
’அம்மா அய்யோ ஓடுதே’ என்று கத்திக் கொண்டே வர்ஷா தூக்கத்திலிருந்து துள்ளி எழுந்து அறையின் குடுக்கும் நெடுக்கும் ஓட ஆரம்பித்தாள்.
திடுக்கிட்டு விழித்த ஜோதி ’என்னடி ஆச்சு’ என்று கேட்பதற்குள் வர்ஷா காதைப் பொத்தி கொண்டு கம்யூட்டரை ஆன் செய்து கூகிளைத் திறந்தாள்.
‘என்ன வர்ஷா எதுக்கு கத்தினே என்னாச்சும்மா? என்ற ஜோதியிடம் ‘காதுக்குள்ள எறும்பு போயிருச்சும்மா’ அதை வெளிய எடுக்கறது எப்படின்னு கூகிள்ல சர்ச் பண்ணிட்டிருக்கேன். அதற்குள் மறுபடியும் காதில் ஏதோ நடந்து கொண்டிருப்பது போல் இருக்கவே, ‘மா நடக்குது அய்யோ எதாச்சும் பண்ணேன்’ என்று அலறினாள்.
’அடிப்பாவி அதை கம்யூட்டர் கண்றாவிய அப்புறமா பாத்துக்க, இங்க வா’ என்று மகளை பாத்ரூமிற்கு அழைத்துப் போய் காதில் தண்ணீரை மெதுவாக ஊற்றினாள் ஜோதி. பொறுமையின்றிக் கத்திக் கொண்டே இருந்த வர்ஷாவின் வாய் வழியே தண்ணீர் வெளி வந்ததும் சட்டென்று எறும்பின் நடமாட்டம் நின்றுவிட்டது. ஆனால் காது ஒரேடியாக அடைத்துக் கொண்டது. ப்ரஷ் செய்யும் போது அந்த சத்தம் மண்டைக்குள் கேட்டது.
ஒரு வழியாய் அவள் பல் விளக்கி விட்டு வருவதற்கு முன் கணினியில் வர்ஷா எதைத் தேடினாள் என்று பார்த்த ஜோதிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ‘காதில் எறும்பு புகுந்தால் என்ன செய்வது’ (‘What to do when an ant goes inside the ear’) என்று கூகிளில் அடித்திருந்தாள். பதில் வருவதற்கு முன் எறும்பை எடுத்தாகிவிட்டது.

ஆனால் எதற்கும் எப்போதும் கம்யூட்டர் வேண்டும் அவளுக்கு. கண்ணுக்குத் தெரியாத அதன் மாயக் கரங்கள் வர்ஷாவை பிடித்து அதன் முன்னால் பல மணி நேரங்கள் உட்கார வைத்திருந்தது. ஜோதியிடமோ அசோக்கிடமோ அதிகம் அவள் பேசுவதில்லை, அவளுடைய தோழிகள் மற்றும் கணினி தான் அவளின் உலகம். தேவைக்கு மட்டுமே பெற்றோர்கள் என்று அவள் மாறிப் போனதை சகஜமாக ஜோதியால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பல மணி நேரம் வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்க நேர்கையில் அதற்கு குடுக்கும் விலை இது போன்றவைதான் என்று அவள் அறிவுக்கு தெரிந்திருந்தாலும் மனம் சோர்வாகியது.
வீட்டில் அன்லிமிடெட் இண்டர்னெட் கனெக்ஷன் குடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று சில நாட்களாக உணர்கிறாள் ஜோதி. படிக்காவிட்டால் திட்டலாம் ஆனால் வர்ஷா மூன்று ரேங்கிற்குள் வந்துவிடுபவள். இதுவரை அவளைப் பற்றி சின்னதாக கூட புகார் பள்ளியில் இருந்து வந்ததில்லை. ஜோதியின் சமீபத்திய எதிரி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்தக் கறுப்பு நிற கணினிதான்.
சின்னவன் வருண் வர்ஷாவிடம் கெஞ்சி கூத்தாடி தினமும் ஒரு மணி நேரம் கேம்ஸ் விளையாடிவிட்டு போய்விடுவான். இவள் அளவுக்கு அவன் கணினிக்கு அடிமைப்பட்டிருக்கவில்லை. அவன் கதை வேறு. ஹங்காமா டீவியில் வரும் சிங்சான், போகோவில் மாட், மற்றும் பவர் ரேஞ்சர்ஸ் இருந்தால் போதும் உணவு உறக்கம் படிப்பு இதெல்லாம் ஏதோ அவ்வப்போது நடக்கும் விஷயங்கள்.
வர்ஷாவையும் வருணையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஜோதி அவசர அவசரமாகக் கிளம்பினாள்.
ஆபிஸ் பஸ் சரியாக 8.30 வந்தது. பஸ்ஸில் ஏறி சீட்டில் உட்கார்ந்தும் நினைவுகள் முழுக்க வர்ஷாவைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது. பதினைந்து வயது டீன் ஏஜ், எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தும் வயது. தான் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று யோசிக்கையில், வர்ஷாவை விட பத்து மடங்கு ஆக்ரோஷமாக இருந்ததாகவே பட்டது. ஆனால் சில விஷயங்களில் அம்மாவுடன் அதிகமாக சண்டை போடாமல் சரண் அடைந்திருக்கிறாள். அப்போதைய பிரச்சனை விளக்கு வைக்கறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடணும், 24 மணி நேரமும் படிக்க வேண்டும், ஆண் நண்பர்கள் இருக்கக் கூடாது, கத்திப் பேசக் கூடாது, சைக்கிளில் ஊர் சுற்றக் கூடாது போன்ற விஷயங்கள் மட்டும் தான். தினமும் ஒரு சண்டை அம்மாவிற்கும் ஜோதிக்கும் நடக்கும். ஆனால் வர்ஷா அப்படியில்லை. சண்டை போட போட்டாள் மிகவும் நூதனமான முறையில் ஜோதியுடன் யுத்தம் செய்வாள். கதவை சாத்திக் கொண்டு மொபைலில் இருந்து மெசேஜ் அனுப்புவாள். ”என் அப்பாவை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நீ திட்டறே எனக்கு அது புடிக்கலை, அப்பாகிட்ட சொல்லி ஹாஸ்டலுக்கு போயிடுவேன்” என்பது போன்று இருக்கும் அது. எங்கே அடித்தால் தனக்கு வலிக்கும் என அந்தச் சின்ன மூளைக்குத் தெரியும்.

இண்டர்நெட்டில் அவள் கண்டதைப் பார்த்து புத்தி கெட்டுவிடக்கூடாது என்று பேரண்டல் லாக் போட்டிருந்தாள். பல வலைத்தளங்களை அனுமதிக்காக ஃபயர் வால், மற்றும் வேறு சில சாப்ட்வேர்களை லோட் செய்திருந்தாள். வர்ஷாவின் தேடுதல் முதலில் படிப்புச் சார்ந்தும் பள்ளி ப்ரொஜெக்ட் சார்ந்தும்தான் இருந்தது. நாளாக ஆக பக்கத்தில் ஜோதி இல்லாத தைரியத்தில் அவள் பலவிதமான வலைத்தளங்களுக்கு போய் வெட்டிக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தாள். ஆங்கிலத்தில் தனக்கு ஒரு ப்ளாக் உருவாக்கிவிட்டாள். சில சமயம் அவள் செயல்கள் பாராட்டும் விதமாக இருந்தாலும் பெரும்பாலும் பொழுது போக்கான விஷயங்களில் மேலதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ஜோதி தடை சொன்னாள். மேலும் வர்ஷா சமீபத்தில் ஃபேஸ் புக்கில் சேர்ந்ததிலிருந்து கணினிக்கு முழு நேர அடிமையாகிப் போயிருந்தாள். ஃபேஸ் புக் என்பது தி.நகர் ரங்கநாதன் தெரு போன்று நிறைய மனிதர்கள் குழுமியிருக்கும் இடம். யாரும் யாருடனும் நட்பு கொள்ளலாம் எனும்படியான கட்டற்ற சுதந்திரம், பேச்சு உரிமை என்று அதன் இயக்கங்கள் எல்லாரையும் ஈர்க்கக் கூடியவை. ஆனால் படிப்பைக் கெடுத்துக் கொண்டு இவள் அதில் விழுந்து கிடப்பது ஜோதிக்கு பெரும் எரிச்சலைக் குடுத்தது. மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லிப் பார்த்துவிட்டாள். அவள் கேட்கும்படியாக இல்லை. மேலும் தீவிரமாக அதில் இயங்க ஆரம்பித்துவிட்டாள். அவள் தோழமைகள் லிஸ்டில் புனைப் பெயரில் ஜோதி சென்று பார்த்தபோது ‘வீ ஹேட் மாம் ஹு ஆல்வேஸ் அட்வைஸ்’ என்ற தலைப்பின் கீழ் நிறைய பேசியவள் வர்ஷாதான்.
