
அஞ்சலி மேனன் – மலையாளத் திரையுலகம் இந்திய சினிமாவுக்குக் கொடுத்த மற்றொரு முக்கியமான இயக்குனர். பிரித்திவிராஜ் நடித்து அஞ்சலி மேனன் இயக்கியுள்ள ‘மஞ்சாடிகுரு” (2008) எனும் திரைப்படம் சிறந்த மலையாளப் பட வரிசையில் 2008-க்கான ”இண்டர்னேஷனில் ஃபிலிம் பெஸ்டிவல் ஆஃப் கேரளா” (International Film Festival Of Kerala) வில் ”FIPRESCI” எனும் விருது பெற்றது. 2009-ல் நியூயார்க்கில் நடைப்பெற்ற “சவுத் ஏஷியன் இண்டர்னேஷனல் ஃப்லிம் பெஸ்டிவல்” (South Asian International Film Festival)லில் பங்கு பெற்று க்ராண்ட் ஜூரி விருது பெற்றது. மேலும் அத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த வளரும் திறமையாளர் ஆகிய பல விருதுகளை அள்ளிக் குவித்து அஞ்சலிக்கு மிகப் பெரிய பேரையும் புகழையும் அள்ளித் தந்தது. மலையாளத் திரையின் பரிசோதனைப் படமான ’கேரளா காஃபே’யின் (Kerala Café) ஒரு பகுதியான ‘ஹேப்பி ஜர்னி’ (Happy Journey) அஞ்சலி மேனன் இயக்கியிருக்கும் சமீபத்திய திரைப்படம். இத்திரைப்பட வெற்றியும் பெரும் கவனிப்பை அவருக்குக் கிடைக்கச் செய்தது.

அஞ்சலி மேனன் கோழிக்கோட்டில் பிறந்து துபாயில் படித்து வளர்ந்தவர். உயர்நிலைக் கல்வி படிக்கும் போது மீண்டும் கோழிக்கோட்டிற்கு திரும்பி வந்தார். அதன் பின் திரைக் கல்வி கற்க புனே, லண்டன் என்று அவரது படிப்பிற்கான தேடல் தொடர் பயணத்தை மேற்கொள்ளச் செய்தது. பூனேயில் திரைப்பட உயர்கல்வியும் அதன்பின் லண்டன் ப்லிம் ஸ்கூலில் இயக்குனர் பயிற்சியும் பெற்றிருக்கிறார். லண்டனில் படிக்கையில் எடிட்டிங், படத் தயாரிப்பில் மற்றும் இயக்கத்திற்கு என எல்லா பாடங்களிலும் டிஸ்டிங்ஷன் (Distintion) வாங்கினார்..
துபாயில் அஞ்சலியின் கனவு சினிமாவாக இருக்கவில்லை. திரைப்படங்களை பார்ப்பதும், ரசிப்பதும், கருத்துக்களை பரிமாறுவதும் மட்டுமே அவருக்கு விருப்பமான ஒன்று. உயர்நிலைக் வகுப்பில் காமர்ஸை க்ரூப்பை அஞ்சலி எடுத்ததும் தங்கள் குடும்ப பிஸினெஸை அஞ்சலி முன்னெடுத்துச் செல்வாள் என்று பெற்றோர்களும் நண்பர்களும் நினைத்தார்கள். அவர்கள் வீட்டில் பிள்ளைகளை அப்படிச் சொல்லித்தான் வளர்த்தார்கள். அவருக்கேத் தெரியாமல் அஞ்சலியின் உள்மனதிலோ திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது.
அக்காலகட்டத்தில் படிப்பில் மட்டுமன்றி டான்ஸ், ம்யூசிக், ட்ராமா மற்றும் கதைகள், கட்டுரை எழுதுததல் என எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்கினார்.. பள்ளிப் படிப்பும், எழுத்தாற்றலும், கலையும் அஞ்சலி வளர வளர அவருடன் சேர்ந்தே வளர்ந்தது. பி.காம் பட்டம் பெற்றதும் வீட்டினர் எம்.பி.ஏ படிப்பார் என எதிர்ப்பார்க்க, அஞ்சலி திடீரென்று வேறு முடிவை எடுத்தார். அஞ்சலியின் மாமா அவரிடம் ’உன் மனதின் அடி ஆழத்தில் இருக்கும் ஆசை என்னவோ அதன்படி படி, இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நமக்கு பிடித்த விஷயங்கள் செய்து வாழ வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். அஞ்சலிக்கு தன்னுடைய உள்மன விருப்பமான திரைப்படம் கண் முன்னே நிழலாய்த் தெரிய அதை நிஜமாக்க பூனே ப்லிம் இன்ஸ்டியூட்டில் உடனே சேர்ந்துவிட்டார். ஏதோ ஆசைக்கு ப்டிக்கிறாள் போகட்டும் என்று பெற்றோரும் அனுமதி தந்துவிட, பூனே படிப்பை வெகு சிறப்பாக முடித்த பின் குறுகிய காலம் துபாயில் வேலை செய்து தனக்கு தேவையான பணத்தை சேர்த்த பின், சொந்தப் பணத்தில் ”லண்டன் ஃப்லிம் ஸ்கூலில் (London Film School) சேர்ந்து சினிமாவில் தீவிரமாக இறங்கிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
’லண்டன் ஃப்லிம் ஸ்கூலைப்’ பற்றி அஞ்சலி கூறுகையில், ‘திரைப்பட இயக்கத் துறையில், என்னுடைய எல்லா ஆர்வங்களையும் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது. லண்டன் ஃப்லிம் ஸ்கூலில், திரைபப்ட இயக்கத்தின் எல்லா நுணுக்கங்களும் கற்றுத் தரப்படுகின்றன. காஸ்ட்யூம் முதல், செட் டிசைன் செய்வது வரை, திரைக்கதையிலிருந்து இயக்கம் வரை என அனைத்து விஷயங்களும் அஞ்சலி தேர்ச்சி பெற்றார். அங்கு அவர் எடுத்த குறும்படம் படிக்கும் போதே பாராட்டும் விருதும் அவருக்குக் கிடைக்கச் செய்தது. அஞ்சலி எடுத்த குறும்படத்தில் எளிமையான கதை. இந்திய இளைஞன் ஒருவன் லண்டனுக்கு புலம் பெயர்ந்து போது அவனுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை அவனைச் சுற்றியுள்ள பெண்களையே எடுக்க விடுகிறான். ஏன் அப்படி செய்கிறான் என்ற திருப்பத்தைக் கொண்ட இக்கதையில் அஞ்சலியின் புதிய கதை சொல்லும் உத்தியும், சிறந்த எடிட்டிங்கும் கவனத்தை பெறச் செய்தது.
லண்டனில் பெற்ற முதல் விருதைத் தொடர்ந்து மும்பாயில் ஆரம்பிக்கப்பட்ட அவருடைய சொந்த படக் கம்பெனி “லிட்டில் ப்லிம்ஸ்” சார்பாக அவர் இயக்கிய டாக்குமெண்டி மற்றும் குறும்படங்கள் அனைத்தும் பலப் பல விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்தன.
கேரள மீடியாக்களின் கவனம் முழுவதும் அஞ்சலி மேனனின் மீது குவிந்து அவரை மிகவும் கொண்டாடினார்கள். சமீபத்தில் அஞ்சலி இயக்கி மிகவும் கவனம் பெற்ற ’கேரளா காஃபே’யில் அஞ்சலியின் பங்களிப்பைப் பற்றி பேட்டியொன்றில் அவர் கூறியது :
1. ’கேரளா காஃபே’யின் கான்செப்ட் என்ன?
பத்து இயக்குனர்கள், பத்து சின்னஞ் சிறு கதைகள், ’பயணம்’ எனும் ஒரே தலைப்பில் உருவான இப்படங்களைத் தனித்தனியாக பார்த்தாலும் புரியும், ஒன்றுடன் ஒன்று மெல்லிய சரடாக இணைக்கும் ஒரு காபி கடையை மையப்படுத்திப் பார்த்தாலும் ரசிக்கபபடும். பார்வையாளருக்கு புது விதமான சினிமாவைக் காட்சிப்படுத்துவதே தயாரிப்பாளர் ரஞ்சித்தின் நோக்கமாக இருந்தது.
எனக்குக் குடுக்கப்பட்ட பகுதியில் எனது ‘லிட்டில் ப்லிம்ஸ்’ சார்பாக ‘ஹேப்பி ஜெர்னி’ (Happy Journey) எனும் குறும்படத்தை நான் இயக்கினேன்.
2. ‘ஹேப்பி ஜெர்னி’ கதை என்ன?
மிகச் சிறிய பொறிதான் பெரும்தீயை உருவாக்குகிறது. ஹேப்பி ஜர்னி வெளிப்பார்வைக்கு சாதரணமான கதையாகத் தெரிந்தாலும் காலம் காலமாக இருக்கும் ஆண் பெண் உறவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு. கதை நாயகி (நித்யா மேனன்) அலுப்பான வேலை முடிந்து வார இறுதியை கழிக்க கொச்சியிலிருந்து கோழிக்கோட்டிற்கு ஏறுகிறாள். அவளுடைய பக்கத்து சீட்டுக்காரரான பயணி (ஜகதி ஸ்ரீகுமார்) எரிச்சலூட்டும் அளவிற்கு தேவையில்லாமல் பேசுவதும் அவளைத் தொட்டுப் பேச முயற்சிப்பதுமாக நித்யாவை எரிச்சலடைய வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரின் அலப்பறைகளை தாங்க இயலாத நித்யா ஒரு ரகசியத்தை ஜகதியிடம் சொல்கிறாள். அதைக் கேட்டதிலிருந்து அதிர்ந்து போன ஜகதி அவளை பயத்துடனும் ஒரு வித நடுக்கத்துடனும் பார்க்க ஆரம்பிக்கிறார். இப்படி செல்லும் கதையில் நித்யா கூறிய விஷயம்தான் ஹைலைட். தான் ஒரு போராளி என்றும் தனி மனித தற்கொலைப் படை என்றும் நித்யா கூறியிருந்ததால் சராசரி மனிதனான ஜகதி பதைபதைத்துப் போனார். மற்ற பயணிகளை காப்பாற்ற முதலில் அவளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து இறுதியில் தன் ஒருவனாவது தப்பித்தால் போதும் எனும் நிலைக்கு அவள் தள்ளப்பட்ட போது நித்யா பஸ்சிலிருந்து இறங்கி அவரைப் பார்த்து குறும்பாக புன்னகைக்க இத்தனை நேரம் தான் அனுபவித்த துடிப்பு பொய்யான ஒரு விஷயத்திற்கு என அறிந்து அவர் ஆறுதல் அடையும் முன் பஸ் கிளம்பிச் செல்கிறது. இதுதான் கதை. இதை இயக்கிய விதத்தை பலரும் பாராட்டினார்கள்.

3. ’கேரளா காஃபே’ இயக்க உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்ன?
இத்திரைப்படத்தில் தயாரிப்பாளரான ரஞ்சித்தான் என்னைவிட இக்கேள்விக்கு சரியாகவும் சிறப்பாகவும் பதில் சொல்லக் கூடியவர்..ஏன் என்றால் அது முழுக்க முழுக்க அவருடைய ஐடியா, அவர் சொல்லிய கான்செப்டின் கீழ் தான் அத்தனை இயக்குனர்களும் செயல்பட்டோம்.

4. இத்திரைபப்டத்தில் நடிக நடிகைகளை யார் முடிவு செய்தது?
அந்தந்த படத்தின் இயக்குனர் அவருடைய பகுதியில் நடிப்பவர்களை மட்டும் அல்லாமல் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என தங்கள் டீமை தாங்களே முடிவு செய்து கொள்ளும் சுதந்திரம் இதில் பணியாற்றிய அனைவருக்கும் இருந்தது.
5. ’கேரளா காஃபே’ உங்களுக்கு எவ்விதமாய் அமைந்தது?
மலையாள திரையுலகிற்கு ’கேரளா காஃபே’ புதிய முயற்சி மட்டுமன்றி முக்கியமான திருப்பமாக அமைந்திருக்கிறது. மேலும் இது நான் இயக்கி முதல் முதலில் வெளிவந்த திரைப்படம். அவ்வகையில் இதில் நானும் பங்கு பெற்றிருப்பது எனக்கு சந்தோஷம் கலந்த பெருமை தந்தது. இன்னும் சொல்லப் போனால் மற்ற ஒன்பது கதைகளை இயக்கியவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் ஆவார்கள். லால் ஜோஸ், ஷாஜி கைலாஷ், ரேவதி, ஷியாம் பிரசாத், அன்வர் ரஷீத், உண்ணி கிருஷ்ணன், பத்மகுமார், ஷங்கர் ராமகிருஷ்ணன், உதய் அனந்தன் மற்றும் அஞ்சலி மேனனாகிய நான் ஆகிய பத்து பேரும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தது சந்தோஷமாக இருந்தது. இதை சாத்தியப்படுத்திய தயாரிப்பு நிறுவனமான கேப்பிடல் தியேட்டர்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றி.
6. கேரளா காஃபே இயக்குனர்களின் திரைப்படம் என சொல்லலாமா?
ஆமாம்.. இது இயக்குனர்களின் திறமையைக் கொண்டாடும் விதமான கான்செப்ட் கொண்ட படம். இதில் இயக்குனர் தலைமைப் பொறுப்பெடுத்து கதையை தனித்துவமான காட்சிகளின் மூலம் முன்னெடுத்துச் செல்லும் கேப்டனாக செயல்படுகிறார். ஒவ்வொரு இயக்குனரின் தனித்திறமை இதில் வெளிப்பட்டுள்ளது. நிச்சயமாக இது இயக்குனர்களின் திரைப்படம் என்றே சொல்லலாம்.
தற்போது மும்பாயில் ”The Little films” என்ற கம்பெனி ஆரம்பித்து தனக்கு மிகவும் பிடித்தமான சினிமாத் துறையில் முழுமூச்சாக இயங்கிவருகிறார் அஞ்சலி. அவர் இயக்கவிருக்கும் அனைத்துப் படங்களும் கேரளாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய புகழ்ப் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.
4 கருத்துரைகள்:
பகிர்வுக்கு நன்றி உமா
http://www.focusmalayalam.net/2010/12/malayalam-movie-nirakazhcha-live.html
is this that girl?
amasing..........................
Thanks Vel. Nice meeting you yesterday in Uyirmmai function
நல்ல பதிவு உமா.
கேரளா கபே பார்த்தேன். மற்ற படங்கள் பார்க்க வேண்டும்.
நன்றி.
கருத்துரையிடுக