புதன், 24 ஆகஸ்ட், 2011

4. இப்போதும் இருக்கும் கதை




‘உனக்குள்ளேயே சுருங்கி கொள்வாயா அமைதி வெளியே இருக்கிறது
அமைதியான நிழல் தான் உள்ளே இருக்கிறது’

- ஐரீஸ் முர்டாச்சின்


அவசர அவசரமாக ப்ரெஷ் செய்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் வைஷ்ணவி. அங்கு அவள்
ஆபிஸ் அசிஸ்டெண்ட் விஜயகுமார் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.
வைஷ்ணவியைப் பார்த்ததும் பரபரப்பாக எழுந்தான்.

”குட் மார்னிங் மேடம்...எபப்டி இருக்கீங்க?”

”குட் மார்னிங் விஜி...உட்காருங்க.....காபி சாப்பிடறீங்களா?”

”இப்பதான் அம்மா குடுத்துட்டாங்க மேடம்...ஒரு அர்ஜெண்ட் விஷயம் சார்
நேர்ல போய் சொல்லிட்டு வரச் சொன்னாரு....”

யோகேஷின் போன் கால்களை எடுக்காமல் இருந்ததால் நேரிலேயே ஆளை
அனுப்பிவிட்டான். ஏன் எல்லாரும் தன்னைத் துரத்துகிறார்கள் என்று அலுப்பாக
இருந்தது வைஷ்ணவிக்கு.

’என்ன அர்ஜெண்ட் வொர்க் விஜி?”

”அது சாருக்குத் தான் தெரியும் மேடம்...பத்து மணிக்கு உங்களை ஆபிஸுக்கு
வரச் சொன்னாரு. கார் அனுப்பறேன்னும் சொன்னாரு. நீங்க அவர்கிட்ட கால்
பண்ணி கேட்டுக்கங்க....அப்ப நான் வரேன் மேடம்”.

அவளின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் விஜி போய் விட்டான். அது அவன்
தப்பு இல்லை, அவனை அனுப்பியவனின் ஆர்டராக இருக்கும் என்று அவளுக்குத்
தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் அவளுடைய முகத்தைப்
பார்க்காமல் யோகேஷ் இருந்ததில்லை. தன்னை மிஸ் செய்கிறான் போலிருக்கிறது.
இதில் பெரிய தவறு இல்லையென்றாலும் அதற்கு தான் ஆளாகக் கூடாது என்று
உறுதியாக நினைத்தாள் வைஷ்ணவி. ரமணன் எரிச்சல்படுவதில் காரணம் இருப்பதை
முதன்முறையாக உணர்ந்தாள் வைஷ்ணவி.

நிதி தூங்கி எழுந்து சோபாவில் வந்து படுத்துக் கொண்டது. டிவியை ஆன்
செய்து எடுத்தவுடன் சுட்டி டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டாள். வைஷ்ணவியைப்
பார்த்து சோம்பலாக ”குட் மார்னிங்மா என்றாள்.

”ப்ளீஸ் நிதி...முதல்ல போய் ப்ரெஷ் செய்...”

சரிம்மா....

நிதியிடம் பிடித்த விஷயம் சொன்னவுடன் அதை உடனே செய்துவிடுவாள்.
வைஷ்ணவியிடம் மட்டும் தான் இது. ரமணனோ, அம்மாவோ எது சொன்னால் அந்த இடத்தை
விட்டு அசையவே மாட்டாள். நிதி சொல்வதைத்தான் அவர்கள் கேட்கவேண்டும்.
”என்ன மாயம்டி செஞ்சி வைச்சிருக்கே.....நீ என்ன சொன்னாலும் கீ குடுத்த
பொம்மை மாதிரி உடனே செய்றா உன் மக” என்பாள் சுபா.

குழந்தைகளை மிரட்டி அவர்களை அடித்து துன்புறுத்தி அடிபணிய வைப்பது
வைஷ்ணவிக்கு சுத்தமாக பிடிக்காது. மென்மையாக அவர்களிடம் செய்ய
வேண்டியதைச் சொன்னால் போதும் மறுபேச்சின்றி கேட்டுக் கொள்வார்கள்.

