ஞாயிறு, 23 ஜனவரி, 2011

வண்ணதாசன் கடிதங்கள்





16.01.2010 அன்று தமிழ்ச்சங்கமத்தில் “கடித இலக்கியம்” எனும் அமர்வில் ”என்றும் அன்புடன்” என்ற தலைப்பில் வண்ணதாசன் எழுதிய கடிதங்களைப் பற்றிய கட்டுரை வடிவில் என் பதிவு



அனைவருக்கும் வணக்கம்

சென்னை சங்கமத்தின் முக்கிய அங்கமான தமிழ்ச் சங்கமத்தில் நமது மதிப்பிற்கும் நேசத்திற்கும் உரிய வண்ணதாசன் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ எழுதிய கடிதங்களைப் பற்றிப் பேச வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி!

நாம் எத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்கையில் சில சமயம் மனச் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது. அழகியல் சார்ந்த பல விஷயங்களை நம்மை அறியாமலேயே இழந்து கொண்டிருக்கிறோம். மென் உணர்வுகளையும் ரசனைகளையும் புறம் தள்ளியபடி அதி வேகமாக விரைந்து செல்கின்றது வாழ்க்கை. நமது பால்யத்தில் தெருப் புழுதியில் விளையாடி களித்துள்ளோம். ஆனால் எட்டு அடுக்கு, பத்து அடுக்ககங்களில் வாழும் நம் பிள்ளைகளுக்கு விளையாட வீதிகள் இல்லை. கான்க்ரீட் தரையில் சில குழந்தைகள் ரப்பர் பால் வைத்து கிரிக்கெட் எனும் ஒரே விளையாட்டை விளையாடி சலித்துப் போவார்கள். ராகுலிடம் பேசாதே ரஞ்சித் சரியாக படிப்பவனில்லை என்று பெற்றோர்களே குழந்தைகளிடையே நெருக்கத்தையும் நேசத்தையும் வளரவிடாமல் அவர்களைத் தனிமைச் சிறைப்படுத்துகிறார்கள். நண்பர்கள் அற்ற அவர்கள் சரண் அடைவது கணினியிடம். அதில் சாதக பாதங்கள் இருந்தாலும் கணினியின் மாயக்கரங்களில் இன்றைய குழந்தைகள் சிக்கி மயங்கிக் கிடக்கிறார்கள். பாலுவும் சின்னுவும். ப்ரியாவும் அல்ல அவர்களின் தோழமைகள், பென் டென்னும், டோராவும், புஜ்ஜியும் தான். நிஜமற்ற வெளியில் அவர்கள் அலைந்து திரிவது மிகவும் பரிதாபமான ஒரு சூழல்.

குழந்தைகளிடமிருந்து விளையாட்டைப் பறித்த கணினி இளைஞர்களிடமிருந்து கடிதங்களைப் பறித்துவிட்டது. எல்லாம் மின் மயமாகிவிட்ட உலகில் அஞ்சல்கள் அருகிப் போய்விட்டன. அனைத்தும் மின்னஞ்சல்தான். வரி வரியாக அழகிய அல்லது அழகற்ற கையெழுத்தில் நம் உள்ளத்தை வார்த்தைகளாக எழுதிக் கொட்டிய காலங்கள் போய், உயிறற்ற நான்கைந்து வரிகள் ”ஹாய் டா....எப்படி இருக்கே? டேக் கேர், பை பை” என்று கணினித் திரையில் நலம் விசாரித்துக் கொள்ளும் நிலைதான் தற்போது நிலவுகிறது. மேலும் தங்களின் மெயில் அக்கவுண்டில் உள்ள chat ல் அரட்டை அடிப்பது, face book எனும் சமூக வலைத்தளத்தில் தனது அப்போதைய மனநிலையை பதிவு செய்வது, (அது விகடனில் வெளியிடப்படலாம் என்ற ஆசையை உள்ளடக்கி) ட்விட்டர் எனும் மற்றொரு தளத்தில் வார்த்தைகளை குறுக்கி தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்வது என்று மனிதர்களின் பெயர் உள்ளவர்களாகவும், புனைவான பெயர்களுடனும் பெயரிலிகளாகவும் வலம் வநது கொண்டிருக்கிறார்கள். உதிர்ந்து போயின உண்மையான வார்த்தைகள். கண்ணுக்குப் புலப்படும் பக்கத்து வீட்டுக்காரனின் பெயர் கூட தெரியாத ஒருவருக்கும் ஆண்டிப்பட்டியில் ஆரம்பித்து ஆஸ்த்ரேலியா வரை நண்பர்கள் கூட்டம். முரண்பட்ட மனிதர்கள் முரண்பட்ட வாழ்க்கை முறை. யாரும் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை. லேசான தலையசைப்பு அல்லது கை அசைப்புக்கள்தான்.

கடிதங்கள் அற்ற வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? வீட்டினுள் நுழையும் போதே “எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா” என்று ஆவலுடன் கேட்ட தினங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. இன்றும் வீட்டுக்கு கூரியர்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் செல்போன் போன் பில்கள், விழா அழைப்பிதழ்கள், வங்கிக் கடன் அட்டைகள், அல்லது அதை அடைக்கச் சொல்லிய நினைவுருத்தல், அல்லது உத்திரகிரியை பத்திரிகை.... இவ்வளவு தான் பெரும்பான்மையினருக்கு தற்போதைய சூழலில் வந்து கொண்டிருக்கும் தபால்கள்.. எழுதப்பட்ட கடிதங்களின் ஊறிக் கிடக்கும் பேனா வாசமும் அனுப்பியவர்களின் பாசமும், வெள்ளைத் தாளின் வாசனையும் இழந்துவிட்ட சோகத்தை என்னவென்று சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்? அற்புதமான எழுத்தாளர்கள் தங்கள் சக படைப்பாளிகளுக்கும், நண்பர்களுக்கும், உற்றவர்களுக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பைப் படித்து மகிழ்வது ஒன்றுமட்டுமே இதற்கான மாற்றாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.






கல்யாண்ஜியின் கவிதைகள் வசீகரிக்கும்; வண்ணதாசனின் கதைகள் நெகிழ்ச்சியின் உச்சத்தைத் தொட வைக்கும். இதை எல்லாம் தாண்டி கல்யாணி.சி யின் கடிதங்களை நம்மை கனிய வைக்கும், கரைந்து காணாமல் போகச் செய்யும். இக்கடிதங்களை அவர் பேனாவினால் மட்டும் எழுதியிருக்கவில்லை, தனது அனுபவங்களின் ரேகையிலிருந்து ஒவ்வொரு வரிகளையும் சுரண்டி எடுத்து எழுதியிருக்கிறார்.

என்றும் மாறாத அன்புடன் வண்ணதாசன் முப்பத்தி மூன்று பேர்களுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அந்த முப்பத்து மூன்று பேரும் முப்பத்து முக்கோடி தேவர்களின் பேரு பெற்றவர்கள், அதில் ஒன்றாக நாம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும் கடிதங்கள் அவை. வாழ்வின் மீதும், மனிதர்கள் மீதும் வண்ணதாசனுக்கு இருக்கும் நம்பிக்கையும் தீராக்காதலும் ஒவ்வொரு சொல்லிலும் கண்ணாடி போன்று தெரிகிறது. சக உயிர்கள் மீதான அன்பும் அக்கறையும் அவர் எழுத்தை உயிரோட்டமாக்குகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அவரது மனநிலையை, அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை, (மற்றவர்களுக்கு அவை முக்கியமற்ற நிகழ்வுகளாகவோ அல்லது நிகழ்வே அற்றவைகளாகவோ இருக்கலாம், வண்ணதாசனைப் பொருத்தவரை நிலாப் பார்த்தலும், பூ உதிர்தலும், பூனைக் குட்டிகள் தொலைவதும் எல்லாமே நிகழ்வுகள் தான்) உதிரும் பூக்களுக்காக பதறும் கலைஞன் வண்ணதாசன். தொலைக்கப்பட்ட பூனைக வழியில் தென்படுமா என்று வழிநெடுகத் தேடிச் செல்லும் ஈர நெஞ்சம் அவருடையது. வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோது வாடினார், வண்ணதாசன் பூக்கும் பூக்களில் எல்லாம் மலர்ந்து கொண்டிருக்கிறார்.

வண்ணதாசன் தனக்கான மனிதர்களுக்கு மட்டும் கடிதம் எழுதியிருந்தாலும், பெயரையும் ஊரையும் அழித்துவிட்டு அக்கடிதங்களைப் படித்தால் அது அனைவருக்குமான கடிதமாக மாறிவிடும். இதுவே அக்கடிதங்களின் தனிச் சிறப்பு. ஆங்கிலத்தில் “Aesthetic intelligence” என்று சொல்லுவார்கள். அதன் உதாரணமாக வண்ணதாசன் ஒருவரை மட்டும் தான் சொல்ல முடியும். அவரது உள்மன அடுக்குகளில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் பேரன்பும் பெரும் கருணையும் தன்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் படிந்து அனைவரின் மீதும் வழுந்தோடுகிறது. மின்சார கம்பியில் நிற்கும் காக்கை முதல் வேகமாக ரயில் தண்டவாளத்தை கடக்கும் மனிதர்கள் வரை அவர் கவலைப்படும் உயிர் இனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அழகியலும், ரசனையும், மென் மனதும். நுண் உணர்வுகளும் நிறைந்த நிகறற்ற கலைஞன் தன் வாழ்வை தனக்கு விருப்பமான வகையில் வரைந்து வைத்து அதை ‘இன்னொரு கேலிச் சித்திரம்’ என்கிறான். வண்ணதாசன் போன்றவர்கள் நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். நாம்தான் பஸ்ஸைப் பிடிக்க, ரயிலை பிடிக்க விமானத்தைப் பிடிக்க என ஓடித் திரிகிறோம். அவரைப் போன்ற ஒருவரை தெரிந்து கொள்ளாமல் இருப்பதில் அவருக்கு எவ்வித இழப்பல்ல, அது காலத்தின் இழப்பு.


கடிதங்களை வாசிக்கையில் அங்கங்கே தட்டுப்படுகின்றன சில மரணத்ச் செய்திகள். ஆதவன், கங்கை கொண்டான், ஆறுமுகம் என வண்ணதாசனின் ப்ரியத்துக்கு உரியவர்களின் மறைவு அவரை உலுக்கி எடுத்திருக்கிறது. அம்பைக்கு அவர் எழுதியிருக்கும் கடிதமொன்றில் “மரண பயமல்ல, மரணம் ஏற்படுத்தும் வெற்றிடம் சுழல்களை உண்டாக்கக் கூடிய வல்லமை உடையது” என்கிறார். எத்தகைய உண்மை இது? நேற்று இரவு நம்முடன் தொலைபேசியில் உரையாடியவர் இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்து போய்விடும் நிச்சயமற்ற இவ்வுலக வாழ்க்கையில் எதை தூக்கி நிறுத்த நாமெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறோம் எனும் கேள்வியையும் இனம் தெரியாத ஒரு வெறுமையையும் அவ்வரிகளை வாசித்தபோது ஏற்பட்டது.

”என் வானத்தின் சாயல் எனக்குத் தெரியாதா” என்ற அவரின் எழுத்தைப் படிக்கும் போது நமக்குள் ஏற்படும் மனச் சித்திரத்தை வார்த்தைகளின் துணை கொண்டு எப்படி வரைந்துவிட முடியும்? கடிதத்தின் சில வரிகள் கவித்துவமாகவும், சில இயல்பான இனிமையுடனும், சில எள்ளலுடனும், ரசனையில் ஊறித் திளைத்து உள் மனதில் ஏதேதோ நெகிழ்வுகளை நிகழ்த்தி விடுகிறது. மேலும் ஒவ்வொரு கடிதத்தையும் படிக்கையில் எழுதப்படுகிறவர் தன்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் மரியாதையாக ”நீங்கள்” என்றே விளிக்கிறார்.

வண்ணதாசனின் கடித வரிகள் சில :

கைவல்யம் எனும் நண்பருக்கு வண்ணதாசன் எழுதுகிறார் “மிகச் சிறு பொழுதே எனினும் உங்களுடன் இருக்க முடிந்த நேரம் அருமையானது. அந்தப் பொழுதை ஏந்திக் கொண்டே அந்த நாள் முழுவதும் அலைந்தேன்” எப்பேர்ப்பட்ட மனம் இது! அந்தக் கணத்தை எப்படி உணர்ந்திருப்பாரோ அதை அப்படியே வார்த்தையில் எப்படி அவரால் மட்டும் சொல்ல முடிகிறது? தன் உள்ளொளியின் வெளிச்சத்தில் அவர் காணும் மனிதர்களுக்கும் முழுவதுமான வெளிச்சத்தை தெளித்துச் செல்கிறார்.

ஞானிக்கு எழுதிய கடிமொன்றில்,

“அவர் என் எழுத்துக்களைப் பாராட்டியதை என்னால் மறந்துவிட முடியும். ஆனால் அந்த உள்ளங்கைகளை மறந்துவிட முடியாது. இன்னும் எழுதாத ஒரு வரிக்கான தூண்டுதலைத் தர வல்லது இது போன்ற உள்ளங்கைகளே இருக்கின்றன” எத்தகைய பிரியம் இது! உள்ளங்கையில் அன்பின் பரிமாற்றத்தை உணர்ந்து அதையே தனது எழுத்தின் source of inspiration ஆக உணர்ந்து வண்ணதாசனை இயங்கச் செய்கிறது. அசலான கலைஞன் இப்படித்தான் இருப்பான். அவன் நகல் எடுக்க உள்ளங்கைச் சூடு மட்டும் போதுமானது!

அய்யனாருக்கு எழுதுகையில் “மனிதர்களை சம்பாதிப்பதற்காக முதலில் ஓடுங்கள், சம்பாதிப்பதற்காக அப்பறம் ஓடுங்கள். ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகிற புள்ளியின் சூட்சுமம் பிடிபடுகிறபோது நீங்கள் வெற்றி பெற ஆரம்பிக்கிறீர்கள்” என்கிறு எழுதுகிறார். அப்போது இளம் படைப்பாளியாக இருந்த அய்யனாருக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் இது பொருத்தமான வரிகள். தகப்பனைப் போன்ற பரிவுடன் புதிதாக எழுத வருபவனின் தோளை மிக மென்மையாகத் தட்டி ‘கவலைப்படாதே நீ ஜெயித்துவிடுவாய்” என அதிராத வார்த்தைகளின் மூலம் ஆர்வமூட்டுகிறார்.

ரமேஷ் என்பவருக்கு வண்ணதாசன் எழுதிய கடித வரிகளில் ரமேஷுக்கு சில options தருகிறார். அது நமக்குமானது.

”எழுதாவிட்டால் பரவால்லை. வரையுங்கள், வரையாவிட்டால் பரவாயில்லை படியுங்கள், படிக்காவிட்டால் பரவாயில்லை பழகுங்கள் (இவர் பழகச் சொல்வது வேறு “வாங்க பழகலாம் என்று தமிழ்ச் சினிமாவில் சொல்லப்பட்ட பழக்கம் அல்ல) ஏதோ ஒரு வகையில் மனதின் கதியில் இயங்கிக் கொண்டிருங்கள். அதுவே போதுமானது’ எளிமையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இது மிகவும் ஆழமான பார்வை. நாம் இயங்கிக் கொண்டிருக்காவில்லை என்றால் முடங்கிப் போவோம்.

கி.ரா மாமா என்று அன்புடன் விளித்து அவருக்கு வண்ணதாசன் எழுதிய கடிதம் ஒன்றில் சுய எள்ளல் கலந்திருக்கிறது “என்னைப் போல அவ்வளவு கெட்டிக்காரத்தனமும் சூட்டிகமும் இல்லாத ஆண்பிள்ளைகளுக்கு’ என்கிறார். கெட்டிக்காரத்தனம் என்ற பதத்திலேயே லேசான ஒரு சூழ்ச்சி தென்படுகிறது. அகம் மலர்ந்த வண்ணதாசனுக்கு அத்தகைய வெளியுலகக் கலைகள எளிதில் வராமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அவரைத் தொடர்ந்து நானும் கனவுலகவாசியே. எங்கள் உலகில் வஞ்சக மனிதர்கள் கிடையாது, இருந்தாலும் எங்களை எளிதில் நெருங்கிவிட முடியாது. எல்லோர்க்கும் புன்னகையை பரிசாக்கிவிட்டால் விஷம் தோய்க்கப்பட்ட முட்கள் புதைந்துவிடும்தானே?

இப்படி ஒவ்வொரு கடிதமாக சொல்லிக் கொண்டே போகலாம். கால நேரம் கருதி தொகுப்பில் கடைசியாக கவிஞர் இளையபாரதிக்கு எழுதியுள்ள கடித வரிகளை வாசித்து நிறைவு செய்கிறேன். “எந்தக் கதவு எப்போது திறக்கம் என்று தெரியாத ரகசியத்தின் சுவாரசியத்தில்தான் இந்த வாழ்வின் பந்தயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.” என்றும் “ஏதோ ஓர் அன்பின் மாயத்தை நீங்கள் நிகழ்த்தி இருக்கிறீர்கள்” என்றும் “ஒரு ஓவியம் பூரணம் அடைகிற போது அது வரைந்த ஓவியன் முன்பிருந்ததை விடவும் பூரணம் அடைகிறான். நான் இந்தச் சிறுகதைகளை எழுதிய போதெல்லாம் பூரணம்டைந்திருக்கிறேன். அல்லது என் ரணங்கள் குறைந்திருக்கின்றன.

மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களை உணர்ந்து அதை வார்த்தைகளின் மீதேற்றி திகட்ட திகட்ட நமக்களிப்பவர் வண்ணதாசன். அலங்காரங்கள் மற்றும் வெளிப்பூச்சுக்கள் அற்ற, எளிய வார்த்தைகளுக்கு எல்லாம் சொந்தக்காரரான இந்த நெல்லைக்காரர் நிஜமாக்வே எனக்கும் சொந்தக்காரர் என்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். அவர் எனக்கு distant relative என்று சொன்னார்கள், அந்த தூரம் நெல்லைக்கும் சென்னைக்கும் இடையில் தானே தவிர மனங்களில் இல்லை. நினைக்கும் தோறும் மனதில் நெகிழ்வை ஏற்படுத்த அவரைத் தவிர யாரும் இருக்கிறார்களா என்றுத் தெரியவில்லை. என் அப்பாவுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதமொன்றை பொக்கிஷமாக அவர் பாதுகாத்துவருகிறார். அதன் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது, “நவநீதன், எப்படி உங்களால் மட்டும் போகின்ற வழி எல்லாம் சந்தோஷப் பூக்களை இறைத்துக் கொண்டே செல்ல முடிகிறது?” மாறாப் புன்னகைக்குச் சொந்தக்காரரான என் அப்பாவின் சிரிப்பை மேலும் அகலமாக்கியது இவ்வரிகள்.

இந்நிகழ்ச்சில் பேசுவதற்காக வண்ணதாசனின் கடிதங்களை மீள்வாசிப்பு செய்தபின் யாருக்காவது உடனடியாக கடிதம் எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணம் மிகத் தீவிரமாய் தோன்றியது. அதை அவருக்கே எழுதி விட்டேன்....இன்று இரவோ, நாளையோ பதில் நிச்சயமாக வரும்.....காத்திருப்பேன்

நன்றி. வணக்கம்

10 கருத்துரைகள்:

sakthi சொன்னது…

உண்மைதான் உமா நமக்கான கடிதங்கள் பெறப்பட்டபோது நாம் அடைந்த அந்த நிறைவு இப்போதைய
மெயில் தரும் விசாரிப்புகளில் இல்லை வண்ணதாசன் கடிதங்கள் பற்றிய உங்கள் பகிர்விற்கு நன்றி :)

soorya சொன்னது…

என்அன்புத் தோழிக்கு,
நீண்ட நாள்ள்ள்ள்கள்
தொடர்புகொள்ள முடியவில்லை.
வண்ணதாசனிடம் நான் மன்னிப்புக் கேட்டதாகச்சொல்க.
அவருக்கு விளங்கும் ஏன் என்று.
சோம்பலிலும் சோபாவின் மூலையிலும் அமிழ்ந்திருப்பதால் உடனுக்குடன் பின்னூட்டமிடுவதில்லை.
எல்லாமுமே படிக்கிறேன்.

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

/அதில் ஒன்றாக நாம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும் கடிதங்கள் அவை./

வெகு நிச்சயமான உண்மை.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

க. சீ. சிவக்குமார் சொன்னது…

உமா! ஞானியின் (கல்யாண்ஜியின் கடிதத்தில் வருகிறது கோவை ஞானி என்றால்) கரங்கள் குளிர்ச்சியானவை.

உள்ளங்கைச் சூட்டுவமை இங்கு பொருந்தாது. சும்மா தகவலுக்காகச் சொல்கிறேன்.ஸ்பரிசித்தவர்களைக் கேட்டுப்பாருங்கள்.

உமாஷக்தி சொன்னது…

நன்றி சக்தி ;))) வெகு நாள் கழித்து இன்று எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதுவும் சற்று நீண்ட கடிதம். இரண்டு முறை வாசித்துவிட்டேன். ..மின்னஞ்சலில் இல்லாமல் நானும் கையெழுத்தில் பதில் அனுப்ப வேண்டும்.....;)))

உமாஷக்தி சொன்னது…

என்ன ஆச்சு சூர்யா? எங்க காணாம போயிட்டீங்க? வண்ணதாசன் அவர்களிடம் மன்னிப்பு இன்னும் கேட்கவில்லை....அவரிடம் பேசும் போது நிச்சயம் கேட்டுவிடுகிறேன்...

சில சமயம் சோம்பல் கூட அழகுதான்...ஆனால் சீக்கிரம் வெளியே வாங்கள் சூர்யா...உங்கள் விமர்சனம் இல்லாமல் நான் எழுதுவதைக் குறைத்திருக்கிறேன் (அதே சோம்பல் தான் காரணம்)நேரம் இருக்கும் போது தனி மடல் அனுப்புங்கள் அல்லது போன் செய்யுங்கள்...

//எல்லாமுமே படிக்கிறேன்// நன்றி சூர்யா

உமாஷக்தி சொன்னது…

நான் தான் நன்றி சொல்லவேண்டும் செல்வராஜ் ஜெகதீசன் ;)))

உமாஷக்தி சொன்னது…

நிச்சயம் கோவை ஞானிதான் சிவா ;)))உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ;)

goma சொன்னது…

மாற்றங்கள் பல ,முன்னேற்றத்துக்கு வழி வகுத்தாலும் ,வாழ்க்கையின் ஒரு சில இனிய சிறகுகளை ஒடித்து விட்டதே...

Dhanaraj சொன்னது…

"குழந்தைகளிடமிருந்து விளையாட்டைப் பறித்த கணினி இளைஞர்களிடமிருந்து கடிதங்களைப் பறித்துவிட்டது."

It is the dark reality of our time. And you have expressed it very well.
Also. thanks for the intro to Vannadhasan's letters. His writing is intoxicating and can transport you to any world that he created with his letters.