சனி, 30 மே, 2009

காற்றில் கரைந்த வார்த்தைகள்



‘கதிரேசன் வாராணாம் கடுதாசி வந்திருக்கு’ ஆபிஸிலிருந்து வந்த அம்மாவிடம் அந்த இன்லெண்ட் லெட்டரை நீட்டினாள் ஆச்சி. களைப்புடன் வந்த சாரதா வள்ளென்று விழுந்தாள், ‘இப்ப எதுக்கு வரான் இங்க, நேரா ராஜி வீட்டுக்குப் போக வேண்டியதுதான? அவன் வரான்னாலே வெறுப்பாத்தான் இருக்கு..’ முணுமுணுத்தபடி முகம் கழுவினாள். ஆச்சி போட்டுத் தந்த காபியை குடித்துவிட்டு பொறுமையாக அந்த லெட்டரை வாசித்தாள்.

கதிர் மாமாவை திட்டினாலும் ஆச்சிக்கும் அம்மாவிற்கும் அவர் மீது தனிப் பிரியம் எப்போதும் உண்டு என்று எனக்குத் தெரியும்.

‘நாளைக்கு நான் பெர்மிஷன் போட்டுட்டு செண்டரல் போய் அவனை கூட்டிட்டு வரேன். நீ அவனுக்கு பிடிச்சதை சமைச்சு வை, இல்ல அதுக்கு ஒரு பாட்டம் நொய் நொய்ம்பான்’.

ஆச்சியின் தங்கை சரஸ்வதி வரிசையாக பெற்ற பிள்ளைச் செல்வங்கள் எல்லாம் வரிசையாக இறந்து போக எஞ்சியவர்கள் கதிரேசன் மாமாவும் ராஜி சித்தியும்தானாம். ராஜிக்கு ஒரு வயதிருக்கும் போது சரசு காசம் வந்து சரியான மருத்துவம் இல்லாமல் இறந்து போனாள் கண்ணைக் கசக்கிக்கொண்டே ஆச்சி இக்கதையை சில தடவை சொல்லியிருக்கிறாள். ‘கதிரு’ என்று அவள் கூப்பிடுவதே அன்பின் குரலால்தான். சரசுவின் கணவர் ஆறுமுகம் மனைவி போன அடுத்த வருஷமே மறுகல்யாணம் செய்துகொண்டார். பாஸ்கர், ரவி, சீனு, லல்லி என வரிசையாக அவர்கள் வீட்டில் மழலைப் பட்டாளம் அணிவகுத்திருக்குமாம். அம்மா கல்லடைக்குறிச்சிக்கு போகும்போதெல்லாம் நன்றாக உபசரித்து பிரியமாக இருப்பாராம். ரயில்வே ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விட்டுவிட்டு அவளுக்குப் பிடித்த பணியாரங்களையும் பண்டங்களையும் தூக்குச் சட்டியில் அடைத்துக் கொடுப்பார் ஆறுமுகம் தாத்தா.

புதுச் சித்தியின் குணம் மோசமில்லையானாலும் மூத்த தாரத்தின் பிள்ளைகள் இரண்டாம் பிரஜைகள்தான். இவர்களுக்கு மிஞ்சியதுதான் அவர்களுக்கு என்றானது. பத்தாவது பெயிலானதும் அய்யாவின் அடி உதைக்கு பயந்து கதிர் ஊரைவிட்டு ஓடிவிட்டாராம். அதன்பின் பதினைந்து வருடங்கள் கழித்துதான் ஊர் திரும்பினார்.

கதிர் மாமாவின் கதை எனக்கு அலுக்கவே அலுக்காத சுவாரஸ்யமான கதை. ஒவ்வொரு ஆண்டும் தில்லியிலிருந்து சென்னைக்கு வரும் போது எங்கள் வீட்டில்தான் அதிக நாள் தங்குவார். ராஜி சித்தியின் வீடு மதுரையில் இருக்கிறது. ஒன்றிரண்டு நாள் மட்டுமே போய் வருவார். மற்றபடி அவர் சுதந்திரமாக இருக்க விரும்பும் வீடு எங்கள் வீடுதான்.

ஊரை விட்டு ஓடிய அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என எங்களுக்குக் கதை போல சொல்வார். கல்லடைக்குறிச்சியில்ரிந்து லாரி, பஸ் மற்றும் ரயில் ஏறி அவர் கடைசியில் வந்து சேர்ந்த இடம் இந்தியாவின் தலைநகரம். அலைந்து திரிந்து பசி பட்டினியால் வாடிய அவர் எதேச்சையாக சந்தித்த தமிழ்த் தம்பதியிடம் தன் கதையை சொல்லியிருக்கிறார். அவர்கள் இவரை அழைத்துச் சென்று சாப்பாடு போட்டு அவர்கள் வீட்டிலேயே தங்களின் மகனுடன் சேர்த்து இவரையும் சொந்த பிள்ளையாகவே நினைத்து வளர்க்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஆசாரமான பிராமண குடும்பத்தவர்கள், இவர் என்ற காரணத்தாலும், இவர் முகத்தின் தேஜஸ்சிலும் ஈர்க்கப்பட்டு அவரை தங்களில் ஒருவராக ஆக்கிக்கொண்டார்கள். கதிர் மாமாவும் பழசையெல்லாம் மறந்து நன்றாக படித்து அதன் பின் தில்லியில் டிபென்ஸ் ஆபிஸில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.

வளர்ப்பு பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட அண்ணன் ராகவன் திருமணத்திற்கு பிறகு அங்கிருக்க சங்கடமாக இருந்ததால் தனியாக ஒரு அறை எடுத்து தானே சமைத்து வாழத்தொடங்கியிருந்தார். ஊரின் ஞாபகங்கள் விடாமல் அவரை வதைத்தபடி இருந்ததால் ஒரு நாள் கடிதம் எழுதி தான் இருக்கும் இடத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தினார். அவர் உயிரோட இருந்ததை நினைத்து அம்மாவும் ஆச்சியும் மிகவும் மகிழ்ந்தார்கள். உறவுகள் புதுப்பித்தன. லெட்டர் மேல் லெட்டர் போட்டு அவரை வரவழைத்துவிட்டார்கள். அதன் பின் எப்போது லீவ் கிடைத்தாலும் அவர் வந்து போகும் இடம் எங்கள் வீடாகியது.

நானும் தம்பி ரவியும் அக்கதையை எத்தனை முறை கேட்டிருந்தாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்போம். கதை முடிந்ததும் ‘மாமா யூ ஆர் ரியலி க்ரேட்’ என்று சொல்லிவிட்டு அவர் எங்களுக்காக வாங்கி வந்திருந்த கால்குலேட்டர், சாக்லெட்டுகள், பொம்மைகளை அள்ளிக் கொண்டு எங்கள் அறைக்குப் போய்விடுவோம்.

கதிர் மாமா ஒரு தீவிரமான ஒழுக்கவாதி. அவர் வீட்டில் இருந்தால் வீடு படு சுத்தமாக இருக்கவேண்டும். அம்மா ஆபிஸ் போய் வருபவள், ஆச்சி வயதானவர், சமைப்பதைத் தவிர நிறைய வேலைகள் செய்ய முடியாது. வேலைக்காரி செண்பகம் பாத்திரம் தேய்த்து துணி துவைத்துப் போய்விடுவாள். வீட்டைப் பெறுக்கி துடைக்கும் வேலை எனதாக இருந்தது. நான் எவ்வளவு நீட்டாகப் பெருக்கினாலும் மாமா எப்படியாவது ஒரு தூசியை தும்பை கண்டுபிடித்துவிடுவார். ஆச்சி எவ்வளவு பாத்து பாத்து சமைத்தாலும் அதில் எதாவது நொள்ளை நொட்டை சொல்லுவார். என் அம்மாவிடம் அடிக்கடி சண்டை போடுவார், ‘அக்கா,உனக்கு புருஷனும் சரியில்லை, பிள்ளைங்களும் சரியில்லை, பாரு பொண்ணா லட்சணமாவா இருக்கா, எப்ப பாரு டீவி, பிரண்ட்சுன்னு சுத்தறா உன் பொண்ணு, பையனா வீட்டில தங்க மாட்டேங்கறான். இதுங்கல்லாம் வளர்ந்து என்னத்தை சாதிக்க போகுதுங்களோ, கிரகச்சாரம் என் தலையெழுத்து இங்க எனக்கு போக்கிடம் இல்லாம இங்க வந்து தொலைக்க வேண்டிருக்கு என ஆரம்பித்து வசைமாறி பொழிவார். அம்மா பதில் ஏதும் சொல்லாமல் கண்களில் நீர் துளிக்க மிகுந்த மனம் வருத்தம் அடைவாள். ஆச்சி சமாதானமாக ‘விடு சாரதா, தாயில்லாத பிள்ளை, எங்கிட்டோ தட்டுத்தடுமாறி வளர்ந்திருக்கு, நாமதான் அனுசரிச்சுப் போகணும், ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சா வழிக்கு வந்துடுவான்’. என்றாள்.

அதன்பின் மாமாவிற்கு பெண் தேடும் படலம் ஆரம்பமாகியது. எந்தப் பெண்ணின் புகைப்படத்தை காட்டினாலும் இவள் மூக்கு சரியில்லை, முழி சரியில்லை, இவள் உயரம், அவள் குட்டை, என்று வருடா வருடம் வரும்போது அம்மா காண்பிக்கும் அத்தனை போட்டோக்களையும் ரிஜெக்ட் செய்துவிடுவார். இதற்கிடையில் ராஜி சித்திக்கு கல்யாணம் செய்துவைத்தார். மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன் மிகவும் நல்லவர். அவரும் தன் பங்கிற்கு பல வரன்களை இவருக்காகப் பார்த்து சலித்து கடைசியில் தன் தங்கை விசாலாட்சியை இவரின் குணநலன்கள் தெரிந்தும் கட்டி வைக்க முன் வந்தார். ஏதோ ஒரு நல்ல மூடில் விசாலத்தை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டார் கதிர் மாமா.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் பனிரெண்டாம் வகுப்பும் ரவி பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தோம். கல்யாணம் நல்லபடியாகவே முடிந்தது. ஆயிரம் குறைகள் சொல்லி அனைவரையும் வசைபாடித் தீர்த்துவிட்டார் கதிர் மாமா. இவரின் ஆவேசங்களை விசாலி அத்தை பயத்தில் உறைந்து போயிருந்தாள். ஒருவழியாய் அவர் சாமியாட்டத்தை நிறுத்தி சென்னை, மதுரை, கல்லடைக்குறிச்சியில் உறவினர்களின் விருந்து உபசாரங்கள் முடிந்து தில்லிக்கு அவரை ஏற்றி அனுப்புவதற்குள் அம்மாவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

ஒரு மாதமிருக்கும். ஊரிலிருந்து போன் வந்தது. கதிர் மாமாதான். மிகவும் ஆத்திரத்துடன் பேசினார். விசாலி அத்தை அவரிடம் கோவித்துக் கொண்டு பிறந்தவீட்டிற்கு போய்விட்டாளாம். நீ ப்ளான் பண்ணி என் வாழ்க்கையை சீரழிச்சிட்டே என்று அம்மாவுக்கு ஒரே வசவு. ரொம்ப தேவைதான் எனக்கு இது என எரிச்சலுடன் போனை வைக்கும் போது ‘உன்னோட குடைச்சலை அவ்வளவு நாள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம், நீ உன்னோட ஈகோ, கோபதாபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு சராசரி மனுஷனா இரு, அப்ப உன் பொண்டாட்டி தானே வருவா...இப்படி போன்ல கத்தற வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதே என்று அம்மாவும் திருப்பி திட்டிவிட்டாள். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மாமா படாரென்று போனை அறைந்து வைத்துவிட்டார். ‘இவனோட எல்லாம் மனுஷி வாழ முடியுமா, காட்டுப்பய, திட்டியபடி அம்மா ஆபிஸ் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

ஆச்சிக்குத்தான் மனம் சங்கடமாகிவிட்டது. இந்தப் புள்ளைக்கு ஏன் இப்படி கோபம், இவன் சுபாவத்தால இப்படி சீரழிஞ்சுப் போறானே என்று மாய்ந்து மாய்ந்து புலம்பிக்கொண்டிருந்தாள். தில்லிக்கு போய் அவரிடம் நேரிடியாக பேசி பஞ்சாயம் செய்து வைக்க முற்பட்டபோதும் அவர் சற்றும் இறங்கிவரவில்லை. கடைசியில் ‘அந்த ஓடுகாலி முண்டை என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா சேர்ந்து வாழறதைப்பத்தி யோசிக்கறேன், இல்லைன்னா அவ எக்கேடு கெட்டு அழிஞ்சு போனாலும் எனக்கு கவலையில்லை. ஆச்சி மதுரைக்கு வந்து இதைச் சொல்லியது விசாலி அத்தை தீர்மானமாக மறுத்துவிட்டாள். ‘இங்க பாருங்க அத்தை இவர் சாதரணமா இருந்தா பிரியமாத்தான் இருக்கார், ஆனா கோபம் வந்துட்டா ரொம்ப ஏசறார் என்னால அந்த வார்த்தைகளை தாங்கிக்க முடியலை, மனுஷன் வாயில தேள் தான் இருக்கு, அந்த முண்டை இந்த முண்டைனு காதால கேக்க முடியாத அளவுக்கு வசவு, எப்ப கோபம் வரும்னே தெரியாது, ஒரு நாள் தட்டை என் முகத்துல வீசி எறிஞ்சார், இன்னொரு நாள் முடியைப் பிடிச்சு இழுத்து சுவத்துல தள்ளிட்டார். நானும் மனுஷிதானே எனக்கு கோபம் வராது? என்னால இதையெல்லாம் தாங்கிக்க முடியாது. கூழோ கஞ்சியோ நான் சின்னதா ஒரு பொட்டிக் கடை வச்சி பொழைச்சிப்பேன், போதும் ஆத்தா என்னிய விட்டுடுங்க என்று கதறி அழுதாள்.