சுபா சொன்னதை நினைத்துச் சிரித்தபடி குளிக்கக் கிளம்பினாள் வைஷ்ணவி. தொடை
இன்னும் லேசாக எரிந்து கொண்டிருந்தது. அதை அலட்சியப்படுத்திவிட்டு இன்று
என்னென்ன செய்ய வேண்டும் என்று மனதிற்குள் பட்டியல் இட்டாள், முதலில்
யோகேஷுக்கு போன் செய்து இன்று வர முடியாது நாளை அல்லது மறுநாள் வருவதாகச்
சொல்ல வேண்டும். அடுத்து சந்தியாவுக்கு பேசிவிட்டு அனுவைப் போய்ப்
பார்க்கவேண்டும். பாவம் அனு வந்த இடத்தில் உடம்பு முடியாமல்
கஷ்டப்படுகிறாள். இன்று கட்டாயம் பார்த்தே தீரவேண்டும். அடுத்து ஜீவா.
அவனிடம் மிகத் தெளிவாக இதுவே கடைசி சந்திப்பு என்று சொல்லிவிடவேண்டும்.


நினைவின் சக்கரத்தில் மனம் உருண்டு கொண்டிருந்ததால் எப்படி குளித்து
முடித்து வெளியே வந்தோம் என்றே வைஷ்ணவிக்குத் தெரியவில்லை. ரொட்டீனான சில
விஷயங்கள் செய்யும் போது இப்படி சில சமயம் நேர்ந்துவிடுவதுண்டு. மனம்
அவளிடமிருந்து மெல்ல நழுவி வெறு எங்கெல்லாமோ பறந்து திரிந்துவிட்டு
சாதுவாய் மீண்டும் வந்து அதனிடத்தில் உட்கார்ந்து கொள்ளும். இடைப்பட்ட
நேரத்தில் தான் எப்படி இருந்தோம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதே
மறந்து போய்விடும். ஏன் இப்படி ஆப்சண்ட் மைண்டடாக இருக்கிறோம். தனக்கு
மட்டும் இப்படி இருக்கிறதா இல்லை எல்லா பெண்களுக்கும் இது போல் தோன்றுமா
என்ற சந்தேகம் வைஷ்ணவிக்கு ஏற்படும். சந்தியாவிடம் கேட்டால் ”நீ லூசுடி
அதான் இப்படியெல்லாம் திங்க் பண்றே” என்று சொல்லி சிரிப்பாள்.


ரொம்ப யோசித்தாலோ, படபடப்பாக இருந்தாலோ, அல்லது துயரின் உச்சத்தில்
இருந்தாலோ மனம் சமன் நிலை குலைந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் மனதை
ஒருமுகப்படுத்திக் கொள்வதே சரியாக இருக்கும் என்று தனக்கு தானே
அறிவுறுத்திக் கொண்டு தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை செய்வாள்.
நிதியுடன் விளையாடியோ, பதின்ம வயதில் கற்றுக் கொண்ட பரத நாட்டியத்தை தன்
அறையில் நிதிக்கும் அம்மாவுக்கும் முன்பு ஆடியோ மனச் சோர்விலிருந்து
வெளியே வந்துவிடுவாள். அதன்பின் அடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு
நகர்ந்துவிடுவாள்.

தன்னைத் தானே கேள்விக்கு உட்படுத்தி செல்ப் அனாலிஸில் செய்யும் பழக்கம்
டீன் ஏஜிலிருந்து வைஷ்ணவிக்கு உண்டு. தன்னிடம் இருக்கும் குறை நிறைகளை
அவ்வப்போது அலசி ஆராய்ந்து தன் வேதனைக்கோ குழப்பத்திற்கோ காரணமான
விஷயங்களை பட்டியல் இடுவாள். தனக்கு ஏற்படுகின்ற அனைத்து சிக்கல்களின்
மூல காரணம் தான் தான் என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள். அதனால் முதலில்
சரியென்று தோன்றியவை பின் சரியற்றதாகிவிடும் போது, அதன் பொறுப்பை தன்
மீதே சுமத்திக் கொண்டு இறுதியில் தேவையற்ற குப்பைகளை தூர வீசி மனதை
தெளிவு படுத்திக் கொண்டே இருப்பாள். மனம் சற்று லேசாகி மீண்டும் பழைய
உற்சாகத்திற்கு வந்துவிடும். அவளுடைய மாசில்லாத சிரிப்பின் முக்கிய
காரணம் இதுதான். மனம் தெளிவாக இருக்கும் போது முக எழில் கூடும். தோழிகள்
“எப்படி வைஷ்ணவி உன்னால மட்டும் இப்படி மலர்ச்சியா சிரிக்க முடியுது”
என்று தோழியர் கேட்கையில் வைஷ்ணவியால் பதிலுக்கு அழகான புன்னகையை
பரிசாகத் தர முடிந்தது.

அடர் பச்சை நிற சில்க் காட்டன் புடவையை உடுத்திக் கொண்டாள். ஜீவாவின்
நினைவு மீண்டும் தவிர்க்க முடியாமல் வந்தது. ”சில பேருக்கு சோபர்
கலர்தான் எடுக்கும், சிலருக்கு டார்க் கலர்ஸ் நல்லாயிருக்கும் ஆனா உனக்கு
எல்லா கலரும் நல்லா இருக்குடி அம்புஜம்” என்பான். சிரித்துக் கொண்டே
கண்ணாடி முன் வந்தாள். இன்று ஏதோ ஒருவித பொலிவு முகத்தில் தெரிவதைப்
பார்த்தாள். இடது கன்னத்தில் சின்னதாக ஒரு பரு எட்டிப் பார்த்தது. இன்றோ
நாளையோ பீரியட்ஸ் வந்துவிடும். எச்சரிக்கையாக ஒரு விஸ்பர் பேடை எடுத்து
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். பெண்கள் வலியில்லாமல் வாழவேக் கூடாது
என்று விதித்திருக்கிறது போலும். மனது அல்லது உடல் எதாவது ஒன்று வாழ்நாள்
முழுவதும் இம்சித்துக் கொண்டே இருந்து தொலைக்கும். சம்ஸ் இன்று வராமல்
இருந்தால் நன்றாக இருக்கும், வைஷ்ணவிக்கு வயிற்று வலியைவிட கால் உளைச்சல்
பயங்கரமாக இருக்கும். சில சமயம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத
அளவிற்கு யாரோ காலுக்குள் க்ரில்லிங் மிஷினை வைத்து குடைவதைப் போல வலி
உயிரை சக்கையாக பிழிந்தெடுக்கும். பெருமூச்சுடன் வைஷ்ணவி சிறிய கறுப்பு
நிற ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிக் கொண்டு, கடைசியாக ஒரு முறை
புடவை ப்ளீட்ஸை சரி செய்து விட்டு சுபாவிடம் சொல்லிக் கொண்டு
புறப்பட்டாள்.

சந்தியாவிற்கு போன் செய்தாள். சந்தியா முதலில் எடுக்கவில்லை. அதன் பின்
அவளே அழைத்துப் பேசினாள்.

என்னடி வைஷு போனே காணோம்? பிஸியா?

பிஸி எல்லாம் இல்லை சந்தியா....வேலையை கூட ரிசைன் பண்ணிட்டேன்...

கடைசில ரமணனுக்காக விட்டுக் குடுத்திட்டியா?

ஆமா...ஆனா அது மட்டும் இல்லை சந்தியா எனக்கே ஒரு சின்ன ப்ரேக்
எடுத்துக்கணும்னு தோணிடுச்சி......ரெண்டு மூணு மாசம் கழிச்சு மறுபடியும்
வேற வேலைக்கு போயிடுவேன்....

ம்...உனக்கு எப்படி வசதியோ அப்படி செய்...

அனு எப்படி இருக்கா சந்தியா...இப்ப அவளைப் போய் பாக்கலாமா?

இப்ப பரவால்லை வைஷு...பெய்ன் இன்னும் இருக்கு...அதுக்கு டேப்லெட் எல்லாம்
கிடையாதாம். பிஸியோதெரபில இருக்கா....அடுத்த வாரம் ஊருக்கு
கிளம்பறா....நீ பேசலைன்னு உன் மேல கோபமா இருக்கா?

நேர்ல போனா சரியாகிடுவா சந்தியா....நீ என் கூட வர்றியா?

இல்லைடி வைஷு நீ போய்ட்டு வா...என்னால இப்ப லீவோ பர்மிஷனோ போடவே
முடியாது. அதோட அவ இப்ப நங்கநல்லூர்ல இருக்கா...அவ நாத்தனார் வீட்ல வேற
ஒரே கெஸ்ட் வந்திருக்காங்க...அவ கிட்ட தனியா பேசவே முடியாது. பேசாம
நீயும் நானும் வீக் எண்ட்ல அவ ஊருக்கு போறதுக்கு முன்னாடி போய்
பாத்துட்டு வந்திடலாம்....

அப்படியா சொல்றே?

ஆமா...ஆனா அதுக்கு முன்னாடி நீ போன்ல அவகிட்ட பேசிடு...

சரி சந்தியா......

ம்...பாவம்டி நம்ம அனு....எப்படி துள்ளிச் திரிஞ்சிட்டு இருந்தா.....ஒரே
இடத்துல அவ எப்படித்தான் படுத்துட்டு இருக்கறாளோ? மனசு ரொம்ப கஷ்டமா
இருக்கு வைஷு..

நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க
இல்ல.....இட்ஸ் எ டைம் டு ரெஸ்ட்னு அவளே பாசிட்டிவ்வா எடுத்துக்கறா நீ
அவகிட்ட இப்படி எல்லாம் புலம்பிடாதே....

சேச்சே...உன்கிட்ட தாண்டி ஷேர் பண்ணிக்கறேன். சரிடி நைட் பேசறேன். என்று
சொல்லிவிட்டு போனை வைத்தாள்.


அனுவைப் பார்த்துவிட்டு அதன்பின் ஜீவாவைப் பார்க்கப் போகலாம் என்று
நேரத்தை கணக்கிட்டு இருந்தாள். இப்போது என்ன செய்வது? ஜீவா வரும் வரை
எங்கே போவது என்று திகைப்பாக இருந்தது.

வேலைகள் சூழ்ந்த வாழ்க்கையில் சாப்பிடக் கூட நேரம் இருக்காது. இயந்திர
வேகத்தில் பரபரத்துக் கொண்டிருப்பாள். சட்டென்று உலகம் மெதுவாக இயங்குவது
போல உணர்ந்தாள். பேசாமல் வீட்டுக்குத் திரும்பி விடலாமா என்று ஒரு நொடி
நினைத்தாள். வேண்டாம். மறுபடியும் கிளம்பி வரச் சோம்பலாக இருக்கும் என்று
முடிவு செய்து எதிரில் தென்பட்ட ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தாள். உள்ளே
எல்லா டேபிள்களும் ஆண்களே நிறைந்திருந்தார்கள். சில பெண்கள் கணவனுடனோ
காதலனுடனோ இருந்தார்கள். இந்த ஊரில் மட்டுமே தனியாக ஒரு பெண் காபி கூட
ஹோட்டலுக்குப் போய் குடிக்க முடியாது. யாரும் எதுவும் நேரடியாகச் கமெண்ட்
அடிக்கப் போவதில்லை. ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறு கதை
சொல்லும். சில பார்வைகளை சகிக்க முடியாமலேயே தனியாக வருவதைத் தவிர்ப்பாள்
வைஷ்ணவி. தனியாக பெண்கள் எங்குமே நிற்க முடியாத அளவிற்கு கண்ணுக்குத்
தெரியாத சில வலைகளை இச்சமூகம் காலம் காலமாய் பின்னி வைத்துள்ளது. இப்போது
பரவாயில்லை. தைரியமாக சில பெண்கள் தங்களுக்கு வேண்டியதை போராடியாவது
பெற்றுக் கொள்கிறார்கள். இன்று தனக்கும் வேறு வழியில்லை, நேரத்தை கடத்த
வேண்டும், காபி குடிக்கலாம் என்ற எண்ணம் வேறு ஏற்பட்டுவிட அங்கிருந்த ஏஸி
ரூமுக்குள் சென்றாள். வசதியான ஒரு இருக்கையில் உட்கார்ந்து பேரர்
வருவதற்காகக் காத்திருந்தாள். மெனு கார்டை அவளிடம் தர முயன்றவனிடம் அதை
வாங்காமல் “ஒரு காபி...சக்கரை தனியா குடுத்திடுங்க...என்றாள்.

ஹேண்ட்பேகிலிருந்து கிர்கிர் என்று செல்போன் உறுமியது. சைலண்ட் மோடில்
இருந்து சாதாரண மோடிற்கு மாற்ற மறந்துவிட்டிருந்தாள். போனை வெளியே
எடுப்பதற்குள் கட்டாகிவிட்டது. ஒன் மிஸ்டு கால் யோகேஷ் என்று இருந்தது.
கூப்பிடலாமா இல்லை அப்புறம் பேசலாமா என்று யோசிப்பதற்குள் மறுபடி அந்த
கால் வந்தது. வேறு வழியின்றி எடுத்தாள்.

ஹலோ....

ஹலோ...வைஷ்ணவி...ஹவ் ஆர் யூ?

ம்...இருக்கேன்...

ஏன் உங்க குரல் டல்லா இருக்கு. உடம்பு சரியில்லையா?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை யோகேஷ் ஐம் ஆல் ரைட்...

சரி...உங்களை ஆபிசுக்கு கூப்பிட்டு அனுப்பினேனே, ஷார்ப்பா பத்து மணிக்கு
கார் கூட அனுப்பினேன். நீங்க இல்லைன்னு சொல்லிட்டாங்க...

ம்....

நீங்க ரொம்ப ப்ரிலியண்ட்டுன்னு தெரியும். அதுக்குள்ள வேற வேலைக்கு ஜாய்ன்
பண்ணிட்டீங்களா என்ன?

உங்க கற்பனை நல்லா இருக்கு யோகேஷ்.....ஏன் எனக்கு பெர்சனல் வொர்க்
எதுவும் இருக்க கூடாதா?

அதுக்கில்லை வைஷ்ணவி, உங்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது இவ்வளவு
கஷ்டம்னு நான் நினைக்கலை....பி.எம்மை கூட மீட் பண்ணிடலாம் போல இருக்கு
ஆனா உங்களை போன்ல கூட பிடிக்க முடியலை..

அவள் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவே அவனே தொடர்ந்து

டூ பி ப்ராங்க் வைஷ்ணவி ஐ மிஸ் யூ....நீ இல்லாத இடம் ரொம்ப வேகண்டா
இருக்கு....உனக்கு எப்படி கன்வே பண்றதுன்னு தெரியலை....என்னால வேலையே
செய்ய முடியலை.....எனக்கு மட்டும் இல்லை வைஷ்ணவி இங்க எல்லாருக்கும்
அப்படி தான் இருக்கு.....வீ ஆல் வாண்ட் யூ பேக்....ப்ளீஸ் திரும்பி
ஜாய்ன் பண்ணிடுங்க...

அவன் குரலில் தெரிந்த லேசான பதட்டம் வைஷ்ணவிக்கு கவலை அளித்தது.

என்ன யோகேஷ் நான் உங்ககிட்ட சொல்லிட்டு தானே நின்னேன். ஐ ஹாவ் சம்
பர்சனல் ப்ராப்ளம்ஸ்....புரிஞ்சுக்கங்க...

ஓகே....நீங்க இப்ப என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம். நல்லா யோசிச்சிட்டு,
நெக்ஸ்ட் வீக் போன் பண்ணுங்க...டேக் கேர் வைஷ்ணவி.

சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். ஏஸியிலும் நெற்றியில்
வியர்த்திருந்தது. கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டாள். பக்கத்தில் ஆறிப்
போய் விட்டிருந்த காபியை குடிக்க பிடிக்காம இன்னொரு காபி ஆர்டர்
செய்தாள்.

பேரர் அவளை வினோதமாக பார்த்துவிட்டுச் சென்றான். மறுபடியும் போன் உரும,
இப்போது வீட்டு நம்பரிலிருந்து வந்திருந்தது.

ஹலோ சொல்வதற்குள் சுபாவின் பதட்டமான குரல் கேட்டது. வைஷ்ணவி எங்க
இருக்கே? உடனே வா....என்றாள்.

என்னம்மா என்ன ஆச்சு உடம்புக்கு எதாவது முடியலையா?

எனக்கு ஒண்ணும் இல்லை...நீ உடனே சீக்கிரம் கிளம்பி வா....

அம்மா ப்ளீஸ் என்ன விஷயம்னு சொல்லு என்பதற்குள் லைன் கட்டாகிவிட்டது.

வீட்டு நம்பருக்கு அவள் அடிக்க அதில் எங்கேஜ்ட் டோன் வந்தது. இனம்
தெரியாத எரிச்சல் குப்பென்று பற்றிக் கொள்ள, பேரர் கொண்டு வந்த காபியை
குடிக்காமலேயே பில்லுக்கான பணத்தையும் டிப்ஸையும் வைத்துவிட்டு அவசர
அவசரமாக எழுந்து போனாள் வைஷ்னவி.

- தொடரும்

0 கருத்துரைகள்: