”ஆண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வார்கள். பெண்கள் தங்களை அதில் தேடுவார்கள்” – எலிசா மெலமெட்
”அனு எப்படி மாறிப்போயிட்டா பாரு வைஷு” என்றாள் சந்தியா.
”நீ கூட ரொம்ப மாறிட்டேடி அழகி என்றபடி வைஷுவின் மூக்கைத் திருகினாள் அனு.
”நான் அப்படியேதான் இருக்கேன் அனு” என்றபடி வலித்த மூக்கைத் தடவினாள்.
”சரியான ராட்சசிடி நீ...ஸ்ஸ்ஸ்...எரியுது பாரு...”
”எரியட்டும்....சம்திங் ராங் வித் யூ. நீ பழைய வைஷ்ணவி இல்லை..ரொம்ப அமைதியா இருக்கே, அளந்து அளந்து பேசறே? என்ன ஆச்சு உனக்கு?”
”ஒண்ணுமில்லை அனு. சரி அதை விடு உன் லைஃப் எப்படி இருக்கு? மெளலி என்ன சொல்றார்?
”ம்...அவளுக்கு என்னடி. தனித் ராணி. ஜகார்த்தாவாம் எங்கேர்ந்து தான் கண்டுபிடிச்சாங்களோ உனக்கு அவ்வளவு தூரத்து மாப்பிள்ளையை?
”அவ்வளவு தூரமா இருக்கறதாலதான் சந்தோஷமா இருக்கேன் சந்தியா.....வீடு தான் உலகம். அதான் chat ல கதை கதையா சொல்லிக்கேன் இல்லை? இங்க ஜாயிண்ட் பேமிலில என்னால தாக்குப் பிடிக்க முடியாதுடி! நோ வே....அங்க நானு இவரு பசங்க அவ்வளவுதான். இருக்கவே இருக்கு டீவி. அப்பறம் கிச்சனுக்குள்ளயும் பூஜை ரூமுக்கு உள்ளேயும் போனா அவ்வளவுதான். லைப் முடிஞ்ச உடனே தான் வெளிய வர மாதிரி இருக்கும்” என்று சிரித்தாள் அனு.
கடல் அலைகளுக்கே அலுக்கும் வரை அவர்கள் அரட்டை அடித்துவிட்டு ஆளுக்கு ஒரு சாக்கோபார் வாங்கி வழிய வழிய சாப்பிட்டார்கள்.
”ஏய் காலேஜ் டேய்ஸ்க்கு போன மாதிரி இருக்குடி, அதுவும் சந்தியாவும் சாக்கோபாரும் மறக்கவே முடியாது” என்று உரக்க சிரிக்க ஆரம்பித்தாள் அனு. வைஷுவால் அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.
”ஏய் அடி வாங்கப் போறே நாயே...அதை மறந்து தொலைக்க மாட்டியா?”
”எப்படிடி மறக்க முடியும். ஒரு சாக்கோ பாருக்காக...அய்யோ அம்மா என்று மறுபடி சிரிக்க ஆரம்பித்தாள்.
அவள் வாயை இறுக மூட யத்தனித்த சந்தியாவின் கைகளில் சாக்கோபார் பிசுபிசுத்தது. அதைப் பார்த்து அனு கண்ணில் நீர் வரும் வரை சிரித்தாள்.
”போதும்டி....இவ மாறலைடி அதே சிரிப்பு இன்னும் மிச்சம் இருக்கு” என்றாள் சந்தியா அவளை கிண்டல் செய்த கோபத்தை மறந்துவிட்டு.
”ஆமாமா...ஏன் வைஷு சிரிக்க கூட மாட்டேங்கறே..அடிக்கடி மைண்ட் ஆஃப் ஆகுது? என்ன பிரச்சனைன்னு ப்ராங்கா சொல்லுடி..”
”நீங்க வரதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப ஒரு ஜோடியைப் பாத்தேன். ரொம்ப அன்னோன்யமான லவ்வர்ஸ் போல....”
” அது சரி, பீச்சுன்னா லவ்வர்ஸ் வரத்தான் செய்வாங்க. அப்படித்தான் க்ளோஸா இருப்பாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆற அளவுக்கு சமுதாய பொறுப்புணர்ச்சி உனக்கு வந்திருச்சாடி?”
”அதில்லை சந்தியா....அந்த பொண்ணோட லவ்வர் அச்சு அசலா ஜீவா மாதிரியே இருந்தான்....”