அவரிடம் இந்த செய்தி போனபோது ஏகத்துக்கு கலாட்டா செய்துவிட்டார். ‘பொட்டைச் சிறுக்கிக்கு இத்தனை ஆங்காரம் கூடாது பெரியம்மை, அவ எனக்கு சரிப்பட்டு வரமாட்டா, ரெண்டு இழுப்புத்தான் இழுத்தேன், என்னவோ கொன்னு போட்ட மாதிரியில்ல ஊரைக் கூட்டிட்டா, நான் மானம் மரியாதையோட இந்த ஊர்ல பொழைக்கறவன், வக்கத்தவன் இல்ல சுளையா எட்டாயிரம் சம்பாதிக்கறேன், கேடுகெட்டவளுக்கு இருக்கு பிடிக்கலைன்னா செத்து ஒழியட்டும், தலை முழுகிக்கறேன், இனி யாரும் அவ கதையை எடுத்துட்டு இந்தப் பக்கம் வந்தீங்கன்னா உங்களுக்கு தலை முழுகல்தான். என்று ஆவேசமாக கத்தித் தீர்த்தவரைப் பார்த்து ஆச்சியே அந்த விஷயத்திற்கு அத்துடன் முற்றுப் புள்ளி வைத்துவிட்டாள்..

யார் சொல்லியும் கேட்காமல் அவர் தன் போக்கில் பணத்திமிருடன் பேசியதால் அவரிடம் எங்கள் குடும்பம் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது. ஆறு வருடம் கழித்து என் திருமணத்திற்கு வந்து ஐந்தாயிரம் ரூபாய் அம்மாவிடம் குடுத்து அவளுக்கு பிடித்த நகை வாங்கிக் கொடு என்றிருக்கிறார். அம்மா கல்யாண செலவிற்கு அதை உபயோகப்படுத்திக்கொண்டாள். தம்பி ரவியின் கல்யாணத்திற்கு அவரால் வர முடியவில்லை, கூரியரில் செக் அனுப்பியிருந்தார், ஆயிரம் ரூபாய்.
மாமாவிடம் குறைசொல்லவே முடியாத சில நல்ல குணங்களும் இருக்கின்றன. முறைகள் கட்டுக்களை எல்லாம் சரியாக செய்துவிடுவார். அன்பிலும் குறைவில்லை. ஆனால் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷத்தை விடக் கொடியவை. வயிற்றில் குத்தி முதுகின் வழியாக வெளிவருபவை. அத்தனை வலி, ஆனால் ஒன்றுமே தெரியாத மாதிரி தான் பேசியது எல்லாம் சரியே எனும்படி செயல்படுவதுதான் எல்லோருக்கும் வெறுப்பாக இருக்கும். சமீபத்தில் ராஜி சித்தியை அசிங்கமாகத் திட்டி தமிழ்ச் சித்தப்பா கதிர் மாமாவை செமத்தியாக அடித்த கதை எங்களுக்கு பிற்பாடு ஆச்சி சொல்லித்தான் தெரியும். அவரவர் வாழ்க்கையின் பிரச்சனைகளில் அமிழ்ந்து கதிர் மாமாவை கிட்டத்தட்ட மறந்திருந்தோம்.

அதன் பத்து வருடங்கள் கழித்து ஆச்சி இறந்த வீட்டிற்கு வந்திருந்தார். மிகவும் அமைதியாக காணப்பட்ட அவரைப் பார்த்த எங்களுக்கு பரிதாபமாக இருந்தது. காரியங்கள் எல்லாம் முடிந்தபின் அம்மா அவரிடம் ‘என்னடா கதிரு ஏன் இப்படி ஆயிட்டே’ என்று கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.

‘எனக்கு நல்லா வேணும்க்கா, இதுக்கு மேல எதாவத் தண்டனை இருந்தா அதுவும் தகும்தான். எனக்கு கான்சர் வந்திருக்குக்கா, அதுவும் எலும்புல, ப்ளட் ப்ளேட்லட் ரொம்ப குறைச்சலா இருக்காம், ரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய முடியாம இருக்காம். ரொம்ப ஷீனமாயிட்டேன்கா.. எல்லா வைத்திமும் பண்ணிட்டேன், தினமும் உடம்புல ரத்தம் ஏத்திக்கிட்டாத்தான் உயிர் வாழ முடியும். ஆனா அது பிராக்டிக்கலா சாத்தியம் இல்லை. டாக்டர்ஸ் மாற்று வைத்தியத்தைப் பத்தி யோசிச்சிட்டிருக்காங்க..ஆனா நான் செத்துக்கிட்டிருக்கேன்...ஒவ்வொரு நொடியும் சாவை எதிர்ப்பார்த்துட்டிருக்கேன். கடைசியா உங்களை எல்லாம் ஒரு தடவை பாக்கத்தான் வந்தேன். இந்தா இதுல நம்ம செல்விக்கு கொஞ்சம் பணம் வச்சிருக்கேன், இது உனக்கு. ராஜியை நாளைக்கு பாக்கப்போறேன் அவளுக்கு ஒரு வீடு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கேன். அப்பறம் விசாலிக்கு என்னோட மத்த பணத்தையும், நான் செத்ததும் வர பணமும், ஆயுள் முழுக்க பென்ஷனும் அவளுக்குப் போகணும்னு எழுதி வைச்சிருக்கேன். பாவம் என்னால அவ வாழ்க்கையே அழிஞ்சிடுச்சு. பணத்தைத் தவிர வேற எதையும் என்னால் தர முடியலைக்கா. என் ரத்தம் சூடா இருந்தவரை எல்லாரையும் சுடுசொற்காளாலயும் என் செய்கைகளாலும் டார்ச்சர் பண்னேன், குத்தம் குறை கண்டுபிடிச்சு வஞ்சேன் அதுக்குத்தான் இவ்வளவு பெரிய தண்டனை கிடைச்சிருச்சு. எல்லாம் நன்மைக்கே, நான் நிறைய பட்டுட்டேன்க்கா, இப்ப நான் வடக்கே ஒரு ஆசிரமத்துக்கு போகப் போரேன், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செஞ்சு என்ன பிரயோசனம், அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா என் மனைவிக்கு நல்ல கணவனா இருக்கணும்னு வேண்டிக்கறேன் அக்கா, நீ என்னை வெறுத்துடாதே....”என்று குழந்தை போல தேம்பிக் கொண்டிருந்தார்.

அம்மா கண்களில் நீர் வழிய அவருக்கு ஆறுதல் சொன்னாள். அன்று நீண்ட நேரம் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அம்மா எவ்வளவு சொல்லி தடுத்தும் கேளாமல் ரிஷிகேஷ் சென்றுவிட்டார். எங்களுக்கும் கலக்கமாகவும் சங்க்டமாகவும் இருந்தது. அவர் தந்த பணத்தை கேன்சர் நிதியுதவிக்குத் தந்துவிட்டோம். கதிர் மாமாவிற்காக நாங்கள் தினமும் விளக்கு ஏற்றி கும்பிடுகிறோம், அதிக வலியில்லாம் அவரின் உயிர் பிரிவதற்காக.

- முற்றும் -













வெள்ளி, 29 மே, 2009

தீர்ந்து போகாத தனிமை


கடந்த சில நாள்களாக உடல் நலம் சரியில்லாமல் கஷ்டப்பட்டேன். இலங்கைச் செய்திகள் மற்றும் வேறு சில விஷயங்களால் மனம் அலைக்கழிக்கப்பட்டு அமைதியற்று கிடந்தேன். சில நிகழ்வுகள் என்னை மீட்டெடுக்கச் செய்ய உதவின.


* நெடுமாறன் ஐயாவின் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டு பீச் ரோட்டில் கோஷம் போட்டு இனம் தெரியாத மனக் கலக்கத்துடன் தமிழ்நதியுடன் நடந்து போனேன். மனது வெறுத்துப் போய் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்து நடைபிணம் போல நகர்வலம் போனோம். கோஷங்கள் மேடைப்பேச்சுகள் வேறு வழியில்லை. சத்தம் எழுப்பிக் கொண்டேயிருந்தால்தான் சில கதவுகள் திறக்கும் அல்லது சத்ததின் வீரியத்தால் உடைபடும்.

* ஆபிஸுக்கும் லீவ் போட்டுவிட்டு வீட்டில் என்னை நானே தனிமைச் சிறைப்படுத்திக் கொண்டேன். சில புத்தகங்கள் வாசித்தேன். டிவிடியில் படம் பார்த்தேன்.(In The Mood For Love, Hold On, The Wednesday, Baron). ஏதோ ஒன்றை இழந்த துக்கம் போல ஒன்று என்னை அரித்துத் தின்றுக் கொண்டிருந்தது. ஆனால் நீண்ட நேரம் என்னால் இப்படி ஒரு மனநிலையில் இருக்கமுடியவில்லை. என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ‘பசங்க’ திரைப்படத்திற்குப் போனேன். அவர்களுக்கு வேண்டியவற்றை வாங்கித் தந்து அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் எனக்கான நிம்மதியை கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டேன். பிள்ளைகளுக்கு அத்திரைப்படம் வெகுவாக பிடித்திருந்தது. எனக்குக் கூட. (விமர்சனம் எழுதக் கூட இயலாத மனநிலை) வழியனுப்பிய ரயில் என்று ஒரு சிறுகதை எழுதினேன். எடிட் செய்யக் கூட பிடிக்காமல் அதை அப்படியே ப்ளாக்கில் போட்டேன்.

*சரா (கணவர்) ஊரிலிருந்து வந்ததும் என்னை விட்டுவிட்டு பசங்களோட படம் போனியா என்று கோபித்துக் கொண்டார். நீ என்னைவிட்டு ஊருக்கு போனது என் மனத் துயருக்கு மற்றொரு காரணம் என்றதும் அவரால் பேச இயலவில்லை. அடிக்கடி எனக்கு கிறுக்கு பிடிக்கும் என்பது அவரைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்? சமாதானக் கொடியுடன் அவருடன் ‘அயன்’ படம் போனேன். படம் எங்களை அவ்வளவாக கவரவில்லை. தவிர்க்க முடியாமல் Maria Full of Grace என்ற படமும் parallel ஆக நினைவுத் திரையில் ஓடிக் கொண்டேயிருந்தது. நாங்கள் காதலித்த தினங்களை நினைவிற்கு கொண்டு வந்ததைத் தவிர வேறு எதையும் சிறப்பாக அத்திரைப்படத்தில் சொல்ல ஏலவில்லை. ஆனந்திடம் சூர்யாவிடம் இதை எதிர்ப்பார்க்கவில்லை. நல்ல வேளை சர்வம் போகலாம் என்று நான் சொன்னதற்கு பிடிவாதமாய் மறுத்த சராவை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.

* வால்மீகி திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் ப்ரஸ் மீட்டிற்கு போனேன். சத்யத்தில் ஆடியோ ரிலீஸ் அதன்பின் GRT யில் பஃபே லன்ச் அதன்பின் ப்ரஸ்மீட். விகடன் மீடியாவின் விளம்பரங்கள் ரசிக்கும்படியாக இருந்தன. வால்மீகி எதிர்ப்பார்ப்பிற்குரிய படமாகிவிட்டது.

இந்நேரத்தில் என்னை தினமும் போனில் விசாரித்தும் மெசேஜ் அனுப்பியும் வாழ்த்திய என் தோழமைகளை நினைத்து மனம் நெகிழ்ந்தேன்.

நம்மை நமக்கு மீட்டுத் தர சிலசமயம் புறக் காரணிகள் தேவைப்படுகின்றன. இதோ சலவை செய்யப்பட்ட நிலவினைப் போல மனம் தெளிவடைந்து விட்டது. மீண்டும் கரைகள் தோன்ற சில நாள்கள் ஆகும். கரை அழகு என்ற விளம்பரம் பிடிக்கிறது. வாழ்க்கை இவ்விதம், நானும் இவ்விதமே...

புதன், 27 மே, 2009

வழியனுப்பிய ரயில்




ஸ்ரீநேசனை ஏன் சந்திக்க வேண்டும் இப்படி உடலும் உயிரும் உருகிக் கரைய வேண்டும். ஆனால் அது நிகழ்ந்துவிட்டது; உள்மனதால் அவனை நான் தேடி அலைந்து கண்டுபிடித்திருக்கிறேன். ஆனால் வெகு தாமதமாய். எல்லாம் முடிந்து போன திரையில் கடைசிக் காட்சியாய்.

அன்று சரியான மழை. மழை சுமக்கும் மழையாய் நான் நனைய நனைய காற்றில் கலந்திருந்த மண் நுகர்ந்து கொண்டே ரயில் நிலைத்திற்கு விரைந்தேன். வழக்கமாய் ஏறும் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் வழியில் நின்றிருந்த ஒருவனின் கால்களை மிதித்துவிட்டேன்.

ஸ்ஸ்’ என்றான் வலியில் முகம் சுருங்கி விட்டது அவனுக்கு. எனக்கு சங்கடமாகிவிட்டது. ஹை ஹீல்ஸ் மிதி.

‘சாரிங்க என்றேன் பதட்டமாக.

வலியுடன் ‘இட்ஸ் ஓகே’ பரவால்ல வலிக்கலை, என்றான்.

அதன்பின் அவன் முகம் அடிக்கடி தட்டுப்பட்டது. முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் பதிவாய் வருபவர்களின் முகம் பரிச்சயமாய் இருக்கும். ஆனால் இவன் எப்போதாவதுதான் வருகிறான். திடீரென்று அவனைப் பார்க்கும்போதெல்லாம் அந்த மிதியும் அவன் பதிலும் நினைவுக்கு வர எனக்குள் சிரித்துக் கொள்வேன். அழகான பயணமாய் ஒரு நட்பின் ஆரம்பங்கள் துளிர்த்தது, பின் சின்ன சின்ன வார்த்தைப் பரிமாற்றங்களில் அது மேலும் செழித்தது. ஆத்மநாமின் படைப்புகள் என்ற புத்தகத்தை அவன் கைகளில் பார்த்த அன்று அதிக நேரம் அவனுடன் பேசினேன். என்னைப் போன்றே தேடல்களிலும் ரசனைகளிலும் தேர்ந்தவன். அவனும் என்னை ஆத்மார்த்தமாய் தேடியிருக்கிறான். அதனால்தான் அவனருகே வந்திருக்கிறேன். ஆறே மாதத்தில் நெருக்கமாகி இறுதியில் ஒருவரையொருவர் கண்டடைந்தோம். இப்போது தவிர்க்க முடியாத ஒரு நெருக்கத்தில் நிற்கிறோம்.

என்னை அதிகமாக ஈர்த்தது அவனுடைய அழகான புன்சிரிப்பு அவனைச் சார்ந்த எல்லாமே அழகாய் தெரிந்தது எனக்கு. அன்பால் ஆன பார்வையில் பார்க்கும்போது அழகின் மிகுதிகளாய்த்தான் எல்லாம் தோன்றும் போலும்.

வாழ்க்கை பெரும் தேடலால் ஆனது, ஒவ்வொருவரின் தேடல்கள் ஒவ்வொருவிதம். நான் தேடுவது அதி உன்னதமான ஒருவனை. அவன் எனக்கே எனக்கு பிரத்யேகமானவனாக இருந்துவிட்டால் என் வாழ்வு முழுமையடையும் என நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு போதும் நான் கற்பிதம் செய்துகொண்டிருந்த அத்தகைய உருவம் நிஜமாகாது என்று தெளிவாய் அறிந்திருந்தேன். அறிதலுக்கும் அறிதலற்றவைக்குமிடையே ஊசலாடிய என் வாழ்க்கையை கூடிய வரை ரசனையாய் செறிவாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியையாய் இருக்கும் என்னுள் ஒரு மன உலகம் யாருக்கும் தெரியாமல் இயங்கிக் கொண்டேயிருக்கும். நானல்லாத நான் அதில் மிதந்து திரியும் வெளிகள் கனவிற்கும் அப்பாற்பட்டவை.

என்னுடைய ஆண் இத்தனை ஆண்டுகள் பெயரற்ற உருவமற்ற அழகிய கற்பனையாய் எனக்குள் செழித்து என்னைத் தின்று உயிர் வாழ்ந்துகொண்டிருந்தான். வெகு இயல்பாய் இப்படி வெளியுலகில் அலைந்து திரிந்து கொண்டிருப்பான் என நான் எண்ணியிருக்கவில்லை.வாழ்க்கை இனிமையான ரகசியங்களால் நிறைந்திருக்கிறது. என் தேடல்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. அது எனக்கே எனக்கானது. ஸ்ரீ, உன்னைத் தான் என் வாழ்க்கை முழுவதும் தேடிக் கொண்டிருந்தேன். நீ இதை நம்ப மறுக்கலாம். ஆனால் நீதான் எனக்கானவன். ஆனால் தேடல் முடியபோகும் சமயம் திடீரென்று வந்து நிற்கிறாய், அதுதான் என்னை யோசிக்க வைக்கிறது. என்ன மாயவசீகரம் செய்தாய் ஸ்ரீ?

அவன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றிருந்தேன். வெகு நேரம் கதைத்தோம். அவன் எந்தக் கணத்தில் தடுமாறப் போகிறான் என காத்திருந்தேன். மிகத் தெளிவானவன். சதுரங்க விளையாட்டாய் காய்களை வெகு கவனமாய் நகர்த்திக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள் மிகவும் இளகியிருந்தோம் வெளித்தெரியாமல் நிறைய பாசாங்குடன் நேரெதிராய் நின்றுகொண்டிருந்தோம். அவனின் சிறு தீண்டலுக்கும் தளும்பிவிடும் நிலையில் நானிருந்தேன். என் லேசான ஸ்பரிசம் கிடைத்தாலும் உடைந்துவிடும்படியாக அவன் இருந்தான்.

‘ரூமை இவ்வளவு நீட்டா வச்சிருக்கியே ஸ்ரீ, அதிசயமா இருக்கு’..

‘எனக்கு எதுவும் பளிச்சுன்னு இருக்கணும், உன்னோட இந்த சிரிப்பு மாதிரி’ என்றபடி லேசாய் நடுங்கும் கரத்துடன் என்னை அணைத்தான். அவனுடைய இதயத் துடிப்பை என்னால் கேட்கமுடிந்தது. பயந்திருந்தான். அவனுடைய அணைப்பு தீவிரமாகி முத்தத்தில் முடிந்தது. எதிர்வினைகள் ஏதுமின்றி நெடிய யோசனையில் இருந்தேன். சிலை போல சலனமற்றிருந்த என்னைப் பார்த்த அவன் ஒரு நிமிடம் திடுக்கிட்டு

‘ஸாரி தி. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்’.

‘கொஞ்சம் இல்லை ஸ்ரீ நிறைய..ஏன் இப்படி உனக்கு மூச்சு வாங்குது? சேலைத் தலைப்பால் அவன் முகத்தின் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுத்தேன்.

எதுவுமே நடக்காத மாதிரி அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். குற்றவுணர்ச்சி அவனை ஏதோ செய்தது. அவன் ஏதும் பேசுவதற்குள் போகலாம் வா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அதன்பின் இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இதோ வழியனுப்ப பீச் ஸ்டேஷன் வரை வந்த அவனுடன் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். என் பெண்மையின் வசீகரம் அவனுக்கு அள்ளித் தந்திருந்த பரவசம் அவனுள் முழுக்க முழுக்க நிரம்பியிருந்தது. அவனாலும் என்னுடன் பேச முடியவில்லை. என் கண்களைப் பார்த்து எப்போதும் போல சிரிக்க இயலவில்லை.

ரயில்வே ஸ்டேஷனுக்கே உரிய வாசனைகளும் வெம்மையும் நிரம்பியதாக அவ்விடம் இருந்தது. ஆவடி செல்லும் 7.10 வண்டி புறப்பட தயாராக இருந்தது. அவன் என் விரல்களை பிடித்துக் கொண்டான்.

‘போகலையா’ என்று அவன் உதடு முணுமுணுத்தது.

‘அடுத்த வண்டியில போறேன் ஸ்ரீ’ என்றேன். அவன் கண்கள் மலர்ந்தது. ஒரு ஆணுக்கு போய் இத்தனை அழகான கண்களா?

ஆவடி ரயில் மெல்ல ஊர்ந்து ப்ளாட்ஃபார்மை கடந்தது. நான் வைத்திருந்த மல்லிகைப்பூவின் வாசம் காற்றில் கலந்து எனக்கே லேசான கிறக்கத்தை தந்தது. என் மனதை எப்படி இவனால் படிக்க முடிகிறது ‘பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்’ என்று ஹம் செய்தான்.

‘To Live டிவிடி கேட்டியே போய் வாங்கலாமா? என்றான்.

‘வேணாம் வெளில போய் வாங்கறதுக்குள்ளே அடுத்த ட்ரெயின் வந்துடும். அதோட எனக்கு to live டிவிடியை விட டு லிவ் வித் யூ திஸ் மொமண்ட் ரொம்ப முக்கியம்.’என்றேன்

‘தி உன்னோட ஆங்கில உச்சரிப்பு ரொம்ப அழகாயிருக்கு’ என்றான். இப்படித்தான் நான் எதைச் சொன்னாலும் என்ன செய்தாலும் அது மிகச் சிறியதாய் இருந்தாலும் கூட கொண்டாடுவான்.

இன்று ஏனோ இருவரும் நேராய் பேசிக்கொள்ளவில்லை. மெளனம் எங்களுக்கிடையில் நின்று உரக்கப் பேசிக்கொண்டிருந்தது. அவன் கைக்குள் என் விரல்கள் இன்னும் அகப்பட்டுக் கிடந்தது என மனதைப் போலவே. இந்த அன்பை எப்படி தவிர்ப்பது?

‘உனக்கு 32 வயசுன்னு நம்பவே முடியலை தி. செப்புச் சிலை போல கைக்கு அடக்கமா அழகா அம்சமா இருக்கே’ என்றான் நெருக்கமான ஒரு தருணத்தில். சுகந்தி என்ற என் பெயரை தி என்று தான் அழைக்கிறான். அவனுக்குள் நான் மூட்டிய தீயினால் இந்த ‘தி’யின் சுருக்கம் போலும். அவன் என்னை எப்படி அழைத்தாலும் பிடிக்கிறது.

ட்ரெயினில் நான் தினமும் சந்திக்கும் வளையல் விற்கும் பெண்மணி எங்கள் அருகில் வந்தாள். என்னைப் பார்த்து சிரித்தபடி ‘உங்க வூட்டுக்காரரா? என்றாள். நான் ஒரு கணம் திகைத்து இல்லை என்று தலையாட்டினேன். வெற்றுப் பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டு இதழோரத்து எள்ளல் சிரிப்புடன் என்னை கடந்து போனாள். அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது

‘ஏன் சொன்னா என்ன, நான் யார் உனக்கு தி? என்றான்.

‘எனக்குத் தெரியலை ஸ்ரீ என்றேன்.

‘ஏன் இப்படி இருக்கற தி? நிறைய படிச்சு, நிறைய யோசிச்சு கிறுக்கு முத்திப்போய்க் கிடக்கறியா? உனக்கு என்ன வேணும் தி?’ என்றான் குரல் கனிந்து.

‘எனக்கு தேவையானது என்கிட்ட இருக்குடா. எனக்கு இயல்பா சுதந்திரமா இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. என்னால கல்யாணம் குழந்தைன்னு வட்டத்துக்குள்ள வாழமுடியலை. அப்படி அதுக்குள்ள போனா நான் காணாம போயிருவேன். இவ்வளவு நெருக்கமா வந்த உன்னை கூட என்னால முழுசா எடுத்துக்க முடியலை. தவிர நான் சிக்கலானவ...’

‘அப்ப நம் உறவுக்கான அர்த்தம், இது தொடருமா முடிஞ்சிடுமா..என்ன சித்ரவதை இதுன்னு உனக்கு புரியுதா தி?

‘ம்..எனக்கும் அப்படித்தான் இருக்கு ஸ்ரீ. உள்ளுக்குள்ள ரொம்ப கொதிப்பா குழம்பிப்போய்தான் கிடக்கேன்...நான் வாழ்க்கைய அதன் போக்கில் போய் வாழ விரும்பறேன்..புரிஞ்சிக்க...என்கிட்ட உனக்கு என்ன வேணும்னாலும் என்னால தரமுடியும், ஆனா என்னைத் தவிர..உன்னால இல்லைமா யாராலேயும் என்னை புரிஞ்சுக்கவே முடியாது. எனக்கு வானம் அளவுக்கு ஸ்பேஸ் தேவை, உன்னால கையளவு கூட அதைத் தர முடியாது...தரேன்னு இப்ப சொன்னாலும் அதெல்லாம் சாத்தியமாகதுடா..இப்படி இருக்கத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு’

தூரத்தில் என்னுடைய ரயில் வருவதைப் பார்த்து அவன் கைகளில் புதைந்திருந்த என் விரல்களை சட்டென்று விடுவித்தேன். அவன் முகம் ஒரு நொடி இருண்டு பின் இயல்பிற்கு திரும்பியது. அவன் இதமான அரவணைப்பும் என்னை என் சிக்கல்களிலிருந்து மீட்டெடுக்கிறது. ஆனால் அதுவே மற்றொரு சிக்கலாகிவிடுகிறது. என்னுடைய காதல் ஒரு ஆணின் மீதோ குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது மட்டுமே இல்லாமல் எல்லாவற்றின் மீதும் இருப்பதை எந்த ஆணாலும் புரிந்து கொள்ள முடியாது. என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை நான் அணுஅணுவாய் உணர்ந்து திளைத்து காதலிக்கிறேன். அது ஒரு நிலை. நான் விளக்கிக் கொண்டிருந்தால் அவன் என்னை பைத்தியம் என்றுகூட நினைக்கக்கூடும். எல்லாவற்றிலும் என்னைப்போல இருக்கிறவன் இவ்விதயத்தில் மாறுபடலாம். மாறுபடத்தான் செய்வான்.

அவனுக்கும் எனக்குமாய் ஆன எல்லா வார்த்தைகளும் சொல்லப்பட்டுவிட்டன. எனக்குள் அவன் லேசான பாதிப்பையும் படபடப்பை ஏற்படுத்தி தன் மந்திரத்தன்மையால் ஏதோ செய்கிறான்.

ரயில் கிளம்பும் அறிவிப்பு வந்தபடியால் நான் அதில் ஏறினேன். ஜன்னல் கம்பிகளுக்குப் பின் அவன் ஏதோ சொல்லும் பாவனையில் இருந்தான். இதோ பிரிவின் கடைசி தருணம் வந்தேவிட்டது. ஒரேடியாக பிரிந்துவிடுவோமோ என பயந்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தோம். ரயில் மெல்ல நகர்ந்தது. ஜன்னல் வழியே அவன் முகம் மெல்ல மறையத் தொடங்கியது. ஒரு சிலையாய் அவன் நின்றிருந்தான். ‘உயிர் கலந்த ஆரவாரத்தைவிட அற்புதம் பகிர்ந்த உடல்களின் மோக அமைதி’ சுகுமாரனின் கவிதை வரிகள் ஏனோ நினைவிற்கு வந்தது. இப்படி தாமதித்து வந்திருந்த எதிர்பாராத காதலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வது எப்படி என யோசித்துக் கொண்டே ஜன்னலனூடே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்லிய தென்றல் என் உடலைத் தீண்டியது, ஜன்னல் கம்பி குளிர்ந்து கிடந்தது. மல்லிகையின் வாசத்தை மீண்டும் உணர்ந்தேன். மனமும் உடலும் கிளர்ந்தெழுந்தது. என்னுடைய சேலை முழுவதில் அவன் வாசனை. அவன் வெகுதூரம் போய்விட்டான் ஆனால் இன்னும் எனக்குள்தான் முழுவதும் நிறைந்துகிடக்கிறான்.

இந்த நினைவுகளோடு இந்த புதிரான சுகமானவேதனையோடு இந்த முடிவற்ற பயணத்தை எப்படிக் கழிப்பது என்று கலங்கினேன். சீக்கிரம் என் நிறுத்தம் வந்துவிட்டால் நன்றாக இருக்கும். சந்தித்தப்பின் ஏற்படும் பிரிவுகள் துயரமானவை. மழை விட்டுவிட்டதும் தூவானம் போல மனதை விட்டு அகலாது அச்சந்திப்பின் தித்திப்பு. ஆனால் சிலசமயம் மழை நின்றுவிட்ட தருணங்களில் மனதில் ஒருவித வெறுமை தோன்றி துயரம் கவிழும், இன்னும் கொஞ்சம் மழை வேண்டும் என மனது தவிக்கும் ஆனால் அது கிடைக்காத போது அதுவரைக் கிடைத்த இன்பமும் காணாமல் போய்விட்டிருக்கும்என்ன செய்வது மழைக்குத் தெரியுமா மனதின் ஆசைகள்? ஒவ்வொரு சந்திப்பும் ரசனையும், காதலும், கனிவும், அன்பின் மிகுதியாகவும் நிறைந்து உள்ளத்துக்கு புத்தொளி அளித்தாலும் அதன்பின்னான பிரிவு உயிர் வதையாகிறது. இன்றும் அப்படித்தான் ஆயிற்று. எங்களுக்குள் சொல்லப்படாத ஒரு சொல் இதோ என்னை வாட்டி எடுக்கிற்து. என்னையறியாமல் கண்களின் ஓரத்தில் நீர்த்துளி முட்டிக்கொண்டு நிற்கிறது. இதுவரையிலும் இருவர் மட்டுமே இருந்த உலகம் பிரிந்தபின் திடீரென்று பலப் பல குரல்களால் நிகழ்வுகளால் நிறைகின்றது, அதை ஏற்க மறுக்கும் மனம் தடுமாறுகின்றது. எந்த துர்தேவதைகளின் சாபத்தின் மிச்சமோ அவனை சந்தித்த மற்றும் பிரிந்த கணம்?.

என்னுடைய ஸ்டேஷன் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

முரண்களில் வடிவம் நீ
போகும் வரும் உன் காதல்கள்
இப்போது உன் நிறுத்தத்தில் நான்..

புன்னகைத்தபடி ரயிலில் இருந்து இறங்கினேன். பேரிரைச்சலுக்கு பின் அமைதியாய் என்னைக் கடந்தது அந்த மின்சார ரயில்.


திங்கள், 25 மே, 2009

தி ரோட் ஹோம்



‘தி ரோட் ஹோம்’ கவிதையாய் ஒரு காதல் கதை. சாதாரண சம்பவங்களால் பின்னப்பட்ட கதையானாலும் உணர்வுகளை ஊடுருவி கிளர்ந்தெழச் செய்யும அதி அற்புதமான காட்சியனுபவத்தை இத்திரைப்படம் தருகின்றது. அருவியை ஒட்டிய நீர்த்தேக்கத்தில் மென் சாரலடிக்கும் மழை நாளில் படகில் பயணம் செய்தால் எப்படி நம் உள்ளம் களிப்பில் ஆழும் – அப்படி ஒரு பரவசத்தை இத்திரைப்படம் தருகின்றது.

தந்தை இறந்துவிட்ட செய்தியறிந்து இளைஞன் லூவோ யூசெங் பல ஆண்டுகள் கழித்து சன்ஹட்டன் எனும் தன் கிராமத்திற்கு வந்து கொண்டிருக்கிறான். லூவின் பார்வையிலும் மொழியிலும் இக்கதை மென்கவிதையாய் முன்னகர்ந்து செல்கிறது.

வீட்டுக்கு வந்ததும் முதியவளான தன் தாயை மனவருத்ததுடன் சந்திக்கிறான். அவள் தன் கணவனின் இறுதி வழியனுப்புதலை பாரம்பரிய சீன முறைப்படி செய்ய வேண்டும் என்கிறாள். இது சரியாக வருமா என்று லூவிற்கு சந்தேகமாக இருக்கிறது. கடினமான பனிக்காலத்தில் சுற்றமும் நட்பும் புடைசூழ பல மைல்கள் அப்பாலிருக்கும் இடுகாட்டிற்கு தூக்கிச் செல்லவது இக்காலத்தில் நடைமுறை சாத்தியமாகுமா, நாம் யோசிக்க வேண்டும் என்கிறான். ஆனால் தாய் பிடிவாத்த்துடன் தன் கணவனுக்கு இறுதியாக போர்த்தவிருக்கும் துணியை தானே நெய்கிறாள். லூ அந்த குக்கிராமத்திற்கே தெரிந்திருந்த ஊரறிந்த தன்னுடைய பெற்றோரின் இனிமையான காதல் கதையை நினைவித் திரையில் மிதக்க விடுகிறான்....

பதினெட்டு வயது பேரழகியான ஜாவோ டி தன் ஊருக்கு வந்திருக்கும் இளம் டீச்சர் லூ சாங்யூவை கண்டதும் காதல் வசப்படுகிறாள். லூ சாங்யூவிற்கு இருபதி வயதிருக்கும் நேர்த்தியாக உடையணிந்த அழகனாக அவள் கண்ணுக்கு புலப்படுகிறான். முதலில் அவன் இவளை கவனிக்கவே இல்லை. அந்த ஊர் பள்ளியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அக்குழுவிற்கு ஊர்ப்பெண்கள் சமைத்து பணியிடத்திற்கு அனுப்புவதாய் ஏற்பாடாகிறது. அவனை எவ்வகையிலாவது திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டும் என்ற பேராவாவில் இருந்த ஜா பார்த்து பார்த்து சமைத்து அதை அழகாக அடுக்கி அவன் தன்னுடைய உணவை தேர்ந்தெடுக்கிறானா என ஆவலுடன் காத்திருக்கிறாள். தற்செயலாக அவள் சமைத்தது அன்று அவனுக்கு கிடைக்கவே வெகுவாக ரசித்துச் சாப்பிடுகிறான் சாங்யூ. அதை நிறைவாய் காண்கிறது ஜாவின் கண்கள். காதலின் ஆரம்பப் புள்ளி இது.

அதன்பின் அந்த பள்ளிக் கட்டடம் வளர்கின்றது அவளின் ஒருதலைக் காதலைப் போலவே. கனிவும் கண்டிப்புமான தங்கள் மாஸ்டரை அந்த பிள்ளைகள் மட்டுமல்லாது அந்த ஊரே நேசிக்கிறது. வசந்தகாலத்தில் பூத்துக் குலுங்கும் மலர்செடிகளுக்கு ஊடே பிள்ளைகளை மார்ச் பாஸ்ட் செய்ய அழைத்துப் போவான் சாங்யூ. நெல்மணிக்கதிர்களிடையே மறைந்து நின்று இக்காட்சியை ரசிப்பாள் ஜாவோ. பள்ளிக்கு அருகே இருக்கும் கிணற்றில் நீர் சேந்தும் சாக்கில் அவனைக் பெண்மை நிறைந்து வழிந்தோடும் தன் இளம்பருவத்தை சுமந்திருக்கும் ஜோ கடைக்கண்ணால் தன் காதலன் சாங்யூவை கண்டு மகிழ்கிறாள். இவ்வாறிருக்கையில் தனியாக இருக்கும் அவனுக்கு ஒவ்வொரு வீட்டிலும் வாரம் ஒருநாள் விருந்து சாப்பாடு அளித்துக் கொண்டிருந்தனர். அன்று ஜாவின் வீட்டிற்கு விருந்துக்கு போகும் நாள்.

தன் ப்ரியமானவனுக்காக பார்த்து பார்த்து சமைக்கிறாள் ஜாவோ. அவளுடைய அம்மா இவளின் சுறுசுறுப்பையும் ஈடுபாட்டையும் விருந்தோம்பல் என்றே நினைக்கிறாள். அன்று அந்த உணவின் சுவையூடே காதல் சுவையும் கலந்திருப்பதை உணர்கிறான் சாங்யூ. அதன்பின் காதலர்கள் வார்த்தைகளாலும் காதலை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அவன் தன் ஜாவோவிற்கு எளிய பரிசாய் ஒரு ஹேர் க்ளிப் தருகிறான். அதை பொக்கிஷமாய் அவள் பாதுக்காக்கிறாள். அரசியல் காரணங்களுக்காய் சாங்யூ நகரத்திற்கு செல்லவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிறான். பிரிவின் சொற்களை மிகவும் சங்கடத்துடன் சொல்லி அவளிடம் பிரியாவிடை பெற்றுச் செல்கிறான்.

சாங்யூ சென்றபின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிகிறது ஜாவிற்கு. அவன் வரப்போகும் நொடிக்காக தன் விழிகளை பாதையோரத்தில் நிலைத்திருந்தாள். பனி பொழிந்துகிடக்கும் நீண்ட நெடிய சாலையில் அவன் தடங்களைக் காணாமல் சோர்வுறுகிறாள். ஒருநாள் தங்களின் காதல் சின்னமான ஹேர் பின்னை தொலைத்துவிடுகிறாள். அவனே தொலைந்துவிட்டதைப் போல துடிதுடித்து பித்தேறி அதைத் தேடி தேடிக் களைப்புறுகிறாள். துக்கத்திலும் ஏக்கத்திலும் அவள் பூவுடல் வாடிப்போகிறது. உடல் நலிந்து நோய்மையின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொள்கிறாள். கடுங்காய்ச்சலில் வீழ்ந்த பின்னும் அவன் தன்னைத் தேடி வரும் காட்சியை கண்ணுக்குள் நிறுத்திக் கொள்ள அப்பாதையில் சிலையாய் காத்திருக்கிறாள் ஜாவோ.

எத்தனையோ சிக்கலுக்கிடையில் அவள் தன்னை தேடிக் கொண்டிருப்பதை உள்ளுணர்வால் உணர்ந்து ஓடோடி வருகிறான் சாங்யூ. காதலர்கள் இணைகிறார்கள். மரபை கொண்டாடிக்கொண்டிருக்கும் அந்தச் சிறிய ஊரே அவர்களின் இக்காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறது. அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் முதல் காதலர்கள் அந்த ஜோடிதான். ஆனால் பிரிவு இரண்டாம்முறையாக அவர்கள் வாசலை வந்தடைகிறது. இம்முறை இரண்டாண்டுகள் அவளைவிட்டு அரசியல் காரணங்களுக்காய் நகரத்தின் நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறான். ஜாவோவின் காத்திருப்பின் தீவிரம் சற்றும் குறைந்திருக்கவில்லை. அவன் வகுப்பு எடுக்கும் பள்ளியை ஒழுங்குபடுத்துவதும் சுத்தமாக வைத்திருப்பதிலும் தன் நேரத்தையும் பொழுதையும் கழிக்கிறாள். பிரிவின் துயர் அவளை வாட்டி எடுத்தாலும் வந்துவிடுவான் எனும் நம்பிக்கைச் சுடர் அவள் மனவெளியெங்கும் மிகப்பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. காதலைத் தாங்கிய இதயங்களுக்கு காத்திருப்பும் சுகமான வேதனைதானே? சாங்யூ மறுபடியும் அவளிடம் வந்து சேர்கிறான். பின் ஒருபோதும் அவளை விட்டு அவன் பிரியவில்லை. சாங்யூவின் அறிவுத் திறனால் அந்த ஊர் கல்வி அறிவுக் கிடைகப்பெறுகிறது. சமூகப் பொறுப்பும் குடும்ப அக்கறையும் சரிபாதியாய் அவனை ஆக்கிரமிக்கின்றன. அற்புதமான காதல் ஜோடிகளாய் அவர்கள் தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் பற்றுதலாயும் மிகவும் அன்னோன்யத்துடன் வாழ்கிறார்கள்.

தந்தையின் மரணம் தாயை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதை லூவோ அறிந்திருந்தான். அவர்களின் காதலை அர்த்தப்படுத்த மகனாய் தன்னால் இயன்றதைச் செய்ய முடிவெடுத்தான். கிராமத் தலைவரிடம் பணம் கொடுத்து சவ ஊர்வலத்திற்காக சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சொன்னான். ஆனால் அவனே ஆச்சரியப்படும்படியாக தந்தையிடம் படித்த மாணவர்கள் நூற்றுக்கணக்கில் திரள் திரளாய் அந்த பனிநாளில் தங்கள் மாஸ்டருக்கு இறுதி மரியாதையை செலுத்த வந்து கொண்டிருப்பதைப் பார்த்து மனம் நெகிழ்ந்தான். பணத்திற்காக கூடிய கூட்டமல்ல அது ஆத்மார்த்தமாய் இறுதி அஞ்சலியை செலுத்த அவர்கள் வந்திருந்தார்கள். அந்த ஊர்வலம் மெல்ல நகர்ந்து பள்ளிக்கு எதிரே இருந்த பழைய கிணற்றின் பக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. . நிறைவான வாழ்வை மட்டுமல்லாது நிறைவான சாவையும் தன் தந்தை சந்தித்திருக்கிறார் மொத்ததில் அவர் வாழ்ந்திருக்கிறார் இன்னும் கூட வாழ்ந்து கொண்டிருப்பார் என்றுணர்கிறான் லூ. எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் தன்னுடன் வர மறுத்த தாயின் ஆசைக்காய் அவர்களின் பள்ளியில் ஒரு நாள் பாடம் சொல்லிக்கொடுக்கிறான் ஜாவோ சாங்யூவின் காதலின் உயிர் சாட்சியான லூவோ யூசெங்.

‘தி ரோட் ஹோம்’ மென் சோகக் கவிதையாய் நிறைவடைந்தாலும் ஜோவோவின் புன்சிரிப்பும் தேடலும் காதலின் தீவிரமும் அன்பும் இது போன்ற எண்ணற்ற நல்லுணர்வுகள் நம்மை ஏதேதோ செய்கின்றது. காதலித்துப் பார்த்தால்தான் புரியும் காதலின்பம், ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்பது சத்ய வாக்கல்லவா? காதல் மனிதர்களினூடே உருகி கரைந்து உருண்டோடிக் கொண்டிருக்கிறது காலம் காலமாய். ஒரு துளி பருகினாலும் அமிர்தம் அமிர்தம்தான். ஜாவோவும் சாங்யூவும் அமிர்தம் பருகியவர்கள்.
நன்றி - http://www.thadagam.கம



வெள்ளி, 22 மே, 2009

சிறிது ஸ்பரிசம் கூட நிகழமுடியாதவாறு


சிறிது ஸ்பரிசம் கூட நிகழமுடியாதவாறுமுழுவதும் அடைத்திருந்தேன் என் யன்னலைஇரக்கமில்லாமல் இறுக்கிப் பிடித்துஆவேசத்துடன் பொழிந்து தள்ளியதுநேற்றிரவில் உன் மழை..

நினைவில் வை
நினைவில் வை உன்னை உனக்காக மட்டும்
நேசிக்கும் ஸ்நேகிதங்களில் நானொருத்தியென்று
இன்றுதான் கண்ணில்
தட்டுப்பட்டதுமீஜையின் மேல்முன்பு நீ பரிசளித்த
இறகின் நீல நிறம்...
கொடியில் இன்னும் உலராதிருக்கும்
என் ஆடைகள் காற்றில் ஆடியாடி
அசைகின்றனமழை நனைக்க விடுகிறேன் அவற்றை
இவ்விதமாய் பழகிய நட்பின்புறக்கணிப்பில் கழிந்த
வெறுமையான நாள்களைநிரப்புகிறேன்
மற்றுமொரு கவிதையாய்

என்னைப் பற்றிய உன் புரிதலை
என்னைப் பற்றிய உன் புரிதலை
யாருக்கும் உரத்துச்
சொல்லமாட்டாய் நீ,
எனக்கேயும் கூட..
பிரிவின் சொற்கள்
தொண்டைக்குள் சிக்கி
வெளிவர யத்தனிக்கின்றன..
மரணத்தையொத்த உன்
புறக்கணிப்பு அதை எஞ்சிவிடுகிறது
என்ன செய்ய?
உலகம் புறத்தே இருந்துவிட்டுப் போகட்டும்
உள்ளுக்குள் சொல்லிக்கொள்ளலாம்
ப்ரியங்களின் பரிபாஷைகளை
மண்டியிட்டுக் கேட்கிறேன்
சொற்களால் நிகழ்த்துவதை
இனி ஒருபோதும் செய்யத் துணியாதே
(உயிரோசையில் வெளியான கவிதைகள்...)

திங்கள், 18 மே, 2009

தலைவன் இருக்கின்றானா?

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாத சூழலில் மனச் சோர்வுடன் இந்த நாள் கடக்க இயலாத துயரத்தை தருகின்றது. ந்யூஸ் சேனல்களில் காணும் காட்சிகள் பதைபதைக்கச் செய்கிறது. எல்லா நம்பிக்கைகளும் நீர்த்துப் போய்விட்ட கடைசி தருணமாகி விட்டது. இனி கொல்வதற்கு யாருமில்லை, சொல்வதற்கும் ஏதுமில்லை....





என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒருதாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புக்களை என்றான் ஒரு விநியோகஸ்தன்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுப்பாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைச் சாவடி அதிகாரி
இன்னும் விற்றுமுடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
ரத்துச் செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்
பொறாமைப்பட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என வருந்தினான் அவனது தோழன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை எனக் கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியக்காரத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை எனப் பதறினாள் ஒரு தாய்
பால்க்கான கியூ வரிசையை என்றாள் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான்
ஒரு வாடகை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என். ஜி.ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்றுக் கிடந்தது
ஒரு அகதியின் பிணம்
- சிவசேகரம்

திங்கள், 11 மே, 2009

ஒரு காதல் + ஒரு கல்யாணம்

இருள் இன்னும் அகலவில்லை. அதிகாலை...பூனை நடையில் வசுந்தரா தன் சூட்கேசை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள். ஓசைப்படாமல் கதவை திறந்து, தன் ஸ்கூட்டியை எடுத்து கொஞ்சம் தூரம் தள்ளிப் போய் ஸ்டார்ட் செய்தாள். படபடப்பாக இருந்தது. அதையும் மீறி ஒரு சந்தோஷ ஊற்று அவள் மனவெளியெங்கும் மெல்லிய மின்சாரமாய் பாய்ந்து கொண்டிருந்தது.

அப்பா அம்மாவை நினைத்தால் சங்கடமாகத் தான் இருக்கிறது. ஆனால் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் அரவிந்தை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள மறுத்துவிட்டார்கள். எந்தக் காலத்தில் இவர்கள் வாழ்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஜாதி மதம் என்று பிடிப்பில் இருக்கும் இவர்கள் எல்லாம் மாறவே மாட்டார்கள்.

கோவில் வந்துவிட்டது. நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய் வந்துவிட்டார்கள். ஆர்த்தி இவளை ஏற இறங்க பார்த்துவிட்டு.’வசு யூ லுக் கார்ஜியஸ், ரொம்ப அழகா இருக்கே...கல்யாண களை அப்படியே பொங்கி வழியுது பாரு முகத்துல...அரவிந்த் லக்கிதான்”

‘தாங்க்ஸ்டி, ரொம்ப டென்ஷனா இருக்கு.....சரி அவன் எங்கே?’ என்று ராகவைப் பார்த்து கேட்டாள்.

‘இங்க பாரு புருஷனா ஆகப்போறவன், அவன் இவன் என்று ஏகவசனம் வேண்டாம்’ என்றான் ராகவ் செந்தமிழில்.

‘எல்லாம் எங்களுக்குத் தெரியும் அடங்குடா’ என்றாள் வசு சிரித்தபடி.
சிரிப்பலையால் நிரம்பி அச்சிறிய கோவில் மேலும் அழகானது. அந்த இடம் சந்தோஷமாகவும் அதே நேரம் பரபரப்பாகவும் இருந்தது. ஐயர் தன் பெரிய பையுடன் ஆஜரானார். எல்லாம் ரெடியா என்று ராகவைப் பார்த்து கேட்டார்.

‘எல்லாம் ரெடி சார், நீங்க உங்க வேலையை ஆரம்பிங்க’ என்றான்.

வசுவுக்கு டென்ஷன் ஏகமாய் எகிறிக் கொண்டிருந்தது. அரவிந்த போனில் ‘பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்’ ரிங் டோன் அடித்துக் கொண்டேயிருந்தது, அவன் தான் பேசக்காணோம். கவலையானவளைப் பார்த்த ராகவ், ‘ஏய் புதுப்பொண்ணு அவன் வண்டியில் வந்திட்டிருப்பான், மொபைல எடுக்க முடியாம போயிருக்கும்’ என்று சமாதானப் படுத்தினான்.

விடிந்து விட்டது...ஆனால் அரவிந்த வரும் வழியைக் காணும். என உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள் வசு.

‘நான் அவன் வீட்டுக்கு போய் பாத்துட்டு வரேன் என்று ராகவ் சொல்லவும் வசுவின் செல்போன் அலறியது. அரவிந்த்தான்.


‘இடியட்.. எங்க இருக்க..எவ்வளவு நேரமா நாங்க டென்ஷன்ல இருக்கோம்? ஃபோனை கூட எடுக்க மாட்டியா? என்றாள் கோபத்துடன்.

‘வசு எப்படி சொல்லறதுன்னே தெரியலை...இன்னிக்கு நம்ம கல்யாணம் நடக்காது....இன்னொரு நாள் வச்சுக்கலாம்....’

அதன் பின் அவன் என்ன பேசினான் என்றே தெரியவில்லை, அவளுக்கு தலை சுற்றியது, என்ன நடக்கிறது என்றே ஒரு நிமிஷம் புரியவில்லை...

அவள் அழகான கண்கள் அழுது அழுது சிவந்துவிட்டது. “இப்ப போயி இப்படி கழுத்தறுத்திட்டியே அரவிந்த்...நான் எப்படி இனிமே வீட்டுக்கு போவேன் சொல்லு...எப்படி இனிமே உயிரோட இருக்க முடியும்...நான் செத்திடறது தான் ஒரே வழி...”

‘வசு தயவு செஞ்சி என் நிலைமையை புரிஞ்சுக்கோ நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும், ஆனா கொஞ்ச நாள் கழிச்சு...இப்ப நான் சிறைக் கைதியா இருக்கேன்...எத்தனை ஆசையா தாலி, சேலையெல்லாம் வாங்கினோம், நான் எப்படி துடிச்சிட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியாது..”

‘அப்ப நீ சரியா ப்ளான் பண்ணியிருக்கணும்...எனக்கு இந்த அவமானம் தேவையா...இங்க எல்லாரும் வந்தாச்சு. உன் ப்ரண்ட்ஸ் என் ப்ரண்ட்ஸ் ஐயர், மேளம் எல்லாம் ரெடி...நானும் வீட்டை ஒரேடியா தொலைச்சுட்டு வந்தாச்சு...ஆனா நீ இப்ப கதை சொல்லிட்டு இருக்க...ரொம்ப தாங்க்ஸ் அரவிந்த்...உன்னோட வீரத்தை புரிஞ்சிக்க கடவுள் எனக்கு கடைசி சான்ஸ் கொடுத்திருக்கார், நான் அதை யூஸ் பண்ணிக்கறேன்...

‘ப்ளீஸ் கொல்லாதே வசு...என் நிலமையை புரிஞ்சிக்க....நம்ம விஷயம் தெரிஞ்சு அப்பா என்னை வீட்டுல பூட்டி வச்சிட்டார்...யாருமே இல்ல இப்ப வீட்டுல..எல்லாமே ஆட்டோமெட்டிக் லாக், கைதியா இருக்கற என்னை நீ இப்படி குத்தம் சொல்லாதே...என்னால என்ன பண்ண முடியும் சொல்லு...என்றான் கோபத்துடன்.

‘உன்னால ஒண்ணும் முடியாதுன்னு எனக்குத் தெரியும்...ஒரு சேலை இருந்தா அதை எடுத்து கட்டிக்க...அப்பா சொல்லற பொண்ணை கட்டிக்க...போதும்டா சாமி.. இனி எனக்கு போன் பண்ணாதே இதுதான் நான் உன்கிட்ட பேசற கடைசி தடவை... ஜஸ்ட் கெட் அவே ப்ரம் மை லைப்’ அழுகையினூடே சொல்லிய படி போனை தூர எறிந்தாள். அது கோவிலின் படிக்கட்டில் விழுந்தது உடைந்து.

பதட்டத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களிடம் திரும்பினாள்.

‘கிளம்புங்க எல்லாரும்...கல்யாணம் கான்சல்ட்...என்ன ஐயர் சார், உங்களுக்கும் சேர்த்து தான்..என் மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடியே ஓடிப்போயிட்டான்..அவனுக்கா எனக்கான்னு தெரியலை விடுதலை.’அவள் பேச்சின் தொனி அனைவரையும் கலவரப்படுத்தியது.

அவளை சமாதானப் படுத்த முயன்ற அனைவருக்கும் தோல்விதான்.

‘வசு சொன்னா கேளு, நீயும் கிளம்பு உன்னை நாங்க வீட்ல விட்டுட்டு உன் அப்பா அம்மாவை சமாதானப் படுத்தி அப்பறம் போறோம்...’

‘என் அம்மா எனக்காக ஆரத்தி கரைச்சு வச்சு உள்ளே கூப்பிடுவாங்க...எவ்வளோ பெரிய துரோகத்தை அவங்களுக்கு நான் செஞ்சிருக்கேன்னு இப்பத் தான் புரியுது...அவ்வளவு காதல்...மண்டைக்குள்ள...என் மூளையை வாஷ் அவுட் பண்ணி வச்சிருந்துது...எப்படி என் அப்பா முகத்துல முழிப்பேன் சொல்லுங்க...பெரிசா லெட்டர் வேற எழுதி வைச்சுட்டு வந்துட்டேன்...எனக்கு கல்யாணம்னு...அவங்க எப்படி துடிச்சிருப்பாங்க...அரவிந்தை அவங்களுக்கு ஏன் பிடிக்கலைன்னு எனக்கு இப்பத்தானே புரியுது..அவங்க வயசும் அனுபவமும் அவன் எனக்கு சரியான சாய்ஸ் இல்லைங்கறதை கண்டுபிடிச்சு சொல்லிடுச்சு...ஆனா நான் தான் முட்டாள்...எனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சிட்டு இப்படி ஏமாந்து நிக்கறேன்..அவள் அழுகை அடங்குவதாக இல்லை.

‘ராகவ்...பாத்தீங்களா உங்க பெஸ்ட் ப்ரண்ட் பண்ண காரியத்தை...மூணு வருஷ லவ்வை மூணு நிமிஷத்துல காலி பண்ணிட்டான்...என்னால எப்படி இதை தாங்கிக்க முடியும்னு தெரியலை....எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்றீங்களா...எப்படியாவது எனக்கு தூக்க மாத்திரை வாங்கித் தரீங்களா..நான் போயிடறேன்.. யாரையும் பேஸ் பண்ண எனக்குத் தெம்பு இல்லை...

ராகவ் அவளைப் பார்த்தான். முகம் வீங்கியிருந்தது. கண்களில் ரத்தச் சிவப்பு. அழகான உதடுகள் வெளுத்திருந்தது.

வசு..தப்பு தப்பா யோசிக்காதே...உன்னோட இப்பத்திய நிலை சரியில்லைதான்...ஆனா அதுக்காக நீயேன் சாகணும்? அவமானம் உன்னவிட உங்கம்மா அப்பாக்குத்தான், அப்ப அவங்களை இன்னும் பெரிசா தவிக்கவிட்டிடலாம்னு நினைக்கறியா...நான் ஒண்ணு சொல்றேன்...கேப்பியா?

என்ன இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு, அரவிந்தை நான் சரி பண்றேன், அவங்க அப்பாகிட்ட நான் பேசறேன்னு தானே சொல்லப் போறீங்க?

இல்லை...

....

‘உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்..உனக்கு சம்மதமா..இங்க பாரு பரிதாபத்தினால இந்த முடிவை நான் எடுக்கலை..போன நிமிஷம் வரைக்கும் என்னோட உயிர் நண்பனோட காதலிதான் நீ...ஆனால் அவன் செஞ்ச விஷயத்தால நீ எப்படி பாதிக்கப்பட்டுருக்கேன்னு என்னால உணர முடிய்து..ரொம்ப யோசிக்க நேரம் இல்லை...நேரம் போக போக உனக்கு ரொம்ப டிப்ரஷன் ஜாஸ்தியாகும்..சாகணும் தோணும்...என்ன சொல்றே...இதுல எந்தவித கட்டாயமும் இல்லை...ப்ரண்ட்ஸ் நீங்க என்ன சொல்றீங்க...

விஜய், கார்த்திக், அகிலா, புவனா எல்லோரும் அவன் முடிவை பாராட்டினார்கள்.

வசு கொஞ்சம் உலுக்கப்பட்டுவிட்டாள். என்ன இது வாழ்க்கை..காலைல ஒருத்தன் உயிரை எடுத்தான், இன்னொருத்தன் கொடுக்க முயற்சி செய்யறான்..என்ன பாத்தா பொம்மை மாதிரி இருக்கா இவங்களுக்கெல்லாம் என்று ஆத்திரமாக வந்தது.

ஆனா ராகவ் அப்படிப்பட்டவன் இல்லை. ஏன் இந்த திடீர் முடிவை எடுத்தான் என்று புரியவில்லை. விதி எங்கோ இழுத்துச் செல்கிறது. இந்த நிமிட தோல்வியை தள்ளி வைக்க ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு முயற்சி நடக்கிறது....

அவள் சரியென்றது தான் தாமதம். ஐயர் இந்த கல்யாணமும் கான்சல் ஆகிவிடக்கூடாது என்று வேகவேகமாக தாலியை எடுத்துக் கொடுக்க...அவள் வசுந்தரா ராகவ் ஆனாள்.

அரவிந்த் அவனை துரோகி என்று திட்டினான். அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டான்.

வசு மனது தேறி அவனுக்கு முழுக்க முழுக்க சொந்தமாக ஆறு மாதம் ஆனது.

பனி பெய்து கொண்டிருந்தே இருந்த ஒரு மார்கழி இரவில் செளமியாவிடம் இந்தக் கதையை சொல்லிக்கொண்டிருந்தாள் அனிதா.

கதை நல்லாருக்கான்னு சொல்லு ஜெனி...

நல்லாருக்கும்மா ஆனா எதுக்கு திடீர்னு என்கிட்ட இந்தக் கதையை சொல்றேன்னு தான் தெரியலை...

சொல்றேன்...அந்த ராகவ் பத்தி என்ன நினைக்கறே....

ரியலி ஜெம்..

அரவிந்த்?

துரோகி...

வசு?

அவசரக்காரி, மூணு வருஷம் ஒருத்தனோட பழகியும் அவனைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கலைன்னா..ஷி இஸ் டூ மச்....

ம்ம்ம்

இப்ப இந்தக் கதைக்கும் நமக்கும் ஒரு லிங்க் இருக்குது...அது என்னன்னு உன்னால கண்டுபிடிக்க முடியுதா?

ஜெனிக்கு லேசாக திக்கென்றது. விஷால் பற்றி யாராவது அம்மாவிடம் சொல்லிவிட்டார்களா? சான்சே இல்லையே...மென்று முழுங்கியபடி...

அம்மா நீதான் அந்த வசுவாம்மா?

இல்லை...நான் அரவிந்தோட மனைவி...உங்க அப்பா விக்டர் தான் அரவிந்த் காரெக்டர்....

ஜெனிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

அந்த பொண்ணை அவர் தீவிரமா தான் காதலிச்சார், ஆனா சூழ்நிலை, கோழைத்தனம் இதெல்லாம் அவர் காதலுக்கு எதிரியாச்சு...எங்களுக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாளில் அவர் என்கிட்ட இதையெல்லாம் சொல்லிட்டார். நானும் நாம புது வாழ்க்கை தொடங்கலாம்னு சொல்லு அவரை மறுபடியும் கலகலப்பான பழைய விக்டரா மாத்தினேன். ஆனா அதுக்கு எனக்கு இரண்டு வருஷம் தேவைப்பட்டது. பழைய காதலியை நினைச்சும், தான் செஞ்ச துரோகத்தால கில்ட் பீலிங்காலும் விக்டர் தன்னையும் காயப்படுத்தி என்னையும் ரொம்ப படுத்தினார்...

சரிம்மா இப்ப எதுக்கு எங்கிட்ட இதையெல்லாம் சொல்றே...எதை சொல்லறதா இருந்தாலும் நேரடியா சொல்லும்மா

நீ யாரையாவது இப்ப காதலிக்கலாம், இல்லாமலும் போகலாம்...இந்தக் கதையை உனக்கு சொன்னதோட காரணம் நாம ஒரு விஷயத்தை நோக்கி போய்ட்டிருக்கப்ப முற்றிலும் வேற ஒண்ணு நமக்கு கிடைக்கும்...நினைச்சது கிடைச்சா ரொம்ப சந்தோஷம் தான், இல்லன்னைனா அக்சப்டன்ஸ் வேணும். நீ இப்ப படிச்சிட்டு இருக்கே...இன்னும் ஒரு வருஷத்துல டாக்டராகிடுவே...உனக்கான துணையை தேர்ந்தெடுக்குற முழு உரிமை உனக்கு இருக்கு...நானும் விக்டரும் அதுக்கு குறுக்கே நிக்க மாட்டோம்...ஆனா நல்லா யோசி...இப்ப எனக்கு எது முக்கியம்னு தெளிவா இரு....இந்த தடவை உன்னோட மார்க்ஸை வச்சு தான் இவ்வளவு பெரிய லெக்சர் உனக்கு தரேன்னு நினைக்காதே ஜெனி...அடுத்த எக்ஸாம்ல நீ ஸ்கோர் பண்ணிடுவேன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு....

அம்மாவை பிரமிப்புடன் பார்த்தாள். உளவியல் தெரிந்தவள்...என் காதல் விஷயம் தெரிந்திருக்கிறது..அதை வெளியில் காட்டாமல் கதை சொல்லி எனக்கு புரிய வைக்க முயலுகிறாள்...அவளின் அன்பு ஈரமாய் என் நெஞ்சில் இறங்குகிறது. விஷாலிடம் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். மூன்று வருஷம் கழித்து தான் கல்யாணம் என்று. அம்மாவிடம் அடுத்த வருடம் இதைப் பற்றி பேசலாம்னு நினைச்சா லேசாக அவளே கோடிட்டு காட்டுகிறாள்....அவள் புரிந்து கொள்வாள்...சும்மாவா தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர் அல்லவா அவள். என்னிடமே தன் திறமையை காட்டுகிறாள்...நான் அவளின் பெண் தானே இது புரியாதா...மெல்ல சிரித்தபடி தன் ரூமுக்கு போய் கனமாக இருந்த மெடிகல் புக்கை புரட்ட ஆரம்பித்தாள்.

முற்றும்

செவ்வாய், 5 மே, 2009

அங்காடித் தெரு - பாடல் வெளியீட்டு விழா

ஞாயிறு காலை சத்யம் தியேட்டர் வளாகத்திற்கு சரியாக ஒன்பது மணிக்கு வந்துடுங்க என்று தொலைபேசியில் அழைத்த குரலை கேட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலிருக்கும்.


பேசியது இயக்குநர் வசந்தபாலன். அவர் இத்தனை நாள்கள் கழித்து அழைத்தது ஆச்சரியமாக இருந்தது. சில காரணங்களுக்காய் அதிகம் பிடித்தவர்களை நான் தேவையற்று நெருங்குவதில்லை. பாலன் அத்தகையவர். அவருடனான முதல் சந்திப்பு புத்தகக் கண்காட்சியில். அப்போது வெயில் வெளிவந்திருந்த நேரம். நானே போய் பேசினேன். வெயிலைப் பற்றி பாராட்டினேன். கூச்சப்படும் இயல்பினர் போலும். குறைவாய் பேசிவிட்டு வாங்கிய புத்தகங்களைப் பற்றி கதைத்துவிட்டுக் நொடியில் காணாமல் போனார்.

அதன் பின் இரண்டாண்டுகள் கழித்து ‘காலம்’ (கனடா) பத்திரிகைக்காக அவரை நேர்காணல் செய்தேன். வசந்தபாலன் தெளிவாகவும் தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாகவும் நிறைவாகவும் பேசினார். வெயில் படத்தின் வன்முறைப் பற்றி கேட்டேன், எங்கள் ஊர் வெக்கையும் வன்முறையும் நிறைந்த வாழ்விடம், வாழ்தலுக்காக நடக்கும் வன்முறைகள், பணத்திற்காக, பதவிக்காக எனவும் பிரித்தெடுக்க முடியாத வன்முறை அது என்றார். அதன்பின் நிறைய கதைத்தோம் இலக்கியம், சினிமா என இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. என்னுடைய டிக்டோஃபோன் அவருடைய தன்மையான குரலினால் நிரம்பிய தினமது. ஏதோ சில காரணங்களுக்காய் அந்த நேர்காணலை அச்சேற்ற முடியவில்லை. அதன்பின் வசந்தபாலன் எனும் அருமையான மனிதர் நினைவுத் திரையில் மங்கலாகிப் போனார். சனிக்கிழமை இரவு அவர் அழைத்ததும் அவர்தான் அழைக்கிறாரா என்பதே குழப்பமாக இருந்தது. நீங்கதானா என்றேன் தயக்கமாக. ஆமாங்க காலைல வந்துடுங்க என்றார்.


நிகழ்ச்சியை சாந்தம் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டாம் தளம் வரை வெள்ளை மற்றும் நீல வண்ண பலூன்கள் கொத்து கொத்தாய் ஆங்காங்கே அழகாய் கட்டி வைத்திருந்தார்கள் – படத்தின் ஏதோ ஒரு காட்சியில் அவை இடம்பெறும் என அனுமானித்தேன். தயாரிப்பாளர்களான கருணாகரனும் அருண் பாண்டியனும் (அயங்கரன்) மற்றும் வசந்தபாலனும் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியை இயல்பின் தன்மை மாறாமல் ஒருங்கிணைத்து நடத்தினார். மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள். இசையமைப்பு விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.ப்ரகாஷ். பாடலாசிரியர் நா.முத்துகுமார். அதில் இரண்டு பாடல்கள் எனக்கு கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது. சில பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும். சில உடனே நம் உதட்டுக்குள் ஒட்டிக் கொள்ளும். படம் வெளியானதும் நம் அத்தனை பேரின் உதடுகளும் உச்சரிக்கப் போகும் பாடல் “அவள் அப்படி ஒன்றும் அழகல்ல’ அருமையான வரிகள். அழகைப் பற்றிய நம் மதீப்பீடுகள் அத்தனையையும் தரைமட்டமாக்கிவிடும் சொற்கள். அந்த பாடல் வரிகளில் சில; (பாடியவர்கள் ரஞ்சித், வினீத், ஸ்ரீநிவாஸ் & ஜானகி ஐயர்) இசை விஜய் ஆண்டனி.

பல்லவி – 1

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஓர் குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

பல்லவி – 2

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிர்ம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

பாலாஜி சக்திவேல், அமீர், சசி,சசிகுமார், ஸ்டேன்லி, சசீந்திரன், என்று தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்படுத்திய முக்கிய இயக்குநர்களையும் மேடையில் அமர வைத்திருந்தது அழகு. பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், மனுஷ்யபுத்ரன், ஜெயமோகன் மற்றும் பலர் பேசினார்கள்.
சிடியை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட அதை பெற்றுக் கொண்டது அறிமுக நடிகர் மகேஷின் தந்தை. அவர் தியேட்டரில் ஒன்றில் பணிபுரியும் சாதாரண ஊழியர். அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் அதுதான். விளிம்புநிலை மனிதர்களை திரையாக்கப் படுத்தியதும் அல்லாமல் தன்னால் இயன்ற வரை தன்னுடைய படைப்புக்கு நேர்மையாக இருக்கும் ஒரு மனிதரைக் காண முடிவதே அதிசயம். வசந்தபாலன் நிகழ்த்திக் காட்டிய இவை அவரின் மேல் நான் கொண்ட மதிப்பை பன்மடங்கு உயரச் செய்தது.

நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியில் வந்தேன். 12 மணி வெயில் கொளுத்தித் தள்ளியது. ஆனால் ஏனோ அது அவ்வளவாக உறைக்கவில்லை.





திங்கள், 4 மே, 2009

ப்ரியமானவளுக்கு


கடல் காற்று சில்லென்று வீசியது. அவள் மனதை லேசாக்கும் சக்தி கடலுக்கும் மழைக்கும் அதிகம் இருந்தது. நினைத்தால் மழை வராது, ஆனால் நினைத்தவுட்ன் கடலைப் பார்த்துவிடலாம். இரண்டு கிலோமீட்டர் தூர பயணத்தில் விரிந்து கிடக்கும் கடல்...காலத்தின் நிரந்தரக் கோலமாக அலைகள்...மனதின் சஞ்சலங்கள் மறையும் வரை அலுக்காமல் கடலை பார்த்துக் கொண்டே இருப்பாள் சாகித்யா.

கடந்த இரவில் சுகுணன் அவளிடம் தன் காதலைச் சொல்லி இருந்தான். மிக அழகான தருணம் அது, சுத்தி வளைக்காமல், நேரடியாக அவள் கண்களை உற்று பார்த்தபடி சொல்லிவிட்டான். அதன் பிறகு ஒரு மென்மையான ஒரு சிரிப்பு....யோசி சாஹி இதில் எந்த கட்டாயமும் இல்லை...நாம அதுக்கப்பறமும் நண்பர்களா இருக்கலாம்....அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிட்டான். அந்த இரவு முழுக்க முழுக்க அவன் நினைவுகளால் நிரம்பி வழிந்தது.

காதல்.....நினைக்கும் போதே கசப்பாக ஒரு உணர்வு தொண்டைகுழியிலிருந்து இதயத்தின் அடிவாரம் வரை வந்து போனது.

ஆனால் அடுத்த நொடி அதன் மாயங்கள் வந்து அவளை அலைக்கழித்தது.

ஆள் அரவமேயில்லாமல் அந்த கடற்கரை அவளின் துணையுடன் கொஞ்சம் அமைதியாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவளுக்குள் பல உணர்வுகள் பொங்கி அடங்கியது.

சுகுணன் நல்ல நண்பனாகத் தான் இருந்து கொண்டிருந்தான். ஆனால் நட்பையும் மீறி அவனிடம் ஒரு ப்ரியம் ஒரு காதல் இழையோடிக் கொண்டிருப்பதை பல முறை அவள் உணர்ந்திருக்கிறாள்.

‘குட்மார்னிங்டா....என்ன பலமான யோசனை....

அவன் குரல் மிக அருகாமையில் கேட்டது. பிரம்மையாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு அவள் முன் அமர்ந்த சுகுணனைப் பார்த்து ஒரே ஆச்சரியமாக இருந்தது.

உன் மொபைலுக்குப் போட்டேன், லைன் எடுக்கலை..வீட்டுக்குப் போட்டேன் உங்க அப்பா தான் சொன்னார் நீ இங்க வந்திருக்கேன்னு....என்னடா உன்னை ரொம்ப சங்கடப்படுத்திட்டேனா....அவள் கைகளை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பரிவுடன் கேட்டான்.

அவளுக்குள் மெல்லிய்தாய் ஒரு நெகிழ்ச்சி.

வேண்டாம், என்று புத்தி சொன்னது, அவன் ப்ரியமான கண்களைப் பார்த்தால் அதைப் பார்த்துக் கொண்டே செத்துவிடலாம் அன்புக்கும் அக்கறைக்கும் ஒரு உருவம் கொடுத்தால் அது சுகுனணாகத் தான் இருக்கமுடியும். மென்மனசுக்காரன். கலா ரசிகன். கலைஞன். அவளுடைய ஓவியக் கூடத்துக்கு அடிக்கடி வந்து புன்னகையில் தொடங்கி, ஆழமான நேசிப்பிலும் நட்பின் பகிர்தலிலும் அவனின் அன்பால் வாழ்வை ஒரு இனிய கவிதையாக நேசித்திருந்தாள். இது போதும் என்று அவள் நினைத்துக் கொள்வாள்.

சாகித்தியாவிற்கு அவன் காதல் புரிந்தது. பிடித்தும் இருந்தது. அவனை மிக மிக நெருக்கமானவனாக பல முறை உணர்ந்திருக்கிறாள். ஆனால் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள அவள் மனம் துணியவில்லை..அவளின் காதல் செடியில் சுகுணன் மிகத் தாமதமாகப் பூத்திருந்தான்.

‘சுகுணன், நான் கிளம்பணும்,’ என்று சொல்லியபடி அவள் எழுந்தாள். அவன் அப்படியே நிற்பது தெரிந்தும் மெல்ல எழுந்து, மண்ணை தட்டிவிட்டு பின் ஓட ஆரம்பித்தாள். காதலைப் புறந்தள்ளி விட்டு அவளால் வேகமாக ஓடமுடியவில்லை. அதற்குள் சுகுணன் அலைகளில் கால் நனைந்தபடி ஒடி வந்து மூச்சிரைக்கச் சொன்னான்....’நில்லுடா என் தங்கம்...என்னைப் பாத்து சொல்லு உனக்கு என் மேல லவ் இல்லையா....

அதற்கு மேல் அங்கிருந்தால் அவள் உடைந்துவிடுவாள். ஒரு பிரியத்தை எட்டி உதைத்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம், தெரிந்தும் அவளால் நிற்க முடியவில்லை.

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சுகுணா, நீ இல்லாத ஒரு வாழ்க்கை ரொம்ப வெறுமையாத் தான் இருக்கும்..ஆனா....என்று ஒரு இடைவெளி விட்டு விட்டு. ’எனக்கு ஒரே குழப்பமா இருக்கு....இதைப் பத்தி யோசிக்கிற நிலைமையிலும் நான் இல்லை சுகு...இப்ப இதை அப்படியே விட்டுடு சாயந்திரம் தேஜூவோட வரேன், அப்ப பேசலாம். சொல்லிவிட்டு வேக வேகமாக நடந்தாள்.

பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த தன் சாண்ட்ரோவை அடைந்து, எடுத்ததும் வேகமாக ரிவர்ஸ் எடுத்தாள். மனதும் ஐந்தாறு வருடங்களுக்கு முன் ரிவர்ஸ் எடுத்தது.

அன்று...

‘என் செல்ல தேனுக்கு தங்க மானுக்கு இனிய காலை வணக்கம் – உடனே ஒரு உம்மாவை அனுப்பு, இந்த நாள் ஒரு பொன்னாளாக உனக்கு அமையட்டுமாக...அந்த குறுஞ்செய்தியை ஒரு புன்னகையுடன் வாசித்தாள். பதில் அப்புறம் அனுப்பிக் கொள்ளலாம், ராஸ்கல் காலைல எழுந்ததும் அழும்பு பண்ண ஆரம்பிச்சுட்டான் என்று நினைத்தவாறு பாண்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்தாள்.

மார்கழி மாத காலை கடற்காற்று குளிரை அவள் உடலுக்குள் எவ்வளவு அனுப்ப முடியுமோ அவ்வளவு அனுப்பிக் கொண்டிருந்தது....அவளுக்கு குளிர் பிடிக்கும். இதமாக இருந்தது.

இன்றுதான் முதல் முறை கடற்கரை ஓட்டம். நன்றாகத்தான் இருந்தது. சாந்தோமிற்கு வீடு மாற்றியதில் அவளுக்குப் மிக மிக பிடித்த விஷயம் கடல். கடலுக்கும் அவளுக்கும் கால காலமாக ஒரு தொடர்பு இருப்பது போல தோன்றும்.

இன்று ஒரு அஸைன்மெண்ட் வேறு முடிக்காமல் இருக்கிறது. ஜாகிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்பினாள். அவனை பற்றிய நினைவு அவளை துரத்திக் கொண்டே வந்தது. அவனை நினக்கும்போது மட்டும் எப்படி ஒரு புன்னகையும் மலர்ச்சியும் அழையா விருந்தாளியாக தன் முகத்தில் வந்து ஒட்டிக் கொள்கிறது என்று தெரியவில்லை. எல்லாம் காதல்...அதன் சக்தி. அதன் மாயம்...அவளைப் பொருத்தவரை வாழ்வின் வண்ணம்.

வண்ணங்களுக்கும் அவளுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது. அவள் ஓவிய ஈடுபாட்டை சிறு வயது முதல் அப்பா ஊக்கப்படுத்தி வந்தார். பதின் வயதில் தாயை இழந்த சாகித்யாவுக்கு அப்பா தான் உலகம். டாக்டர் வித்யாநாதன் அவளை மகளாக மட்டும் நினைக்காமல் தோழியாக தாயாக நினைப்பவர். நேரம் கிடைக்கும் போது அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்காக பேசி பேசியே டயர்ட் ஆகிவிடுவார்கள்.

ஓவியக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இருந்தாள். அங்குதான் லெனினின் அறிமுகம். ஒரு நாள் மரநிழலில் அமர்ந்து கொண்டு அவன் ஒரு தாளில் எதையோ யோசித்து யோசித்து வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு பின்னால் நின்று பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை....அந்த காகிதத்தில் அவன் வரைந்து வைத்திருந்தது அவளது விழிகளை...அந்த ஈரம், லேசான சிரிப்பு எல்லாம் பதிவாகியிருந்தது. அப்போது ஆரம்பித்த அந்த காதல் வெற்றிகரமாக இரண்டு வருடங்களை விழுங்கியிருந்தது. அவர்கள் கல்லூரி வாழ்க்கையின் கடைசி பக்கங்களில் இருக்கும் போது மறக்கமுடியாத அந்த சம்பவம் நடந்தே முடிந்து விட்டது

விளையாட்டாக ஆரம்பித்து வேகத்தில் முடிந்துவிட்டது.

அன்று ஒரு மழை நாள். சாகித்யா கல்லூரி செல்லும் மனநிலையில் இல்லை. லீவ் போட்டு விட்டு லாண்ட்மார்க்கில் போன மாதம் வாங்கி வந்திருந்த புத்தகத்தை படித்தே தீர்வது என்று முடிவு செய்திருந்தாள். வித்யாநாதன் ஊரில் இல்லை. மெடிக்கல் கான்ப்ரன்ஸுக்குப் போய் இருந்தார்.. தங்கம்மா குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று இரண்டு நாள் லீவ் கேட்டுப் போயிருந்தாள். சாகித்யாவிற்கு வெகு சுமாராகத் தான் சமைக்க வரும். இந்த தனிமை, கொட்டும் மழை, அற்புதமான புத்தகம் என்று இனிய சூழல் அமைவது அரிது என்று நினைத்து பிரட்டை ரோஸ்ட் செய்து சாப்பிட்டு நேராக தன் ரூமுக்கு வந்து படுத்தபடி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாள்.

காலிங் பெல் சத்தம் கேட்டு வாசல் கதவை திறந்தாள்.

இன்ப அதிர்ச்சி. லெனின் கடுப்பாக நின்று கொண்டிருந்தான்.

‘ஏய் வாட் எ சர்ப்ரைஸ் உள்ள வா’ அவனைப் பார்த்ததும் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

ஜெர்கினை ஓரமாக வைத்துவிட்டு, ஏண்டி சொல்லாம கொள்ளாம லீவு போட்டே, இங்க ஒருத்தன் உனக்காக நாய் மாதிரி கிடக்கறேன்னு அலட்சியமா...

சாரிப்பா சொல்லாம்னு தான் நினைச்சேன்...நீ திட்டுவே, வரச் சொல்லி அடம் பிடிப்பே...அதான்...

சரி எங்க என் மாமனார்... ஓ .ஊர்ல இல்லைன்னு சொன்னே இல்லை, ஐ ஜாலி....

செருப்படி படுவே., சரி பாத்தாச்சு இல்லை, கிளம்பு கிளம்பு எனக்கு படிக்கணும்...

என்னது உன்னைப் பாக்க இவ்வளவு தூரம் மழை வெள்ளம்னு பாக்காம வந்ததுக்கு துரத்தறயே மனுஷியாடி நீ என்றான்...

சரி சமத்தா இங்கேயே இருக்கணும். இரு காபி போட்டுட்டு வரேன்.

அதற்குள் அவன் அவள் ரூமுக்கு சென்றிருந்தான். சுவர்களில் தொங்கிய கலாபாணி வகை சித்திரங்களை ரசித்தான். அவள் வரைந்திருந்த ஓவியங்களும் அங்கு இருந்தது.

அந்த அறை கவித்துவமாக இருந்தது. சுவரை ஒட்டி கண்ணாடி அலமாரி. அதில் வரிசையாக அடுக்கப்ப்படிருந்த புத்தங்கங்கள். ஒரு குட்டி லெதர் சோபா, நடுவில் ரோஸ் வுட் டீப்பாய். ஒரு ரோஸ் வுட் டேபிள், அதன் மேல் அவளுடைய கம்யூட்டர், பக்கத்தில் ஒரு குட்டி ஷெல்ப். அதில் வரிசை தப்பாமல் சிடிக்கள். ரசனைக்காரியைத் தான் காதலிச்சிருக்கோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அவள் அங்கு வந்து விட்டாள்.


ஏண்டா இங்க வந்தே, ஒழுங்கு மரியாதையா ஹாலுக்கு போ...இதைப் பிடி முதல்ல....காபி கப்பை அவனிடம் தந்தாள்.

சாஹி, ரொம்ப அருமையா இருக்குடா உன் ரூம்...அவள் வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்து, ஒரு தேவதையே தேவதைகளை வரைந்து வைத்திருக்கிறது...ஆச்சரியக் குறி... என்று பார்த்திபன் ஸ்டைலில் சொல்லி சிரித்தான்

அடிபடப் போற லெனின். என்றாள் சிணுங்கலாக.

‘லெனின் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். என் கண்ணை மட்டும்தான் இது வரைக்கும் விதவிதமா வரைஞ்சிருக்கே...என்னோட முழு உருவத்தை வரைஞ்சி தாயேன்...

வொய் நாட் சாஹி....இப்பவே வரையறேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...

அவன் அவளைப் பார்த்து கண்ணடித்து, ‘டைட்டானிங் பாத்தோம் இல்ல....அதுல ரோஸ் கொடுத்த போஸ்தான் எனக்கு இப்ப நீ கொடுக்கணும்...நான் வரைவேனாம்...நீ அப்படி போய் சமத்தா அங்க உட்காருவியாம், இல்லை நிப்பியாம், ஆஸ் யூ விஷ்...அவன் சொல்ல ஆரம்பித்தான்.

ஆசையப்பாரு அதுக்கு நான் ஆள் கிடையாது இடத்தை காலி பண்ணு...

ப்ளீஸ் சாகித்யா...உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்...என் பொண்டாட்டி நீ...உன்னை பாக்க எனக்கு உரிமை கிடையாதா... காலேஜ்ல நான் ந்யூட் மாடல்களை வரையரது வேற, எனக்கே எனக்கான உன்னை வரைஞ்சி பாக்கணும்னு தோணுது...இது மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கறது கஷ்டம்.. கெஞ்சலுடன் அவளை நெருங்கினான்.

அவள் மறுக்க மறுக்க அவனுக்குள் ஒரு மிருகம் குடியேறியது.

அவள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவன் அவளை முழுதும் எடுத்துக் கொண்டான்.

சாஹித்யா அழுது அழுது சோர்ந்து போனாள். அவன் எவ்வளவு சாரி கேட்டும் மனசு முழுதும் வலித்தது.

நேசத்தின் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளாத அவனை அவளால் மன்னிக்க முடியவில்லை. அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காத அவனை அவள் வெறுக்க ஆரம்பித்தாள்.

அதன் பின் வந்த நாள்கள் வலி நிறைந்தவை. முதலில் கெஞ்சிக் கொண்டிருந்த அவன் அதன் பின் ஈகோவின் பிடியில் மாட்டிக் கொண்டான். அவள் தன் காலடியில் சுற்றி வருவாள், கல்யாணம் பண்ணிக்கோ என்று கெஞ்சுவாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளுடைய கோபமும் புறக்கணிப்பும் எரிச்சலை தந்தன.

அவளுக்கும் தனக்கும் இருக்கும் உறவை கொச்சைபடுத்தி கல்லூரி சுவர்களில் ஓவியம் வரைந்து வைத்தான். அவளைக் கடக்கையில் விஷமமாக சிரிப்பான். சூயிங்கம்மை மென்று கொண்டே ‘நேத்து ராத்திரி யம்மா என்று பாடுவான். அவளை எப்படியெல்லாம் காயப்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்தான். அவனுடைய வக்கிர புத்தியைப் பற்றி தாமதமாகத் தெரிந்து கொண்ட சாகித்யா மனதுக்குள் உடைந்து போனாள்.

அந்த காலகட்டத்தில் அவளை காப்பாற்றியது ஓவியமங்கள், புத்தங்கள், இசை, நண்பர்கள். பலவிதமான ஓவியங்களை வரைந்து அவள் மனதை திசை திருப்பினாள் எல்லாம் இருந்தும் எதையோ இழந்துவிட்டதை போல இருக்கும். மனதை ஒருமுகப் படுத்த யோகா வகுப்புகளுக்குப் போனாள். தியானம் பழகினாள். ஒருவாறு மனது சமன்பட்டது. காலத்தின் மகத்தான சக்தி அது எத்தகைய காயங்களையும் ஆற்றிவிடும். படிப்பை முடித்த கையோடு பிரான்ஸ் சென்றாள். அங்கு ஒரு வருட படிப்பு இடையில் பாரிஸ், லண்டன், பெர்லின் போய் வந்தாள். ஓவியத்தில் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டாள்.

கல்யாணத்தைப் பற்றி அப்பா கேட்கும்பொதெல்லாம் ஏதாவது சொல்லி தட்டி கழித்தவள் ஒரு நாள் அவரிடம் தனக்கு நடந்ததை அழுதபடி சொன்னாள். அவர் அவளை ஆறுதல் படுத்தி, வாழ்க்கை ரொம்ப பெரியது, இது கடந்துவிட்ட மேகம் என்று உணர்த்தினார். அவளுக்கென்று ஒரு ஓவியக் கூடத்தை உருவாக்கித் தந்தார். ‘ஸாகித்யா ஆர்ட் கேலரி’ இன்று சென்னையில் ஓவிய ரசிகர்களின் தலைமைச் செயலகம் என்ற அளவுக்கு புகழ் பெற்றது. டெடிக்கேட் ஆர்ட்டிஸ்டாக அவள் உருவாகியிருந்தாள்.

அவள் வாழ்க்கை வண்ணங்களாய் ஜொலித்தது. ஓவியப் போட்டி, கண்காட்சி என்று எப்போதும் பிஸியாக இருப்பாள். வெகு நாள்களுக்குப் பிறகு மயில் இறகாய் மனதை வருடம் ஒரு நேசம் சுகுணன் மூலமாக. அவனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தாள்.

சுகுணன் காத்துக் கொண்டிருந்தான். தூரத்தில் சாஹி தேஜஸ்வினியைத் தூக்கிக் கொண்டு வருவது தெரிந்தது. குட்டி ஏஞ்சல் மாதிரி இருந்தது தேஜு. எழுந்தான்..அவர்கள் அருகில் சென்று...’அடடே என் தங்கம் எப்படி இருக்கு...என்கிட்ட வா’

அவளுக்கு மூடு சரியில்லை சுகு....என்றாள் சாஹி.

‘என் செல்லக்குட்டிக்கு யார் மேல கோபம்.....ஏன் உம்முன்னு இருக்கீங்க...தேஜூ தங்க பாப்பாவாச்சே...அவன் அவளை வாரி எடுத்து முத்தமிட்டான். குழந்த்தை சகஜமாகி சிரித்தது.

நான் உன்னை எம்ஜிஎம் கூட்டிட்டு போவேனாம். புஜ்ஜிம்மா என் ஏஞ்சல் குட்டி.. ஒரு டெய்ரி மில்கை தேஜுவிடம் கொடுத்தான். அது மலர்ந்து சிரித்து வாங்கிக் கொண்டது.

இந்தா பெரிய ஏஞ்சல் உனக்கும ஒரு சாக்லேட்....என்று அவளிடம் நீட்டினான்.

அவள் அவனைப் பார்த்தாள்.

குரலே எழும்பவில்லை, மெதுவாக சொன்னாள்..’சுகுணன் ரொம்ப யோசிச்சுட்டேன்பா இது சரியா வராது, நான் என்போக்குல இருந்துக்கிறேனே..என்னோட வேலையை நான் எவ்வளவு நேசிக்கறேன்னு உனக்கேத் தெரியும்...என் வாழ்க்கையை அர்த்தப்படுத்த தேஜூ இருக்கா..அவளை நல்லபடியா வளர்க்கணும்...எனக்குன்னு பெரிசா ஆசைகள் கிடையாதுப்பா...இது போதும்...அதோட காதல் கல்யாணங்கற விஷயங்கள்ல நம்பிக்கை செத்து போய் நிறைய வருஷங்கள் ஆகுது...எனக்கு அந்த வாழ்க்கை ஒத்துவரும்னு தோணலை..உன் எதிர்ப்பார்ப்புகளுக்கு நான் சரியா வர மாட்டேன்...நல்ல பொண்ணா பாத்து கட்டிக்கோ....என்றாள். சொல்லும்போது அவள் குரல் லேசாக நடுங்கியது.

சுகுணன் அவள் தோளை தொட்டு, ‘சாஹி உன்னோட கடந்த காலத்தையெல்லாம் தூக்கி குப்பைல நீ எறிஞ்சிட்டு தெளிவா இந்த வெற்றியை அடைஞ்சிருக்கே...எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா அது..உன்னோட தன்னம்பிக்கை, அன்பு, பொறுமை இதெல்லாம் என்னை உன் பக்கம் ஈர்த்துடுச்சு. எவ்வளவு புத்தகம் வாசிக்கறே, எத்தனை மனுஷங்களை சந்திக்கறே....மனசுக்குள்ள மட்டும் ஒரு தீவா இருக்கேடா. உன்னை இன்னும் வெளிக் கொண்டு வரணும். உன்னோட ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலயும் நான் இருக்கணும்னு ஆசைப்படறேண்டா. சாஹிமா ஒரு பூ செடிலேர்ந்து உதிர்ந்ததும அந்த செடி செத்துப் போய்டுமாமா? இல்லையே ஒரு புது பூ....இது இயற்கை கண்ணம்மா...காதல்ங்கிற உணர்வும் இயற்கையானது. அதை ஏன் கட்டுப் படுத்திக்கணும்? என்னை நீ மறுக்க உனக்கான ஞாயங்கள் எனக்கு புரியுது, ஆனா ஒரு பத்து வருஷம் கழிச்சு நீ யோசிச்சு பார்த்தா கொஞ்சம் வெறுமையா உணரலாம். மே பி...ஆர் மே நாட் பி ஆல்சோ....உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னைப் போல ஒருத்தி கிடைக்கறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா...உன் கைல இருக்கிற தேஜு யாரு...யார் பெத்த குழந்தையோ, அதுக்கு தாயா தோழியா நீ இருந்து பாத்துக்கற போது உன் துணைக்கு நானும் வரணும்னு ஆசைப்படறேன். இது நியாயமான ஆசைடா சாஹி...என்னை புரிஞ்சுக்கோ...இதுல பெரிசா யோசிக்கறதுக்கு ஒண்ணுமில்லை....அவன் தன் ப்ரியத்தையெல்லாம் வார்த்தைகளாக மாற்றி கொட்டித் தீர்த்தான்.

அதுக்குமேல் அவளால் தன்னை கட்டுப் படுத்தி கொள்ள முடியவில்லை. அவன் கண்களைப் பார்த்தாள், அதில் அன்பும் காதலும் தேங்கிக் கிடந்தது.

சுகுணா இன்னியோட கடைசிப்பா....

அவனை ஆழமாக பார்த்து, அழகான ஒரு சிரிப்புடன் சொன்னாள்

‘நீ என் நண்பான இருப்பது...