வியாழன், 16 ஜூன், 2011

4. இப்போதும் இருக்கும் கதை

”பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடும் நாணலைப் போன்றவள். எத்தகைய பெரும்புயல் வீசினாலும் ஒடிந்து வீழ்ந்து விட மாட்டாள்” – வேட்லி




’நாம் சேராமலேயே போய் விடலாம்..ஆனால் பிரியவே மாட்டோம்' என்று ஜீவா எழுதியிருந்த கடிதத்தின் கடைசி வரிகளை வைஷ்ணவியால் மறக்கவே முடியாது. பிரியவே மாட்டோம் என்ற வார்த்தை இப்போது அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் மனதளவில் இன்னும் பிரியாமல் அவனுடனான நினைவுகளை அசை போட்டபடி இருப்பதால் தான் அவனை நிரந்தரமாக பிரிந்துவிட்டோம் என்ற எண்ணத்திலிருந்து அவளை காப்பாற்றிக் கொண்டிருந்தது. கனவு கண்ட வாழ்க்கை கை நழுவி போய்விட்டாலும் கனவில் அடிக்கடி ஜீவா வந்து கொண்டே தான் இருந்தான். ரமணனுடன் அன்யோன்யமாக இருக்கும் தருணங்களில் இது பெரும் மனச்சிக்கலை குடுத்தாலும் தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகிவிட்டது. ”ஜீவா என்னிக்காவது உன்னை நிச்சயமா நான் மறப்பேன் பாரு:என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். பெருமூச்சுடன் லாப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு மணியைப் பார்த்தாள். பதறியபடி யோகேஷ் கேட்ட ஃபைலை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக லீ மெரிடியனுக்குக் கிளம்பினாள். அதற்குள் யோகேஷ் பத்து முறை போன் செய்துவிட்டான்.

சரியான நேரத்திற்கு ஃபைலை அவனிடம் தந்ததும்தான் அவன் டென்ஷன் குறைந்தது. யோகேஷ் வெளிப்படையாக பேசுபவன். சந்தோஷோமோ கோபமோ எல்லாவற்றையும் கொட்டிவிடுவான். ஒரு நாள் பிங்க் கலர் காட்டன் ஸாரி உடுத்திச் சென்றிருந்தாள். அவன் ஒரு நொடி இமைக்காமல் பார்த்துவிட்டு “ஆசம் வைஷ்ணவி. இந்தக் கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு” என்றான். சற்றுக் கூச்சமாக இருந்தாலும் அவன் குரல் அன்று முழுவதும் அவளைச் சுற்றி வந்துக் கொண்டே இருந்தது. யோகேஷுக்கு முப்பத்தி இரண்டு வயதாகிறது, நல்ல படிப்பு நல்ல வருமானம் எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் இன்னும் கல்யாணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறான். பட்டும் படாமல் வைஷ்ணவி ஏன் டிலே பண்றீங்க என்று கேட்டதற்கு ”உங்களைப் போல ஒரு டேர் டெவில் வுமனை தேடிட்டு இருக்கேன்” என்றான். அதிலிருந்து அவள் பர்சனல் கேள்விகள் கேட்பதை தவிர்த்தாள். மீட்டிங் முடிந்ததும் க்ளையண்டுடன் லன்ஞ் முடித்துவிட்டு காரில் யோகேஷுடன் ஆபிசுக்குக் கிளம்பினாள் வைஷு. வழியில் அவன் தொண தொணவென்று கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை வரி பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.

”ஆபீஸுகு போனதும் இண்டர்னல் மீட்டிங் உடனே ஆரம்பிச்சடலாம். பேசி டிசைட் பண்ண நிறைய விஷயங்கள் இருக்கு” என்றான்

அவள் சுரத்தே இல்லாமல் ‘ம்’ என்றாள்.

”அப்பறம் நம்ம ஆபிஸ்ல இருக்கற கான்பரன்ஸ் ஹால்ல புது எல்.ஈடி டிவி மானிட்டர் போடணும். இன்னிக்கே கொடேஷன்ஸ் வாங்க ஆரம்பிச்சிருங்க.. ”

”ம்..”