ஒரு நொடி அனைவரும் அமைதியாகிவிட, வைஷ்ணவி தொடர்ந்து,
” அவனைப் பாத்ததும் எனக்கு பழசு எல்லாம் ஞாபகம் வர ஆரம்பிச்சிருச்சு... ரொம்ப தனிமையாயிட்ட மாதிரி இருந்துச்சு”
அவள் லேசாக கலங்குவதைப் பார்த்து பதறிய அனு,
”ஏய் இன்னுமாடி அவனை நீ மறக்கலை?”
”எப்படி மறக்க முடியும் அனு, என்ன பேசறே நீ? நான் சாகற வரைக்கும் ஜீவாவை மறக்க முடியாது. அடிக்கடி எதாவது ஒரு விஷயத்துல அவன் நினைப்பு வரும். ஆனா இன்னிக்கு அவனை மாதிரியே ஒருத்தனை பாத்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு...
”சரி விடு....அதையே நினைச்சுட்டிருக்காதே....நான் எவ்வளவு தூரத்திலேர்ந்து உங்களை எல்லாம் பாக்க வந்திருக்கேன்....”
”என்னைப் பத்தி உனக்குத் தெரியும் இல்லையா? இன்னும் ரெண்டு நாளாவது ஆகும், இதிலேர்ந்து நான் மீள....பெருமூச்சுடன் சொன்னாள் வைஷு
சந்தியா அவள் கைகளைப் பிடித்து, “ஜஸ்ட் பர்கெட் தி பாஸ்ட் வைஷு உனக்கு நாங்க சொல்ல வேண்டியதே இல்லை....”
”முடியாது சந்தியா.....அது ஒண்ணுதாண்டி நான் லைப்லேயே சந்தோஷமா இருந்த பீரியட் அதையும் மறந்துட்டு மண்ணு மாதிரி எப்படி வாழ முடியும்?”
”சரி ரமணன் எப்படி இருக்காரு?” என்றாள் அனு.
”நீ தான் நாளைக்கு வீட்டுக்கு வர்றே இல்லை. நேர்ல பாத்துக்க...”
”ஏண்டி இப்படி விட்டேத்தியா பேசறே?”
”ப்ச்...ஒண்ணுமில்லை....சரி லேட்டாகுது கிளம்பலாம். சந்தியா நீயும் நாளைக்கு வாயேன். சின்ன கெட்டுகெதரா இருக்கும்...” என்றாள் வைஷ்ணவி
”சாரிடி...எனக்கு நிறைய வேலை இருக்கு, அதோட அஸ்வினோட அத்தை மாமா எல்லாம் ஊர்லேர்ந்து வராங்க. எங்க வீடு ஏற்கனவே ஜேஜேன்னு கூட்டமா இருக்கும். ஒத்தைல எங்க மாமியாரால சமாளிக்க முடியாது. ப்ளீஸ் கோச்சுக்காதேடி...”
”ஹே நோ இஷ்ஷுஸ்....சரிடி நான் கிளம்பறேன். நைட் கால் பண்றேன்.”
”சரி வைஷு”
வைஷ்ணவி ஒரு நொடி அனுவையும் சந்தியாவையும் பர்ர்த்து
’சாரி ரொம்ப மூட் அவுட்டா இருந்துட்டேனா?’
’ஹேய் எங்களுக்கு உன்னைத் தெரியாதா....நீ இப்ப பத்திரமா வீட்டுக்குப் போய் ப்ரெஷ் ஆயிட்டு எங்களுக்கு ஃபோன் ப்ண்ணு என்ன?’ என்றாள் சந்தியா.
அவர்கள் மூவரும் மெயின் ரோட்டுக்கு வந்து தனித் தனி ஆட்டோ பிடித்தார்கள்.
வீட்டுக்கு வந்து அலுப்புத் தீரக் குளித்தாள் வைஷ்ணவி. ஸ்ரீநிதி தூங்கி விட்டது. ரமணன் லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். இவள் வந்ததை ஓரக்கண்ணால் பார்த்தும் எதுவும் பேசாமல் வேலையில் கவனமாக இருந்தான்.
கிச்சனுக்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள். சூடாக ஒரு காபி இப்போதைய மனநிலைக்கு சரியாக இருக்கும். காபி கலந்து ஹாலுக்கு வந்தாள். சுபாஷினி சீரியலில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
”ஒரு வாய் காபி வேணுமாம்மா?” என்று கேட்டாள்.
ஒரு நிமிஷம் இரு என்று சைகை காட்டிவிட்டு மறுபடியும் டீவியில் மூழ்கினாள் சுபா, ஐந்து நொடியில் ப்ரேக் விட்டதும்...
”என்னடி கேட்டே? காபியா? இப்ப எதுக்கு காபி? சாப்பிடற டைம் ஆச்சே?”
டீவி திரையில் விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் வைஷுவிடம் பேசக் கூட சுபாஷணிக்கு நேரம் இருககாது. ஒரு முறை தனக்கு பிடித்த தொடரைப் பார்க்க முடியாமல் ஊருக்குப் போய் திரும்பியதும். வைஷ்ணவியை துளைத்து எடுத்து நெட்டில் அதை டவுன்லோட் செய்து பார்த்ததும்தான் அவளுக்கு திருப்தியாக இருந்தது. எவ்வளவு யோசித்துப் பார்த்தும் வைஷ்ணவியால் ஏன் இப்படி அம்மா மாறிப்போனாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
சுபாஷினி ரிட்டயர்ட் டீச்சர். அதுவும் ஆங்கில ஆசிரியை. டீச்சராக இருப்பதற்கே பிறந்தவள் போன்ற தோற்றம் உடையவள். வைஷுவையும் டீச்சர் பொண்ணு என்று சிலர் பிரத்யேக உபசரிப்பு செய்வார்கள். ஆனால் எப்படியோ வயதாகிவிட்டால் எல்லாரும் மாறிப் போவார்கள் போலிருக்கிறது. வேலை செய்தும், குடும்பத்தைப் பராமரித்து களைத்துப் போயும் அவர்கள் ஓய்வெடுக்க ஓரிடம் தேவைப்படுகிறது. அது தொலைக்காட்சியாக இருந்தால் என்ன, கோவில் குளமாக இருந்தால் என்ன, அவர்கள் நிம்மதியாக இருந்தால் போதும் என்று தோன்றியது வைஷ்ணவிக்கு.
அம்மா டீவி பார்க்கட்டும் என்று விட்டுவிட்டு பெட்ரூமுக்குச் சென்றாள். ரமணன் இன்னும் அதே பொசிஷனில் இருந்தான். பத்து நாட்களாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை. சின்ன சண்டையில் ஆரம்பித்து வழக்கம் போல வேலையை விடு என்ற பல்லவியில் முடித்திருந்தான். அவனுக்கு வைஷ்ணவி வேலைக்கு போவது பிரச்சனை இல்லை, வேலை செய்யும் இடம் தான் பிரச்சனை.
ஓம் அட்வர்டைஸிங் கம்பெனியில் சீஃப் டிசைனரான வைஷ்ணவிக்கு அங்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம். அதைவிட மனநிறைவு அதிகம். அவளுடைய பாஸ் யோகேஷ் ரமணனின் பழைய நண்பன். ஏதோ பிரச்சனையில் இப்போது இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவனைப் பற்றி ரமணனுக்கு சரியான அபிப்ராயம் இல்லை. பத்து நாளுக்கு முன் வேலையை விடச் சொல்லி வற்புறுத்தினான். வைஷ்ணவி மறுக்கவே அவளிடம் பேசுவதில்லை.
ரமணன் பிடிவாதக்காரன், கொஞ்சம் கூட இறங்கி வரமாட்டான். வைஷணவிக்கு இது போன்ற சண்டைகள் மிகவும் அலுப்பாகிவிட்டது. இன்று அவனிடம் பேசாவிட்டால் பிரச்சனை பெரிதாக வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தாள்.
மெல்ல அவன் அருகில் வந்து ’ரமணன்’ என்று அழைத்தாள்
அவன் திரும்பவில்லை....
”நான் வேலையை ரிசைன் பண்ணிடறேன் போதுமா?” என்றவளை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்து
”நிஜமாவா சொல்றே?”
”ஆமா....”
”எனக்காக இந்த முடிவை எடுத்தியா இல்ல அங்க எதாவது பிரச்சனையா?”
”இதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்காதது. எனக்கு எங்கேயும் எப்பவும் பிரச்சனை வராது. அப்படி வந்தா என்னால சமாளிக்க முடியும். ஓடி ஒளியிற டைப் நான் இல்லைன்னு உங்களுக்குத் தெரியாது?”
”தெரியும்...இருந்தாலும் திடீர்னு இப்படி சொல்றியே அதான் கேட்டேன்....”
”உங்களுக்காகத் தான் விடறேன் போதுமா? .ஆனா சீக்கிரம் வேற வேலைக்குப் போவேன். ”
”வேற எங்க வேணா வேலைக்கு போ. எனக்கு பிரச்சனையே இல்லை. இது என்னோட ஈகோ விஷயம்னு எத்தனையோ தடவை உன்கிட்ட சொல்லிட்டேன். இன்னிக்குத்தான் உனக்கு புரிஞ்சிருக்கு. எனிவே தேங்க்ஸ் வைஷு....”
”இட்ஸ் ஓகே...நைட் என்ன சாப்படறீங்க?”
”நீதான் சமாதானக் கொடியை காட்டிட்டியே நீ போட்டாலும் சாப்பிடறேன்....உன்னையே கூட சாப்பிடலாம் போலத்தான் இருக்கே, மேடத்துக்கு எப்படி வசதி?”
”உங்களை மாதிரி நினைச்ச உடனே மூடை மாத்திக்க என்னால முடியாதுங்க.... கிவ் மி சம் டைம். இப்ப இட்லி வேணுமா தோசையான்னு சொல்லுங்க...
அவளையே பார்த்த ரமணன், ”உன் கூட ஆறு வருஷம் ஒரே கூரைக்குக் கீழே இருக்கேன் வைஷு. நீ எப்ப சிரிப்பே எதுக்கு கோபப்படுவே ஏன் சோகமா இருக்கேன்னு என்னால இன்னும் புரிஞ்சுக்கவே முடியல்லை. தட்ஸ் மை ஃபால்ட்...படி நீ ரொம்ப சென்சிட்டிவ் அண்ட் எமோஷனல் மட்டும் தெரியுது....எனக்கு ரெண்டு தோசை போதும். என்றான்
அவள் திரும்ப யத்தனிக்க,
”ஆமா இன்னிக்கு உன் ப்ரெண்ட்ஸை மீட் பண்ணியே. ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணீங்களா?”
’அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”
:உன் தோழிகள் கிட்ட மாத்தி மாத்தி போன்ல பேசினது இந்த காலனிக்கே தெரியும் எனக்குத் தெரியாதா?....”என்று சிரித்தான்.
”ஓ...அப்ப தெரிஞ்சுக்கிட்டே சைலண்டா இருந்தீங்க இல்லை?”
”ஆமா நீ தான் என்கூட பேசலையே? அப்ப எப்படி அனு எப்படி இருக்கான்னு எங்க மீட் பண்ணப் போறீங்கன்னு உன்கிட்ட கேக்க முடியும்?”
”பீச்ல மீட் பண்ணோம். அப்பறம் எல்லா கதையும் சொல்றேன். முதல்ல சாப்பிட்டுட்டு தூங்குங்க். டைம் ஆகுது.”
அவசர அவசரமாக தோசையை சுட்டுக் கொண்டிருந்த போது செல்போன் அடித்தது.
சந்தியா காலிங் என்று வந்தது. சரி அப்பறம் எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். ஆனால் மறுபடியும் அது அடிக்கவே எடுத்தாள்.
”ஹலோ சொல்லுடி ”
”வைஷு.....நம்ம அனு அனு”
”அனுவுக்கு என்னடி பதறாம சொல்லு”
”அனுவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்..... அவ ஹஸ்பெண்ட் இப்பத்தான் போன் பண்ணி சொன்னார்.
”என்ன ஆச்சுடி? எந்த ஹாஸ்பிடல் என்ன ஏதுன்னு கேட்டியா?”.
“என்னன்னு தெரியலை”
”இல்லைடி அவரே ரொம்ப டென்ஷனா இருந்தார். காலைல தான் மறுபடியும் போன் பண்ணி கேக்கணும்”
”நல்லாதானேடி பேசிட்டிருந்தா? என்ன ஆயிருக்கும்?”
”ஒண்ணுமே புரியலைடி....சரி நீ இப்போதைக்கு ப்ரே பண்ணிக்கோ நமக்கு வேற வழி இல்லை...”
”சரி சந்தியா’ என்றபடி போனை வைத்த வைஷு கறுகி இருந்த தோசையை எடுக்கத் தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
(தொடரும்)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக