாண ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். ‘நான் தண்டிக்கப்படவில்லை, புனிதமாகிக் கொண்டிருக்கிறேன்’ என்றே சொன்னார்.

அலைகழிக்கப்பட்ட கலைஞனான செலீயின் மரணம் போர் கிளப்பிய விஷக்காய்ச்சலில் மனைவி எடித் மடிந்த மூன்றாவது நாளில் நிகழ்ந்தது. இகான் செலீ எழுதிய கவிதையொன்று:

எல்லாவற்றுக்கும் மேலாக
அவன் ஒரு கலைஞன்
மகத்தான ஆன்ம பலம் உடையவன்
வெளிப்படுத்துகிறவன்
உடன் உணர்கிறவன்
நடுக்கும் ஒளி. கதகதப்பு.
மனிதரில் எல்லாம் கூடுதலான
கருணை மிக்கவன்.
தேடிக் கொண்டே இருப்பவன்
அவனது எதிர்துருவத்தில் இருப்பவன்
பழகிய தடத்திலேயே நடந்து தேயும்
இந்தத் தினசரி மனிதன்.


3. கலைந்த கனவும் கலையாத காதலும்


ஃபிரைடோ காலோ – மெக்ஸிகோவின் செல்ல மகள். மிகவும் புகழ் வாய்ந்த ஓவியர். இவரின் துயர் மிகுந்த ஓவியங்களா; கலை உலகம் முழுவதுமையும் ஆழ்ந்த அதிர்வுகளுக்குள்ளாக்கியவர். இவரின் வாழ்வை முன்வைத்து ஃப்ரிடா’ என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.

டியுகோ ரிவேரா எனும் உலகப் புகழ்பெற்ற ஓவியரின் காதல் மனைவியாக வாழ்ந்தவள் ப்ரைடோ. பல இன்னல்களையும் நோய்மைகளையும் கடந்து அவள் வாழ்க்கை ஓவியத்தால் உயிர்ப்பாயிருந்தது. ஃபிரைடோவின் ஓவியங்களின் பெரும்பாலனவை தன்னைத்தானே வரைந்து கொண்ட சுயரூப ஓவியங்களாகும்.

காதல் கணவனுடன் ஏற்பட்ட பிரிவால் கலங்கிப் போன ப்ரைடோ வெகுவாக மனம் பாதிக்கப்பட்டாள், இருவரும் பிரிந்து வெவ்வேறு மணம் செய்துகொண்டாலும் மீண்டும் இணைந்தார்கள். சில வருடங்கள் கழித்து உடல் நலம் குன்றி ஏழு முறை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தபட்டு மனரீதியாக பெரிதும் பாதிப்புக்குள்ளானாள்.

ஒரு நள்ளிரவில் தூக்கத்திலேயே அவள் உயிர் பிரிந்தது. ரிவேரா பெரிதும் பாதிக்கப்பட்டார். அடுத்த இரண்டாவது ஆண்டு தம் சொத்துக்களை தேசத்துக்கு அர்ப்பணம் செய்துவிட்டு ரிவேராவும் மறைந்தார்.

‘தூரத்தில் கடல் என்னை அழைக்கிறது
விடை பெறுகிறேன் என் அன்பே
என்றென்றுமாக விடை பெறுகிறேன்
இனி எப்போதும்
நீ என்னைப் பார்க்க முடியாது
என் பாடல்களைக் கேட்க முடியாது
ஆனால்
கடல்கள் என் கண்ணீரால்
நிரம்பி நுரை பொங்கித் ததும்பி
உனைத்தேடி
கரை நோக்கி ஓடி வரும்.
அன்பே விடை கொடு’

ஃப்ரைடா.

4. வானவில் ஏறித் தப்பிச் சென்றவன்

காகின் – அவருடைய பால்ய காலம் தொட்டே நிழல் போகக் கூட வந்த ஓர் உள்ளுணர்வு ‘தப்பி ஓடி விடு’ என்கிற உந்துதலை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது.

இயற்கையை
அதிகம் நகல் செய்யாதே
கலை ஒரு கற்பனை.
இயற்க்கையின் முன்நின்று கனவுநிலையாகி
அதைக் கொண்டு வரவேண்டும்
கடைசியில் கையில் கிடைக்கப்போகும்
படைப்பு முக்கியமல்ல
படைப்பதே முக்கியம்
க்டவுளை அடைய
ஒரே ஒரு வழிதான் உண்டு
அது – அவர் செய்வதையே
நாமும் செய்வது – படைப்பது.

பெரும் அலைக்கழிப்பிற்குள்ளான காகினின் வாழ்வு முடிவற்ற தேடலாக இருந்தது. ஐரோப்பிய நாகரிக வாழ்வை அரவே வெறுத்த அவரின் உள்ளுக்குள் இருந்த ஆதி மனிதனின் அழைப்பை ஏற்று அவர் கடைசியில் கடல் கடந்து பாபீட் எனும் தன் கற்பனை பழங்குடிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. நாகரிக வாழ்வின் சாயல் அங்கும் அரும்பியிருந்தது. பின் அங்கிருந்து தப்பி அவர் சென்றடைந்த இடமான தகித் அவருக்கு பிடித்துவிட்டது. ஆடைகள் அணியாத கிராம மக்கள், ‘கடை’கள் இல்லாத இயற்கையை நம்பி வாழ்கின்ற ஆதிவாசி மக்களைக் கண்டதும் அவர் மனம் துள்ளிக் குதித்தது. அங்கேயே தங்கி சில நாளில் அவ்வினப் பெண்களுள் ஒருத்தியான டெகுராவை மணந்து அவ்வாழ்வில் ஐக்கியமானர்; பல ஓவியங்களை வரைந்து தீர்த்தார். இதற்கிடையில் குழந்தைகள் பிறந்தன.

காகின் மனைவியின் மீது சந்தேகித்து தவிர்க்கமுடியாமல் தன் ஊருக்கு செல்ல நேரிட்டது. கிட்டத்தட்ட காட்டுமிராண்டியாகிவிட்ட அவரால் நகரில் ஒட்டமுடியவில்லை. வெறுப்புகளாலும், பல சோதனைகள் மற்றும் அலைக்கழிப்புகளின் பின்னர் மீண்டும் தகித்திற்கே திரும்புகிறார். ஓவியத்தை மட்டும் நிறுத்தாமல் வரைந்து கொண்டேயிருந்தார் இறுதி மூச்சுவரையிலும்.

தனது கடைசி உயில் போல ‘நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் என்னவாக இருக்கிறோம் நாம் எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் மிகப் பெரிய கேன்வாஸ் ஒன்றில் ஓவியம் வரைந்து அந்த ஓவியத்தின் மை உலரும் முன்பே விஷம் குடித்து மலைப்பாதைகளின் நடுவே செத்து மடிந்தார்....மரணத்துடன் இரண்டறக் கலந்தார்.



5. ஒப்பனையற்று ஒளிர்ந்தவள்

லிவ் உல்மனை விடவும் மேலதிகமாக என்னை ஈர்த்தவர் இங்ரிட் பெர்க்மென்

இங்ரிட் பெர்க்மென் இரண்டு வயதிலேயே தாயை இழந்தவள். தந்தையால் கண்ணின் இமையாக போற்றி வளர்க்கப்பட்டு அத்தந்தையும் அவரின் பதின்ம வயதில் இறந்துவிடுகிறார். அதன்பின் மாமாவின் கட்டுப்பாட்டில் வளர்கிறாள். வாழ்வின் பெருந்துயரை மிக சிறிய வயதில் தாங்கித் அதைக் கடந்து வந்தவள் இங்ரிட். தன் மனதிற்கு பிடித்தவற்றை எவ்வித ஆர்ப்பாட்டங்களின்றி செயல்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தவள். தன் உயிருக்கு நிகரான ஒரே விதயம் நடிப்பு என்பதை சிறு வயதிலேயே உணர்ந்து அதன் நூல் பிடித்து அயராது போராடி வென்றவள். அந்தக் காலகட்டத்து ரசிகர்களை பித்தேற வைத்த அற்புதமான நடிகை. வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது அகவுணர்வுகளாலும் இங்ரிட் இனிமையானவள். மிகவும் இயல்பானவள், தன்மானத்தை எந்த நிலையிலும் அடகு வைக்காதவள்.

என்னைக் கவர்ந்த அவளின் வார்த்தைகள், எல்லாப் பெண்களுக்குமானது.

“ஆண்கள், அப்பாக்கள், கணவன்மார்கள், பெண்களுக்காக தாங்களே எல்லா வேலைகளையும் செய்து, எல்லா முடிவுகளையும் தாங்களே எடுத்து என பெண்களை ஒன்றுக்கும் லாயக்கற்றவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். சார்ந்து வாழும் பிராணிகளாகப் பெண்களை வளர்த்தெடுக்கவே ஆண்கள் பெரிதும் விரும்புவார்கள். காலப்போக்கில் பெண்ணும் அவ்வண்ணமே ஆகி விடுகிறாள். அடைக்கலமாகி சரணடையத்தக்க பரந்த ஆண் மார்பைத் தேடுகிறவளாக ஆக்கப்பட்டுவிடுகிறாள்.”

ஒரு நடிகையாக மிகப் பெரிய வெற்றியையும், உலகப் புகழும், விருதுகளும் அள்ளிக் குவித்த இங்ரிட்டின் தனிப்பட்ட வாழ்வு பல மேடு பள்ளங்களை உடையதாகவே இருந்தது. முதல் கணவன் பீட்டர் அவர்களின் மகள் பியா இருவரையும் மற்றொருவரின் மீதேற்பட்ட காதலினால் பிரிய நேரிட்டதும் பெரும் குற்றவுணர்விற்குள்ளானாள் இங்ரிட். பீட்டர் இங்ரிட்டை பொம்மை மனைவியாகவே பாவித்துவந்தார். தன் கட்டுக்குள் அவளை அடக்கிவைக்க முயன்றவரின் கையை மீறி காட்டாற்று வெள்ளமாக பரவியது அந்த ஜீவநதி.

“நம் எல்லோருக்கும் வழங்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதை அவரவர் நம்பிக்கையின் படிதான் வாழ முடியும். அதை வேறு எதற்காகவும் அர்ப்பணிக்க முடியாது. அது மரணத்தைவிடக் கொடுமையானது.” இங்ரிட் தன் முடிவில் உறுதியாக இருந்து பீட்டரைப் பிரிந்தாள்.

காதல் அவளுள் நிரம்பித் ததும்பியது. தன்னுடன் நடிக்கும் சக படைப்பாளிகளை அவள் அப்படப்பிடிப்பு முடியும் வரையிலும் மனதாரவே நேசித்தாள். அவள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஆண்களாக பீட்டர், காபா, ரொபார்டோ ரொஸ்ஸலினி இவர்கள்தான். இதில் காபாவை அவள் மணக்கவில்லை. ஆனால் அவரை மிகவும் நேசித்திருந்தாள். முதல் கணவர் பீட்டரைப் பிரிந்து மிகவும் நேசித்த ரோபர்கோவை மணந்தாள். மூன்று குழந்தைகள் பிறந்தபின் அவரையும் பிரியும் சூழல் அவள் வாழ்வில் வந்தது. கலங்கிப் போனாலும் ஓய்ந்துவிடவில்லை இங்ரிட். நான்கு குழந்தைகள் பெற்றும் ஒரு குழந்தையுடனும் சேர்ந்து வாழ வாய்க்காத தன் வாழ்க்கை குறித்து இங்ரிட் வேதனை கொண்டாள். ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் மீண்டெழுந்தாள்.

அவள் கனவுப் பாத்திரமான ஃப்ரான்சின் பிரிய மகள் 'ஜோனாக நடிக்க பெரும் விருப்பத்துடன் இருந்தாள். பல மேடை நாடகங்களில் தன் பேச்சால், நடிப்பால் வசீகரத்தால் ரசிகர்களை உலகை மறக்கச் செய்த தாரகை இங்ரிட். அவள் ஆசைப்பட்ட ஜோன் வேடத்தில் நடித்ததும் அவளின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை 'ஜோன் ஆஃப் ஆர்க்' பெரிய வெற்றிப் படமாக அமையாவிட்டாலும், ரசிகர்களால் விரும்பப்பட்ட திரைக்காவியமாக காலத்தை வென்று நின்றது.மூன்று முறை ஆஸ்கர் விருதைப் பெற்றிருந்த இங்ரிட் பெர்க்மென் மார்புகப் புற்றுநோயால் எட்டு ஆண்டுகள் துன்பப்பட்டு இறுதிவரை நடிப்பை கைவிடாது காற்றில் கரைந்தாள்....

அடிக்கடி டைரியில் ‘அன்புள்ள புத்தகமே’ என விளித்து தன் மனவோட்டத்தைப் பதிவு செய்யும் வழக்கத்தினவளான இங்ரிட்டின் கடைசிப் பதிவு:

அன்புள்ள புத்தகமே..

மேடையில் நடிக்கும் காலம் ஒருநாள் முடிவுக்கு வரலாம். அப்போதும் என்னால் நடிக்காமல் இருக்க முடியாது. கிறுஸ்துமஸ் போன்ற விழாக்களில் தெருக்களில் வேடமிட்டுச் செல்லும் ஒரு சூனியக் கிழவியாகவாவது நான் நடித்துக்கொண்டுதான் இருப்பேன்”


(புகைப்படத்தில் இங்ரிட் பெர்க்மென்)

புதன், 1 ஏப்ரல், 2009

பட்டாம்பூச்சி விருது

எனக்கு பட்டாம்பூச்சி விருதை அளித்த நண்பர் அகநாழிகைக்கு நன்றி. http://aganaazhigai.blogspot.com/2009/03/blog-post_31.html

ஆசிப் அண்ணாச்சி பட்டாம்பூச்சி விருதை பகடி செய்துள்ளார் http://asifmeeran.blogspot.com/ . அவரின் எள்ளல் சற்று அதிகமேயாயினும் அவ்விருதை தனக்கே முதலாக அளித்துக் கொண்டமைக்காக பாராட்டலாம்.

வாழ்த்திய அனைத்து நட்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

இந்தப் பட்டாம்பூச்சியை நான் இப்போது இவர்களிடம் பறக்கவிடுகிறேன்...

அஜயன் பாலா -

நிலா ரசிகன் - http://www.nilaraseeganonline.com

மணிமேகலா - http://akshayapaathram.blogspot.com/

அஜயன் பாலா - http://ajayanbala.blogspot.com/

வாழ்த்துக்கள் தோழமைகளே!