அவன் போன் அடிக்க அதை எடுத்து உற்சாகமாக பேச ஆரம்பித்தான். வைஷ்ணவி வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள். ஸ்கூல் முடிந்து பிள்ளைகள் சைக்கிளிலும் ஆட்டோக்களிலும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரண்டு குழந்தைகளை ஸ்கூட்டியில் வைத்து அசால்டாக ஓட்டிச் சென்றாள் ஒரு இளம்பெண். அந்தக் குழந்தைகள் சற்று பயந்து போய் அவள் வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டிருந்தது. காலம் நிறைய மாற்றங்களை தந்திருக்கிறது. முன்பெல்லாம் எங்கும் எதிலும் இத்தனை வேகம் இருந்திருக்கவில்லை. ஓரளவுக்கு சிட்டி லைஃப் ரசிக்கத் தக்கதாகவே இருந்தது. ஆனால் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கும் காலகட்டம் பாரபட்சமின்றி அனைவரையும் திணறடிக்கிறது. இளைஞர்கள் சீக்கிரம் சோர்ந்து போய் அனைத்தும் கிடைக்கப் பெற்ற வாழ்க்கை அலுத்துப் போய் வெகு விரைவில் பல விதமான மன நெருக்கடிகளுக்கு உள்ளாகி அதன் பலனாக பல வியாதிகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். தன்னுடைய நிறுவனத்தையே உதாரணமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் வேலை செய்தால்தான் இலக்குகளை அடைய முடிகிறது. வீட்டுக்குப் போன பின்பும் ஆன்லைனிலும் மொபைலிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவில்லா வேலைகள். எதற்காக இந்த ஓட்டம். நின்று நிதானமாக வாழ்க்கையை ரசிக்கவே முடியாமல் போய்விடுமோ என்று தோன்றியது. அதுகூட பரவாயில்லை அனுவைப் போல எதாவது பிரச்சனை தனக்கும் வந்துவிடுமோ என்றும் பயமாக இருந்தது.

பள்ளி நாட்களில் கவலையற்று தான் துள்ளித் திரிந்ததைப் போல தன் மகளால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். குழந்தையின் சின்ன மூளைக்குள்தான் எத்தனை விதமான திணிப்புகள்? அப்பா, அம்மா, பாட்டி, பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டுக்கு வருபவர்கள் மற்றும் ஸ்கூல் டீச்சர்கள் என்று எல்லாரும் அவளை வழிநடத்துகிறேன் என நினைத்து பல அறிவுரைகளை வாரி வழங்க அதில் எதை பிடித்துக் கொளவது எதை விடுவது என்று அவள் திணற மாட்டாளா? சமூகம் இப்படித்தான் இருக்கும். தனக்கு வேண்டியதை தனக்கு விருப்பம் உள்ளதை மக்களின் மீது திணித்துக் கொண்டே இருக்கும். எதையும் அழித்து ரீ சைக்கிள் பின்னில் போட முடியாது. நிதி தன் சின்னஞ் சிறிய விரல்கள் வலிக்க வலிக்க ஹோம் வொர்க் பக்கம் பக்கமாக எழுதுவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. எழுத வைத்தே தீரவேண்டும். அவள் சரியாகப் படிக்காவிட்டால் ரமணன் நிதியைத் திட்டவே மாட்டான். வைஷுவிடம் “நீ வேலையை விட்டுட்டு நிதியைப் பாத்துக்கன்னு எத்தனை தடவை சொல்றது வைஷு? ஏன் இப்படி குழந்தையோட ப்யூச்சரோட விளையாடறே என்று சீறுவான். அவனை சமாதானப் படுத்துவற்குள் போதும் போதும் என்றாகிவிடும். நிதியே வைஷுவின் அருகில் வந்து ”ஸாரிம்மா நெக்ஸ்ட் டைம் எல்லாத்திலும் ஏ ப்ளஸ் வாங்கறேன்” என்று சொல்லும்.

நிதியின் வயதில் விளையாட்டுத் தோழிகள் அக்கம் பக்கத்தில் இல்லாததால் பார்ப்பி பொம்மையுடனும், டீவி திரையில் தோன்றும் டோரா, பென் 10, சின் சாங், டோரிமான், நோமிடா போன்ற காரெக்டர்களை தனக்கு உகந்த தோழமைகளாக கற்பனை செய்து கொள்ளுவாள். ’வைஷும்மா இன்னிக்காவது மறக்காம டோரிமான் பொம்மை வாங்கிட்டு வா அது என்ன சாப்பிடும் தெரியுமா...என்று ஒரு நொடி அவள் கண்களையே சிரிப்புடன் பார்த்துவிட்டு அவள் தெரியாமல் விழிப்பதை பார்த்து பனானா என்று சொல்லி அட்டகாசமாக சிரிப்பாள். ஏற்கனவே அவளுக்கு பென் 10 பாக்ஸ், டோரா ஸ்கூல் பேக், டோரா புஜ்ஜி வாட்டர் பேக், டோரா கர்சீப், சின்-சாங் பெட் ஷீட் மற்றும் தலையணை வாங்கிக் குடுத்திருந்தாள். இந்த டோரிமான் மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. சீக்கிரம் தேடிப் பிடித்து வாங்கித் தந்துவிட வேண்டும். எப்படி தனக்கும் எல்லாம் கார்டூன் காரெக்டர்கள் தெரிந்திருக்கிறது என்று ஆச்சரியப்பட்டாள் வைஷ்ணவி.

“காஸ்ட்வைஸ் பாத்தா சாம்சங் பெட்டர்னு நினைக்கறேன்...நீங்க என்ன சொல்றீங்க?” என்று விட்ட இடத்திலிருந்து யோகேஷ் கேட்டதை அவள் கவனிக்கவில்லை. அவன் இன்னும் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தாள்.

அவள் பதில் வராமல் இருக்கவே யோகேஷின் முகம் மாறியது.

”என்ன வைஷ்ணவி? ஆர் யூ ஹியர்? நான் பாட்டுக்கு பேசிட்டே வரேன் நீங்க வேற ஏதோ யோசனைல இருக்கீங்க போல? எனி ப்ராப்ளம்?”

”நத்திங் யோகேஷ் ஆனா உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆபிஸ் போனதும் பேசலாம்.”.

”அப்படியா? பரவால்லை ஏன் அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும். இப்பவே சொல்லுங்க”

ஒரு நொடி யோசித்துவிட்டு “எனக்கு கொஞ்சம் பர்சனல் ப்ராப்ளம் இருக்கு யோகேஷ். அதனால....

அதனால....

”வேலையை ரிசைன் பண்ணிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றாள்.

”வாட்? என்ன சொல்றீங்க? ஆர் யூ ஜோக்கிங்? முகத்தின் லேசான அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

”இதுல ஜோக் அடிக்கறதுக்கு எதுவும் இல்லை யோகேஷ். எனக்கு வேற வழியில்லை. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்.”

”என்ன வைஷ்ணவி இப்படி திடீர்னு சொன்னா எப்படி? இப்பதான் நம்ம கன்சர்ன் பிக் அப் ஆகிட்டு இருக்கு. நீங்களும் அதுக்கு ஒரு காரணம். சேலரி ஹைக் எதாவது வேணும்னா சொல்லுங்க. இப்பவே போட்டுடறேன்...”

”சேச்சே அதெல்லாம் இல்லை யோகேஷ் இது வேற பிரச்சனை”

”அப்படி என்ன பிரச்சனை வைஷ்ணவி திடீர்னு? சொல்லக் கூடியதா இருந்தா ப்ளீஸ் ஷேர் இட் வித் மீ. என்னால முடிஞ்ச உதவி பண்றேன்...கமான் பீ ப்ராங்க்...”

”இல்லை யோகேஷ் இதை என்னால வெளில சொல்ல முடியாது. சம்திங் டூ பர்சனல். ஆனா என்னால நிச்சயமா கண்டினியூ பண்ண முடியாது.”

அவன் தீவிரமாக யோசனையில் இருந்தான். சற்று நேர அமைதிக்கு பிறகு “என்னிக்கு ரிலீவ் ஆகணும்னு நினைக்கறீங்க?”

”முடிஞ்சா இன்னிக்கே யோகேஷ்”

”அவ்வளவு அவசரமாவா?

யெஸ் யோகேஷ்...”

”அப்ப உங்க பெண்டிங் வொர்க், ஹாண்டிங் ஓவர் அண்ட் திங்ஸ் இதெல்லாம்?”

”எல்லாம் ஈஸ்வரிக்கிட்ட சொல்லியிருக்கேன்....அவங்க பாத்துப்பாங்க யோகேஷ்”

”ஓ அந்த அளவுக்கு நீங்க ப்ரீ பளாண்ட் இல்லை. நான் தான் முட்டாள். உங்களை நம்பி நிறைய அசைன்மெண்ட்ஸ் ஒத்துக்கிட்டு இருக்கேன்....என்றான் லேசான கோபத்துடன்.

“Men may come and men may go but the company goes on” கம்பெனி லா படிச்ச்சிருக்கீங்க இல்லை.

”Every individual is unique” இல்லையா? இதை யாராலையும் மறுக்கமுடியாது வைஷு....உங்க வொர்க் மட்டும் இல்லை உங்க மாரல் சப்போர்ட்டும் எனக்கு நிச்சயம் தேவை...ப்ளீஸ் டேக் யுவர் டைம். ஒரு மாசம் கூட ப்ரேக் எடுத்துக்கங்க…ஆனா திரும்பி வந்துடுங்க. அடம்பிடிக்கும் பள்ளி மாணவனாய் அவன் முக பாவம் இப்போது மாறி இருந்தது.


”இல்ல யோகேஷ் திரும்பி வர முடியாத சூழல் வந்துச்சுன்னா கஷ்டம். கமிண்ட்மெண்ட் குடுத்தா நான் அதை மீற மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?’

”அது தெரிஞ்சுதான் வைஷ்ணவி அப்படி கேட்டேன். இப்ப நீங்க எதையும் பேச வேணாம். நேரா வீட்டுக்கு போங்க. நல்லா யோசிங்க. நாளைக்கு எனக்கு போன் பண்ணுங்க.....

”அப்ப ஈவ்னிங் மீட்டீங்?

”எல்லாம் கேன்ஸல் நானும் வீட்டுக்குப் போகப் போறேன். எனக்கு மூட் அவுட். அண்ட் அப்கோர்ஸ் அதுக்கு காரணம் நீங்கதான்.” என்றான்.

அவள் பதில் பேசாமல் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குப் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டு வாசலில் அவளை ட்ராப் செய்துவிட்டு அவன் கார் விரைந்துவிட்டது.

சுபா ஆச்சரியமாக வைஷுவை வரவேற்றாள். டீவி பார்த்துக் கொண்டிந்த நிதி அந்த நேரத்தில் வைஷுவை எதிர்ப்பார்க்காததால் சந்தோஷத்துடன் ஓடி வந்து கட்டிக் கொண்டது.

”என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? உடமபு எதாவது சரியில்லையா?” என்று கேட்டாள் சுபா

”இல்லைம்மா நான் வேலையை விட்டுட்டேன்.”

”வைஷு அப்ப நாளைல்லேர்ந்து நீ லீவா” என்று நிதி கேட்டது

”ஆமாம் செல்லம் அம்மா உன்னோட நிறைய நேரம் இருக்கப் போறேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து அபிராமி மால், சிட்டி செண்டர், பீச், ப்ளானடோரியம், பார்க்குன்னு நிறைய இடம் போகலாம். பாப்பா குட்டிக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கித் தரேன் சரியா?”

”சூப்பர்மா...ஐ ஜாலியா இருக்கு.....வைஷு எனக்கு நீ டோரிமான் வாங்கியே தரலையே...”

”எப்படியாவது டோரிமானை கண்டுபிடிச்சு குட்டிச் செல்லத்துக்கு வாங்கிக் குடுத்துடுவேன் ஓக்கேவா”

”குட் அம்மா”....என்று நிதி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்

”நாள் முழுக்க இவளோட லூட்டியை பொறுத்துக்கிட்டு பூப்போல இவளை பாத்துக்கிட்டாலும் நீ வந்ததும் என்னை கண்டுக்கறதே இல்லைடி. நல்ல பொண்ணு நல்ல அம்மா....என்றாள் சுபா

”டீச்சர் ப்ளீஸ் டோண்ட் பீ ஜெலஸ் என்றாள் வைஷு”

”இது பொறாமை இல்லைடி, பெருமை....சரி சரி போய் முகம் கைகால் கழுவிட்டு வா காபி போட்டுத் தரேன்” என்றாள் சுபா

”எனக்கு பூஸ்ட்: என்றது நிதி

நிதியை தூக்கிக் கொண்டு பெட் ரூமுக்குள் நுழைந்தாள் வைஷ்ணவி.

போன வாரம் லாண்ட்மார்க்கில் வாங்கியிருந்த சித்திரக் கதையை நிதியிடம் எடுத்துக் குடுத்தாள்.

”ஐ தேங்க்ஸ் வைஷு” என்றாள் நிதி.

”எதுக்கு அம்மாக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் நிதிக்குட்டி?”

”எங்க மிஸ் சொல்லியிருக்காங்க. தேங்க்ஸ், ஸாரி எல்லாம் சொல்றது குட் மானர்ஸ்னு...”

அப்போது வைஷுவின் போன் அடித்தது. சந்தியா லைனில் வந்தாள்

”என்னடி ஈவ்னிங் ரமணாவோட வரேன்னு சொன்னே...”

”ஸாரி சந்தியா டோட்டலா மறந்துட்டேன். ஒரு சின்ன சிக்க்ல் அப்பறமா சொல்றேன். அனு இப்ப எப்படி இருக்கா”

”இன்னும் ஒன் அவர்ல டிஸ்சார்ஜ் பண்ணப் போறாங்க. அதான் நீ வரியான்னு கேட்கறதுக்கு போன் பண்ணேன். எங்க இருக்கேடி?”

”வீட்டுல தான் இருக்கேன். ஆனா இப்ப என்னால வர முடியாது. அப்செட்டா இருக்கேன்....அனுகிட்ட அப்பறம் போன் பண்ணி பேசறேன்.. ஸாரிடி சந்தியா.”

”ஏய் இட்ஸ் ஓகே உன் குரலே சரியில்லை. நீ முதல்ல நல்லா ரெஸ்ட் எடு. நான் நைட் பேசறேன். பைடி”

அவள் போனை வைக்கவும் ரமணனின் கால் வரவும் சரியாக இருந்தது.

இவள் ஹலோ சொல்லுவதற்கு முன் அவன் அவசரமாக

”நான் மதுரைக்கு போறேன். இன்பார்ம் பண்ணத்தான் கூப்பிட்டேன். பை” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். இப்ப எதுக்கு இவன் மதுரைக்கும் இவ்வளவு அவசரமா கிளம்பிப் போகணும் என்று குழம்பினாள் வைஷு. ரமணனின் பெற்றோர்கள் பசுமலையில் இருக்கிறார்கள். திடீரென்று அவன் போவது தன் மீதான கோபத்தில் என்று நன்றாகத் தெரிந்தது.

மறுபடியும் அவன் போனுக்கு டயல் செய்தால். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஏன் இவனுக்கு பொறுமையே இல்லை வேலையை விட்ட விஷயத்தை சொல்லக் கூட அவகாசம் தராமல் கோவித்துக் கொண்டால் என்ன செய்வது என்ற எரிச்சலுடன் மறுபடியும் மறுபடியும் அவன் நம்பருக்குப் போட்டாள். ஆன் செய்யப்படாமேலே இருந்தது.

நிதிக்கு ரெண்டு தோசையை ஊட்டிவிட்டு படுக்க வைத்தபின் பசியும் களைப்புமாக இருந்தாலும் சாப்பிடப் பிடிக்காமலும் தூங்கவும் முடியாமலும் ஏதேதோ யோசனையில் ஜீரோ வாட்ஸ் பல்பின் மங்கலான வெளிச்சத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்துக் கிடந்தாள் வைஷ்ணவி.

மொபல் சன்னமாக சத்தம் எழுப்பவே அதை எடுத்துப் பார்த்தாள். ப்ரைவேட் நம்பர் காலிங் என்று வந்தது. யார் இது இந்த நேரத்தில் அதுவும் பெயர் இல்லாமல் அழைப்பது என்று குழம்பினாள். வெளிநாட்டுக் காலாக் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அங்கிருந்து யார் கூப்பிடப் போகிறார்கள். க்ளையண்டாக இருக்கக் கூடும். ஆனால் வேலையே வேண்டாம் என்று தூக்கிப் போட்டபின் இந்த போனை எடுத்துத் தான் தீரவேண்டுமா என்று குழப்ப்த்துடன் இருக்க கடைசி ரிங் அடிக்கும் போது தவிர்க்க முடியாமல் எடுத்துவிட்டாள்

மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டு வைஷ்ணவி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

(தொடரும்)

0 கருத்துரைகள்: