திங்கள், 6 டிசம்பர், 2010

மழை மழை மட்டுமே




நேற்று இரவிலிருந்து இன்று இரவு வரை இடை விடாமல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. சில கணங்கள் மழையை ரசித்தேன், சில கணங்கள் மழையில் திளைத்தேன், சில கணங்கள் மழையை மறந்தேன், சில கணங்கள் மழையை வெறுத்தேன்.




பல வருடங்கள் கழித்து சென்னையில் இத்தகைய மழையையும் குளிரும் உயிர் வரை ஊடுருவிச் செல்கிறது. ஜன்னலுக்கு வெளியே நேற்றிரவிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிற மழை சத்தம் இனிமையின் விளிம்பிலிருந்து வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. பெரும் காற்றும் கடும் மழையும் அடர்க் குளிரும் நள்ளிரவும் ஏதேதோ எண்ணங்களையும் கற்பனைகளையும் மனதினுள் ஊற்றெடுக்க வைக்கின்றன. வாசித்து முடிக்காத தோப்பில் முகமது மீரானும், ஆலிஸ் மன்றோவும், நாஞ்சில் நாடனும், ஜி.குப்புசாமியும் புத்தக அலமாரியிலிருந்து எட்டிப் பார்த்தனர். அவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு “Address Unknown” எனும் கிம் கி டுக்கின் திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.



இத்திரைப்படத்தில் எந்த மிருகத்தை வதைக்கவில்லை என்று டைட்டில் கார்ட் போடுகிறார்கள். ஆனால் படம் முழுக்க மிருகங்கள் மட்டுமல்லாது மனிதர்களும் வதைக்கப் படுகிறார்கள். சிற்சில கதாபாத்திரங்களே நிறைந்த இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் வலி சொல்கிறது, கற்பனைக்கு எட்டாத வன்முறையை கிம்மினால் மட்டுமே காட்சிப்படுத்த முடியும். இளமை ததும்பும் ஒற்றைக் கண் மட்டுமே உடைய கதை நாயகி, அவளை நேசிக்கும் வாய் பேச காது கேளாத இளைஞன், கால் ஊனமுற்ற கிராமத்து மனிதர்கள் சிலர் என்று கதையில் போரின் பாதிப்பில் உடல் ஊனமுற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்களை மறைத்துக் கொண்டும் தங்கள் ஊனத்தைக் கடக்க விரும்பியும் வாழ்கிறார்கள். வெள்ளையனான தந்தை வெளியூரில் இருக்க, அவனுக்கு பதில் வராத கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கும் மத்திய வயது தாயை வெறுக்கும் மகன். அவனை கையில் வைத்துத் தாங்கும் அவள் அவன் கண் பார்வைக்கு மறைந்ததும் பழைய காதலனிடம் அடிக்கடி சோரம் போகிறாள். இதை அறிந்த அவன் ஒரு நாள் தன் முதலாளியான அம்மாவின் காதலனை கொன்றுவிட்டு பெற்ற தாயின் முலையை கத்தியால் அவள் கதறக் கதற அறுத்து எறிகிறான், அவளுக்கு அப்படியொரு கொடுமை செய்துவிட்டு அதே வேகத்தில் வண்டியை ஓட்டி வரும் போது விபத்துக்குள்ளாகி தலைகீழாக விழுந்து நாற்று நட வைத்துள்ள ஈர மண்ணுக்குள் புதைந்து இறந்து விடுகிறான். கால்கள் மேலே தூக்கிக் இருக்க உடல் நிலத்தினுள் மூழ்கி அச்சடலம் மழையிலும் குளிரிலும் உறைந்து போய் விடுகிறது. ரத்தம் தோய்ந்த மார்புடன் தேடிவரும் தாய் இறந்த மகனைப் பார்த்து கதறி அழுகிறாள். அந்தக் குளிரில் பனி பெய்திருக்கும் சாலையில் மண்வெட்டியை எடுத்து வந்து முதலில் மகனின் சிதைக்கு எரியூட்டி விட்டு மீதமுள்ள எலும்புகளையும் ஷூக்களையும் வண்டியில் ஏற்றிச் செல்கிறாள். ஒரு கட்டத்தில் படத்தை பார்க்க முடியாமல் அமர்த்தி விட்டு மீண்டும் பாதி முடித்திருந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஏனோ வாசிப்பில் மனம் லயிக்காமல் ஏதோ ஒருவித தனிமைக் குழிக்குள் விழுந்துவிட்டது. உலகமே அமைதியான ஆழ் உறக்கத்தின் பிடியில் இருக்க, நான் மட்டும் கொட்டும் மழைத் துளிகளின் சத்தம் கேட்டபடி படுத்திருந்தேன். ஏதோ ஒரு புள்ளியில் அனைத்தும் மறைந்துவிட உறக்கத்தின் மென்பிடிக்குள் என்னை ஒப்படைத்தேன். அதன் பிறகான கனவுலகில் மழையிருக்கவில்லை. ஆனால் நனையப் போகிறவர்களுக்கு பெயறற்ற தேவதைகள் குடைகள் கொண்டு வந்து தருகின்றனர். நானும் மஞ்சள் நிறத்திலான குடையொன்றினை மிகுந்த நன்றியுடன் பெற்றுக் கொண்டேன்.



காலை வெகு நேரம் கழித்து விழித்தபின் குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க பால் பாக்கெட் வராததால் வரக் காப்பி போட்டுக் குடித்தேன். மழை இன்னும் விடவில்லை. இறுகச் சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து பார்த்தேன். வானத்திற்கும் பூமிக்கும் ஏதோ கம்பி இணைப்பை ஏற்படுத்தியது போல் மழை விடாமல் தூறிக் கொண்டிருந்தது. பூமி குளிர்ந்து, தரையெல்லாம் பாதம் வைக்க முடியாமல் குளிர் பரவியது. தேனீரின் உடலில் சிறிது கதகதப்பை ஏற்றிக் கொடுக்க, இன்றைய தினம் தொடங்கியது. காலையில் தினப்படி வேலைகளை முடித்துவிட்டு கணினியின் முன் அமர்ந்தேன். முடித்தே ஆக வேண்டிய கட்டுரைகளை அடித்து விட்டு, ஜிமெயிலை திறந்தேன். கூகிள் பஸ்ஸில் கொஞ்ச நேரம் பயணம் செய்துவிட்டு பழைய நண்பர்களுடன் சேட்டில் அரட்டை அடித்தேன். பிள்ளைகளுக்கு நான் வெளியில் போகவில்லை என்றதும் ஒரே குஷி. உமா எனக்கு பேப்பர் போட் செஞ்சித் தா, என்றார்கள். எனக்கு செய்யத் தெரிந்தாலும் மழையில் அவர்கள் நனைவதை தடுக்க, அப்புறம் என்று சாக்குச் சொல்லி தப்பினேன்.




‘Work at home’ எனும் உடன்பாட்டில் வீட்டிலிருந்து என் வேலைகளை முடித்தேன். வீட்டில் இருக்கும் போது நிறைய நேரம் இருப்பது போன்ற எண்ணம் வருகின்றது. அது மழை நாளோ வெயில் நாளோ, நம் நேரம் முழுக்க நம் கையில்தான். கணினியில் எனக்குப் பிடித்த பாடல்களை சன்னமாக ஒலிக்கச் செய்தேன். ’பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ....நின்னைச் சரணடைந்தேன்’ பாரதியின் வரிகளிலும் ராஜாவின் இசையிலும் கரைந்தேன். மதியம் மாலை போல இருக்க, மாலை இரவு போல் இருந்தது. தொலைக்காட்சியில் மழைச் செய்திகள், சாலைகள் நீரோட்டமாகி, எங்கெங்கு காணினும் நீர்க்காடாக இருந்தது. எல்லாச் சானல்களிலும் குழந்தைகளின் நண்பர் ரமணன் (பாவம் வானிலை ஆய்வாளர் என்றெல்லாம் யாரும் அவரை அழைப்பதில்லை) மழை அறிக்கை சொல்லிக் கொண்டிருந்தார்.மேலும் ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என்றதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் மழைக்கும் ரமணனுக்கும் நன்றி சொன்னார்கள். மழை ஓய்வின்றி பெய்து கொண்டிருந்தது, யாரையோ எதன் பொருட்டோ வன்மத்துடனும் ஆவேசத்துடனும் தனக்குத் தெரிந்த மொழியில் திட்டிக் கொண்டிருந்தது. இரவு உணவிற்குப் பிறகு மீண்டும் கணினியின் முன் அமர்ந்தேன். மழை விட்டுவிட்டது. ஆனால் குளிர் உடலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. சரா இன்னும் வரவில்லை. அவர் வந்துவிட்டால் கதவை திறந்துவிட்டு விட்டு தூங்கலாம். கதவு தட்டப்படுகிறது. இதோ வந்துவிட்டார். குளிரில் நடுங்கிய பறவையாய் நின்றிருக்க அவசரமாக வென்னீர் போட்டுக் குடுத்தேன். இந்தக் குளிரிலும் தன் விரதத்தை விடாமல் குளித்து முடித்தார். அவரின் உள்ளங்கை கதகதப்பை உணர முடியாமல் தவிக்கும் என்னிடம் அவர் கேட்டது விக்ஸ் மட்டும் எடுத்துக் குடும்மா என்பதே....... ”ஸ்வாமியே சரணம் ஐயப்பா” என்று அவருடன் நானும் ஐயப்பனை தொழுதுவிட்டு உறக்கத்தினுள் வீழப் போகிறேன்.




மின்விசிறியின் சப்தம் கேட்காமல் உறங்கப் பிடிக்காத மனது உறக்கத்தினுள் செல்ல மறுக்கிறது ஜன்னலுக்கு வெளியே ஏதேதோ சத்தம் கேட்டு அடங்கி இப்போது எங்கும் எல்லாவற்றிலும் அமைதி நிலவுகிறது. என் மனதில் ஒரு நிமிடமாவது அத்தகைய அமைதி ஏற்பட்டால் எல்லாவற்றையும் துறந்துவிட்டு அப்படியே அதனை நோக்கி சென்றுவிட மனம் விழைகிறது. மகிழ்ச்சியைவிட மேலானது நிம்மதி என்றே உணர்கிறேன்.

9 கருத்துரைகள்:

Vel Kannan சொன்னது…

அருமை உமா, மழை அழகாய் ரசித்து எழுதி இருக்கீர்கள்.
அதை விட அந்த படம் . ஐயோ .. என்ன படம் அது முடிவில் என்ன சொல்ல வருகிறார்.
உங்களை போன்று நீண்ட நேரம் தூங்க வேண்டும் இன்று இருந்தேன் ஆனாலும் முடியவில்லை
குறைந்த பட்சம் என் மனைவியும் குழந்தையும் தூங்குவதை பார்த்து கொண்டிருந்தேன். என்னால் முடிந்தது.
மழை சார்ந்த தேர்ந்த புகைப்படமும் உங்களின் வரிகளும் மழை வாசனையை நினைவுபடுத்துகிறது

உமாஷக்தி சொன்னது…

Vel Kannan, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...நலமா? முடிவு என்னன்னு இன்னிக்குத் தான் மனசை கொஞ்சம் திடப்படுத்திட்டுப் பார்க்கணும். தோழி சந்திராகிட்டேர்ந்து வாங்கின டிவிடி...

//குறைந்த பட்சம் என் மனைவியும் குழந்தையும் தூங்குவதை பார்த்து கொண்டிருந்தேன்.// இப்படி ரசிப்பது எவ்வளவு அழகு ;)))

பகிர்விற்கு நன்றி வேல்.

☼ வெயிலான் சொன்னது…

2008

2009

இவ்வருட மழைப் பதிவும் அருமை!

minmini சொன்னது…

இலை நுனியினின்று வடியும் நீர் துளிகளின் ஊடே உலகை காணும் உவகையை உங்கள் பதிவு கண் முன் நிறுத்துகின்றது.

மகிழ்ச்சியை விட மேலானது நிம்மதி !!! அப்பட்டமான உண்மை. மழையும் அப்படித்தானோ ! அது தரும் மகிழ்ச்சியை விட மனநிறைவு அதிகமென்பேன்.

உமாஷக்தி சொன்னது…

//கனவுகளில் மட்டுமே நான் நானாயிருக்கிறேன், என் இமைகள் இறுகும் தருணங்களில் இதழ்கள் இமை திறக்கின்றன, கடவுள் என் கண் முன் வந்து நான் மரிக்கும் வரை துணை கொள்ளும் வரம் ஒன்று தருவாராயின் தயக்கமின்றி உரைத்திடுவேன்- கனவு // வாவ் அருமையான வரிகள் மின்மினி. நீங்கள் யாராக இருந்தாலும் இவ்வரிகளுக்காகவே என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டீர்கள், ஏனெனில் உங்களைப் போலவே நானும் கனவுலகவாசி ;))))

பகிர்விற்கு நன்றி மின்மினி ;))

உமாஷக்தி சொன்னது…

நன்றி வெயிலான் ;))))

Anita சொன்னது…

Too good...fell small among your other poet friends who express themselves in so rich a Tamil...
but i must tell you, that katturai about the rain is real deep n realistic...beautiful. My love to the kids. Anita Martin.

உமாஷக்தி சொன்னது…

Thanks Anita ;))) My love to your kids...hope to meet you soon. Before that advance wishes for a Merry Christmas and a wonderful New year 2011. Warm regards and love

soorya சொன்னது…

Inthra paarthasarathyin MAZHAI paditheerkala...

athu drama vadivil Balendra vin atputhamana padaippu.