
”அருவருப்பான விஷயமே கணவர்களை கையாளுவதுதான். சுடுதண்ணீரிலேயே வைத்திருந்தால் கூட அவர்களை மென்மையாக்க முடியாது” – மேரி பக்லே
கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அலைகள் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று எழும்பி விரைந்து கடற்கரை மணலில் விழுந்து சிதறி மீண்டும் தணியும் காட்சி அலுக்காதவை. கடற்கரையும் அந்த ஈரக் காற்றும், அதன் எதிரே தெரியும் வானமும், அச்சூழலும் அவளால் எவ்வித மன நிலையிலும் ரசிக்கக் கூடியவை..
சந்தியாவும் அனுவும் வருவதற்காக காத்திருந்தாள். சில வருடங்கள் கழித்து இப்படி தனியாக பீச்சில் காத்திருப்பது முதல் தடவை.
சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு தங்கள் செல்போனில் மாற்றி மாற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கவே சற்று உற்றுப் பார்த்தாள். சட்டென்று அவள் முதுகுத் தண்டில் ஏதோ செய்தது. அவன் அச்சு அசலாய் ஜீவாவைப் போலிருந்தான். ஜீவா.....ஒரு காலத்தில் தன் உயிர்மூச்சாக இருந்த பெயர். இப்போது நினைத்தாலும் நிம்மதியை இழக்கச் செய்துவிடும் ஆவேசக் காதல்.....
”ஏய் அம்புஜம் எங்க இருக்கே உன்கிட்ட அவசரமா பேசணும்...
”வீட்ல ஜீவா...இன்னும் தூக்கமே கலையல மணி என்ன?
”ஆறு மணி வரைக்கும் தூங்கறே உன் வீட்டுல இதையெல்லாம் கேக்கறது இல்லையாடி அம்புஜம்...?”
”எத்தனை தடவை சொல்றது என்னை அம்புஜம்னு கூப்பிடாதேனு.....
’அடியே வருங்காலப் பொண்டாட்டி உங்க அப்பா வைஷ்ணவின்னு பேர் வச்சா அதை அப்படியே நாங்க கூப்பிடணுமா....உன்னை லவ் பண்ண ஆரம்பிச்ச நாள்லேர்ந்து உனக்கு நான் வச்ச பேர் அம்புஜம்....கடைசி வரைக்கும் அப்படித் தான் கூப்பிடுவேன் அம்பு டார்லிங்....
’ஏன் ஜீவா இப்படி காலங்கார்த்தால கால் பண்ணி கடுப்படுக்கறே..”
”சரி நீ இப்ப தூங்கி உன் யூஷுவல் டைம் வந்ததும் எந்திரிச்சு எனக்கு போன் பண்ணு என்ன?”
”அதான் எழுப்பிட்டே இல்ல சொல்லித் தொலை...”
”அப்படி எல்லாம் சொல்ல முடியாது. பேசாம இன்னிக்கு காலேஜுக்கு லீவ் போட்டறியா?
”அதெல்லாம் முடியாது என்னடா ப்ராப்ளம்?”
”ப்ராப்ளம் எதுவும் இல்லை நைட் முழுக்க ஒர்க் பண்ணி ஒரு கதை எழுதினேன். உன்கிட்ட சொல்லணும்”
”ரெண்டே லைன்ல சொல்லு”
அவன் இரண்டு லைனில் சொல்லாமல் பதினைந்து நிமிஷம் அந்தக் கதையைப் பற்றி உணர்வு பொங்க சொன்னான்.
ஜீவாவின் கூர்மையான பேச்சும் அவனுடைய சுறுசுறுப்பும் அறிவுத் தேடலும் அவனைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் பிடித்துவிடும். ஆனால் அவன் விருப்பப் பட்டு சேர நினைத்த இயக்குனர் அப்போது படம் எதுவும் எடுக்கவிலலை, காத்திருக்கும்படி சொல்லிவிட்டார்கள். அவனால் காத்திருக்க முடியவில்லை மற்றொரு இயக்குனர் ராமசுப்புவிடம் சேர்த்துவிட்டான். இரண்டு படங்கள் அவருக்கு வொர்க் செய்தபின் இயக்குனர் மாறனிடம் சேர்ந்துவிட்டான்.
அவன் மாறனிடம் சேர்ந்துவிட்ட பின்பு ரொம்பவும் பிஸியாகிவிட்டதால் வைஷ்ணவியை அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. யார் மூலமாவது லெட்டர் குடுத்து அனுப்புவான். இல்லையென்றால் அழகான க்ரீடிங் கார்ட் வாங்கி அதில் காதில் சொட்டச் சொட்ட கடிதமொன்றை எழுதி அனுப்புவான். அவன் எழுதிய கடிதங்களின் ஒவ்வொரு வரியையும் வைஷ்ணவியால் இன்றளவும் மறக்க முடியவில்லை.
அன்பின் அம்புஜத்திற்கு,
உன்னை எனக்குப் ஏன் பிடிக்கிறது என்று அடிக்கடி கேட்பாய். செல்லம், என்னை எனக்கு எதனால் பிடிக்கிறதோ அது போல்தான் இதுவும். உன் மீதான என் நேசம் இன்னும் கூட உயர்வானதுடா தங்கம்..எனக்கு பனியைப்பிடிக்கும் .நிலவைப் பிடிக்கும் .கடலைப் பிடிக்கும். அதன் காரணங்கள் என்ன? அவை யாவும் எனக்கு சந்தோஷம் தருபவை.பார்த்ததும் மனசுக்கு இதம் தருகிற மகிழ்ச்சி தருகிற அவை போலத்தான் நீயும் .ஆனால் அவற்றுடன் எனக்கு உரையாடல் சாத்தியமில்லை. உன்னோடு அது முடியும்.
இவை கவித்துவமான காரணங்கள் . இவை ஒரு புறமிருக்கட்டும்..அது தவிரவும் உன்னை மிகவும் பிடிக்கிறது. உன் முகம் , உன் புன்னகை, உன் கனிவான பேச்சு, பிரியமான இயல்பு, நீ காட்டுகிற அக்கறை ,உனது பேச்சில் தென்படும் தெளிவு, உனது புத்த்சாலித்தனம், உனது பக்குவம்......அன்பை நாம் உணரத்தான் முடியும் என்பது பொதுவான நம்பிக்கை..உன்னைப் பார்தத பிறகுதான் அன்புக்கு ஒரு பெண் வடிவத்தைப் பார்த்ததாய் நான் உணர்ந்தேன்.( மிகையாகச் சொல்லவில்லை. அம்மா, சகோதரி ,மனைவி போன்ற உறவுகளில் தென்படுகிற அன்பு வேறு.உன்னிடம் நான் கண்ட அன்பு வேறு).`செம்புலப் பெயர் நீர் என்று சொல்லுகிறார்களே அந்த வகைப்பட்ட அன்புடா இது.
அறிவான விஷயங்கள் பல நீ பேசும் போது உன்னிடம் நான் காண்கிற அந்த உறுதி, என்ன நடந்தாலும், எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் உடைந்து போகாமல் அதை இலகுவாக எடுத்துக்கொண்டு மெல்லிய புன்னகையுடன், சில நேரம் நகைச்சுவையுடன் நீ பேசும் போது நான் பிரமித்துப்போகிறேன். அந்த பிரமிப்பு உன் மீதான காதலை அதிகரிக்கச்செய்கிறது. உனது பக்குவமும் உறுதியும் அன்பும் கனிவும்...நீ பேசப் பேச நான் உன் ரசிகனாகிப் போனேன் செல்லம். அதிகம் கனவு கண்டவனில்லை நான்.சின்னதாய் ஒரு சித்திரம் என் மனதில் இருந்தது எனக்கு பிடித்த ஒரு பெண் வடிவம் பற்றி....அன்பு செலுத்துகிறவள், என்னோடு அறிவார்த்தமாய் உரையாடுகிறவள்,எனக்கு பலவற்றைக் கற்றுத் தருகிறவள்,என்னிடம் என் போலவே அன்பு செய்கிறவள்,எனக்கு சமமானவள் சமயங்களில் என்னிலும் சிறப்பானவள்,நான் அழுதால் என்னைத் தேற்றி தைரியம் சொல்கிறவள்,சமயங்களில் என்னையே தாங்கக்கூடிய வலிமை கொண்டவள்...இப்படியாக...
எல்லாம் உன்னில் பார்க்கிறேன். என் அன்பு, என் ரசனை,எனக்குப் பிடித்த சிரிப்பு, உதடுகளீல் இருந்து உதிர்கிற ஒவ்வொரு வார்த்தையும் என் வார்த்தையாய் எனக்கானதாய்..நான் நினைப்பதாய்..மனசு தவித்து ஏங்கிப் பித்தாய் துடிக்கிறது. நான் என்பது நீ தானே என் கண்ணே!
இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன். ரொம்ப படித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே. அவ்வப்போது முடியும் சமயங்களில் தொலைபேசுகிறேன்....
என்றும் அன்புடன்
உன் ஜீவா
கண்ணில் நீர் துளிர்க்க ஜீவாவைப் போலிருக்கும் அந்த இளைஞனை மீண்டும் ஒரு முறை பார்க்க நிமிர்ந்த போது எதிரில் அனுவும் சந்தியாவும் நின்றிருந்தார்கள்
அனு ஆரன்ஜ் கலரில் கறுப்பு டிசைன் போட்டு மிர்ரர் வொர்க் செய்யப்பட்டிருந்த அழகான சுரிதாரில் வந்திருந்தாள். சந்தியா எளிமையான சில்க் காட்டனில் ஓவியம் போல எத்னிக்காக இருந்தாள்.
மூவரும் சந்தோஷத்துடன் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
’ஏய் வைஷு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிறயா’ என்ற அனுவைப் பார்த்த வைஷ்ணவி ஆச்சரியப்பட்டுப் போனாள். ஒல்லிக் குச்சியாக இருந்தவள் இப்போது சற்று பூசினாற் போல இருந்தாள். பார்த்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதும் திருமணமாகி குழந்தைப் பெற்ற உடலின் வித்யாசம் அவள் உடம்பில் நன்றாகவே தெரிந்தது
”ஆமா அனு நான் வந்து கிட்டத்தட்ட ஒன் அவர் ஆகுது. எப்படி இருக்கே? உக்காரு....
இருவரும் அவள் அருகருகே அமர்ந்தார்கள்.
”சாரிப்பா. நான் சந்தியா ஆபிசுக்கு போய் அவளைக் கூட்டிட்டு வரதுக்குள்ள லேட்டாயிருச்சு....”
‘நாங்க ஒரே ஊர்ல இருக்கோம்னு தான் பேரு அனு...ரொம்ப ரேராத்தான் மீட் பண்ணுவோம்...எப்படி இருக்கே வைஷு
”அது சரி நீங்க நினைச்சா எப்ப வேணா மீட் பண்ணிக்கலாம் ஆனா நான் இன்னும் ஒரு வாரத்துல ஜகார்தா கிளம்பிடுவேன் என்ற அனுவைப் பார்த்து
”நாங்க நினைச்சா கூட வரமுடியாத இடத்துக்கு போயிட்டு ஏண்டி இவ்வளவு ஷார்ட் ட்ரிப்ல வந்தே என்றாள் சந்தியா.
”என் ஹஸ்பெண்ட் ரிலேட்டிவ் மேரேஜ்னு சொன்னேன் இல்ல....அப்படியே என் ப்ரெண்ட்ஸ் சொந்தக் காரங்க எல்லாரையும் பாத்துட்டு போலாம்னு ஒரு வாரம் இவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி டைம் வாங்கிருக்கேன்....”
அனுவா பேசுவது என்று திகைத்தாள் வைஷ்ணவி...
”என்னது! பர்மிஷன் கேட்டு கெஞ்சினியா? நீயாடி பேசறே?
”நானேதான் வேற யாரு? பொம்பளைங்களுக்கு புருஷன் தாண்டி எல்லாம். அவாளை மீறி உலகத்துல என்ன வேண்டிக் கிடக்கு....
அவளை மேலும் கீழும் பார்த்த வைஷ்ணவியை முறைத்த அனு,
”ஏண்டி நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்காரரோட தானே இருக்கீங்க டைவர்ஸ் கிய்வர்ஸ் பண்ணிட்டீங்களா?
அவளின் வினோதக் கேள்வியால் ஆச்சரியப்பட்ட வைஷ்ணவி
”என்ன ஆச்சு அனு? வந்ததும் வராததுமா நீ பாட்டுக்கு ஏதோ கதா காலட்சேபம் மாதிரி ஏதோ பேச ஆரம்பிச்சிட்டே? காலேஜ் டேய்ஸ்ல எங்களோட லூட்டி அடிச்ச அனுதானா நீ இல்லை இது வேற யாரோவான்னு டவுட்டா இருக்கு....
”உன் அனுதாண்டி....என்கிட்ட தெரியற சேன்ஜஸ் பார்த்து ஆச்சரியமா இருக்கு....இப்ப நீ பாக்கறியே இதான் உண்மையான அனுராதா....முன்ன பாத்ததது அரைவேக்காடு அனு புரியறதா?
ஒரு நொடியில் வைஷ்ணவியின் மனத்திரையில் அனு இஸ்மாயிலுடன் ஓடிப் போக திட்டமிட்டது நினைவுக்கு வந்து தொலைத்தது.
(தொடரும்)
“இவள் புதியவள்” பெணள் மாத இதழில் வெளி வந்துக் கொண்டிருக்கும் எனது தொடர்க்தை
8 கருத்துரைகள்:
வாழ்த்துகள் உமாஷக்தி .நேர்த்தியான நடை !
நன்றி நேசன் ;))
நல்ல பதிவு.
நன்றாக இருக்கிறது
தொடரவும்
சுந்தர்
Welcome Back. I am glad.
enna uma thalaippil ulla vaarthaigal veru oruvarudaithai irunthalum nee athai ezhuthumbothu payamai irukkirathu
Babu, S.ra voda thaillaipu ippothum irukkum kathai" i think...athuvum its not a fiction...athu avaroda interviews.....thanks for reading...will post the next chapter today
thanks Dhanaraj ;))))
thanks sundar and Rathnavel
கருத்துரையிடுக