வர்ஷாவிற்கு இசைப்பித்து அதிகம். நிறைய ஆல்பங்கள் வாங்கி அடுக்கி இருந்தாள். எல்லாம் அசோக் குடுத்த செல்லம். அவன் அமெரிக்காவிலிருந்து வரும் போது அவளுக்காக வாங்கி வருவது உடைகள் போக ஆல்பங்கள்தான். ஹான்னா மோண்டானா எனும் பாப் பாடகிதான் இவளுக்கும் ரோல் மாடல். அந்த ஹான்னா தலையை விரித்துக் கொண்டு முழுத் தொடைத் தெரியுமாறு போட்டுக் கொண்டிருந்த ஸ்க்ர்ட்தான் வர்ஷாவிற்கு மிகப் பிடித்த உடை. ஜோதியின் கண்டிப்புக்கு பயந்து அவ்வளவு குட்டைப் பாவடையை அணியாமல் ஜீன் க்ளாத்தில் முட்டி வரை உள்ள அரைப் பாவடையை அணிவாள். தவிர வர்ஷாவின் ஸ்கூல் பேக், வாட்டர் கேன், லன்ச் பாக்ஸ், பென் பாக்ஸ், எக்ஸாம் பேட் என அவள் உபயோகிக்கும் எல்லாப் பொருட்களுமே ஹானா மோண்டானா ப்ராண்ட்தான்.
”ஏண்டி இப்படி பைத்தியம் பிடிச்சு அலையறே?” என்று ஜோதி கேட்டதற்கு ஒரு சிரிப்பு சிரித்து விட்டு ’மா, ஐம் ஜஸ்ட் க்ரேஸி அபவுட் ஹான்னா இதுல என்ன தப்பு இருக்கு? என்றாள். பேஸ்புக்கில் ’ஹான்னா ஃபேன் க்ளப்’பில் வேறு சேர்ந்திருக்கிறாள். அடுத்து இவள் பித்து யார் மீது மாறப் போகிறதோ என்ற திகிலில் ஜோதிக்கு அமெரிக்காவில் இருக்கும் அத்தனை பாப் பாடகர்கள் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. இளையராஜா, ரஹ்மான், ஹரிஹரன், மெஹ்தி ஹசன் இவர்களை எல்லாம் ஏன் வர்ஷாவிற்குப் பிடிக்கவில்லை என்று நினைத்தாள்.
காலங்கள் மாறி இருக்கலாம். பிள்ளைகளின் ரசனைகள் வேறுபடலாம் ஆனால் எதையும் காது குடுத்துக் கேட்க மறுக்கும் தன்மையை என்ன சொல்வது யாரிடம் இதையெல்லாம் போய் முறையிடுவது என ஜோதி குழம்பிப் போனாள். டெக்னாலஜி எனும் அசுரன் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்க தப்ப வழி தெரியாமல் கலங்கினாள். ஜோதி வர்ஷாவிடம் தன்னுடைய கருத்துக்களையோ விருப்பங்களையோ அதிகம் திணிப்பதில்லை. ஆனால் அளவுக்குமீறி இவர்களுக்குச் சுதந்திரம் குடுத்துவிட்டோமோ என்று கவலைப்பட ஆரம்பித்தாள்.

ந்யூ ஜெர்சியில் இருந்த அசோக் அடுத்த வாரம் லீவில் வரும் போது அவனிடம் இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள். அதன்பிறகு ஜோதியின் உலகம் வேறானது. மகளைப் பற்றிய கவலை மங்கிக் கொண்டே போக கணினியும் கண்ணுக்குத் தென்படாமல் குரல் வழியே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பாஸின் ஆணைகளுமே அந்த நாளை விரட்டி அடிக்க போதுமானதாக இருந்தது.
ஆபிஸ் பஸ் தெருமுனையில் ஒன்பது மணிக்கு அவளை வெளித் தள்ளியதும், வெகுவாக களைத்து வீட்டினுள் நுழைந்தாள். நுழையும் போதே வர்ஷாவும் வருணும் தங்களுக்குள் நடந்து முடிந்த சண்டைகளின் விபரங்களை மாறி மாறி சொன்னார்கள்.
’அம்மா அக்காகிட்ட கம்யூட்டர் கேட்டேன் பாரு எப்படி கிள்ளி விட்டுட்டா என்றான்.
தொடைகளில் நன்றாக கிள்ளி வைத்திருந்தாள். சிவந்திருந்தது.
”ஏண்டி இப்படி செஞ்சே உன்னை விட எவ்வளவு சின்னவன் வருண். அறிவு இருக்காடி”?
அவள் அலட்சியமாக ஜோதியைப் பார்த்து, ‘இவனை ஏன் பெத்தே’ என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டாள்.
”கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடி”
”மா இப்படி இண்டீசண்டா டி சொல்றதை நிறுத்துங்க முதல்ல இந்தக் குட்டி பிசாசு பேசாம டீவியைப் பாத்துக்கிட்டு கிடக்க வேண்டியதுதானே சும்மா சும்மா என் மொபைல நோண்டறதும் கம்யூட்டர் கீ போர்டை உடைக்கறதும் சே நீ இவனை என் தலைல கட்டிட்டு ஜாலியா ஆபிஸ்ல இருக்கே ஒரு நாள் இருந்து பாரு அப்ப தெரியும் உன் பையனோட ஒரிஜினல் ஃபேஸ்...ஐ ஹேட் ஹிம்” என்று கத்தி விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
வருண் இதைக் கேட்டதும் ஓவென்று அழ ஆரம்பித்தான். சாப்பாடு ஊட்டி மடியில் படுக்க வைத்து அவனை தூங்க வைத்த பின் அவன் நோட்டை எடுத்துப் பார்த்தாள். அதன் வெள்ளைத் தாள்கள் ஜோதியைப் பார்த்து வலியுடன் சிரித்ததைப் போல் இருந்தது. ஹோம்வொர்க் செய்திருக்கவில்லை. வர்ஷாவையும் ஒருவழியாய் சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தாள். அவள் எதுவும் பேசாமல் தூங்கிவிட்டாள்
ஸ்கைப்பில் (நெட் போனில்) அழைத்த அசோக்கிடம் 12 மணிக்கு பிறகு அழைக்கச் சொன்னாள். ஆனால் பதினொரு மணிக்கே ஜோதிக்கு தூக்கம் வந்தது. முடிவற்ற பொருட் தேடலில் எத்தனை எத்தனை பிரிவுகள். பகல் முழுவதும் பிள்ளைகளைப் பிரிந்துவிட்டு இரவு அசோக்கை மிஸ் செய்ய வேண்டியிருந்ததை நினைத்து வாழ்க்கை சலிப்பாக இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் சில வருடங்களைக் கடத்திவிடலாம்தான். அதனோடு கடந்துவிடுவது இளமையும் கூடத்தானே! இதையெல்லாம் யோசித்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று மனதை திசை திருப்ப முயன்றாள். எப்படி தூங்கிப் போனாள் என்றே தெரியவில்லை. நள்ளிரவைத் தாண்டி வந்த கனவின் தீவிரம் அவளை விழித்தெழச் செய்தது.
வருணை டிவிக்குள்ளிருந்து சில வேற்றுக் கிரக மிருகங்கள் உள்ளே இழுத்துச் சென்றது அவன் அம்மா அம்மா என்று அழ அங்கு இருந்த வர்ஷா அதைக் கண்டு கொள்ளாமல் கம்யூட்டரில் எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்.
திடுக்கிட்டு விழித்த ஜோதி பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வருணைப் பார்த்தாள். நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பக்கத்து பெட்டில் படுத்திருந்த வர்ஷாவின் கைகளுக்குள் டெட்டி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
டீவியின் ரீமோட்டில் வருணுடைய வாழ்க்கையும் கம்யூட்டரின் கீபோர்டில் வர்ஷாவின் நேரமும் கரைந்து கொண்டிருப்பதை அறிந்தும் என்ன செய்வது என்று யோசித்தபடியே ஜோதி கணினியை ஆன் செய்தாள்.

குழந்தைகளை இண்டர்நெட்டிலிருந்து காப்பாற்றுவது எப்படி என்று கூகிளில் தேட ஆரம்பித்தாள்.
(’கல்கி’ தீபாவளி மலர் (நவம்பர் 2010 வெளிவந்த சிறுகதை)
11 கருத்துரைகள்:
இன்றைய தலைமுறையின் யதார்த்தம்!
just innaikku than padichen .system open pannum pothu kooda oru erumbu oddichu nenachu sirichukitte irunthen .
very nice ma
கதை நல்லா இருக்கு உமா...கூடவே ரொம்ப யோசிக்க வைக்குது. ஜாயின்ட் பேமிலில இந்தக் கஷ்டமெல்லாம் கொஞ்சம் குறைவு,குழந்தைகளை கண்காணிக்க யாராவது ஒருத்தர் இருப்பாங்க வீட்ல. தனியா இருக்கறது பல விதங்களிலும் மனிதர்களை பொதுவா பெற்றோர்களை கோழைகள் ஆக்கிடுது .
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் கதை தான். எதையுமே மீட்க முடியாம ஒரு விதமான மன அழுத்தத்திலேயே காலம் கடந்துடுது.
இந்தக் கதையை BUZZ ல் கூட ஷேர் செய்திருக்கேன் உமா.
அதுக்கான லிங்க் ;
http://www.google.com/buzz/100650469711525506932/HTtk4VW2THm/http-umashakthi-blogspot-com-2010-11-blog-post-15
அந்த வர்ஷா நிலையில் தான் நான் இருக்கேனோ என கவலையில் உள்ளேன்....
சிந்திக்க வைக்கும் கதை
//பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் சில வருடங்களைக் கடத்திவிடலாம்தான். அதனோடு கடந்துவிடுவது இளமையும் கூடத்தானே! //
ம்ம்ம்...அருமை! அப்படியே நிதர்சனத்தை உரிச்சு வைச்சிருக்கீங்க.
ஆமாம் kutipaiya ;))) இதில் பாதி தான் புனைவு, மீதி என் வீட்டில், தோழிகள் வீட்டில் நடக்கின்றவை ;)))
உங்க கமெண்டை படிக்கும் போது லேசா சிரிச்சிட்டே படிச்சேன்;))) உங்க மனம் திறந்த பாராட்டுதலுக்கு நன்றி பத்மா..
கார்த்திகா, வெகு நாள் கழித்து வந்தமைக்கு நன்றி. அதுவுமில்லாமல் கூகிள் பஸ்சில் பகிர்ந்ததிற்கும் மிக்க நன்றி ;)))
//தனியா இருக்கறது பல விதங்களிலும் மனிதர்களை பொதுவா பெற்றோர்களை கோழைகள் ஆக்கிடுது //
சரியா சொன்னீங்க....
அப்படியா சக்தி? ....காலையிலிருந்து மாலை வரை கணினியின் முன்னால் வேலை விஷயமா உட்கார வேண்டியிருக்கிறது.
இரவில் வலைத்தளம், பேஸ்புக், ட்விட்டர்....நண்பர்களின் நேரடி சந்திப்பை இவை போன்ற விஷயங்கள் குறைக்கிறது.
இது காலத்தின் கட்டாயம், எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்க நாம் பழக் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி சக்தி ;))
நன்றி தெகா (பெயர் வித்யாசமாக இருக்கிறது...உங்கள் வலைத்தளத்திற்கு வருகிறேன்)
Read recently on E-culture:
People today live in the virtual world. They are not in the actual world. They live with images in the e-world. The sociality of human being(eg: the joint family) was reduced to tiny community(eg: the nuclear family). And today even the tiny world is in danger. People live with compute...rs. The sociality in every aspect is cut down(eg: need not go to a market to buy; sit at home and press the keys in the computer).
It is said by Jean Baudrillard, the contemporary French thinker.
கருத்துரையிடுக